பனீ நதீர் கஸா
அம்ர் இப்னு உமையா (ரழியல்லாஹு அன்ஹு) மஊனாவில் சிறைப்பட்டிருந்த போது, அவர் தனது கட்டுகளிலிருந்து விடுபட்டு மதீனாவுக்குத் திரும்பினார். வழியில் பனீ ஆமிர் கோத்திரத்தைச் சேர்ந்த இரண்டு இணைவைப்பாளர்களைக் கண்டார். அந்த இறைநிராகரிப்பாளர்களைக் கொன்றார். அவர்கள் ரஸூலுல்லாஹ்வின் பாதுகாப்பில் இருந்தனர், ஆனால் அது அவருக்குத் தெரியாது. அவர் மதீனாவுக்கு வந்து ரஸூலுல்லாஹ்விடம் நிலைமையைத் தெரிவித்தார். அம்ர் தவறு செய்துவிட்டார் என்று நபிகள் நாயகம் கூறி அந்த இரத்தப் பணத்தை அவர்களின் வாரிசுகளிடம் கொடுக்குமாறு கட்டளையிட்டார்.
பனீ ஆமிர் மற்றும் பனீ நதீர் கோத்திரத்தினரிடையே நட்புறவு இருந்தது. பனீ நதீர் தமது அயலவரின் உரிமைகளைக் கடைப்பிடித்தார்கள். இதன் காரணமாக, இரத்த பணத்திற்கு பனீ நதீர் கோத்திரத்தினரின் மத்தியஸ்தம் தேவைப்பட்டது.
உஹத் கஸாவுக்குப் பிறகு, ஹிஜ்ராவின் நான்காம் ஆண்டில், ரபீஉல் அவ்வல் மாதத்தில், ரஸூலுல்லாஹ் ஸஹாபா அல்-கிராமிலிருந்து ஹஸ்ரத்களான அபூபக்ர், உமர், அலீ, ஸுபைர், ஸஅத் இப்னு முஆஸ் மற்றும் உஸைத் இப்னு ஹுதைர் (ரழியல்லாஹு அன்ஹும்) ஆகியோரை அழைத்துக் கொண்டு பனீ நதீரை அடைந்தார். நிலைமையை விளக்கினார். இரண்டு இறைநிராகரிப்பாளர்களின் இரத்தப் பணத்திற்கு உதவத் தயாராக இருப்பதாகவும், அவர்கள் உணவு தயாரிக்கும் வரை காத்திருக்குமாறும் அவர்கள் சொன்னார்கள். ரஸூல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இருந்த வீட்டின் சுவரில் முதுகை வைத்தபடி அமர்ந்திருந்தார், அஸ்ஹாப்கள் அவரைச் சுற்றி அமர்ந்திருந்தனர். அப்போது ஹுயய் இப்னு அஹ்தாப் என்பவன், "யூதர்களே! முஹம்மதை இத்தகைய தொலைதூர இடத்தில் காணும் வாய்ப்பு மீண்டும் ஒருபோதும் வராது. உங்களில் ஒருவர் வீட்டின் புகைபோக்கி மீது ஏறி அவரது தலையில் கல்லால் அடித்தால் நாங்கள் அவரை ஒழித்துக்கட்டுவோம்" என்று கூறினான். அதற்கு அம்ர் இப்னு ஜஹ்ஷ், 'நான் அவ்வாறே செய்கிறேன்' என்று கூறினான். ஸலாம் இப்னு முஷ்கம் எவ்வளவுதான் தடுத்தும் அவர்கள் செவிசாய்க்கவில்லை. அவர், "இந்த வேலையை விட்டுவிடுங்கள். இது குறித்து அவருக்குத் தெரிவிக்கப்படும். அது எங்கள் கூட்டணியை உடையச் செய்யும். இதனால் பல கெட்ட விஷயங்கள் வரும்" என்றார். பனீ நதீரின் யூதர்கள் அவருக்குச் செவிசாய்க்கவில்லை. அந்த நேரத்தில் ஜிப்ரஈல் அலைஹிஸ்ஸலாம் வந்து நபியவர்களிடம் இதைத் தெரிவித்தார். எம் தலைவர், நபி, அஸ்ஹாபிடம் எதுவும் சொல்லாமல், ஒரு விடயத்தைக் கவனிக்க வேண்டும் என்பது போல் வெளியேறி மதீனாவுக்குச் சென்றார். இதனால், படுகொலை முறியடிக்கப்பட்டது.
