அபிசீனியாவிற்குப் புலம்பெயர்தல்
அபிசீனியாவிற்கு முதல் புலம்பெயர்வு
நமது நாயகம் ரஸூலுல்லாஹ்வின் நபித்துவத்தின் (பிஃஸத்) ஐந்தாம் ஆண்டில், இணைவைப்பாளர்களின் சித்திரவதைகளுக்கு மத்தியிலும் முஸ்லிம்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தது. ஆனாலும், இணைவைப்பாளர்கள் தங்கள் சித்திரவதைகளையும் அதிகரித்தனர். அவர்கள் முஸ்லிம்களைத் துன்புறுத்துவதற்குத் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்தனர். அஸ்ஹாப் (நபித் தோழர்கள்) தாங்க முடியாத சித்திரவதைகளுக்கு ஆளானதையும், அவர்களது கால்கள் ஒட்டகங்களில் கட்டப்பட்டதையும், எதிரெதிர் திசையில் இழுத்துச் செல்லப்பட்டு துண்டாடப்பட்டதையும் நினைத்து எமது நாயகம் மிகவும் வருத்தப்பட்டார். இந்தச் சித்திரவதைகள் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருந்தன. அவருடைய இரக்கமுள்ள இதயத்தால் அதைத் தாங்க முடியவில்லை.
ஒரு நாள், அவர் அஸ்ஹாப் அல்-கிராமை அழைத்து, “என் அஸ்ஹாபே! இப்போது பூமியில் பரவிச் செல்லுங்கள். விரைவில் அல்லாஹு தஆலா உங்களை மீண்டும் ஒன்று சேர்ப்பான்!” என்று கூறினார்.
அவர்கள், “யா ரஸூலுல்லாஹ்! நாம் எங்கே போகலாம்?" என்று வினவினர். நமது நபியவர்கள் தமது அருள்மிகு கரத்தால் அபிசீனியா தேசத்தைச் சுட்டிக் காட்டி, “அங்கே! அபிசீனியா தேசத்திற்குச் செல்லுங்கள்!1 அது நீதியின் தேசம். அல்லாஹு தஆலா உங்கள் சிரமங்களிலிருந்து விடுதலை பெறுவதற்கான வழியைத் திறக்கும் வரை அங்கேயே இருங்கள்." என்றார்கள்.
எனவே, எமது நாயகம், ஸர்வார் அல்-ஆலம் முஹம்மத் முஸ்தபா (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சித்திரவதைகளிலிருந்து தமது அஸ்ஹாபைக் காப்பாற்றவும், மக்கா இணைவைப்பாளர்களுக்கு எதிரான போராட்டத்தைத் தொடரவும் முடிவு செய்தார்கள். தான் பிறக்கும் போது “என் உம்மத்தே! என் உம்மத்தே!” என்று கூறிய அவர், இப்போது தனது அஸ்ஹாபின் பாதுகாப்பிற்காக தன்னையே தியாகம் செய்து கொண்டிருந்தார். அவரது அனுமதியின் பேரில், சில அஸ்ஹாபுல்-கிராம்கள் தங்கள் தாயகத்தை விட்டு வெளியேறி, புலம்பெயர்ந்தனர்! இருப்பினும், அவர்கள் எங்கள் அன்பான நபியை விட்டுப் பிரிந்ததால் மிகவும் வருத்தத்துடன் இருந்தனர்.
இந்த முதல் புலம்பெயர்வுக்கு ஹஸ்ரத் உஸ்மான் மற்றும் அவரது மனைவி ஹஸ்ரத் ருகையா பின்த் ரஸூலுல்லாஹ், அபூ ஹுஸைஃபா மற்றும் அவரது மனைவி ஸஹ்லா பின்த் சுஹைல், ஸுபைர் இப்னு அவ்வாம், முஸ்அப் இப்னு உமைர், அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ப், அபூ ஸலமா இப்னு அப்துல் அஸத் மற்றும் அவரது மனைவி உம்மு ஸலமா, காதிப் இப்னு அம்ர், ஆமிர் இப்னு ரபீஆ மற்றும் அவரது மனைவி லைலா பின்த் அபீ ஹஸ்மா, உஸ்மான் இப்னு மஸ்ஊன், அபூ ஸப்ரா இப்னு அபீ ருஹ்ம் மற்றும் அவரது மனைவி உம்மு குல்தும் பின்த் ஸுஹைல், ஸுஹைல் இப்னு பைதா, அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ஆகியோர் இணைந்திருந்தார்கள்.2 எமது நாயகம், ஹஸ்ரத் உஸ்மானைப் பற்றிக் குறிப்பிட்டு, "நிச்சயமாக, லூத் நபிக்குப் பிறகு, உஸ்மான்தான் தனது மனைவியுடன் முதலாவது ஹிஜ்ரத் செய்தவராவார்" என்று கூறினார்.
