அகழி கஸா
இது "அஹ்ஸாப் கஸா" என்றும் அழைக்கப்படுகிறது. அஹ்ஸாப் என்பது ஹிஸ்ப் என்ற சொல்லின் பன்மையாகும். ஹிஸ்ப் என்றால் குழு, தொகுப்பு என்று பொருள். ரஸூலுல்லாஹ்வுக்கு எதிராகப் போரிட பல குழுக்கள் ஒன்றிணைந்ததால் இந்த போர் அஹ்ஸாப் கஸா என்று அழைக்கப்பட்டது.
இது ஹிஜ்ராவின் ஐந்தாம் ஆண்டு. மதீனா அல்முனவ்வராவிலிருந்து நாடுகடத்தப்பட்ட சண்டையினதும் தீமைகளினதும் ஆதாரமான நதீரின் யூத சந்ததியினர் குழுக்களாகப் பிரிந்தனர்; அவர்களில் சிலர் டமஸ்கஸுக்கும், சிலர் கைபருக்கும் சென்றனர். எனினும், அவர்களின் இதயங்களில் இஸ்லாம் மீதும், நபியவர்கள் மீதும் வெறுப்பும் பழிவாங்கும் உணர்ச்சியும் நிறைந்திருந்தன. அவர்களின் தலைவரான ஹுயய் இப்னு அஹ்தாப் தனது மக்களில் இருபது முக்கிய நபர்களுடன் மக்கா சென்றார். அவர்கள் அபூ சுஃப்யானைச் சந்தித்து எமது அன்பு நபியைக் கொல்ல பேச்சுவார்த்தை நடத்தத் தொடங்கினர். அதற்கு அவர்கள், "நாங்கள் உங்கள் பக்கம்தான் இருக்கிறோம், நாங்கள் இந்த அலுவலை முடிக்கும் வரை உங்களைக் கைவிட விடமாட்டோம்" என்று கூறினார்கள். அபூ சுஃப்யான், "எங்கள் எதிரிக்கு எதிரிகளாக இருப்பவர்கள் எங்களால் பாராட்டப்படுகிறார்கள். இருப்பினும், நாங்கள் உங்களை நம்புவதற்கு, நீங்கள் எங்கள் சிலைகளை வணங்க வேண்டும். அதன் பிறகுதான் நீங்கள் நேர்மையானவர்கள் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியும், உங்களைப் பற்றி நாங்கள் உறுதியாக இருக்க முடியும்." என்று கூறினார். தங்கள் இலட்சியத்தை அடைவதற்காக தங்கள் மதத்தைக் கூட துறந்த நயவஞ்சக யூதர்கள், விக்கிரகங்களுக்கு முன்னால் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தனர். இதற்கு முன்னர் அவர்கள் வானலோக வேதத்தைப் பெற்ற நிராகரிப்பவர்களாக இருந்தனர், ஆனால் இப்போது அவர்கள் வேதமற்ற நிராகரிப்பவர்களாக மாறிவிட்டனர். அவர்கள் நபிகள் நாயகத்தைக் கொன்று இஸ்லாத்தை அழிப்போம் என்று சபதம் செய்தார்கள்.
இணைவைப்பாளர்கள் உடனடியாக போருக்கு ஆயத்தமாகத் தொடங்கினர். அருகிலிருந்த இணைவைப்பாளர்களின் குழுக்களுக்கும் ஆட்களை அனுப்பினர். யூதர்கள் பல்வேறு கோத்திரத்தினரை இணங்க வைக்க நடவடிக்கை எடுத்தனர். அவர்கள் சில கோத்திரத்தினருக்கு பணமும் பேரீச்சம் பழமும் தருவதாக வாக்குறுதி அளித்து ஆயுதபாணியாக்கினர். இணைவைப்பாளர்கள் மக்காவைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து நாலாயிரம் பேர் கொண்ட படையைத் திரட்டியிருந்தனர். அபூ சுஃப்யான் தங்களது கொடியை தார் அந் நத்வாவில் கட்டி உஸ்மான் இப்னு தல்ஹாவிடம் கொடுத்தார். படையிடம் முந்நூறு குதிரைகளும், ஏராளமான ஆயுதங்களும், ஆயிரத்து ஐநூறு ஒட்டகங்களும் இருந்தன.
நாலாயிரம் வீரர்களைக் கொண்ட இணைவைப்பாளர்களது படை மர்ருஸ்ஸஹ்ரானுக்கு வந்தபோது, சுலைமின் மகன்கள், பஸாராவின் மகன்கள், காத்ஃபானியர்கள், முர்ராவின் மகன்கள், ஆஸாத்தின் மகன்கள் போன்ற பல கோத்திரத்தார்கள் ஆறாயிரம் வீரர்களைக் கொண்டு இணைவைப்பாளர்களது படையின் எண்ணிக்கையை பத்தாயிரமாக உயர்த்தினர். அந்த நேரத்தில் அது ஒரு பெரிய சக்தியாக இருந்தது.
எமது நாயகம் ரஸூல் அல் அக்ரம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடன் எப்போதும் நட்பு கொண்டிருந்த குஸாஆ கோத்திரத்தினர் உடனடியாக மதீனாவுக்குச் செய்தி அனுப்பினார்கள். நான்கு நாட்களில் பத்து நாளின் பிரயாணத்தை மேற்கொண்ட குதிரை வீரன் ஒருவன் நம் நாயகம் நபியவர்களுக்கு இணைவைப்பாளர்களின் நிலைமையை விரிவாகத் தெரிவித்தான்.
அஸ்ஹாப் அல்-கிராம்களுடன் கலந்தாலோசித்து விஷயங்களைக் கையாண்ட எமது அன்பு நபி உடனடியாக தனது ஸஹாபிகளை ஒன்று திரட்டி நிலைமையை விவாதித்தார். போர் எங்கே, எப்படி நடத்தப்பட வேண்டும் என்பது பற்றி ஒவ்வொரு ஸஹாபியும் ஒரு திட்டத்தை முன்வைத்தார். இந்த சபையில் இருந்த ஹஸ்ரத் சல்மான் அல்-ஃபாரிஸி பேச அனுமதி பெற்று,
"ரஸூலல்லாஹ்! எம்மிடம் ஒரு போர் முறை உள்ளது. எதிரி தாக்கக்கூடும் என்று நாங்கள் அஞ்சும்போது, எங்களைச் சுற்றி ஒரு பதுங்கு குழியைத் தோண்டி எங்களைப் பாதுகாத்துக் கொள்வோம்." என்று கூறினார். எமது தலைவர், நபியும் அஸ்ஹாப் அல்-கிராம்களும் இந்த முறையை விரும்பினர், அத்துடன் அவர்கள் இந்த முறையில் எதிரியுடன் போரிட முடிவு செய்தனர்.1
எமது தலைவர், நபி உடனடியாக தனது அஸ்ஹாபில் சிலரை அழைத்துக்கொண்டு எங்கு அகழி தோண்ட வேண்டும் என்று பார்க்கச் சென்றார். மதீனாவின் தெற்கில் தோட்டங்கள் இருந்தன, எனவே அது அடர்ந்த மரங்களால் மூடப்பட்டிருந்தது. அங்கிருந்து இணைவைப்பாளர்கள் கூட்டாகத் தாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் பலவீனமாக இருந்தன. மேலும், ஒரு சிறிய படை அங்கு பாதுகாக்க முடியும். கிழக்கில், பனீ குரைழா என்ற யூத கோத்திரத்தினர் இருந்தனர், அவர்களுடன் ஒரு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதன் காரணமாக, இணைவைப்பாளர்கள் மேற்கு மற்றும் வடக்கில் உள்ள திறந்த நிலங்களிலிருந்து மட்டுமே தாக்க முடிந்தது. பள்ளம் தோண்ட வேண்டிய இடங்கள் தீர்மானிக்கப்பட்டன. ஒவ்வொரு அஸ்ஹாப் அல்-கிராமுக்கும் சுமார் 3 மீட்டர் இடம் ஒதுக்கப்பட்டது. எல்லோரும் தனது இடத்தை இரண்டு ஆண்களின் உயரத்தில் (சுமார் 3,5 மீட்டர்கள்) தோண்டுவார்கள், மேலும் வேகமாக ஓடும் குதிரை குதிக்க முடியாதளவு அகழி மிகவும் அகலமாக (7-8 மீட்டர்) இருக்க வேண்டும். நேரம் குறுகியதாக இருந்தது. எதிரிகள் மக்காவிலிருந்து வெளியேறிவிட்டனர், அவர்கள் மதீனாவை நோக்கி அணிவகுத்து வந்தனர். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பள்ளம் தோண்ட வேண்டியிருந்தது.
எமது அன்பு நபி "பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்" என்று தனது வீர அஸ்ஹாபுடன் சேர்ந்து கூறி முதல் கோடாரியை அடித்தார். ஒவ்வொருவரும் தங்கள் முழு சக்தியையும் பயன்படுத்தி விரைவில் பதுங்கு குழியைத் தோண்ட முயன்றனர். இந்த வேலையில் சிறார்களும் பங்கேற்றனர். ஸுபாப் குன்றில் எமது நாயகமான இறைத்தூதருக்காக ஒரு துருக்கியக் கூடாரம் தயார் செய்யப்பட்டது.2 அகழியிலிருந்து தோண்டப்பட்ட மண் இந்த மலையைச் சுற்றி கொட்டப்பட்டது, அத்துடன் எதிரிகளை நோக்கி எறிவதற்காக சால் மலையிலிருந்து கற்கள் எடுக்கப்பட்டன. பாத்திரமொன்று கிடைக்காதவர்கள் தங்கள் துணிகளால் மண்ணை சுமந்து கொண்டிருந்தனர். நபியவர்களும் களைப்படையும் வரை உழைத்துக் கொண்டிருந்தார்கள். இந்த நிலைமையைக் கண்ட அஸ்ஹாப் அல் கிராம், "ரஸூலல்லாஹ், உங்களுக்காக எங்கள் உயிர்கள் அர்ப்பணமாகட்டும்! நம் உழைப்பே போதும். நீங்கள் வேலை செய்ய வேண்டாம், ஓய்வெடுங்கள்." என்றார்கள் அதற்கு நபியவர்கள், "நீங்கள் உழைத்து சம்பாதிக்கும் தவாபில் நானும் பங்கெடுக்க வேண்டும்" என்று பதிலளிப்பார்கள்.
அந்த நாட்களில் மிகவும் குளிராக இருந்தது. மேலும், அந்த ஆண்டு, வறட்சி காரணமாக பஞ்சம் ஏற்பட்டது. உணவு கிடைப்பது மிகவும் கடினமாக இருந்தது. அகிலங்களின் அதிபதி உட்பட அஸ்ஹாப் அல்-கிராம் அனைவரும் கடும் பசியால் வாடினார்கள். வலிமையை உணர அவர்கள் வயிற்றில் கற்களைக் கட்டினர், இதனால் வயிற்றில் அழுத்துவதன் மூலம் பசி உணர்வு அகற்றப்படும்.
அகிலத்தாருக்கு அருளாக அனுப்பப்பட்ட எமது அருமை நபியவர்கள் தம் பசியைப் பற்றி சிந்திக்கவில்லை; இந்தக் குளிரில் பசியால் வாடிய அஸ்ஹாப்கள் பட்ட கஷ்டங்களுக்காக அவர் மிகவும் வருந்தினார். அவர், "என் அல்லாஹ்! ஆகிரத்தின் வாழ்க்கையைத் தவிர (எமக்கு) வேறு வாழ்க்கை இல்லை. என் இறைவனே! அன்ஸாரையும் முஹாஜிர்களையும் மன்னிப்பாயாக!" என்று பிரார்த்தனை செய்வார். அஸ்ஹாப்கள் தங்கள் உயிரினும் மேலாக நேசித்த எமது நாயகம் ஹபீப் அல் அக்ரமிடம், "நாங்கள் எங்கள் இறுதி வரை இஸ்லாமிய மார்க்கத்தைப் பரப்புவதற்காக எமது நாயகம் ரஸூலுல்லாஹ்வை அல்லாஹ்வின் பாதையில் பின்பற்றி வருவோம்" என்று கூறுவார்கள். இந்த பரஸ்பர அன்பு பசி, தாகம் போன்ற பல கஷ்டங்களை வேரோடு பிடுங்கி எறிந்தது.
"நீங்கள் உழைத்து சம்பாதிக்கும் தவாபில் எனக்கும் பங்கு வேண்டும்."
ஹதீஸ் அஷ்-ஷரீஃப்
மின்னலொன்று வெட்டியது
தினமும் அதிகாலையில் தொடங்கிய அகழி தோண்டும் பணி மாலை வரை தொடர்ந்தது. ஒரு நாள், தோண்டும் போது, ஹஸ்ரத் அலீ இப்னு ஹகம் காலில் காயமடைந்தார். அவரை ஒரு குதிரையின் மீது ஏற்றி, எமது தலைவரான நபியின் முன்னிலைக்கு அழைத்து வந்தனர். "பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்" என்று சொல்லிக் கொண்டே உலகங்களின் தலைவர் அவரது பாதத்தைத் தடவினார். எமது நாயகத்தின் அதிசயமாக, அவரது காலின் இரத்தப்போக்கு மற்றும் வலி ஒரு நொடியில் நின்றது.