இதையடுத்து, உலகத்தின் தலைவர், முஹம்மத் இப்னு மஸ்லமாவை ஒப்பந்தத்தை மீறிய யூத கோத்திரத்தினரிடம் அனுப்பினார். அவரிடம் இவ்வாறு உத்தரவிட்டார்: “நதீரின் மகன்களாகிய யூதர்களிடம் செல்லுங்கள்! அவர்களிடம் சொல்லுங்கள், ரஸூலுல்லாஹ் என்னை உங்களிடம் அனுப்பியிருக்கிறார், இந்தக் கட்டளையை உங்களுக்குத் தெரிவிக்க: என் நாட்டை விட்டு வெளியேறுங்கள்! என்னுடன் இங்கே இருக்காதீர்கள்! நீங்கள் என்னைக் கொல்ல சதி செய்தீர்கள். உமக்கு பத்து நாட்கள் அவகாசம் தருகிறேன். அதற்குப் பிறகு, உங்களில் யாராக இருந்தாலும் இங்கே காணப்படுபவர்கள் தலை துண்டிக்கப்படுவார்கள்."
ஹஸ்ரத் முஹம்மத் இப்னு மஸ்லமா இந்தக் கட்டளையைத் தெரிவித்ததும் அச்சத்தின் காரணமாக அவர்கள் பயணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினர். எனினும், முனாஃபிக்குகளின் தலைவனான அப்துல்லாஹ் இப்னு உபை அவர்களுக்கு ஒரு செய்தியை அனுப்பி, "உங்கள் கோட்டையை விட்டு வெளியேறாதீர்கள். உங்கள் பொருட்களையும் தாயகத்தையும் கைவிடாதீர்கள். என் வீரர்களில் இரண்டாயிரம் பேரைக் கொண்டு உமக்கு உதவ வருகிறோம்" என்றான்.
இதைக் கேட்ட எமது நாயகமவர்கள் தம் அஸ்ஹாப் அல் கிராமுடன் மஸ்ஜிதுன் நபீயிலிருந்து நான்கு கி.மீ தூரத்திலுள்ள நதீரின் மகன்களின் கோட்டையை நோக்கிச் சென்றார்கள். ஹஸ்ரத் இப்னு உம்மி மக்தூம் மதீனாவில் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். கொடியை ஹஸ்ரத் அலீ ஏந்திச் சென்றார். கோட்டை முற்றுகையிடப்பட்டது. இதற்கு முன் அஸ்ஹாப் அல்-கிராமுக்கு சவால் விடுத்த யூதர்கள் கோட்டையை விட்டு வெளியே செல்லத் துணியவில்லை. முனாஃபிக்குகளின் உதவி வரவில்லை. அஸ்ஹாப் அல்-கிராம் கோட்டையின் சுற்றுப்புறத்தை முழுமையாகக் கட்டுப்படுத்தினர். இருபது நாட்களுக்கும் மேலாக நீடித்த முற்றுகையின் முடிவில், யூதர்கள் சரணடைந்தனர். தங்கம், வெள்ளி போன்றவற்றையும் ஆயுதங்கள் அனைத்தையும் முஸ்லிம்களிடம் ஒப்படைத்துவிட்டு, சிலர் டமஸ்கஸுக்கும், சிலர் கைபருக்கும் நாடுகடத்தப்பட்டனர். இவ்வாறு, யூதர்களைச் சேர்ந்த, குரைழாவின் சந்ததிகள் மட்டுமே மதீனாவில் எஞ்சியிருந்தனர்.1
ஹிஜ்ராவின் நான்காம் ஆண்டில் நடந்த முக்கிய சம்பவங்கள்
மதுபானம் அருந்துவதைத் தடை செய்யும் ஆயத்துல் கரீமா இந்த ஆண்டு இறக்கியருப்பட்டது.2 ஹஸ்ரத் ஸைனப் பின்த் குஸைமா ரஸூலுல்லாஹ்வால் நிகாஹ் செய்து கௌரவிக்கப்பட்டார்.3 இதே ஆண்டில் ஹஸ்ரத் அலீ மற்றும் ஹஸ்ரத் ஃபாத்திமா ஆகியோரின் இரண்டாவது குழந்தையான ஹஸ்ரத் ஹுஸைன் பிறந்தார்.4 ஹஸ்ரத் உம்மு ஸலமாவின் கணவர் உஹத் கஸாவில் காயமடைந்து மரணமடைந்திருந்தார். பல குழந்தைகளை விட்டுச் சென்றிருந்தார். எமது தாயார் உம்மு ஸலமா தனது வயதான காலத்தில் ஒரு கடினமான சூழ்நிலையில் விடப்பட்டார். நபிகள் நாயகமவர்கள் அவர் மீது மிகவும் இரக்கம் கொண்டு அவரை மணந்து கௌரவித்தார்கள்.5
ஃபாத்திமா பின்த் அஸதின் மறைவு
"அபூதாலிபுக்குப் பிறகு, இந்தப் பெண்மணியைப் போல (ஃபாத்திமா பின்த் அஸத்) யாரும் என்னிடம் நல்லவராக இருந்ததில்லை. அவர் என் தாய்."