அஸ்ஹாப் அல்-கிராம் மக்காவை விட்டு இரகசியமாகப் புறப்பட்டனர். சிலர் ஒட்டகங்களிலும், சிலர் நடந்தும் சென்றனர். பயணக் கூட்டம் ஷுஐபாவை அடைந்த போது அங்கே அல்லாஹ்வின் அருளால் இரண்டு வர்த்தகக் கப்பல்கள் வந்திருந்தன. வியாபாரிகளுக்கு ஒவ்வொருவருக்கும் அரைத் தங்கம் வீதம் கொடுத்து, அஸ்ஹாப் (நபித்தோழர்கள்) கப்பல்களில் ஏறினார்கள். இதற்கிடையில், இதைக் கேள்விப்பட்ட முஷ்ரிக்குகள், அஸ்ஹாபைப் பின்தொடர்ந்து சென்றனர். அவர்கள் கடலோரத்தை அடைந்தபோது, நபித்தோழர்கள் ஏற்கனவே கப்பல்களுடன் புறப்பட்டிருந்ததால், முஹாஜிரீன்கள் (புலம்பெயர்ந்து சென்ற அஸ்ஹாப் அல்-கிராம்கள்) யாரையும் அவர்களால் பிடிக்க முடியவில்லை. அவர்களின் முயற்சிகள் வீணாகி, மனமுடைந்து திரும்பிச் சென்றனர். அஸ்ஹாப் செங்கடல் வழியாக பாதுகாப்பாக அபிசீனியாவை அடைந்தனர்.3 அபிசீனியாவின் ஆட்சியாளரான நஜ்ஜாஸ் தனது நாட்டில் முஸ்லிம்களைக் குடியமர்த்தி அவர்களை நல்ல முறையில் நடத்தினார்.
அஸ்ஹாப் அபிசீனியாவுக்குச் சென்ற பிறகு, ஸூரா அந்-நஜ்ம் இறங்கியது. மஸ்ஜிதுல் ஹராமில் உள்ள குறைஷிகளிடம் ரஸூலுல்லாஹ் இந்த ஸூராவை ஓதிக் கொண்டிருந்த போது, 19ஆவது மற்றும் 20ஆவது ஆயத்துல் கரீமாக்களை அடைந்தபோது, அந்த ஆயத்களில் இணைவைப்பாளர்களின் சிலைகள் குறிப்பிடப்பட்ட இடத்தில், சிலைகள் உயர்ந்தவை, அவை பரிந்துரை செய்பவை போன்ற விஷயங்களை கெட்ட ஷைத்தான் இடைச் செருக முயற்சித்தான். இவ்வாறு கூறியவர் ரஸூலுல்லாஹ் என்று இணைவைப்பாளர்கள் நினைத்தார்கள். அவர் எங்கள் மதத்தை ஒப்புக்கொண்டதால், நாங்கள் அவருடன் சமாதானம் செய்வோம் என்றார்கள். வலீத் இப்னு முகீஃரா ரஸூலுல்லாஹ்விடம் வந்து, இனி நாங்கள் உம்மைத் தொடமாட்டோம் என்று கூறியபோது, எமது நபியவர்கள் வியப்படைந்தார்கள். ரமழானின் பிற்பகுதியில், அபிசீனியாவிலிருந்த அஸ்ஹாபுக்கு இணைவைப்பாளர்களின் சமாதானம் (!) பற்றிய செய்தி எட்டியது.
அபிசீனியாவிலுள்ள முஸ்லிம்களுக்கு, “முஸ்லிம்களும் இணைவைப்பாளர்களும் மக்காவில் ஒப்பந்தம் செய்துகொண்டார்கள்!” என்ற செய்தி கிடைத்தது. இதனால், அவர்கள், “நாங்கள் புலம்பெயர்ந்ததும், எங்கள் நிலங்களை விட்டு வெளியேறியதும் இணைவைப்பாளர்களின் பகையால்தான். தற்போது அவர்களின் பகை நட்பாக மாறியுள்ளது. எனவே, நமது நாயகம் ரஸூல் அல்-அக்ரம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்குச் சேவை செய்து மகிமை பெறுவற்காக நாம் அங்கு செல்வோம்." என்று நினைத்தார்கள்.