பள்ளம் தோண்டும் பணி தொடர்ந்தது. அஸ்ஹாப் திடமான தரையைக் கண்டனர். அதனைத் தோண்ட முடியவில்லை. அவர்கள் எமது தலைவரான நபியவர்களிடம் வந்து நிலைமையைக் கூறினர். நபிகளார் பதுங்கு குழிக்கு வந்து, பார்த்துவிட்டுப் போனார். ஒரு கோப்பை தண்ணீர் கேட்டார். ஒரு மிடர் குடித்து மீண்டும் கோப்பையில் ஊற்றினார். பின்னர், அவர் தண்ணீரை கடினமான தரையின் மீது தெளித்தார். பின்னர் அவர் ஒரு சுத்தியலை எடுத்து அந்த இடத்தை ஒரே வீச்சில் மணல் போல உடைத்தார். தோண்டுவது எளிதாகிவிட்டது. இந்த சைகையின் போது, எமது அன்பு நபிகள் நாயகமவர்களின் அருள்வாய்ந்த வயிற்றை மூடியிருந்த ஆடை விலகியது, பசியால் எமது நாயகம் அவரது அருள்மிகுந்த வயிற்றில் ஒரு கல்லைக் கட்டியிருப்பதை அங்குள்ள மக்கள் கண்டனர். எமது நாயகம் ரஸூலுல்லாஹ்வின் இந்த நிலையைக் கண்ட ஹஸ்ரத் ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் நபியிடம் வந்து, "ரஸூலல்லாஹ், உங்களுக்காக என் தாயும் தந்தையும் அர்ப்பணமாகட்டும்! நீங்கள் அனுமதித்தால் நான் வீட்டுக்குப் போய் வருகிறேன்" என்றார். அனுமதி பெற்ற பிறகு என்ன நடந்தது என்பதை ஹஸ்ரத் ஜாபிர் பின்வருமாறு விவரித்தார்:
நான் அனுமதி பெற்று வீட்டிற்குச் சென்று என் மனைவியிடம், "ரஸூல் அலைஹிஸ்ஸலாம் பசியால் வாடுவதைப் பார்த்தேன். வீட்டில் சாப்பிட ஏதாவது இருக்கிறதா?" என்றேன். அதற்கு அவள், "அந்த ஆட்டையும் ஒரு சில கைப்பிடி வாற்கோதுமையையும் தவிர வேறெதுவும் இல்லை" என்றாள். நான் உடனடியாக ஆட்டை அறுத்தேன், என் மனைவி வாற்கோதுமையை ஒரு கை ஆலையில் அரைத்து மாவாக மாற்றினாள். அதை வைத்து மாவு பிசைந்தாள். அவள் இறைச்சியை பானையில் வைத்து தந்தூரி அடுப்பில் சமைக்கத் தொடங்கினாள். பிறகு நான் ரஸூலுல்லாஹ்விடம் செல்லும்போது, என் மனைவி என்னைக் கடுமையாக எச்சரித்தார், 'உணவு ஒரு சிலருக்கு மட்டுமே போதுமானதாக உள்ளது, யாராவது வந்தால் நாங்கள் சங்கடப்படுவோம்.' என்றாள். அதன் பிறகு நான் எங்கள் நாயகம் ரஸூலுல்லாஹ்விடம் சென்று, 'ரஸூலல்லாஹ்! என்னிடம் குறைந்தளவு உணவே உள்ளது. கொஞ்சம் பேரை அழைத்துக் கொண்டு எங்களது வீட்டுக்கு இரவுணவுக்கு வாருங்கள்." என்றேன்.
எமது நாயகம் ரஸூலுல்லாஹ் என்னிடம், "நான் வரும்வரை தந்தூரிலிருந்து இறைச்சிப் பானையையோ ரொட்டியையோ எடுத்து வைக்க வேண்டாம் என்று உமது மனைவியிடம் சொல்லுங்கள்" என்றார். பிறகு முஜாஹித்களை நோக்கித் திரும்பி, "அகழி வாசிகளே! ஜாபிர் எங்களுக்கு ஒரு விருந்து தயார் செய்து இரவு உணவிற்கு எங்களை அழைத்தார். அவரது உணவு ஏராளமாகவும் சுவையாகவும் இருக்கும். எழுந்து வாருங்கள்! ஜாபிரின் விருந்துக்குப் போவோம்!" என்றழைத்தார். இந்த உத்தரவின் பேரில் அஸ்ஹாப் அல்-கிராம் ஒன்று திரண்டு எமது நபியின் பின்னால் நடக்கத் தொடங்கினர். நான் உடனே வீட்டுக்கு சென்று என் மனைவியிடம் நடந்ததைக் கூறினேன். "இப்போது என்ன செய்வது?" என்று நான் கேட்டபோது, "ரஸூல் அலைஹிஸ்ஸலாம் உணவின் அளவு பற்றிக் கேட்கவில்லையா?" என்று கேட்டாள். நான், "ஆம், அவர் கேட்டார், நான் அவரிடம் சொன்னேன்." என்று பதிலளித்தேன். என் மனைவி, "நீங்களா அல்லது எமது நாயகம் ரஸூலுல்லாஹ்வா அஸ்ஹாப் அல்-கிராமை அழைத்தீர்கள்?" என்று கேட்டாள். "ரஸூலுல்லாஹ்தான் அவர்களை அழைத்தார்" என்று நான் சொன்னபோது, "ரஸூல் அலைஹிஸ்ஸலாம் நன்றாக அறிந்தவர்" என்று கூறி அவள் என்னை ஆறுதல்படுத்தினாள்.
சிறிது நேரத்துக்குப் பிறகு எமது நாயகம் நபியவர்களின் ஒளி வீசும் முகம் எங்கள் வீட்டு வாசலில் தென்பட்டது. அவர் பெருந்திரளான ஸஹாபிகளிடம், "ஒருவருக்கொருவர் நெரிசல் ஆகாமல் நுழையுங்கள்" என்று கூறினார். என் ஸஹாபி சகோதரர்கள் பத்து பேர் கொண்ட குழுக்களாக அமர்ந்தனர். மதிப்பிற்குரிய நபியவர்கள் ரொட்டியும் இறைச்சியும் மிகுதியாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தார்கள். பின்னர், தந்தூரில் இருந்து பானையை வெளியே எடுக்காமல், அவர் அதிலிருந்த இரைச்சியை ஒரு கரண்டியால் ரொட்டிகளின் மீது வைத்து தனது அஸ்ஹாபிடம் கொடுத்தார். அஸ்ஹாப் அனைவரும் வயிறு நிரம்பும் வரை அவர் இப்படியே செய்தார். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சாப்பிட்டாலும், ரொட்டியும் இறைச்சியும் அப்படியே இருந்தன என்று நான் சத்தியம் செய்கிறேன். நாம் உண்டபின் அண்டை அயலாருக்கு அவற்றைப் பகிர்ந்தளித்தோம்."3
ஹஸ்ரத் சல்மான் அல்-ஃபாரிஸி நன்றாக அகழிகளைத் தோண்டினார். பத்து பேரின் வேலையை அவர் மட்டுமே செய்வார். அவர் தனது நண்பர்களுடன் அவருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தைத் தோண்டியபோது, மிகவும் கடினமான, பெரிய வெள்ளைப் பாறையைக் கண்டனர். அதை உடைக்க அவர்கள் மிகவும் முயற்சி செய்தனர். இருப்பினும், அவர்களின் முயற்சிகள் அனைத்தும் வீணாகின. அத்துடன், அவர்களின் சுத்தியல்கள், கோடாரிகள், மண்வெட்டிகள் ஆகியவை உடைக்கப்பட்டன. ஹஸ்ரத் சல்மான் நபியவர்களிடம் சென்று நிலைமையை சமர்ப்பித்து விட்டு, "ரஸூலல்லாஹ்! என் பெற்றோர்களும், என் உயிரும் உங்களுக்காக அர்ப்பணமாகட்டும். நாங்கள் அகழி தோண்டிக் கொண்டிருந்தபோது, ஒரு கடினமான பாறையைக் கண்டோம். எங்களது இரும்புக் கருவிகள் அனைத்தும் உடைந்தும் கூட, அதை நகர்த்தக் கூட முடியவில்லை." என்றார்.
எமது நாயகம் ஹபீப் அல்அக்ரம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அங்கு சென்று சம்மட்டியைக் கேட்டார். முடிவை அஸ்ஹாப் அல்-கிராம் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். எமது தலைவர், நபிமார்களின் சுல்தான் அகழிக்குச் சென்றார். "பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்" என்று சொல்லி, அவர் சம்மட்டியைத் தூக்கி பாறையை அவ்வளவு பலத்துடன் தாக்கினார், இந்த தாக்கத்தால், மதீனாவை ஒளிரச் செய்த ஒரு மின்னல் பளிச்சிட்டது, பாறையின் ஒரு துண்டு உடைந்தது.
எமது நாயகம் ரஸூல் அல் அக்ரம் தக்பீர், "அல்லாஹு அக்பர்!" என்றார். இதைக் கேட்ட அஸ்ஹாப்களும் தக்பீர் கூறினார்கள். பின்னர் இரண்டாவது முறையாக சம்மட்டியால் அடித்தார். மீண்டும், எல்லா பக்கங்களையும் ஒளிரச் செய்யும் ஒரு மின்னல் வெளிப்பட்டது! பாறையில் இருந்து துண்டுகள் உடைந்து விழுந்தன... எங்கள் அருமை நபி தக்பீர், "அல்லாஹு அக்பர்!" என்றார். இதைத் தொடர்ந்து அஸ்ஹாப் அல்-கிராமும் தக்பீர் கூறினர். மூன்றாவது முறையாக சம்மட்டியால் தாக்கியபோது, மற்றொரு மின்னல் வெளிப்பட்டது, அது எல்லாத் திசைகளையும் ஒளிரச் செய்தது, அத்துடன் பாறை துண்டுகளாக உடைந்தது. அகிலங்களின் தலைவர் மீண்டும் தக்பீர், "அல்லாஹு அக்பர்!" என்றார். அவரது அஸ்ஹாப்கள் அவரைப் பின்தொடர்ந்து மீண்டும் தக்பீர் கூறினர்.
ஹஸ்ரத் சல்மான் கையை நீட்டினார். எமது அன்பு நபிகள் நாயகம் மேலே ஏறினார். சல்மான் அல்ஃபாரிஸி, "ரஸூலல்லாஹ், என் பெற்றோர்களும், என் உயிரும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். என் வாழ்நாளில் நான் பார்த்திராத ஒன்றை இப்போதுதான் பார்த்தேன். இதற்கு என்ன விளக்கம்?" என்று கேட்டார். நபியவர்கள் அஸ்ஹாபை நோக்கித் திரும்பி, "சல்மான் கண்டதைப் பார்த்தீர்களா?" என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், "ஆம் ரஸூலல்லாஹ்! பாறையில் சம்மட்டியால் அடித்தபோது, பயங்கரமான மின்னல் தாக்கியதைக் கண்டோம். நீங்கள் தக்பீர் என்று சொன்னபோது நாங்களும் தக்பீர் சொன்னோம்" என்று கூறினார்கள். எமது தலைவர், நபி அவர்களிடம், "முதல் தாக்குதலின் வெளிச்சத்தில், ஷாவின் (மதாஇனில் உள்ள) அரண்மனைகள் எனக்குத் தோன்றின. ஜிப்ரஈல் (அலைஹிஸ்ஸலாம்) வந்து, 'அந்த நிலங்களை உங்கள் உம்மத் சொந்தமாக்கிக் கொள்வார்கள்' என்று கூறினார். இரண்டாவது தாக்குதலில், ரோமானிய மாநிலத்தின் (டமஸ்கஸ்) சிவப்பு மாளிகைகள் தோன்றின. ஜிப்ரஈல் (அலைஹிஸ்ஸலாம்) வந்து, 'அந்த நிலத்தையும் உங்கள் உம்மத் சொந்தமாக்கிக் கொள்வார்கள்' என்று கூறினார். மூன்றாவதில், ஸனாவின் (யமன்) மாளிகைகள் தோன்றின. ஜிப்ரஈல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள், 'அந்த நிலத்தையும் உங்கள் உம்மத் சொந்தமாக்கிக் கொள்வார்கள்' என்று கூறினார்.
"அகழி வாசிகளே! ஜாபிர் எங்களுக்காக ஒரு விருந்தை ஆயத்தம் செய்துள்ளார்; அவர் எங்களை இரவு உணவிற்கு அழைக்கிறார். அவரது உணவு ஏராளமாகவும் சுவையாகவும் இருக்கும். எழுந்து வாருங்கள்! ஜாபிரின் விருந்துக்குப் போவோம்!"
ஹதீஸ் அஷ்-ஷரீஃப்
அதன் பிறகு, மதாஇனில் பாரசீக ஷாவின் அரண்மனையை உலகங்களின் சுல்தான் விவரித்தபோது, அந்த இடத்தைச் சேர்ந்த ஹஸ்ரத் சல்மான், "ரஸூலல்லாஹ், உங்களுக்காக என் உயிர் அர்ப்பணமாகட்டும்! உண்மையான மார்க்கத்துடனும் வேதத்துடனும் உங்களை அனுப்பிய அல்லாஹு தஆலா மீது சத்தியம் செய்கிறேன், அந்த மாளிகைகள் நீங்கள் விவரித்ததைப் போலவே உள்ளன. நீங்கள் அல்லாஹ்வின் ரஸூல் என்பதற்கு நான் சாட்சி கூறுகிறேன்" என்று கூறினார். எமது தலைவர், நபியவர்கள், "சல்மான் அவர்களே! நிச்சயமாக, டமஸ்கஸ் கைப்பற்றப்படும். ஹெரக்ளியஸ் தனது நாட்டின் மிகவும் பாழடைந்த இடத்திற்கு தப்பி ஓடுவார். நீங்கள் டமஸ்கஸின் ஒவ்வொரு பகுதியையும் ஆட்சி செய்வீர்கள். உங்களை யாரும் எதிர்க்க முடியாது. நிச்சயம் யெமன் வெல்லப்படும். நிச்சயமாக, அந்த 'கிழக்கு நிலமும்' கைப்பற்றப்படும், ஷா கொல்லப்படுவார். எனக்குப் பிறகு உங்களுக்கு இந்த வெற்றிகளை அல்லாஹ் வழங்குவான்" என்று கூறினார்கள்.4
ஹஸ்ரத் சல்மான் அல் ஃபாரிஸி, "எமது நாயகம் ரஸூலுல்லாஹ்வின் இந்த நற்செய்தி உண்மையானதை நான் கண்டேன்'' என்று கூறினார்.