ஹதீஸ் அஷ்-ஷரீஃப்
அந்த ஆண்டு ஹஸ்ரத் அலீயின் தாயார் ஃபாத்திமா பின்த் அஸத் காலமானார்.6 எம் தலைவர், நபியவர்கள் மிகவும் வருத்தமடைந்து, "இன்று என் தாயார் காலமானார்" என்று கூறினார்கள். பாட்டனார் அப்துல் முத்தலிப் அவர்களின் மறைவுக்குப் பிறகு நபியவர்கள் அவரால் வளர்க்கப்பட்டார்கள். அவர் நபித்துவத்தை அறிவித்த உடனேயே அவர் முஸ்லிமாக மாறிவிட்டார். அதனாலேயே பிரபஞ்ச சுல்தான் அவரைத் தன் தாயாகக் கருதி மிகுந்த மரியாதை காட்டினார். அவர் மீது கொண்ட இரக்கத்தின் காரணமாக, அவர் தனது அருள்வாய்ந்த மேலாடையைக் கொடுத்து, அதைத் அவரது போர்வையாகப் பயன்படுத்த உத்தரவிட்டார். ஜனாஸா தொழுகையை வழிநடத்திய பிறகு, எழுபதாயிரம் மலக்குகள் தொழுகையில் இருந்ததாக அறிவித்தார். மண்ணறைக்குச் சென்று உள்ளே நுழைந்தார். மண்ணறையில் அத்தாயுடைய வாழ்க்கை எளிதாகவும் இனிமையாகவும் இருக்க, அவர் மண்ணறையின் மூலைகளை நோக்கி விசாலமாகுமாறு சைக்கினை செய்தார். பின்னர் அவர் மண்ணறையில் படுத்தார்.
அவர் மண்ணறையிலிருந்து வெளியே வந்தபோது, அவருடைய அருள்மிகுந்த கண்கள் கண்ணீரால் நிரப்பப்பட்டிருந்தன, அவருடைய கண்ணீர் மண்ணறையில் விழுந்திருந்தது. "என் இறைவனே! அது என்ன கருணை? அவர் எப்பேர்ப்பட்ட அதிர்ஷ்டசாலிப் பெண்மணி? ஹஸ்ரத் உமரால் கூட பொறுக்க முடியாமல், "ரஸூலல்லாஹ், உமக்காக என் உயிர் அர்ப்பணமாகட்டும்! நீங்கள் யாருக்கும் செய்யாததை இந்தப் பெண்மணிக்குச் செய்தீர்கள்!" என்றார். விசுவாசிகளில் மிகவும் விசுவாசமானவரான எமது அன்பு நபி, "அபூதாலிபுக்குப் பிறகு, இந்த பெண்மணியைப் போல யாரும் எனக்கு நல்லவராக இருந்ததில்லை. அவர் என் தாய். அவருடைய குழந்தைகள் பசியுடன் இருக்கும்போது, அவர் முதலில் எனக்கு உணவளிப்பார். அவரது குழந்தைகள் தூசியும் அழுக்கும் படிந்திருக்க, அவர் முதலில் எனது தலையை சீவி என் தலைமுடியில் ரோஜா எண்ணெய்யை ஊற்றுவார். அவர் என் தாய்! நான் அவருக்கு ஜன்னாவின் ஆடைகளை அணிவிப்பதற்காக என் சட்டையை ஒரு கவசமாக அணிவித்தேன். மண்ணறையில் அவருடைய வாழ்க்கை இனிமையாகவும் எளிதாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக நான் அவருக்குப் பக்கத்தில் படுத்துக் கொண்டேன். ஜிப்ரஈல் அவர்கள், 'இப்பெண் ஜன்னாவுக்கு உரியவர்' என்ற செய்தியை அல்லாஹு தஆலாவிடமிருந்து என்னிடம் கொண்டு வந்தார்." என்று கூறினார். பின்னர் அவர் எமது தாய் ஃபாத்திமா பின்த் அஸதுக்காக பின்வருமாறு பிரார்த்தனை செய்தார்: "அல்லாஹு தஆலா உங்களை மன்னித்து வெகுமதி அளிப்பானாக. என் தாயே! அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்வானாக. நான் பசியாக இருந்தபோது எனக்கு நீங்கள் உணவளித்தீர். நீங்கள் உடுத்துவதற்கு முன் எனக்கு ஆடை அணிவித்தீர், நீங்கள் உணவு சாப்பிட முன் எனக்கு உணவளிப்பீர். அல்லாஹு தஆலா உயிர்ப்பிப்பவனும், மரணிக்கச் செய்பவனும் ஆவான். அவன் எப்போதும் உயிருடன் இருக்கிறான். அவன் இறக்கவில்லை. யா அல்லாஹ்! என் தாயார் ஃபாத்திமா பின்த் அஸத்தை மன்னிப்பாயாக! உன் செயலை அவரிடம் சொல்வாயாக. அவரது மண்ணறையை அகலப்படுத்துவாயாக. அளவற்ற அருளாளனிலெல்லாம் மிக்க கிருபையாளனாகிய என் அல்லாஹ்! எனக்காகவும், உனது தூதருக்காகவும், முந்தைய நபிமார்களுக்காகவும் எனது பிரார்த்தனையைக் ஏற்றுக் கொள்வாயாக" என்று கூறினார்.