அந்த நேரத்தில், ஷைத்தானின் இந்த தந்திரத்தை ஜிப்ரஈல் அலைஹிஸ்ஸலாம் ரஸூலுல்லாஹ்விடம் தெரிவித்தார். அதனால் அவர் மிகவும் வருத்தப்பட்டார். ஜனாப் அல்-ஹக், ஸூரா அல்-ஹஜ்ஜின் 52ஆவது ஆயத் அல்-கரீமாவை இந்நிலையில் இறக்கியருளினான். மஆலின்படி அது பின்வருமாறு: “உங்களுக்கு முன் நாம் அனுப்பிய ரஸூல்களிலோ அல்லது நபிமார்களிலோ எவரேனும் (நம்முடைய வசனங்களை) ஓதிக் காண்பிக்கவோ, அல்லது (அல்லாஹ்வின் கட்டளைகளைப்) பேசவோ நாடினால், ஷைத்தான் அவர் ஓதிக் காண்பிக்கையில் (அவற்றில்) எதையாவது புகுத்திக் கொண்டான். ஷைத்தான் புகுத்தியதை சத்தியத்திலிருந்து அல்லாஹு தஆலா பிரித்து விடுகிறான். பின்னர், அவனே தன் அடியார்களைப் பலப்படுத்தினான். அல்லாஹு தஆலா மக்களின் நிலைகளை அறிந்தவன், அவன் தனது தீர்ப்பை நிறைவேற்றுகிறான்." இணைவைப்பாளர்கள் இந்த ஆயத்தைக் கேட்டதும், அவர்கள் மீண்டும் தங்கள் வேதனைகளையும் சித்திரவதைகளையும் தொடங்கினர்.
முஹாஜிரின்கள் அபிசீனியாவின் ஆட்சியாளரிடம் அனுமதி பெற்று ஷவ்வால் மாதத்தில் மக்கா அல்முகர்ரமாவுக்குத் திரும்பினார்கள். ஆனால், தங்களுக்கு வந்த செய்தி தவறானது என்பதை அவர்கள் அறிந்து கொண்டனர்.4 நடந்ததை அறிந்ததும் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் எமது நபியின் முன்னிலையில் வந்து அபிசீனியாவைப் பற்றிக் கூறினார்கள், “நாங்கள் அங்கு நல்ல அபயத்தையும் பாதுகாப்பையும் பெற்றோம். எமது மார்க்கத்திற்கு அங்கு எந்தத் தீங்கும் செய்யப்படவில்லை; நாங்கள் துன்புறுத்தப்படவில்லை; அங்கு நாம் விரும்பத்தகாத வார்த்தைகளைக் கேட்கவில்லை. நாம் அங்கு நிம்மதியாக அல்லாஹு தஆலாவை வணங்கினோம்." என்றனர்.5 அவர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதுடன் நீண்ட நேரம் அபிசீனியாவின் வளங்களை விவரித்தனர். அபிசீனியாவின் நீர், காற்று மற்றும் பழங்கள் பலத்தை வழங்குகின்றன; அங்கு நான்கு வழிபாட்டுத் தலங்கள் உள்ளன; அன்றாடம் ஒட்டகங்கள் மற்றும் செம்மறி ஆடுகள் அறுக்கப்படுகின்றன; அந்த மக்கள் ஏழைகள் மற்றும் வெளிநாட்டினரை அழைத்து நல்ல முறையில் உபசரித்தனர்; அவர்களின் ஆட்சியாளர் அவர்களைச் சந்தித்து அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தார்; அவர்களின் பிரச்சனைகள் நீங்கின;6 அவர்கள் அபிசீனியாவில் இரண்டு மாதங்களுக்கும் மேலாகத் தங்கியிருந்தனர் என்பதை விரிவாக விளக்கினார்கள்.
ஹஸ்ரத் ஹம்ஸா இஸ்லாத்தைத் தழுவுதல்
பிஃஸத்தின் ஆறாம் ஆண்டு... இஸ்லாத்தின் குரல் நாளுக்கு நாள் காதுக்குக் காது பரவி, இதயங்களைச் சென்றடைந்து அதை மேலும் முன்னெடுத்துச் சென்றது. இந்த சூழ்நிலை குறைஷ் இணைவைப்பாளர்களை வெறித்தனமாக மாற்றிவிட்டது. அவர்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும், இஸ்லாம் பரவுவதை அவர்களால் தடுக்க முடியவில்லை.