எதிரிகள் வரப் போகிறார்கள். அவர்கள் விரைவாக அகழியைத் தோண்டி அதை விரைவில் முடிக்க முயன்றனர். தேவை ஏற்பட்டால் மட்டுமே, எமது நாயகம் நபியவர்களிடம் அனுமதி பெற்று, முஜாஹிதுகள் தங்கள் தேவையைப் பூர்த்தி செய்து விட்டு உடனடியாகத் தங்கள் பணிக்குத் திரும்பி ஓடுவார்கள்.
முனாஃபிக்குகள் மிகவும் சோம்பேறித்தனமாக வேலை செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் விரும்பிய போதெல்லாம் வேலைக்கு வருவதும், அனுமதி பெறாமல், எப்போது வேண்டுமானாலும் வேலையை விட்டு வெளியேறுவதும் வழக்கம். அத்துடன், அஸ்ஹாப் அல்-கிராமின் முயற்சிகளை அவர்கள் கேலி செய்தனர். எமது நாயகம் நபியவர்களின் நற்செய்தியைக் குறித்தும் அவர்கள், "நாங்கள் எதிரிகளுக்குப் பயந்து அகழிகளில் தஞ்சம் புகுந்து கொண்டிருக்கிறோம். யெமன், ரோம் மற்றும் பாரசீக நாடுகளின் மாளிகைகளை அவர் எமக்கு வாக்குறுதி அளிக்கிறார். உங்களைக் கண்டு நாங்கள் வியக்கிறோம்!" என்று கூறிக் கொண்டிருந்தனர்.
இதையடுத்து ஒரு ஆயத்துல் கரீமா முஜாஹித்களைப் பற்றி இறங்கியது. அது மஆலில், "(உண்மையான) முஃமின்களோ, அல்லாஹ்வின் மீதும், அவனது ரஸூல் மீதும் ஈமான் கொண்டு, (அவரைச் சார்ந்த) சமுதாய விஷயத்தில் அவருடன் கலந்து கொண்டால், அவரிடம் அனுமதி கேட்காத வரையில் அவர்கள் விலகிச் செல்ல மாட்டார்கள். (எனவே) "என் ஹபீபே! நிச்சயமாக, அல்லாஹ்வையும், அவனுடைய ரஸூலையும் நம்பிக்கை கொண்டவர்களே உம்மிடம் அனுமதி கேட்கிறார்கள். (நபியே!) அவர்களில் சிலர் தம் காரியங்களுக்காக உம்மிடம் அனுமதி கேட்டால், நீர் விரும்பியவர்களுக்கு அனுமதி கொடுப்பீராக இன்னும் அவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுவீராக! நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன்."5
முனாஃபிக்குகளைப் பற்றி அருளப்பட்ட அயத்துல் கரீமாவில் மஆலின்படி, "ரஸூலை அழைப்பதை நீங்கள் ஒருவரையொருவர் அழைப்பதைப் போன்று ஆக்கிக் கொள்ளாதீர்கள்! உங்களில் ஒருவருக்கொருவர் பயந்து திரிந்தவர்களை அல்லாஹ் நிச்சயமாக நன்கறிவான். அவனது கட்டளையை எதிர்ப்பவர்கள் இவ்வுலக வாழ்வில் துன்பத்தைக் குறித்தும், நோவினை தரும் வேதனையைக் குறித்தும் எச்சரிக்கையாக இருக்கட்டும். கவனம் செலுத்துங்கள்! வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் (யாவும்) அல்லாஹு தஆலாவுக்கே உரியன. அவன் உங்கள் நிலைகளையும் அறிந்தவன் (உங்கள் குணாதிசயங்கள், நோக்கங்கள், நீங்கள் ஒரு முஃமினாக இருந்தாலும் சரி, முனாஃபிக்காக இருந்தாலும் சரி). கியாமத் நாளில் அல்லாஹு தஆலா உங்கள் செயல்கள் அனைத்தையும் உங்களுக்கு அறிவிப்பான், அப்போது நீங்கள் அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள். அல்லாஹு தஆலா யாவும் அறிந்தவன்."6
அகழி தோண்டும் பணி தொடங்கி ஆறு நாட்கள் கடந்துவிட்டன. ஒவ்வொருவரும் தங்கள் வேலையை முறையாக முடித்திருந்தார்கள். ஆனால், போதிய நேரம் இல்லாததால், ஒரு இடத்தை ஆழமாகவும், அகலமாகவும் தோண்ட முடியவில்லை. எமது தலைவர், நபிகள் நாயகம் அந்த இடத்தைப் பற்றிய தனது கவலையை வெளிப்படுத்தி, "இணைவைப்பாளர்கள் இந்த இடத்தைத் தவிர வேறு எந்த இடத்தையும் கடந்து செல்ல முடியாது" என்று கூறினார்கள். அங்கு காவலாளிகளை நியமித்தார்கள்.
அல்லாஹு தஆலா மிக அழகான பாதுகாவலன்
இணைவைப்பாளர்களின் படை மதீனாவுக்கு மிக அருகில் வந்தபோது, நதீரின் யூத மகன்களின் தலைவரான ஹுயய், மதீனாவில் உள்ள குரைழா யூதர்கள் முஸ்லிம்களுடன் ஒரு ஒப்பந்தத்தில் இருப்பதாகவும், ஆனால் அவர்களின் தலைவர் கஅப் இப்னு அஸதை ஏமாற்றி அவர்களை தங்கள் அணியில் சேர்க்க முடியும் என்றும் குறைஷி இராணுவத்திற்கு அறிவித்தார். படைத்தலைவர், "ஹுயையே! உடனே கஅப் இப்னு அஸதிடம் செல்லுங்கள். அவர்கள் முஸ்லிம்களுடன் செய்து கொண்ட உடன்படிக்கையை முறித்து எங்களுக்கு உதவுமாறு அவரிடம் கூறுங்கள்" என்று கூறினார். அந்த ஒப்பந்தத்தின் பிரிவுகளில் ஒன்றாக, "எதிரி இராணுவம் மதீனாவைத் தாக்கினால், முஸ்லிம்களுடன் ஒன்றிணைந்து எதிர்ப்பது" என்பது இருந்தது.
"ஸல்மானே! நிச்சயமாக, டமஸ்கஸ் கைப்பற்றப்படும். ஹெரக்ளியஸ் தனது நாட்டின் மிகவும் பாழடைந்த இடத்திற்கு தப்பி ஓடுவார். நீங்கள் டமஸ்கஸின் ஒவ்வொரு பகுதியையும் ஆட்சி செய்வீர்கள். உங்களை யாரும் எதிர்க்க முடியாது. நிச்சயம் யெமன் வெல்லப்படும். நிச்சயமாக, அந்த 'கிழக்கு நிலமும்' கைப்பற்றப்படும், ஷா கொல்லப்படுவார். எனக்குப் பிறகு உங்களுக்கு இந்த வெற்றிகளை அல்லாஹு தஆலா வழங்குவான்".
ஹதீஸ் அஷ்-ஷரீஃப்
யூத ஹுயய் இணைவைப்பாளர்களின் படையை விட்டு விலகி, பனீ குரைழாவின் தலைவரான கஅப் என்பவரின் வீட்டிற்கு இரவில் வந்தார். கதவைத் தட்டி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். அவர், "கஅபே! குறைஷிகளின் முழு இராணுவத்தையும், கினானா மற்றும் கத்ஃபான் போன்ற பல கோத்திரங்களையும் பத்தாயிரம் வீரர்களைக் கொண்ட படையாக நான் கொண்டு வந்துள்ளேன். இப்போது முஹம்மதும் அவரது அஸ்ஹாபும் பிழைக்க முடியாது. அவர்களை முற்றிலுமாக அழிக்கும் வரை இங்கிருந்து செல்ல மாட்டோம் என்று குறைஷிகளிடம் சத்தியம் செய்திருக்கிறோம்!" என்றார். கஅப் தனது கவலையை வெளிப்படுத்தினார், "முஹம்மதும் அவரது அஸ்ஹாபும் கொல்லப்படாவிட்டால், குறைஷிகளும் காத்ஃபானிகளும் தங்கள் நிலங்களுக்குத் திரும்பிவிட்டால், நாங்கள் இங்கே தனித்து விடப்படுவோம். இறுதியில் அவர்கள் நம் அனைவரையும் கொன்று விடுவார்களோ என்று அஞ்சுகிறேன்" என்றார். "இந்த அச்சத்தைப் போக்க குறைஷிகளிடமிருந்தும் கத்ஃபானிகளிடமிருந்தும் எழுபது பேரைப் பணயக் கைதிகளாகக் கோருங்கள். இந்த பணயக்கைதிகள் உங்களுடன் இருக்கும் வரை அவர்கள் இங்கிருந்து வெளியேற முடியாது. அவர்கள் தோற்கடிக்கப்பட்டு வெளியேறினால், நான் உங்களைக் கைவிட மாட்டேன். உமக்கு நேரும் பேராபத்து எனக்கும் நேரிடும்" என்று ஹுயய் கஅபையும், மற்ற யூதர்களையும் ஏமாற்றினார். முஸ்லிம்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை கிழித்தெறியச் செய்தார். இதனால், ஒப்பந்தம் முறிந்தது.
ஹுயய் இணைவைப்பாளர்களது படையிடம் திரும்பி வந்து நிலைமையை அவர்களிடம் கூறினார். பனீ குரைழா முஸ்லிம்களின் முதுகில் குத்துவார்கள் என்று அவர்களிடம் தெரிவித்தார்.
ஏழாம் நாளில், இணைவைப்பாளர்கள் பத்தாயிரம் பேர் கொண்ட ஒரு பெரிய இராணுவத்துடன் மதீனாவின் வடக்கு மற்றும் வடமேற்கில் வந்து தங்கள் இராணுவ தலைமையகத்தை நிறுவினர். இந்தத் தலைமையகம் அகழி தோண்டப்பட்ட இடத்திற்கு எதிரே இருந்தது. இந்த மாபெரும் படையைக் கொண்டு மதீனாவை முற்றிலுமாக எரித்து அழித்து, எமது தலைவரான நபியவர்களையும், அவர்களது அஸ்ஹாபையும் கொன்று இஸ்லாத்தை அழித்திட இணைவைப்பாளர்கள் திட்டமிட்டனர். அது மிகப் பெரிய இராணுவமாகவும், அவர்களை எதிர்ப்பது மிகவும் கடினமாகவும் இருந்தது.
இணைவைப்பாளர்கள் தாங்கள் ஒருபோதும் எதிர்பார்க்காத அகழியைக் கண்டபோது, அவர்கள் குழப்பமடைந்து உற்சாகமிழந்தனர். ஏனெனில், அகழியின் அகலம் நன்றாகவும் வேகமாகவும் ஓடும் குதிரையாலும் தாண்டிச் செல்ல முடியாததாக இருந்தது. அதில் விழுந்த எவரும் எளிதில் வெளியேற முடியாது. குறிப்பாக கவசம் அணிந்தவர் மேலே ஏறுவது மிகவும் கடினமாக இருந்தது.
இணைவைப்பாளர்கள் வந்துவிட்டார்கள் என்பதை அறிந்த நபிகள் நாயகம் உடனடியாக ஆறு நாட்கள் இடைவிடாது வேலை செய்து களைத்துப் போயிருந்த அஸ்ஹாபை ஒன்று திரட்டி, சால் மலையின் அடிவாரத்தில் தனது இராணுவத் தலைமையகத்தை நிறுவினார்கள். அவர்களுக்குப் பின்னால் சால் மலையும் மதீனாவும் இருந்தன, அவர்களுக்கு முன்னால் அகழி இருந்தது, அதற்கு அப்பால் எதிரிகள்... மீண்டும், இப்னு உம்மு மக்தூம் மதீனாவில் எங்கள் தலைவரான நபியின் பிரதிநிதியாக விடப்பட்டார். பெண்களும் குழந்தைகளும் கோட்டைகளில் தங்க வைக்கப்பட்டனர். மூவாயிரம் வீரர்களைக் கொண்ட இஸ்லாமிய இராணுவத்தில் முப்பத்தாறு குதிரைப்படை வீரர்கள் இருந்தனர். ஹஸ்ரத் ஸைத் இப்னு ஹாரிதா, ஹஸ்ரத் ஸஅத் இப்னு உபாதா ஆகியோர் கொடிகளை ஏந்திச் சென்றனர்.7 எமது நாயகம் ரஸூலுல்லாஹ்வின் தோல் கூடாரம் சால் மலையின் அடிவாரத்தில் அமைக்கப்பட்டது.