ஹிஜ்ராவின் நான்காம் ஆண்டில் நடந்த மற்ற முக்கிய சம்பவங்கள்
ஹஸ்ரத் உஸ்மான், ஹஸ்ரத் ருகய்யா ஆகியோரின் ஆறு வயது மகன் அப்துல்லாஹ் காலமானார். உலகங்களின் தலைவர் தன் பேரனுக்காக ஜனாஸா தொழுகையை நடத்தி, தானே அவனை மண்ணறையில் வைத்தார். அவர் மிகவும் சோகமாக இருந்தார்; அவரது கண்ணீர் மண்ணறையில் விழுந்தது. அவர் தனது அருள்மிகுந்த கரங்களால் மண்ணறையில் கற்களை வைத்து மூடிவிட்டு, "கருணையும் இளகிய இதயமும் கொண்ட தனது அடியார்கள் மீது அல்லாஹு தஆலா கருணை காட்டுகிறான்" என்று கூறினார்.7
நீங்கள் ரஸூல்களின் சுல்தான், மேன்மை பொருந்திய ஷா, என் நாயகம்.
ஆதரவற்றவர்களின் பாக்கியம் நீங்கள், என் தலைவரே.
தீர்ப்பு நாளில் நீங்கள்தான் தலைவர், என் நாயகமே.
நீங்கள்தான் "லா-அம்ருக்" ஆணையை அங்கீகரித்துள்ளீர்கள், என் நாயகமே.
நீங்கள் அஹ்மத் மற்றும் மஹ்மூத் மற்றும் முஹம்மத், என் எஜமானார்,
என் தலைவரே, நீங்கள்தான் எங்களுக்காக ஹக்கினால் உறுதிப்படுத்தப்பட்ட சுல்தான்.
உங்கள் கிராமத்தின் விளக்குகள் தூய ஆத்மாக்களின் ஆபரணத்திலிருந்து வந்தவை.
வானவர்கள் கன்னங்களைத் தடவுகின்ற இடம் உங்கள் அருள்மிக்க மண்ணறை.
உங்கள் பார்வை ஹக்கின் இருப்பின் கண்ணாடி,
அபூபக்ர், உமர், உஸ்மான், அலீ ஆகியோர் உங்கள் நண்பர்கள்.
நீங்கள் அஹ்மத் மற்றும் மஹ்மூத் மற்றும் முஹம்மது, என் எஜமானார்,
என் தலைவரே, நீங்கள்தான் எங்களுக்காக ஹக்கினால் உறுதிப்படுத்தப்பட்ட சுல்தான்.
நித்திய நிலத்தின் மிம்பரில் உங்கள் குத்பா ஓதப்படுகிறது.
தீர்ப்பு நாளில் உங்கள் தீர்ப்பு செல்லுபடியாகும்.
ஹூதாவின் முன்னிலையில் உமது புகழும் அறிவிக்கப்பட்டது.
உமது உயர்ந்த நாமம் பூமியிலும், வானத்திலும் ஓதப்படுகிறது.
நீங்கள் அஹ்மத் மற்றும் மஹ்மூத் மற்றும் முஹம்மத், என் எஜமானார்,
என் தலைவரே நீங்கள்தான் எங்களுக்காக ஹக்கினால் உறுதிப்படுத்தப்பட்ட சுல்தான்.
ஷெய்க் காலிப்