"தலாஇல் அந்-நுபுவ்வா" மற்றும் "மஆரிஜ் அந்-நுபுவ்வா" ஆகிய நூல்களில் பின்வரும் விடயம் பதிவாகியுள்ளது:
இணைவைப்பாளர்களில் ஒருவரான வலீத் ஒரு சிலை வைத்திருந்தார். அவர்கள் சஃபா மலையில் கூடி இந்த சிலையை வழிபடுவார்கள். ஒரு நாள், நமது நபிகள் நாயகம், அவர்களிடம் சென்று, பல தெய்வ வழிபாடு செய்பவர்களை ஈமானின் பக்கம் அழைத்தார்கள். ஒரு காஃபிர் ஜின் அந்த சிலைக்குள் நுழைந்து எமது அன்பு நபியைப் பற்றித் தகாத வார்த்தைகளைக் கூறியது. எமது நாயகம் ஃபக்ருல் ஆலம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இதனால் வருத்தப்பட்டார்கள். மற்றொரு நாள், ஒரு கண்ணுக்குத் தெரியாத நபரொருவர் (ஜின்) எமது நபியை வாழ்த்தி, “யா ரஸூலல்லாஹ்! ஒரு காஃபிர் ஜின் உங்களுக்குப் பொருத்தமில்லாத விஷயங்களைச் சொன்னதாகக் கேள்விப்பட்டேன். நான் அவரைக் கண்டுபிடித்துக் கொன்று விட்டேன். நீங்கள் விரும்பினால், நாளை சஃபா மலையுச்சிக்கு சென்று அதனை கௌரவிக்க முடியுமா? நீங்கள் அவர்களை மீண்டும் இஸ்லாத்திற்கு அழையுங்கள், நான் அந்த சிலைக்குள் நுழைந்து உமக்குப் புகழ்ச்சி வார்த்தைகளைச் சொல்வேன்." என்று கூறினார். அப்துல்லாஹ் என்ற பெயர் கொண்ட இந்த ஜின்னின் வேண்டுகோளை எமது நாயகம் ஏற்றுக்கொண்டார்.
“குறைஷிகளே! நீங்கள் என்னை அடிக்கிறீர்கள். ஆனால் நான் உங்கள் நபியாவேன்”
எம் அன்பு நபி முஹம்மத் அலைஹிஸ்ஸலாம்
அடுத்த நாள், எமது அன்பு நபியவர்கள் அங்கு சென்று, இணைவைப்பாளர்களை மீண்டும் இறைநம்பிக்கையின் பக்கம் அழைத்தார். அபூஜஹ்லும் அங்கே இருந்தான். முஸ்லிம் ஜின்கள் இணைவைப்பாளர்களின் கைகளில் இருந்த சிலைக்குள் நுழைந்து, எமது அன்பு நபியையும் இஸ்லாம் பற்றியும் புகழ்ந்து வார்த்தைகளையும் கவிதைகளையும் கூறினர். இந்த வார்த்தைகளைக் கேட்ட முஷ்ரிக்குகள் அந்த சிலையை உடைத்து ரஸூலுல்லாஹ்வைத் தாக்கினர். அவரது அருள்மிகு தலைமுடி கலைந்து, அவரது அருள்முகத்திலிருந்து இரத்தம் வழிந்தது. அவர் அவர்களின் வேதனைகளைச் சகித்துக்கொண்டு, “குறைஷிகளே! நீங்கள் என்னை அடிக்கிறீர்கள். ஆனால் நான் உங்கள் நபியாவேன்” என்று கூறினார்கள். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு தனது வீட்டிற்கு வந்தார். ஒரு வேலைக்காரப் பெண் இந்த சம்பவத்தை ஆரம்பம் முதல் இறுதி வரை பார்த்துக் கொணடிருந்தாள்.
அந்த சந்தர்ப்பத்தில், ஹஸ்ரத் ஹம்ஸா மலைப்பகுதியில் வேட்டையாடிக்கொண்டிருந்தார். அவர் ஒரு மான் மீது அம்பு எய்ய முனைந்தபோது, அந்த மான் எழுந்து, “ஹம்ஸாவே! என் மீது எய்வதற்குப் பதிலாக, உங்கள் சகோதரனின் மகனைக் கொல்ல நினைப்பவர்களைத் தாக்கினால் நல்லது” என்று கூறியது. ஹஸ்ரத் ஹம்ஸா இந்த வார்த்தைகளால் வியப்படைந்தார். விரைவாக தனது வீட்டிற்குப் புறப்பட்டார். அவர் வேட்டையாடிவிட்டுத் திரும்பியதும், ஹரம் அஷ்-ஷரீப்புக்குச் சென்று தவாஃப் செய்துவிட்டு, பின்னர் தனது வீட்டிற்குச் செல்வது அவரது வழக்கமாக இருந்தது. அன்று, தவாஃபின் போது, அந்த வேலைக்காரப் பெண் வந்து, அபூஜஹ்ல் முஹம்மத் அலைஹிஸ்ஸலாமுக்கு என்ன செய்தான் என்பதை அவரிடம் விபரித்தார்.