மீண்டும் பல வீரதீரச் செயல்களைக் காட்டவிருக்கும் அஸ்ஹாப் அல்-கிராம், எதிரிகளின் நடமாட்டங்களைக் கவனமாகப் பின்தொடரத் தொடங்கினர். இதற்கிடையில் ஹஸ்ரத் உமர் நபியவர்களின் முன்னிலையில் வந்ததைக் காண முடிந்தது. நபியவர்களிடம், "ரஸூலல்லாஹ்வே! குரைழா யூதர்கள் எம்முடன் செய்து கொண்ட உடன்படிக்கையை முறித்து விட்டதாகவும், அவர்கள் எமக்கு எதிராகப் போருக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் கேள்விப்பட்டேன்!" என்றார். இந்த எதிர்பாராத செய்திக்கு பதிலளித்த அகிலங்களின் தலைவர், "ஹஸ்புனல்லாஹு வ நிஃமல் வகீல் (அல்லாஹு தஆலா எங்களுக்குப் போதுமானவன். அவன் எவ்வளவு அழகான பாதுகாவலன்)" என்று கூறினார். அவர் மிகவும் வருத்தப்பட்டார். இப்போது இஸ்லாமிய இராணுவம் இரண்டு நெருப்புகளுக்கு இடையில் சிக்கிக்கொண்டது. வடக்கிலும் மேற்கிலும் இணைவைப்பாளர்களின் படைகளும், தென்கிழக்கில் யூதர்களும் இருந்தனர்.
எமது நாயகம் ரஸூலுல்லாஹ் ஹஸ்ரத் ஸுபைர் இப்னு அவ்வாமை குரைழாவின் மைந்தர்களின் கோட்டைக்கு அனுப்பி வைத்தார். ஹஸ்ரத் ஸுபைர் அங்கு சென்று நிலைமையை அறிந்துகொண்டார். அவர் வந்ததும், தான் கண்டதைக் கூறினார்: "ரஸூலல்லாஹ்! அவர்கள் தங்கள் கோட்டைகளைப் பழுதுபார்ப்பதையும், போர் நுட்பங்களைப் பயிற்சி செய்வதையும் நான் கண்டேன். அவர்கள் தங்கள் விலங்குகளையும் சேகரித்துக் கொண்டிருந்தனர்." என்றார். அதனடிப்படையில் எமது நாயகம் ஹபீப் அல் அக்ரம், (ஸல்லாஹு அலைஹி வஸல்லம்) ஸஅத் இப்னு முஆஸ், ஸஅத் இப்னு உபாதா, ஹவ்வாத் இப்னு ஜுபைர், அம்ர் இப்னு அவ்ஃப், அப்துல்லாஹ் இப்னு ரவாஹா ஆகியோரை அனுப்பி குரைழாவின் புதல்வர்களுக்கு ஆலோசனை வழங்கவும், உடன்படிக்கையைப் புதுப்பிக்கவும் அனுப்பினார்.8
பொறுப்பு கொடுக்கப்பட்ட இந்த ஐந்து ஸஹாபிகளும் குரைழா யூதர்களின் கோட்டைக்குச் சென்று அவர்களுக்கு அறிவுரை கூறினர். ஆனால், அவர்கள் அந்த ஆலோசனையை ஏற்கவில்லை. அவர்களை அவமானப்படுத்தவும் தொடங்கினர். இறுதி வார்த்தையாக, "நதீரின் மகன்களான எங்கள் சகோதரர்களை அவர்களின் நிலங்களிலிருந்து வெளியேற்றியதன் மூலம் நீங்கள் எங்கள் கைகளையும் சிறகுகளையும் முறித்தீர்கள். முஹம்மத் என்பவர் யார்? அவருக்கும் எமக்கும் இடையே எந்த வாக்குறுதியோ உடன்படிக்கையோ இல்லை. உங்கள் நபியை அனைவரும் சேர்ந்து தாக்கிக் கொல்வோம் என்று சபதம் செய்திருக்கிறோம். நாங்கள் நிச்சயம் எழுந்து நின்று எங்கள் சகோதரர்களுக்கு உதவுவோம்!" என்று கூறினார்கள்.
ஹஸ்ரத் ஸஅத் இப்னு முஆஸும் அவர்களின் நண்பர்களும் எமது நாயகம் ரஸூலுல்லாஹ்வின் முன்னிலையில் வந்து அனைவருக்கும் விளங்காதவாறு நிலைமையை விளக்கினார்கள். எம் தலைவர், நபிகள் நாயகம், "உங்கள் செய்தியை ரகசியமாக வைத்திருங்கள். ஏற்கனவே தெரிந்தவர்களுக்கு மட்டும் சொல்லுங்கள். ஏனெனில், போர் என்பது எச்சரிக்கையும் வஞ்சகமுமே." என்றார்கள்.9
அஸ்ஹாப் அல்-கிராம் அகழியின் இந்தப் பக்கத்தில் எமது நாயகம் நபியவர்களின் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று காத்திருந்தனர். சிறிது நேரத்துக்குப் பிறகு பிரபஞ்ச சுல்தான் அவர்கள் இருந்த இடத்தைக் கௌரவித்துவிட்டு, தக்பீர், "அல்லாஹு அக்பர்! அல்லாஹு அக்பர்!" என்று கூறினார். இதைக் கேட்ட மகிமை பொருந்திய ஸஹாபிகள் ஒருமித்த குரலில் தக்பீர் கூறி, ஜனாப் அல்-ஹக்கின் புனித நாமத்தின் மகிமையை அறிவித்து, அகழியின் மறுபுறத்தில் திரண்டிருந்த காஃபிர்களின் இதயத்தில் அச்சத்தை ஏற்படுத்தினர். இணைவைப்பாளர்கள் தக்பீர்களைக் கேட்டபோது, "முஹம்மதுக்கும் அவரது அஸ்ஹாபுக்கும் நற்செய்தி வந்திருக்கக் கூடும்" என்று கூறினார்கள்.
எம் தலைவர், நபிகள் நாயகம் தம் அஸ்ஹாபிடம், "முஸ்லிம் சமூகத்தாரே! அல்லாஹு தஆலாவின் வெற்றியையும் உதவியையும் கொண்டு மகிழுங்கள்!" என்று கூறினார்கள். இவ்வாறு, அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்ற நற்செய்தியை அவர் கொடுத்தார். புகழ்பெற்ற அஸ்ஹாப் பல படையெடுப்புகளில் பங்கேற்று பத்ர் மற்றும் உஹத் கஸாக்களில் பங்கேற்றிருந்தனர். அல்லாஹு தஆலாவின் அனுமதியுடனும், எமது நாயகம் ரஸூல் அல்-அக்ரமின் பிரார்த்தனையின் அருளுடனும் அவர்கள் எண்ணிக்கையிலும் வலிமையிலும் அதிகமாக இருந்த இணைவைப்பாளர்களை ஒவ்வொரு முறையும் தோற்கடித்தனர். உயிர்களின் "மணிமகுடம்" அவர்களுடன் இருக்கும் வரை, அவர்களால் செய்ய முடியாத எந்த வேலையும் இல்லை, அவர்களால் தாங்க முடியாத எந்த தொந்தரவும் இல்லை. காலநிலை குளிராக இருந்தது, பஞ்சம் கடுமையாக இருந்தது, பசி அதிகமாக இருந்தது... நபிகள் நாயகம் உட்பட பலர் தங்கள் அருள்வாய்ந்த வயிற்றில் கற்களைக் கட்டினர். அவர்களுக்கு அப்பால், எதிரிகள் எண்ணற்றவர்கள்! எனினும், மகிமை வாய்ந்த அஸ்ஹாபுக்கு, எதிரிகளின் எண்ணிக்கையும், அவர்கள் அனுபவித்த கஷ்டங்களும் ஒரு பொருட்டல்ல. அல்லாஹு தஆலா மிக அழகான உதவியாளன். அவர்கள் அவனைச் சார்ந்திருந்தார்கள்; அவர்கள் அவனை நம்பி, அவனிடம் அடைக்கலம் புகுந்தார்கள்.
குறைஷிகளின் முக்கிய தளபதிகளும், குறைஷிகளுடன் வந்த பிற கோத்திரங்களின் தலைவர்களும் ஒரு முழுமையான தாக்குதலைத் தொடங்குவதற்கு முன்பு அகழியின் மறுபுறம் செல்ல ஒரு இடத்தைத் தேடத் தொடங்கினர். அவர்கள் ஒரு முனையிலிருந்து மறுமுனை வரை அகழியை ஒட்டி நடந்தார்கள். இறுதியாக, நேரமின்மை காரணமாக முடிக்கப்படாமல் விடப்பட்ட குறுகிய இடத்தில் அவர்கள் நின்று அங்கிருந்து தாக்க முடிவு செய்தனர். இணைவைப்பாளர்களது வீரர்கள் தங்கள் தளபதிகளைப் பின்தொடர்ந்து, அகழியையும் மகிமை வாய்ந்த அஸ்ஹாபையும் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தனர். அத்துடன் அவர்கள், "இது அரேபியர்கள் பயன்படுத்தும் முறை அல்ல என்று நாங்கள் சத்தியம் செய்கிறோம். நிச்சயமாக, அந்த பாரசீக மனிதன்தான் இதைச் சிபாரிசு செய்துள்ளான்!" என்றனர்.
குறைஷித் தளபதிகள் தங்கள் வீரர்களிடம் அகழியின் குறுகலான பகுதியைக் காட்டி, "யார் இங்கே குதித்து மறுகரைக்குச் செல்ல முடியும்?" என்று கேட்டபோது, ஐந்து குதிரைப்படை வீரர்கள் முன்னால் வந்தனர். அவர்கள் அகழியின் மறுபுறம் சென்று ஒருவருக்கொருவர் சண்டையிடுவார்கள். புகழ்பெற்ற அஸ்ஹாப் அல்-கிராமும் இணைவைப்பாளர்களின் வீரர்களும் இந்த ஐந்து குதிரை வீரர்களின் செயல்களை ஆர்வத்துடன் கவனிக்கத் தொடங்கினர். குதிரைப்படை வேகம் பெற பின்னோக்கி நகர்ந்தது. பின்னர் அவர்கள் தங்கள் குதிரைகளின் தலைகளை அகழியின் குறுகலான பகுதிக்குத் திருப்பி வேகமெடுத்தனர். முழுப் பாய்ச்சலில் ஐந்து குதிரைகளும் ஒரே பாய்ச்சலில் அகழியைக் கடந்தன. பல குதிரைப்படை வீரர்கள் அவர்களைப் பின்தொடர விரும்பினர், ஆனால் அவர்கள் தோல்வியுற்று அகழியின் மறுபுறத்தில் தங்கினர். கடந்து சென்றவர்களில் அம்ர் இப்னு அப்தூத் என்ற மிகவும் வலிமையான, தோற்கடிக்கப்படாத மனிதன் இருந்தான். அவனுக்கு அனைவரும் பயந்தனர், அவனுக்கு முன்னால் நிற்க யாரும் துணியவில்லை. அவன் ஒருவனே ஒரு படைக்கு நிகரானவன். அவன் பத்தாயிரம் பேர் கொண்ட படையுடன் இங்கு வந்ததே இதைக் காட்டியது. அவன் தலை முதல் கால் வரை கவசம் அணிந்திருந்தான். அவனது குதிரையில், அவன் மிகவும் கம்பீரமான தோற்றத்தில் இருந்தான். தன் தோற்றத்தால் பயத்தை உண்டாக்கிய அந்த மனிதன், முஜாஹிதுகளைப் பார்த்து, "என்னுடன் போரிட யாராவது இருந்தால், அவர் போர்க்களத்திற்கு வரட்டும்!" என்று கத்தினான்.
"முஸ்லிம் சமூகத்தாரே! அல்லாஹ்வின் வெற்றியையும் உதவியையும் கொண்டு மகிழுங்கள்!"
ஹதீஸ் அஷ்-ஷரீஃப்
இந்த ஆணவத்தைக் கண்ட ஹஸ்ரத் அலீ நபியவர்களின் முன்னிலையில் வந்து அனுமதி கேட்டு, "ரஸூலல்லாஹ்! உமக்காக என் உயிர் அர்ப்பணமாகட்டும். நான் அவனுடன் சண்டையிடுகிறேன்" என்றார். அவர் கவசம் கூட அணிந்திருக்கவில்லை. அஸ்ஹாப் அல் கிராம் அவரை வியப்புடன் பார்த்தார். நபிகள் நாயகம் தமது அருட்கொடை பெற்ற கவசத்தைக் கழற்றி ஹஸ்ரத் அலீ மீது அணிவித்தார். அவர் தனது வாளை ஹஸ்ரத் அலீயிடம் கொடுத்தார். அவர் தனது அருள் மிக்க தலையில் இருந்து தலைப்பாகையைக் கழற்றி ஹஸ்ரத் அலீயின் தலையில் சுற்றினார். பிறகு, 'யா அல்லாஹ்! பத்ர் கஸாவில், என் மாமாவின் மகன் உபைதா, உஹத் கஸாவில், என் மாமா ஹம்ஸா ஷஹீதாக்கப்பட்டார்கள். என் சகோதரனும் என் மாமன் மகனுமான அலீ என்னுடன் எஞ்சியிருக்கிறார். அவரைக் காத்தருள்வாயாக. அவருக்கு நீ உதவி செய்வாயாக. என்னைத் தனியே விட்டுவிடாதே." என்று பிரார்த்தனை செய்தார். அதற்கு அஸ்ஹாப் அல் கிராம், "ஆமீன்!" என்றார்கள்.
அல்லாஹு தஆலாவின் சிங்கம் பிரார்த்தனைகளாலும் தக்பீர்களாலும் சூழப்பட்டு முன்னால் சென்று அம்ர் இப்னு அப்தூதின் முன் நின்றார், அவன் தனது குதிரையில் ஒரு அரக்கனைப் போல தோற்றமளித்தான். கண்களைத் தவிர மற்ற அனைத்தும் கவசங்களால் மூடப்பட்டிருந்த அம்ரால் அந்த வீரனை அடையாளம் காண முடியாமல் அவர் யார் என்று கேட்டான். "நான் அலீ இப்னு அபீ தாலிப்" என்று அலீ தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டதும் அம்ர், "என் சகோதரரின் மகனே! (ஒரு நபரிடம் பேசும் வழக்கம்) உன் தந்தை என் நண்பர். அதன் காரணமாக, நான் உனது இரத்தத்தை சிந்த விரும்பவில்லை. உனது மாமாக்கள் யாரும் என்னை எதிர்க்கக் கூடாதா?" என்றான். ஹஸ்ரத் அலீ, "அம்ரே! நான் உமது இரத்தத்தை சிந்த விரும்புகிறேன் என்று அல்லாஹு தஆலாவின் மீது சத்தியம் செய்கிறேன். ஆனால் நாம் இருவரும் சம அந்தஸ்தில் இருக்க வேண்டாமா? அதுதானே வீரத்தின் மகிமைக்கு ஏற்றது? நான் கால்நடையாக இருக்கிறேன்; நீங்கள் குதிரையில் இருக்கிறீர்!" என்றார்.