ஹஸ்ரத் ஹம்ஸா எமது நாயகம் நபியவர்கள் இழிவுபடுத்தப்பட்டதைக் கேட்டதும், அவர் உறவின் வைராக்கியத்தை உணர்ந்தார். ஆயுதங்களை எடுத்துக் கொண்டு பலதெய்வவாதிகள் இருக்கும் இடத்திற்குச் சென்றார். அங்கே அவர், “என் சகோதரனின் மகனை அவமதித்து, அவரது மனதைப் புண்படுத்தியவர்கள் நீங்களா? அவருடைய மதம் என்னுடைய மதமும் கூட. உங்களால் முடிந்தால், நீங்கள் அவருக்கு என்ன செய்தீர்களோ அதையே எனக்கும் செய்யுங்கள்!” என்று முழங்கினார். அத்துடன் அபூஜஹ்லின் தலையை தனது வில்லால் அடித்துக் காயப்படுத்தினார். அங்கிருந்த காஃபிர்கள் ஹஸ்ரத் ஹம்ஸாவைத் தாக்க முனைந்தனர். ஆனால் அபூஜஹ்ல், “அவரைத் தொடாதீர்கள்! ஹம்ஸா சொல்வது சரிதான். நான் அவருடைய மருமகனிடம் கெட்ட வார்த்தைகளைச் சொன்னேன்." என்று கூறினான்.
ஹஸ்ரத் ஹம்ஸா அங்கிருந்து சென்ற பிறகு, அபூ அபூஜஹ்ல் தன்னைச் சுற்றியிருந்தவர்களிடம், “அவரை விட்டுவிடுங்கள்! நாம் கோபப்பட்டால் அவர் முஸ்லிமாகலாம். அதன் மூலம் முஹம்மத் பலம் பெறுவார். ஏனெனில் ஹஸ்ரத் ஹம்ஸா மரியாதைக்குரியவர், மதிப்புமிக்கவர், வலிமையானவர்." என்று சொன்னான். ஹஸ்ரத் ஹம்ஸா முஸ்லிமாகிவிடக்கூடாது என்பதற்காக அபூஜஹ்ல் தனது தலையில் இரத்தம் சிந்துவதற்கு அனுமதித்தான்.
ஹஸ்ரத் ஹம்ஸா எமது நபியவர்களிடம் வந்து, “முஹம்மதே! நான் அபூஜஹ்லை உமக்காகப் பழிவாங்கினேன். நான் அவரது இரத்தத்தை சிந்தினேன். வருத்தப்படாதீர்கள், சந்தோஷப்படுங்கள்!” என்றார். அதற்கு நம் அன்பு நபிகள் நாயகம், "நான் அப்படிப்பட்ட காரியங்களில் மகிழ்ச்சியடைவதில்லை" என்று பதிலளித்தார்கள். அப்போது ஹஸ்ரத் ஹம்ஸா, “உம்மை சந்தோஷப்படுத்தவும், உமது சோகத்தைப் போக்கவும் நீங்கள் விரும்பும் எதையும் நான் செய்வேன்!” என்று சொன்னபோது, எமது நபிகள் நாயகம் அவரிடம், "நீர் ஈமான் கொண்டு, உமது விலைமதிப்பற்ற உடலை ஜஹன்னம் - நரக நெருப்பிலிருந்து காப்பாற்றினால் மட்டுமே நான் மகிழ்ச்சியடைவேன்" என்று பதிலளித்தார்கள். ஹஸ்ரத் ஹம்ஸா உடனே முஸ்லிமாகிவிட்டார். தொடர்ந்து, அவரைப் பற்றி ஒரு ஆயத் அல் கரீமா இறக்கியருளப்பட்டது. ஹஸ்ரத் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸின் கூற்றுப்படி, “குர்ஆன் அல்-கரீமில், ஸூரா அல்-அன்ஆமின் 122ஆவது ஆயத் அல்-கரீமாவில், 'மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்து வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்பட்டவர்...' என்பது ஹஸ்ரத் ஹம்ஸா அவர்களையும், 'இருளில் தத்தளிப்பவன்' என்பது அபூஜஹ்லையும் குறிக்கின்றன.
ஹஸ்ரத் ஹம்ஸா பலதெய்வவாதிகளிடம் சென்று, தான் முஸ்லிமாகிவிட்டதாகவும், அல்லாஹு தஆலாவின் ஹபீப் முஹம்மத் அலைஹிஸ்ஸலாம் அவர்களை, தனது உயிரைக் கொடுத்தேனும் பாதுகாப்பதாகவும் அறிவித்தார். தொடர்ந்து, அவர் ஒரு புகழுரையைப் படித்தார். அந்தப் புகழுரையில் அவர் கூறியதாவது:
“அல்லாஹு தஆலா என் இதயத்தை இஸ்லாத்தின் மீதும் சத்தியத்தின் மீதும் சாய்த்ததற்காக அவனுக்கே புகழனைத்தும் உரியது. இந்த மார்க்கம் பிரபஞ்சத்தின் ரப்பான அல்லாஹு தஆலாவால் அனுப்பப்பட்டது. அவன் தனது அடிமைகள் செய்யும் அனைத்தையும் அறிந்தவன். அனைவரையும் தனது அருளால் நடத்துபவன். அவனது சக்தி எல்லாவற்றையும் வென்றுள்ளது. குர்ஆன் அல்-கரீம் ஓதப்படும்போது, உள்ளமும் நல்லறிவும் உள்ளவர்களின் கண்களில் இருந்து கண்ணீர் வழிகிறது. குர்ஆன் அல்-கரீம் முஹம்மத் அலைஹிஸ்ஸலாமுக்குத் தெளிவான மொழியில் விளக்கப்பட்ட ஆயத்கள் வடிவத்தில் இறக்கியருளப்பட்டுள்ளது. அவர், முஹம்மத் முஸ்தபா, நம்மிடையே ஒரு அருள்நிறைந்த நபர். மனிதர்கள் அவருடைய வார்த்தைகளைக் கேட்டு, கீழ்ப்படிகிறார்கள். இணைவைப்பாளர்களே! அவரைப் பற்றிக் கடுமையான, முரட்டுத்தனமான வார்த்தைகளைச் சொல்லாதீர்கள், விழிப்புணர்வு பெறுங்கள். உங்களுக்கு அப்படி ஒரு எண்ணம் இருந்தால், முஸ்லிம்களாகிய எமது பிணத்தை மிதிக்காமல் யாராலும் அவரைத் தொட முடியாது” என்றார்.
ஹஸ்ரத் ஹம்ஸா முஸ்லிமாக மாறிய போது எமது அன்பார்ந்த நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்கள். அவர் முஸ்லிம்களுடன் இணைந்தபோது அவர்கள் மிகவும் வலிமை பெற்றனர்.
ஹஸ்ரத் ஹம்ஸா முஸ்லிமாக மாறியதும் நிலைமை மாறியது. ஏனெனில் ஹஸ்ரத் ஹம்ஸா துணிச்சலானவர், நம்பகமானவர் என்பதை மக்காவாசிகள் அறிந்திருந்தனர். அத்துடன் அவர் எவ்வளவு பெரிய போர்வீரன், வீரமிக்க மனிதர் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். இதனால், குறைஷி பலதெய்வவாதிகள் இனி எந்தக் காரணமும் இல்லாமல் முஸ்லிம்களை மோசமாக நடத்த முடியாது; குறிப்பாக ஹஸ்ரத் ஹம்ஸாவின் வாளின் கொடூரத்தைக் கண்டு அவர்கள் பயந்தனர்.7
உங்கள் அன்பினால் நான் இந்தப் பாதையைத் தொடங்கினேன்.
ரஸூலுல்லாஹ்வே, பரிந்துரை செய்யுங்கள்
நான் குற்றவாளி, நான் வெட்கப்படுகிறேன்,
ரஸூலுல்லாஹ்வே, பரிந்துரை செய்யுங்கள்
ஹஸ்ரத் உமர் இஸ்லாத்தைத் தழுவுதல்
இஸ்லாமிய மார்க்கம் நாளுக்கு நாள் பரவிக் கொண்டிருந்தது, குர்ஆன் அல்-கரீமின் நூர் ஆன்மாக்களை ஒளிரச் செய்து கொண்டிருந்தது. அதிர்ஷ்டசாலிகள் இஸ்லாத்திற்கு மாறி, அல்லாஹு தஆலாவின் அருளாக நேர்வழியை அடைந்தார்கள். அஸ்ஹாப் அல்-கிராம் (ரழியல்லாஹு அன்ஹும்) மத்தியில் இருந்து கௌரவிக்கப்பட்ட இந்தப் பக்கியம் பெற்ற மக்கள், தமது கைகளையும் இதயங்களையும் இணைத்து, மிகுந்த ஆர்வத்துடன் எமது நாயகம் ரஸூலுல்லாஹ்வுக்கு சேவை செய்தார்கள். அவரிடமிருந்து ஒரு சிறிய வேண்டுகோளையோ அல்லது ஒரு சமிக்ஞையையோ அவர்கள் கட்டளையாகக் கண்டால், அதை நிறைவேற்ற ஒருவரையொருவர் போட்டியிட்டனர்; இதற்காக அவர்கள் தமது உயிரைத் தியாகம் செய்யக் கூட தயங்கவில்லை.