இதைக் கேட்ட அம்ரின் வீர நரம்பு வீங்கியது; உடனே குதிரையிலிருந்து இறங்கி வாளால் குதிரையின் கால்களை வெட்டினான். பின்னர் கோபத்துடன் ஹஸ்ரத் அலீ முன் நின்றான். அவன் தாக்க முற்பட்டபோது, அல்லாஹு தஆலாவின் சிங்கம் அவனிடம், "அம்ரே! குறைஷியை நீங்கள் எதிர்கொண்டபோது அவர்களது இரண்டு கோரிக்கைகளில் ஒன்றை நிறைவேற்றுவதாக நீங்கள் சத்தியம் செய்ததாக நான் கேள்விப்பட்டேன். இது உண்மையா?" என்றார். அதற்கு அவன், "ஆம், அது உண்மைதான்" என்று பதிலளித்தபோது, "அப்படியானால் எனது முதல் வேண்டுகோள் நீங்கள் அல்லாஹு தஆலாவையும் அவனது ரஸூலையும் நம்பி இஸ்லாத்தைத் தழுவ வேண்டும் என்பதே" என்று கூறினார். இதைக் கேட்ட அம்ர் கோபமடைந்து, "இதைச் சொல்லாதே! எனக்கு இது தேவை இல்லை!" என்றான். ஹஸ்ரத் அலீ, "எனது இரண்டாவது வேண்டுகோள் என்னவென்றால், நீங்கள் போரை நிறுத்திவிட்டு மக்காவிற்குத் திரும்ப வேண்டும். ஏனெனில், ரஸூலுல்லாஹ் எதிரிகளை வென்றுவிட்டால், உங்களுடைய அந்தச் செயலுக்காக நீங்கள் அவருக்கு உதவி செய்திருப்பீர்கள்!" என்றார். அதற்கு அம்ர், "இதையும் சொல்லாதே! நான் பழிவாங்கும் வரை வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்த மாட்டேன் என்று சத்தியம் செய்தேன். வேறு கோரிக்கை இருந்தால் சொல்!" என்றான். அப்போது ஹஸ்ரத் அலீ, "அல்லாஹ்வின் எதிரியே! இப்போது உன்னுடன் சண்டையிடுவதைத் தவிர வேறு வழியில்லை!" என்றார்.
இந்த வார்த்தைகளைக் கேட்டு அம்ர் சிரித்தான். அவன், "நம்ப முடியவில்லை! அரேபியாவில் என்னை எதிர்கொள்ளக்கூடிய ஒரு வீரன் இருப்பான் என்று நான் ஒருபோதும் நினைத்திருக்க மாட்டேன்! என் சகோதரனின் மகனே! நான் உன்னைக் கொல்ல விரும்பவில்லை என்று சத்தியம் செய்கிறேன். ஏனெனில் உனது தந்தை என் நண்பர். குறைஷிகளின் முக்கியஸ்தர்களான அபூபக்ர் அல்லது உமர் போன்றவர்கள் என்னை எதிர்கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்று கூறினான். ஹஸ்ரத் அலீ, "எப்படியும் நான் உன்னைக் கொல்லவே வந்தேன்" என்று கூறியதும் அம்ரின் தலையில் ரத்தம் பாய்ந்தது. ஒரு கணத்தில் வாளை உயர்த்திவிட்டு தாழ்த்தினான். அல்லாஹு தஆலாவின் சிங்கமான ஹஸ்ரத் அலீ (கர்ரமல்லாஹு வஜ்ஹஹு) இப்படி ஒரு சம்பவத்தை எதிர்பார்த்து மின்னல் போல பக்கவாட்டில் குதித்து தனது கேடயத்துடன் தாக்குதலை எதிர்கொண்டார். ஆனால், அம்ர் இப்படி பல கேடயங்களை அடித்து நொறுக்கியிருக்கிறான். வலிமையான கேடயங்களால் கூட அவனது அடியைத் தாங்க முடியவில்லை. இப்போதும் அப்படித்தான். ஹஸ்ரத் அலீயின் கேடயம் நொறுங்கியது, வாள் அவரது தலையில் பட்டு காயப்படுத்தியது. இப்போது ஹஸ்ரத் அலீ தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்பு; அல்லாஹ்விடம் அடைக்கலம் புகுந்து "யா அல்லாஹ்!" என்று கூறி அம்ரின் கழுத்தில் சுல்ஃபிகாரை வீசினார். அவரது அடியுடன் "அல்லாஹு அக்பர்! அல்லாஹு அக்பர்!" என்ற இஸ்லாமியப் படையின் சப்தம் வானத்தையும் பூமியையும் அதிர வைத்தது; மிலேச்சர்களின் படையிலிருந்து கூக்குரல்கள் எழுந்தன... ஆம், உயிர்களின் மணிமகுடமான நபிமார்களின் சுல்தானின் பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்பட்டது. அரக்கன் அம்ர் தரையில் வீழ்ந்தான்; அவனது உடலில் இருந்து ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது, தலைக்கவசத்தில் இருந்த அவனது தலை பறந்து சென்றது. தாங்கள் மிகவும் நம்பிய அம்ர் தோற்கடிக்கப்பட்டதைக் கண்ட அவனது நண்பர்கள் உடனடியாக ஹஸ்ரத் அலீயைத் தாக்கினர். இதைக் கண்ட அஸ்ஹாப் அல்-கிராம் அங்கு விரைந்தனர். ஸுபைர் இப்னு அவ்வாம் நவ்ஃபல் இப்னு அப்துல்லாஹ்வை காயப்படுத்தி தனது குதிரையுடன் அகழியில் விழச் செய்தார். ஹஸ்ரத் அலீ அகழியில் இறங்கி நவ்ஃபலை இரண்டாகப் பிளந்தார். மற்றவர்கள் சிரமத்துடன் அகழியைக் கடந்து திரும்பி ஓடினர். இணைவைப்பாளர்களின் படையின் தலைமைத் தளபதி போரின் தொடக்கத்திலேயே விரக்தியில் விழுந்தான்.
இப்போது போரின் வடிவம் தெளிவாகத் தெரிந்தது. அகழி நேருக்கு நேர் சண்டையிடுவதைத் தடுத்தது. ஒருவருக்கொருவர் அம்புகளை எய்து காயப்படுத்த முயன்றனர். இந்த நடவடிக்கை முடிவை நீட்டிப்பதைத் தவிர வேறொன்றும் செய்யவில்லை. இந்த வழியில் தாங்கள் வெல்ல முடியாது என்பதை உணர்ந்த இணைவைப்பாளர்கள், அகழியின் எல்லாப் பக்கங்களிலிருந்தும் தாக்குவதே சரியான வழி என்று முடிவு செய்து தாக்குதலில் இறங்கினர். பத்தாயிரம் வீரர்களைக் கொண்ட மாபெரும் எதிரிப் படை அகழியைக் கடந்து செல்ல முயன்று கொண்டிருந்தது, அதே நேரத்தில் மூவாயிரம் பேர் கொண்ட புகழ்பெற்ற இஸ்லாமிய இராணுவம் அம்புகளாலும் கற்களாலும் அவர்களை கடந்து செல்ல விடாமல் பார்த்துக் கொண்டிருந்தது. ஒரு பெரிய போராட்டம் தொடங்கியது. இந்த போராட்டம் மாலை வரை நீடித்தது.
எமது நாயகம் ரஸூல் அல்-அக்ரம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) இரவில் அகழியின் பல்வேறு புள்ளிகளில் காவலர்களை நியமித்தார். அவரே குறுகலான பகுதியில் காவல் காக்கத் தொடங்கினார். ஐந்நூறு பேர் கொண்ட ரோந்துப் படையை மதீனாவுக்கு அனுப்பி, தெருக்களில் தக்பீரை உரக்கச் சொல்லும்படி கட்டளையிட்டார். இதனால், யூதர்களிடமிருந்தோ, குறைஷிகளிடமிருந்தோ வரும் ஆபத்து காலப்போக்கில் தடுக்கப்படும்; பெண்கள், குழந்தைகள் பாதுகாக்கப்படுவார்கள்.
குறைழா யூதர்கள் ஹுயய் இப்னு அக்தாபை இணைவைப்பாளர்களிடம் அனுப்பி, இரவுத் தாக்குதல்களை நடத்த இரண்டாயிரம் வீரர்களைக் கொண்ட படையைக் கேட்டனர். இரவில், பாதுகாப்பற்ற நிலையில் விடப்பட்ட பெண்களையும் குழந்தைகளையும் அவர்கள் தாக்குவார்கள். ஆனால், காலைவரை ரோந்து சுற்றிக் கொண்டிருந்த முஜாஹித்கள், "அல்லாஹு அக்பர்!" என்று கூச்சலிட்டு தக்பீர் கூறியது அவர்களின் இதயங்களில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. அவர்கள் தங்கள் கோட்டைக்குத் திரும்பி சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கத் தொடங்கினர். அவ்வப்போது, அவர்கள் சிறிய குழுக்களாக மதீனாவுக்குள் நுழைய முயன்றனர்.
ஒரு நாள் இரவு, குறைழாவின் மகன்களில் முக்கியமானவர்களில் ஒருவரான கஸ்ஸால், எமது நாயகமான நபியவர்களின் தந்தைவழி அத்தையான எமது தாய் ஸஃபிய்யா பத்து பேர் கொண்ட படையுடன் இருந்த வீட்டுக்கு வந்தார். உள்ளே, பெண்களும் குழந்தைகளும் இருந்தனர். தங்களைப் பாதுகாத்துக் கொள்ள ஒரு ஆயுதம் கூட அவர்களிடம் இல்லை. யூதர்கள் முதலில் வீட்டின் மீது அம்புகளை எய்ய முயன்றனர், பின்னர் அவர்கள் உள்ளே நுழைய முயன்றனர். அவர்களில் ஒருவன் உள் முற்றத்திற்குள் நுழைந்து கட்டிடத்திற்குள் நுழைய ஒரு இடத்தைத் தேடத் தொடங்கினான். இதற்கிடையில், எமது அன்பு நபியின் வீர அத்தை, தன்னைச் சுற்றியுள்ளவர்களை சத்தம் போட வேண்டாம் என்று அறிவுறுத்திவிட்டு, கீழே சென்று வாசலுக்கு வந்தார். தலையில் முக்காடு போட்டு இறுகப் போர்த்திக் கொண்டு, தன்னை ஒரு ஆண் போல காட்டிக் கொண்டு, ஒரு தடியை எடுத்துக் கொண்டு இடுப்பில் ஒரு கத்தியை வைத்துக் கொண்டார். அவர் மெதுவாகக் கதவைத் திறந்து, பின்னால் அந்த யூதனை நெருங்கி, அவனது தலையில் தடியை ஆக்ரோஷமாக அறைந்தார். நேரத்தை வீணாக்காமல், தரையில் விழுந்த யூதனைக் கொன்றார். பின்னர், வெளியில் இருந்து அம்புகளை எய்வதில் மும்முரமாக இருந்த அவரது நண்பர்கள் மீது அந்த யூதனின் தலையை வீசினார். தங்கள் நண்பனின் தலை துண்டிக்கப்பட்டதைக் கண்ட யூதர்கள் பயந்து ஓடத் தொடங்கினர். "முஸ்லிம்கள் தங்கள் வீடுகளில் எவரையும் விட்டு வைக்காமல் எல்லா ஆண்களையும் போருக்கு அனுப்புகிறார்கள் என்று எங்களுக்குச் சொல்லப்பட்டிருந்தது" என்று அவர்கள் கூறிக் கொண்டிருந்தனர்.10
"அலீயின் வாள் வீச்சு அனைத்து மனிதர்கள் மற்றும் ஜின்களின் இபதாத்களை விட மதிப்புமிக்கது.
ஹதீஸ் அஷ்-ஷரீஃப்
காலையிலும் அதே உக்கிரமுடன் போர் தொடர்ந்தது. அம்புகள் காற்றில் பறந்து கொண்டிருந்தன. அகிலங்களின் தலைவர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மகிமை பொருந்திய அஸ்ஹாப்களிடம், "என் இருப்பைத் தன் கரத்தில் வைத்திருக்கும் அல்லாஹு தஆலா மீது ஆணையாகச் சொல்கிறேன், நாங்கள் எதிர்கொள்ளும் துன்பங்கள் நிச்சயமாக உங்களை விட்டும் நீக்கப்பட்டு, நீங்கள் சமாதானத்தின் பக்கம் கொண்டு வரப்படுவீர்கள்" என்று கூறினார்கள். அவர்களைப் பொறுமையுடன் இருக்குமாறு அறிவுரை கூறி, நிச்சயமாக வெற்றி முஃமின்களுக்கே உரியது என்று நன்மாராயம் கூறினார்கள். இந்த நற்செய்தியைக் கேட்ட வீர ஸஹாபிகள் பசி, பஞ்சம் போன்ற தொல்லைகளை மறந்து கடுமையாக உழைத்தனர். ஒரு இணைவைப்பாளனைக் கூட அகழி வழியாகச் செல்ல அவர்கள் அனுமதிக்கவில்லை.