பலதெய்வவாதிகளின் துன்பங்களும் கவலைகளும் உச்சத்தை எட்டியிருந்தன. ஏனெனில் அவர்களின் மிக முக்கியமான வீரர்களில் ஒருவரான ஹஸ்ரத் ஹம்ஸாவும் முஸ்லிமாகி ரஸுலுல்லாஹ்வின் அணியில் இடம்பிடித்திருந்தார். இந்த எதிர்பாராத நிகழ்வு இணைவைப்பாளர்களை கோபத்தில் ஆழ்த்தியது.
அதனால்தான் கத்தாபின் மகன் உமர் (அவர் இன்னும் முஸ்லிமாக மாறவில்லை) ஒரு நாள் எமது ரஸூலுல்லாஹ்வைக் கொல்லும் நோக்கத்துடன் தனது வீட்டை விட்டு வெளியேறினார். மஸ்ஜிதுல் ஹரமில் நம் அன்பான நபிகள் தொழுவதை அவர் கண்டார். தொழுகை முடிவடையும் வரை அவர் காத்திருந்தபோது, அவர் ஓதியது அவரது கவனத்தை ஈர்த்தது. அவர் ஆர்வத்துடன் கேட்கத் தொடங்கினார்.
எமது நாயகம் ஹபீப் அல்-அக்ரம் ஸூரா அல்-ஹாக்காவை ஓதிக் கொண்டிருந்தார். மஆலின்படி அது பின்வருமாறு, “நிச்சயமான (கியாம) நாள்! நிச்சயமான நாள் என்றால் என்ன? (நபியே!) நிச்சயமான (கியாமத்) சம்பவம் என்னவென்று உமக்கு எது அறிவித்தது? ஸமூத், ஆத் (கூட்டத்தாரும்) அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் (இவ்வேதனையை) பொய்ப்பித்தனர். எனவே ஸமூத் (கூட்டத்தினர்) தங்கள் அக்கிரமத்தின் காரணமாக (ஜிப்ரஈல் அலைஹிஸ்ஸலாமின் பயங்கரமான அலறலால்) அழிக்கப்பட்டனர். இன்னும், ஆத் கூட்டத்தாரோ பேரொலியோடு வேகமாகச் சுழன்று அடித்த புயலால் அழிக்கப்பட்டனர். அல்லாஹு தஆலா அவர்கள் மீது ஏழு இரவுகளும், எட்டு பகல்களும் தொடர்ச்சியாகக் கடும் புயலை அனுப்பி வைத்தான். (அந்நாளில் நீங்கள் இருந்திருந்தால்) அவர்கள் வெட்டப்பட்ட பேரீச்ச மரத்தடியைப் போல் வீழ்ந்து கிடப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆகவே, அவர்களில் எஞ்சிய எவரையும் நீர் காண்கிறீரா?
ஃபிர்அவ்னும், அவனுக்கு முன்னிருந்தோரும், தலைகீழாகப் புரட்டப்பட்ட (லூத்தின்) மக்களும் (அவ்வாறே ஷிர்க் மற்றும் கீழ்ப்படியாமை என்ற) தவறை செய்தனர். அவர்கள் தங்கள் இறைவனின் நபிக்கு (லூத் அலைஹிஸ்ஸலாம் மற்றும் பலருக்கு) மாறு செய்தனர். எனவே, முந்தைய சமுதாயங்களுக்கு ஏற்பட்ட வேதனையைவிடக் கடுமையான வேதனை அவர்களைப் பிடித்துக் கொண்டது... (நபியே!) (நூஹ் வெள்ளத்தின் போது) நீர் எல்லாப் பக்கங்களிலும் மூழ்கியிருந்தபோது, நிச்சயமாக நாம் உங்களை (உங்கள் இருப்புக்குக் காரணமான உங்கள் முன்னோர்களை) கப்பலில் ஏற்றினோம். உங்களுக்கு இது ஒரு படிப்பினையாகவும், செவிமடுக்கும் காதுகள் இதை நினைவில் கொள்ளவும் (நாம் செய்தோம்). பின்னர் ஸூர் (எக்காளம்) ஊதப்பட்டால், அது ஒரே தடவையாக ஊதப்படும்; அப்பால் பூமியும், மலைகளும் தூக்கி எறியப்பட்டு, அவை ஒன்றோடொன்று மோதித் தரை மட்டமாக்கப்படும் அந்நாளில் (அந்த மறுமை) நிலைபெறும். அந்நாளில் வானம் தன் வலிமையையும் உறுதியையும் இழந்து பிளந்து சிதறும்.