அஸ்ஹாப் அல்-கிராமில் முக்கியமானவர்களில் ஒருவரான ஹஸ்ரத் ஸஅத் இப்னு முஆஸ் மிகுந்த உற்சாகத்துடன் போரிட்டுக் கொண்டிருந்தார். போரின் போது, ஹிப்பான் இப்னு கைஸ் இப்னு அரகா என்ற இணைவைப்பாளனால் எய்யப்பட்ட அம்பினால் அவரது கையில் காயம் ஏற்பட்டது. அம்பு ஒரு நரம்பைத் தாக்கி நிறைய இரத்த இழப்பை ஏற்படுத்தியது. தன்னைச் சுற்றியிருந்தவர்கள் இரத்தப்போக்கை நிறுத்த முயற்சிப்பதைக் கண்ட அவர் தன் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதைப் புரிந்து கொண்டு, "என் இறைவனே! குறைஷிகள் தொடர்ந்து போரிட்டால் எனக்கு வாழ்வைக் கொடுப்பாயாக. ஏனெனில், உனது ரஸூலை மறுத்து, துன்புறுத்திய இந்த இணைவைப்பாளர்களுடன் சண்டையிடுவதை நான் விரும்புவதைப் போல வேறு எதையும் நான் விரும்பவில்லை. எங்களுக்கிடையிலான போர் முடிவுக்கு வந்தால், என்னை ஷஹீத் அந்தஸ்துக்கு உயர்த்துவாயாக. ஆனால், நான் பனீ குறைழாவின் முடிவைக் காணும் வரை என் ஆன்மாவை எடுத்துக் கொள்ளாமல் இருப்பாயாக" என்று பிரார்த்தனை செய்தார். அவரது பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்பட்டது, இரத்தப்போக்கு நின்றது.
அப்துல்லாஹ் இப்னு உபை போன்ற முனாஃபிக்குகள் அஸ்ஹாப் அல்-கிராம் இடையே சண்டையிட்டுக் கொண்டிருந்தனர், அவர்கள் அதை மிக மெதுவாக எடுத்துக்கொண்டிருந்தனர், முன்னரங்க நிலைகளை நெருங்கவில்லை. கூடுதலாக, அவர்கள் முஜாஹித்களை மனச்சோர்வடையச் செய்வதற்கும், ஒழுங்கீனத்தை ஏற்படுத்துவதற்கும் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்து கொண்டிருந்தனர். "ரோமானியப் பேரரசர் மற்றும் ஈரானிய ஷாவின் பொக்கிஷங்களை முஹம்மத் உங்களுக்கு வாக்குறுதி அளித்துக் கொண்டே இருக்கிறார். எனினும் தற்போது நாம் அகழியில் சிக்கிக் கொண்டுள்ளோம். பயத்தில், கழிப்பறைக்குக் கூட செல்ல முடியவில்லை. அல்லாஹ்வும் அவனுடைய ரஸூலும் எங்களை ஏமாற்றுவதைத் தவிர வேறெதையும் செய்யவில்லை, இவ்வுலக விஷயத்திலும் அவர்கள் வாக்குறுதி அளிக்கவில்லை" என்று கூறினார்கள். எப்பொழுதெல்லாம் கஷ்டம் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் எதிரிகள் தங்கள் வீடுகளைத் தாக்கக்கூடும் என்ற சாக்கைப் பயன்படுத்தி, அவர்கள் தங்கள் கடமைக்குரிய இடங்களை விட்டு வெளியேறுவார்கள். முனாஃபிக்குகளின் இந்த நடவடிக்கைகள் ஒரு தனிப் பிரச்சினையாகவும் தொந்தரவாகவும் மாறிக் கொண்டிருந்ன.
இணைவைப்பாளர்களின் இராணுவம், விரைவில் முடிவுகளைப் பெறுவதற்காக, அதன் அனைத்து சக்திகளையும் பயன்படுத்தியது. இருப்பினும், கண்ணியமான ஸஹாபிகளின் வீரமான பாதுகாப்புக்கு எதிராக அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. அவர்கள் அதிகம் தாக்கிய இடம் குறுகலான அகழிப் பகுதி. எமது தலைவர், நபி அங்கிருந்து விலகாமல் தனது அஸ்ஹாபைப் போரிட ஊக்குவித்தார். எமது தலைவரான நபிக்கு அருகில் போரிடும் கௌரவத்தைப் பெற விரும்பிய அஸ்ஹாப் அல்-கிராம் போர்க்களத்தில் வரலாறு காணாத சாதனைகளை நிகழ்த்திக் கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் இணைவைப்பாளர்கள் சரமாரியாக அம்பு எய்வதைக் காண முடிந்தது. அவர்களின் ஒரே இலக்கு பிரபஞ்சத்தின் சுல்தான் இருக்கும் கூடாரம்.
எமது அன்பு நபியின் அருள்மிகுந்த உடலை ஒரு கவசம் மூடியிருந்தது. அவரது அருள்வாய்ந்த தலையில் தலைக்கவசம் இருந்தது. அவர் கூடாரத்தின் முன் நின்று போரின் போக்கிற்கு ஏற்ப தனது அஸ்ஹாபுக்கு கட்டளையிட்டுக் கொண்டிருந்தார். சில நேரங்களில், இணைவைப்பாளர்கள் பலவீனமாகத் தோன்றும் இடத்திற்கு ஒரு கூட்டுத் தாக்குதலை மேற்கொள்வார்கள், அப்போது அருள்மிகுந்த ஸஹாபிகள் அங்கு விரைந்து சென்று மார்க்கத்தின் எதிரிகளை விரட்டும் வரை உணர்ச்சியுடன் சண்டையிடுவார்கள். இந்த முன்னெப்போதும் இல்லாத போராட்டம் மிகவும் தீவிரமாக இருந்தது, வீரமிக்க ஸஹாபிகளால் பக்கவாட்டில் பார்க்கக் கூட நேரம் கிடைக்கவில்லை. காலையில் தொடங்கிய இந்த சண்டை அன்று இரவு வெகு நேரம் வரை தொடர்ந்தது. தொழுகை நேரம் வரும்போதெல்லாம், மகிமை வாய்ந்த ஸஹாபிகள், "ரஸூலல்லாஹ்வே! எங்களால் தொழ முடியவில்லை" என்பார்கள். உலகங்களின் தலைவரும், பிரபஞ்சத்தின் தலைவருமான சுல்தான் மிகுந்த வருத்தத்துடன், "வல்லாஹி, என்னாலும் முடியவில்லை." என்று பதிலளிப்பார். இரவுத் தொழுகை நேரத்தில், அவர்கள் தங்களுக்கு இபாதத் செய்ய அனுமதிக்காத இணைவைப்பாளர்களின் கூட்டத்தை மிகவும் மூர்க்கமான தாக்குதலால் விரட்டியடித்து, அவர்களைக் கலைத்தனர். குறைஷிகளும், காத்ஃபானிகளும் மறுசீரமைக்க முடியாமல் இரவோடு இரவாக தங்கள் தலைமையகத்திற்குத் திரும்பிச் சென்றனர். முஜாஹித்கள் எமது அன்பு நபியின் கூடாரத்தை நோக்கி நடந்தார்கள். சபிப்பது அவரது வழக்கமாக இல்லாவிட்டாலும், உலகங்களுக்குக் கருணையாக அனுப்பப்பட்ட எமது நாயகம் ஃபக்ர் அல்-ஆலமுக்கு, தொழுகை விடயத்தில் அவ்வாறு பொறுமைகாக்க முடியவில்லை. அவர் இணைவைப்பாளர்களைப் பற்றி, "சூரியன் மறையும் வரை எங்களை ஆக்கிரமித்து, நாம் தொழுகையை நிறைவேற்றுவதிலிருந்து எங்களைத் தடுத்ததைப் போலவே, அல்லாஹு தஆலா அவர்களின் வீடுகளையும், அவர்களின் வயிறுகளையும், மண்ணறைகளையும் நெருப்பால் நிரப்புவானாக!" என்று கூறினார். நண்பகல், பிற்பகல், மாலை எனத் தாமதமான தொழுகைகளை நிறைவேற்றிய பிறகு, அவர் இரவுத் தொழுகையை வழிநடத்தினார்.
"என் இருப்பைத் தன் கரத்தில் வைத்திருக்கும் அல்லாஹு தஆலா மீது ஆணையாகச் சொல்கிறேன், நாங்கள் எதிர்கொள்ளும் துன்பங்கள் நிச்சயமாக உங்களை விட்டும் நீக்கப்படும், நீங்கள் சமாதானத்தின் பக்கம் கொண்டு வரப்படுவீர்கள்."
ஹதீஸ் அஷ்-ஷரீஃப்
என் இறைவனே! காஃபிர்களை நீ அழிப்பாயாக!
இஸ்லாத்தை முற்றிலுமாக தகர்க்க நடந்த இந்த போராட்டங்களுக்குப் பிறகு, முஸ்லிம்களை பகலில் தோற்கடிக்க முடியாது என்பதை இணைவைப்பாளர்கள் புரிந்து கொண்டனர். அவர்களைப் பொறுத்தவரை, ஒரே தீர்வு அதே தீவிரத்துடன் இரவுத் தாக்குதல்களை ஏற்பாடு செய்வதுதான். இந்த வழியில்தான் முஸ்லிம்களை தோற்கடிக்க முடியும். அவர்கள் உடனடியாக இந்த முடிவுகளை நடைமுறைப்படுத்தி, குறைழாவின் யூத மகன்களுடன் சேர்ந்து இரவுத் தாக்குதல்களை நடத்தத் தொடங்கினர். இணைவைப்பாளர்கள் தங்கள் வீரர்களைக் குழுக்களாகப் பிரித்து மாறி மாறித் தாக்கினர். இந்த தாக்குதல்கள் பல நாட்கள் தொடர்ந்தன. எமது அன்பு நபியும் வீரமிக்க அஸ்ஹாப் அல்-கிராம்களும் பசி, தூக்கமின்மை மற்றும் சோர்வாக இருந்தபோதிலும் தங்கள் பாதுகாப்பைத் தொடர்ந்தனர். எதிரி வீரர்கள் எவரையும் அகழியைக் கடந்து செல்ல அவர்கள் அனுமதிக்கவில்லை. இந்த இதயபூர்வமான தற்காப்பு முந்தைய எல்லா கஸாக்களைக் காட்டிலும் மிகவும் அச்சமூட்டுவதாகவும், தீவிரமானதாகவும், மிகவும் கடினமானதாகவும் இருந்தது.
பல நாட்களாக போராடி வந்த இணைவைப்பாளர்கள் மத்தியில் உணவுப் பற்றாக்குறை தோன்றத் தொடங்கியது. அவர்களுடைய குதிரைகளும், ஒட்டகங்களும் கூட தரையில் காய்ந்த புற்களைக் காணாததால் இறக்கத் தொடங்கியிருந்தன. இதன் காரணமாகவே இணைவைப்பாளர்களின் தளபதி, திரார் இப்னு கத்தாப் தலைமையில் ஒரு படைப்பிரிவை குறைழாவின் யூதர்களிடம் உணவுப் பொருள்களைப் பெறுவதற்காக அனுப்பி வைத்தார். காஃபிர்களுக்காகத் தம்மிடம் இருந்த அனைத்தையும் தியாகம் செய்த யூதர்கள், உடனடியாக இருபது ஒட்டகச் சுமைகளில் கோதுமை, வாற்கோதுமை, பேரீச்சம்பழம் மற்றும் மிருகங்களுக்காக வைக்கோல் ஆகியவற்றை ஏற்றிக் கொண்டு சென்றனர். திரார் தனது வீரர்களுடன் மகிழ்ச்சியுடன் திரும்பிக் கொண்டிருந்தபோது, அவர்கள் கூபா அருகே ஸஹாபிகளின் ஒரு குழுவைச் சந்தித்தனர். வீர அஸ்ஹாப் உடனே தாக்கினார்கள். இரத்தம் தோய்ந்த சண்டைக்குப் பிறகு, அவர்கள் எதிரிகளை ஓட ஓட விரட்டினார்கள். அவர்கள் பொதிகள் ஏற்றப்பட்ட ஒட்டகங்களை எமது நாயகம் நபியவர்களிடம் ஒப்படைத்து பல பிரார்த்தனைகளைப் பெற்றனர்.11
சுமார் ஒரு மாத காலம் நீடித்த இந்தக் கடுமையான போரில் மிகவும் கடினமான சூழ்நிலைகளை சகித்துக் கொண்ட தனது துணிச்சலான அஸ்ஹாப் மீது எமது ஆசான், பிரபஞ்சத்தின் சுல்தான் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களது தந்தையரை விட மிகவும் அதிகமாகக் கருணை காட்டினார். அவரது மகிமை வாய்ந்த அஸ்ஹாபின் இந்த அசாதாரண முயற்சிகளுக்கு முன்னால், அவர் தனது அருள்வாய்ந்த தலையை தரையில் வைத்து அவர்களுக்காக அல்லாஹு தஆலாவிடம் இவ்வாறு மன்றாடுவார், "என் அல்லாஹ்வே, துன்பத்தில் இருப்பவர்களை காப்பாற்ற வரும் என் அல்லாஹ்வே. ஏழை மற்றும் ஆதரவற்றவர்களின் பிரார்த்தனைகளுக்கு பதிலளிக்கும் என் அல்லாஹ்வே! நிச்சயமாக நீ எனதும் எனது அஸ்ஹாபினதும் நிலையை நன்கறிவாய். என் ரப்பே! காஃபிர்களை அழித்து, அவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி, அவர்களுக்கு எதிராக எங்களுக்கு வலிமையை அளிப்பாயாக, மேலும் எங்களுக்கு உதவி புரிவாயாக!"
எமது அன்பு நபி இறுதி நாட்களில் இந்தப் பிரார்த்தனையை அடிக்கடி கேட்டார்.
பஞ்சத்தால் ஏற்பட்ட துன்பங்கள் காரணமாக, முஸ்லிம்களை விரைவில் அழிக்க இணைவைப்பாளர்கள் தங்கள் முழு பலத்தையும் பிரயோகித்தனர். ஒரு நாள் மாலை, இஸ்லாத்தின் மீது அன்பு கொண்ட இணைவைப்பாளர் படையைச் சேர்ந்த ஒருவர் எங்கள் தலைவரான நபியவர்களின் முன்னிலையில் வந்தார். அவர் கத்ஃபான் கோத்திரத்தைச் சேர்ந்த நுஐம் இப்னு மஸ்ஊத். அவர் நபியவர்களிடம், "ரஸூலல்லாஹ்! அல்லாஹு தஆலா என்பவன் ஒருவனே, நீர் உண்மையான நபி என்பதற்கு சாட்சி கூறவே நான் இங்கு வந்துள்ளேன். நான் ஒரு முஸ்லிமாக மாறி மகிமை அடைந்ததற்காக அல்லாஹு தஆலாவுக்கே எல்லாப் புகழும். இதுவரை நான் உம்மை எதிர்த்துப் போராடினேன். இனிமேல் நான் அவிசுவாசிகளுக்கு எதிராகப் போரிடுவேன். நீங்கள் என்ன கட்டளையிடுகிறீர்களோ அதைச் செய்யத் தயாராக இருக்கிறேன்! ரஸூலல்லாஹ்! நான் முஸ்லிமாகிவிட்டேன் என்பது என் மக்களுக்குக்கூடத் தெரியாது!" என்றார். எமது நாயகம் ரஸூல் அல்-அக்ரம், "நீங்கள் இந்த காஃபிர்களின் அணிகளில் ஊடுருவி, அவர்களிடையே கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்துவதன் மூலம் அவர்களைப் பிரிக்க முயற்சிக்க முடியுமா?" எனக் கேட்டார். அதற்கவர், "ரஸூலல்லாஹ்வே! அல்லாஹு தஆலாவின் உதவியுடன், நான் அவர்களை ஒருவருக்கொருவர் பிரிக்க முடியும். இருப்பினும், நான் என்ன வேண்டுமானாலும் சொல்ல அனுமதிக்கப்படுகிறேனா?" என்றார். எமது நாயகம், "போர் என்பது வஞ்சகம், நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்." என்று சொன்னார்.
"யா அல்லாஹ்! நீ என் மீதும் என் அஸ்ஹாப் மீதும் இரக்கம் கொண்டதற்காக உனக்கு நான் நன்றி செலுத்துகிறேன்".
ஹதீஸ் அஷ்-ஷரீஃப்
ஹஸ்ரத் நுஐம் இப்னு மஸ்ஊத் முதலில் குறைழாவின் யூதர்களிடம் சென்று, "உங்கள் மீது நான் வைத்திருக்கும் அன்பை நீங்கள் அறிவீர்கள். நாம் என்ன பேசப் போகிறோமோ அது நமக்குள்ளேயே இருக்க வேண்டும். வேறு யாருக்கும் தெரியக் கூடாது!" என்றார். அதற்கு யூதர்கள் "ஒருவருக்கும் தெரியாது" என்று சத்தியம் செய்தார்கள். அப்போது ஹஸ்ரத் நுஐம், "அந்த மனிதரின் (எங்கள் தலைவர், நபி) விவகாரம் ஒரு உண்மையான பிரச்சினை. அவர் நதீர் மற்றும் கய்னுகாவின் மகன்களுக்கு என்ன செய்தார் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர் அவர்களை அவர்களுடைய தாயகங்களிலிருந்து, அவர்களுடைய வீடுகளிலிருந்து துரத்தியதை நீங்கள் அனைவரும் கண்டீர்கள். இப்போது குறைஷிகளும், கத்ஃபானிகளும் வந்து முஸ்லிம்களுக்கு எதிராகப் போரிடுகிறார்கள். நீங்கள் அவர்களுக்கு உதவுகிறீர்கள். நாங்கள் பல நாட்கள் போராடியும் எந்த முடிவும் கிடைக்கவில்லை. இது இப்படியே தொடர்ந்தால், முற்றுகை நீடிக்கும். குறைஷிகள் மற்றும் கத்ஃபானியர்களின் சொத்துக்கள், வீடுகள் மற்றும் குழந்தைகள் உங்களைப் போல இங்கே இல்லை. அவர்கள் இந்தப் போரில் சந்தர்ப்பம் கிடைத்து வெற்றி பெற்றால், கைப்பற்றும் பொருட்களைச் சேகரித்துக் கொண்டு கிளம்பிவிடுவார்கள். அவர்கள் தோற்றால் உங்களை முஸ்லிம்களுடன் விட்டுவிட்டு போய்விடுவார்கள். எனினும், முஸ்லிம்களை வெல்லும் சக்தி உங்களிடம் இல்லை. முஸ்லிம்கள் வெற்றி பெறுவார்கள் என்பதையே தற்போதைய யுத்த நிலை காட்டுகிறது. நான் கணித்தபடி நடந்தால் முஸ்லிம்கள் உங்களை வாளுக்கு இரையாக்குவார்கள். இதனால், நாம் அவசரமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்." என்று கூறினார்.12
மிகுந்த உற்சாகத்துடனும் பயத்துடனும் இந்த வார்த்தைகளைக் கேட்ட யூதர்கள், ஹஸ்ரத் நுஐம், அவர்களைப் பற்றி இவ்வளவு சிந்தித்ததைக் கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்து, "நீங்கள் உங்கள் நட்பை முறையாக எங்களுக்குக் காட்டினீர்கள். நாங்கள் என்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சொல்லுங்கள்" என்று கேட்டார்கள். இதற்காகக் காத்திருந்த நுஐம் இப்னு மஸ்ஊத், "உண்மை என்னவென்றால், குறைஷிகள் மற்றும் கத்ஃபான் முக்கியஸ்தர்களில் சிலரை நீங்கள் பணயக் கைதிகளாக பிடித்துக் கொள்ளாவிட்டால் ஒருபோதும் முஸ்லிம்களுடன் போருக்குச் செல்லாதீர்கள்! பணயக் கைதிகள் உங்களுடன் இருக்கும் வரை அவர்கள் போரிலிருந்து தப்ப முடியாது!" என்றார். இது ஒரு நல்ல முன்னெச்சரிக்கை என்பதை ஏற்றுக்கொண்ட யூதர்கள் அவருக்கு நன்றி தெரிவித்து பரிசுகளை வழங்கினர்.
ஹஸ்ரத் நுஐம் யூதர்களை விட்டுவிட்டு நேரடியாக குறைஷிகளின் தலைமையகத்திற்குச் சென்றார். அவர் அவர்களின் தளபதிகளிடம், "முஹம்மத் மீதான எனது பகைமையையும் நான் உங்களை எவ்வளவு நேசிக்கிறேன் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். எமது நட்பின் பொருட்டு, நான் அறிந்த ஒரு விஷயத்தை உங்களுக்குத் தெரிவிப்பதை ஒரு பெரிய கடமையாக நான் கருதுகிறேன். ஆனால் நான் என்ன சொல்லப் போகிறேன் என்பதை யாருக்கும் தெரியக் கூடாது என்று சத்தியம் செய்து வாக்குறுதி தர வேண்டும்!" என்றார். அவர்கள் சத்தியம் செய்து, "சொல்லுங்கள், நாங்கள் உங்கள் பேச்சைக் கேட்கிறோம்" என்றார்கள். அதற்கு அவர், "குறைழா யூதர்கள் உங்களுடன் உடன்படிக்கை செய்து கொண்டதற்காக வருந்துகிறார்கள் என்பதையும், அவர்கள் முஹம்மதுக்கு ஒரு செய்தியை அனுப்பினார்கள் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். அவர்கள், 'குறைஷிகள் மற்றும் கத்ஃபானின் முக்கியஸ்தர்களிடமிருந்து பணயக் கைதிகளைப் பிடித்து சிரச்சேதம் செய்வதற்காக உங்களிடம் ஒப்படைப்போம். எனவே, நாங்கள் உங்களுடன் ஒன்றிணைந்து இணைவைப்பாளர்களை ஒழிக்கும் வரை போராடுவோம்! இருப்பினும், நீங்கள் எங்கள் சகோதரர்களான நதீரின் மகன்களை மன்னித்து, அவர்களின் வீடுகளைத் திருப்பிக் கொடுக்க வேண்டும்' என்றனர். யூதர்களின் இந்த வேண்டுகோளை முஹம்மத் ஏற்றுக்கொண்டார். யூதர்கள் உங்களிடம் பணயக் கைதிகளைக் கேட்டால், அதை ஏற்காதீர்கள், அவர்கள் அனைவரையும் கொன்று விடுவார்கள்! நான் சொன்னதை யாருக்கும் கூற வேண்டாம்!" என்றார். இந்த முக்கியமான செய்திக்காக குறைஷிகள் ஹஸ்ரத் நுஐமுக்கு நன்றி தெரிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
நுஐம் இப்னு மஸ்ஊத் (ரழியல்லாஹு அன்ஹ்) அங்கிருந்து புறப்பட்டு கத்ஃபானிகளிடம் வந்தார். குறைஷிகளிடம் கூறியதை அவர்களிடமும் கூறினார்.
மறுநாள் குறைஷித் தளபதி குறைழாவின் மகன்களிடம், "நாங்கள் இப்போது இங்கு தங்குவது மிகவும் கடினமாகிவிட்டது. ஏனெனில் காலநிலை குளிர்ச்சியாக உள்ளது. அத்துடன் எங்கள் விலங்குகள் பசியால் இறந்து கொண்டிருக்கின்றன. இன்றிரவு நாம் நல்ல தயாரிப்புகளைச் செய்வோம், நாளை ஒரு தீவிரமான தாக்குதலைத் தொடங்குவோம்." என்று அறிவித்தார். அதற்கு அந்த யூதர்கள், "முதலாவதாக, நாங்கள் சனிக்கிழமையன்று போர் தொடுப்பதில்லை. இரண்டாவதாக, நாங்கள் உங்களுடன் சண்டையிடுவதற்கு, உங்கள் முக்கியஸ்தர்கள் பலரை பணயக் கைதிகளாக எங்களுக்கு வழங்க வேண்டும். முற்றுகைக் காலம் நீண்டு, நீங்கள் உதவியற்றவர்களாகி, உங்கள் நிலங்களுக்குத் திரும்பினால், நீங்கள் எங்களை முஹம்மதிடம் ஒப்படைத்தவர்களாக இருப்பீர்கள். எங்களிடம் பணயக் கைதிகளைக் கொடுத்தால், நீங்கள் எங்களைக் கைவிட மாட்டீர்கள்!" என்று கூறினார்கள்.
இந்தச் செய்தி குறைஷித் தளபதியை எட்டியபோது, அவர், "அப்படியானால் நுஐம் இப்னு மஸ்ஊத் கூறியது உண்மையே!" என்று கூறினார். அவர் மீண்டும் யூதர்களுக்கு ஒரு செய்தியை அனுப்பினார், "நாங்கள் எங்கள் ஆண்களில் ஒருவரைக் கூட உங்களிடம் பணயக் கைதியாக வழங்க மாட்டோம். நாளை நீங்கள் எங்களுடன் இணைந்து போரிட்டால் அது மிகவும் நல்லது. இல்லையென்றால், நாங்கள் எங்கள் தாயகத்திற்குச் செல்வோம், நீங்கள் முஹம்மதுக்கும் அவரது அஸ்ஹாபுக்கும் எதிராக தனித்து விடப்படுவீர்கள்!" என்று அறிவித்தார்.
இதைக் கேட்ட குறைழா யூதர்கள், நுஐமின் வார்த்தைகள் உண்மையாகிவிட்டதாக நினைத்து, "இந்த விஷயத்தில் நாங்கள் உங்களுடன் ஒன்றிணைந்து முஸ்லிம்களுக்கு எதிராகப் போரிட மாட்டோம்..." என்று பதிலளித்தனர். இவ்வாறு இருதரப்பினரின் உள்ளத்திலும் அச்சம் பரவியது.13
ஜிப்ரஈல் அலைஹிஸ்ஸலாம் எமது தலைவரான நபியவர்களிடம் வந்து, அல்லாஹு தஆலா இணைவைப்பாளர்களை சூறாவளி மூலம் அழித்து விடுவான் என்ற நற்செய்தியை அறிவித்தார். இதைக் கேட்ட அகிலங்களின் தலைவர் மண்டியிட்டு, தனது அருள்வாய்ந்த கரங்களை உயர்த்தி, அல்லாஹு தஆலாவுக்கு தனது நன்றியைத் தெரிவித்து, "என் அல்லாஹ்வே! நீ என் மீதும் என் அஸ்ஹாப் மீதும் இரக்கம் கொண்டதற்காக நான் உனக்கு நன்றி செலுத்துகிறேன்" என்று கூறினார். அவர் தனது வீர அஸ்ஹாப்களுக்கு நற்செய்தியை அறிவித்தார்.
அது ஒரு சனிக்கிழமை இரவு. சுற்றிலும் பெரும் இருள் சூழ்ந்திருந்தது. அப்போது, கடும் குளிர் வந்து, பலத்த காற்று வீசத் துவங்கியது. ஹஸ்ரத் ஹுழைஃபா தப்னி யமான் அந்த இரவை பின்வருமாறு விவரித்தார்:
"நாங்கள் இதற்கு முன்பு இவ்வாறு ஒரு இருண்ட இரவைக் கண்டதில்லை. இந்தப் பயங்கரமான இருளுடன், ஒரு பயங்கரமான காற்று இடி போன்ற சத்தத்துடன் வீசத் தொடங்கியது. அப்போது, எங்கள் தலைவர், நபிகள் நாயகம் இணைவைப்பாளர் படை எச்சரிக்கையடைந்து பீதியடைந்துள்ளதாகவும், அவர்கள் தங்களுக்குள் முரண்படுவதாகவும் கூறினார்கள். கடுமையான குளிராலும், பசியாலும், இரவின் பயங்கரத்தாலும் எங்களால் எழுந்து நிற்க முடியவில்லை. நாங்கள் சில போர்வைகளை அணிந்து கொண்டு நாங்கள் இருந்த இடத்திலேயே காத்திருந்தோம்.
ரஸூலுல்லாஹ் தொழத் தொடங்கினார், இரவின் ஒரு பகுதியை தொழுகையில் கழித்த பிறகு, அவர் எங்களை நோக்கித் திரும்பி, 'உங்களில் யாராவது இணைவைப்பாளர் படையிடம் சென்று, அவர்களின் நிலையை ஆராய்ந்து எனக்கு செய்தி கொண்டு வர முடியுமா? இந்தச் செய்தியை என்னிடம் கொண்டு வருபவர் சுவனத்தில் எனக்கு நண்பராக இருக்க வேண்டுமென்று அல்லாஹு தஆலாவிடம் வேண்டிக் கொள்கிறேன்' என்று கூறினார். கடும் பசி மற்றும் குளிரால் அங்கிருந்த யாராலும் எழுந்து நிற்க முடியவில்லை. அப்போது எமது நாயகம் ரஸூலுல்லாஹ் என்னிடம் வந்தார். குளிரிலும் பசியிலும் மண்டியிட்டு உட்கார்ந்திருந்தேன். எமது நாயகம் ரஸூலுல்லாஹ் என்னைத் தொட்டு, 'நீங்கள் யார்?' என்று கேட்டார். நான், 'நான்தான் ஹுழைஃபா, ரஸூலல்லாஹ்' என்று பதிலளித்தேன். எமது நாயகம் ரஸூலுல்லாஹ், 'சென்று அந்த மக்கள் என்ன செய்கிறார்கள் என்று பாருங்கள்! நீர் என்னிடம் திரும்பி வரும்வரை, அவர்கள் மீது எந்த அம்பையும் எய்யாமலும், எந்தக் கல்லையும் எறியாமலும், உமது வாளாலும், ஈட்டியாலும் அவர்களைத் தாக்காமலும் இருக்க வேண்டும். நீர் என்னிடம் திரும்பி வரும்வரை, குளிராலோ வெப்பத்தாலோ உமக்குத் தீங்கு ஏற்படாது, நீர் பிடிக்கப்படவோ சித்திரவதை செய்யப்படவோ மாட்டீர்.' என்றார்.
நான் என் வாளையும் வில்லையும் எடுத்துக் கொண்டு புறப்படத் தயாரானேன். எமது நாயகம் ரஸூலுல்லாஹ் எனக்காகப் பிரார்த்தனை செய்து, 'யா அல்லாஹ்! முன்னும் பின்னும், வலப்புறத்திலும், இடப்புறத்திலும், மேலிருந்தும், கீழிருந்தும் அவரைப் பாதுகாப்பாயாக" என்று கூறினார்.
"இப்போது உங்கள் முறை. இனிமேல் குறைஷிகள் உங்களுக்கு எதிராகப் படையெடுக்க முடியாது"
ஹதீஸ் அஷ்-ஷரீஃப்
நான் இணைவைப்பாளர்களை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். குளியலறையில் நடப்பது போல இருந்தது. அல்லாஹ்வின் மீது ஆணையாகச் சொல்கிறேன், என்னில் பயமோ, குளிரோ, நடுக்கமோ இருக்கல்லை. இறுதியாக நான் இணைவைப்பாளர்களின் தலைமையகத்தை அடைந்தேன். அவர்களின் தளபதிகளும், தலைவர்களும் நெருப்பு மூட்டி சூடு பிடித்துக் கொண்டிருந்தனர். அபூஸுஃப்யான், 'நாம் இங்கிருந்து போய்விடுவோம்' என்று கூறினார். உடனே அவரை அங்கேயே கொன்று விட வேண்டும் என்று நினைத்தேன். என் அம்பறாத் துணியிலிருந்து ஒரு அம்பை எடுத்து என் வில்லில் வைத்தேன். நெருப்பின் வெளிச்சத்தைப் பயன்படுத்தி அவரைச் சுட விரும்பினேன். நான் அம்பெய்யத் தயாரானபோது, 'நீங்கள் என்னிடம் திரும்பி வரும்வரை, எந்த அசம்பாவிதத்தையும் ஏற்படுத்த வேண்டாம்' என்று ரஸூலுல்லாஹ் என்னிடம் கூறியது நினைவுக்கு வந்தது, நான் அவரைக் கொல்வதைக் கைவிட்டேன். இதற்குப் பிறகு, எனக்குள் மிகுந்த தைரியம் ஏற்பட்டது. நான் முஷ்ரிக்குகளை அணுகி நெருப்பின் அருகில் அமர்ந்தேன். என்றுமில்லாவாறு பலத்த காற்றும், அல்லாஹு தஆலாவின் கண்ணுக்குத் தெரியாத படையும் (வானவர்களும்) அவர்களைத் தாக்கின. காற்றில் அவர்களுடைய சமையல் கருவிகள் கீழே விழுந்தன. அவர்களுடைய நெருப்பும் விளக்குகளும் அணைக்கப்பட்டன. அவர்களுடைய கூடாரங்கள் அவர்களுடைய தலைகளின் மீது சரிந்து விழுந்தன. ஒரு கட்டத்தில் இணைவைப்பாளர் படையின் தளபதி அபூ சுஃப்யான் எழுந்து நின்று, 'ஜாக்கிரதை! உங்களுக்கு மத்தியில் வேவுகாரர்களும் ஒற்றர்களும் இருக்கலாம்; பக்கத்தில் இருப்பவர் யார் என்று அனைவரும் பார்க்க வேண்டும்! ஒவ்வொருவரும் பக்கத்தில் உட்கார்ந்திருப்பவரின் கையைப் பிடித்துக் கொள்ள வேண்டும்' என்றார். அவர்களில் அந்நியர் ஒருவர் இருப்பதை அபூ சுஃப்யான் உணர்ந்தார். உடனே, நான் என் கைகளை நீட்டி, என் வலது மற்றும் இடதுபுறத்தில் இருந்த இருவரின் கைகளைப் பிடித்து, அவர்கள் கேட்க முன்பு அவர்களின் பெயர்களைக் கேட்டேன். இதனால், நான் அடையாளம் காணப்படுவதிலிருந்து தப்பினேன்.
இறுதியாக அபூ சுஃப்யான் தன் படையை நோக்கி, 'குறைஷிகளே! நீங்கள் தங்குவதற்கு பொருத்தமான இடத்தில் இல்லை. குதிரைகளும் ஒட்டகங்களும் இறக்கத் தொடங்கிவிட்டன. எங்கும் பஞ்சம். காற்றினால் எங்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை நீங்கள் பார்க்கிறீர்கள். உடனே இங்கிருந்து கிளம்புங்கள்! இப்போது நான் போகிறேன்!' என்று சொல்லிவிட்டுத் தன் ஒட்டகத்தில் ஏறிக் கொண்டார். இணைவைப்பாளரின் படை பரிதாபகரமான நிலையில் திரண்டு மக்காவை நோக்கி நகர்ந்தது. மணலும் கூழாங்கற்களும் அவர்கள் மீது பொழிந்து கொண்டிருந்தன.14
இணைவைப்பாளர்களின் படை சென்றதும் நான் எங்கள் நாயகம் ரஸூலுல்லாஹ்வை நோக்கி நடந்தேன். நான் பாதி வழியை அடைந்தபோது, வெள்ளை தலைப்பாகை அணிந்த இருபது குதிரை வீரர்களை (வானவர்களை) சந்தித்தேன். அவர்கள் என்னிடம், 'ரஸூலுல்லாஹ்விடம் தெரிவியுங்கள். அல்லாஹு தஆலா எதிரிகளை அழித்தான்...' என்றனர். நான் ரஸூலுல்லாஹ் இருந்த இடத்திற்குத் திரும்பியபோது, அவர் ஒரு கம்பளத்தில் தொழுது கொண்டிருந்தார். நான் திரும்பி வந்தவுடன், நான் வெளியேறுவதற்கு முன்பு என்னைப் பீடித்திருந்த குளிரும் நடுக்கமும் மீண்டும் பற்றிக் கொள்ளத் தொடங்கியது. தொழுகைக்குப் பிறகு, எங்கள் நாயகம் ரஸூலுல்லாஹ் என்னிடம் நான் என்ன செய்தி கொண்டு வந்திருக்கிறேன் என்று கேட்டார். இணைவைப்பாளர்களின் பரிதாப நிலையைப் பற்றியும் அவர்கள் புறப்பட்டுச் சென்றதைப் பற்றியும் அவரிடம் கூறினேன். இந்தச் செய்தியைக் கேட்டு மிகவும் மகிழ்ந்த ரஸூலுல்லாஹ் புன்னகைத்தார். பல நாட்கள் தூக்கமின்றி தவித்தோம். எங்கள் தலைவர், நபிகள் நாயகம் என்னைத் தன் பக்கத்தில் அழைத்து, அவர் போர்வையாகப் பயன்படுத்திய கம்பளத்தின் ஒரு பகுதியை என்னுடன் பகிர்ந்து நம் இருவரையும் போர்வையால் மூடிக் கொண்டார். இவ்வாறுதான் இரவைக் கழித்தோம். ரஸூலுல்லாஹ் விடியற்காலையில் என்னை எழுப்பினார். காலையில், இணைவைப்பாளர்களின் இராணுவத்தின் எந்தத் தடயமும் இருக்கவில்லை."
இணைவைப்பாளர்கள் மக்காவை நெருங்கும் வரை, பலத்த காற்று அவர்களுக்குப் பின்னால் வீசியது, அவர்களுக்குப் பின்னால் தக்பீர் சத்தம் கேட்டது.
குறைஷிகள் தங்கள் தலைமையகத்தை விட்டு வெளியேறி தப்பி ஓடிய போது, அவர்களுடன் வந்த மற்ற இணைவைப்பாளர்களின் கோத்திரங்களும் மதீனாவை விட்டு வெளியேறினர். அவர்களால் மறக்க முடியாத ஒரு மாபெரும் இழப்பின் துயரத்திலும் சோகத்திலும் அவர்கள் மூழ்கிப்போனார்கள். அவர்கள் இந்தத் தோல்வியைச் சந்தித்துக் கொண்டிருந்த போது, அகிலத்தின் தலைவர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் மாண்புமிகு அஸ்ஹாப்களும் (ரழியல்லாஹு அன்ஹூம்) அல்லாஹு தஆலாவுக்கு நன்றி செலுத்தும் ஸஜ்தா (ஸஜ்தா ஷுக்ர்) செய்து அல்லாஹ்வைப் புகழ்ந்து நன்றி செலுத்திக் கொண்டிருந்தார்கள். முஜாஹிதுகள் "அல்லாஹு அக்பர்" என்ற முழக்கங்களுடன் ஒளி வீசும் மதீனாவை நோக்கிச் சென்றனர். “அல்லாஹு அக்பர்!" மதீனாவின் தெருக்கள் திடீரென குழந்தைகளால் ஆக்கிரமிக்கப்பட்டன; அவர்கள் பிரபஞ்சத்தின் சுல்தானையும், அவர்களின் அருமையான தந்தைகள், மாமாக்கள் மற்றும் மூத்த சகோதரர்களையும் சந்திக்கப் புறப்பட்டனர். நபிகள் நாயகம் புன்னகையுடன் அவர்களுக்கு பதிலளித்துக் கொண்டிருந்தார்கள்...
அகழி கஸாவில் ஆறு முஸ்லிம்கள் ஷஹீதாக்கப்பட்டனர்...
இந்த கஸாவைப் பற்றி, அல்லாஹு தஆலா மஆலில் இவ்வாறு குறிப்பிட்டான், "அல்லாஹு தஆலா அந்த காஃபிர்களை (அகழி கஸாவில்) அவர்களின் கோபத்தால் திருப்பி அனுப்பினான். அவர்களால் எந்த நன்மையையும் வெற்றியையும் அடைய முடியவில்லை. இவ்வாறே, போரில் முஃமின்களுக்கு அல்லாஹு தஆலா மாத்திரமே (அவனது வானவர்களும், காற்றும்) போதுமானதாக இருந்தது. அல்லாஹு தஆலாடைய சக்தி எல்லாவற்றிற்கும் போதுமானதாகும். நிச்சயமாக அவன் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன்; (யாவற்றையும்) முற்றிலும் வெல்லக்கூடியவன்."15
"முஃமின்களே! உங்கள் மீது அல்லாஹு தஆலா வழங்கிய அருட்கொடைகளை நினைத்துப் பாருங்கள். (அகழி கஸாவில்) படைகள் உங்களைத் தாக்கிய போது, அவர்களுக்காக நாம் காற்றையும், நீங்கள் பார்க்கவியலாத படைகளையும் (வானவர்களையும்) அனுப்பினோம்."16
இந்தப் போருக்குப் பிறகு, நமது அன்புக்குரிய நபிகள் நாயகமவர்கள், "இப்போது உங்கள் முறை. இனிமேல் குறைஷிகள் உங்களுக்கு எதிராகப் படையெடுக்க முடியாது" என்று கூறினார்கள்.