மலக்குகள் வானத்தைச் சுற்றி வருவார்கள். (அவர்கள் தங்கள் இறைவனின் கட்டளைக்காகக் காத்திருப்பவர்களாக இருக்கின்றனர்). அன்றியும், மலக்குகள் எட்டுப்பேர் அந்நாளில் உம்முடைய இறைவனின் அர்ஷைச் சுமந்து செல்வார்கள். அந்நாளில், நிச்சயமாக நீங்கள் (மறுமையில் அல்லாஹு தஆலாவிடம்) கொண்டுவரப்படுவீர்கள். உங்களில் மறைவானது எதுவுமே அல்லாஹு தஆலாவுக்கு மறைந்து விடாது. ஆகவே, எவனுடைய பட்டோலை அவனுடைய வலக்கையில் கொடுக்கப்படுகிறதோ, அவன் (மகிழ்ச்சியுடன்) கூறுவான்; "இதோ! என் பட்டோலை, இதனை எடுத்துப் படியுங்கள். "நிச்சயமாக என் கேள்வி கணக்கை நான் சந்திப்பேன் என்று எண்ணியிருந்தேன்" (என்றும் கூறுவார்). ஆகவே, அவர் திருப்தியான வாழ்க்கையில் இருப்பார். நிச்சயமாக அவர் உயர்ந்த சுவனபதியில் - ஜன்னத்தில் இருப்பார். "கடந்த நாட்களில் நீங்கள் முற்படுத்தி (யனுப்பி)ய (நல்ல அமல்களின்) காரணத்தால், நீங்கள் மகிழ்வோடு புசியுங்கள்; இன்னும் பருகுங்கள்" (என்று அவர்களுக்குக் கூறப்படும்).
ஆனால் எவனுடைய பட்டோலை அவனுடைய இடக்கையில் கொடுக்கப்படுமோ, அவன் கூறுவான்; "அந்தோ! "எனக்கு என் பட்டோலை கொடுக்கப்படாதிருப்பதை நான் விரும்பியிருப்பேன்; இன்னும், என் கேள்வி கணக்கை நான் அறிந்து கொள்ளாதிருப்பதை நான் விரும்புகிறேன். ஓ! அது (இறப்பு) ஒரு நிரந்தர முடிவாக (நான் உயிர்த்தெழுப்பப்படாமல்) இருந்திருக்க வேண்டுமே! "என் செல்வம் எனக்குப் பயனளிக்கவில்லை. "என் ஆட்சியெல்லாம் (வலிமை, சான்று, என்னிடம் இருந்த அனைத்தும்) என்னை விட்டு அழிந்து விட்டது. (அல்லாஹு தஆலா ஜஹன்னத்தில் கடமையில் இருக்கும் மலக்குகளுக்குக் கட்டளையிடுவான்:) "அவனைப் பிடித்து, (அவனது கைகளை அவனது கழுத்தில்) கட்டிவிடுங்கள்". "பின்னர், அவனை ஜஹீமில் (மிகக் கடுமையான வேதனையுடன் கூடிய ஜஹன்னத்தில்) தள்ளுங்கள். "பின்னர், எழுபது முழ நீளமுள்ள சங்கிலியால் அவனைக் கட்டி விடுங்கள்". ஏனெனில், அவன் அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்ளவில்லை. ஏழைகளுக்கு உணவளிப்பதை அவன் ஊக்குவிக்கவில்லை. "ஆகவே, இன்றைய தினம் அவனுக்கு இங்கே உற்ற நண்பன் எவனும் இல்லை. "ஜிஸ்லின் (ஜஹன்னத்தில் உள்ள மக்களின் சீழ் மற்றும் இரத்தம்) தவிர வேறு உணவு இல்லை. "அதை வழி கெட்டவர்கள் தவிர வேறெவரும் (விசுவாசிகள்) புசிக்க மாட்டார்கள்".8
ஹஸ்ரத் உமர், எமது நபிகள் நாயகம் ஓதுவதைக் கேட்டுக் கொண்டிருந்தார். இவ்வளவு அழகான வார்த்தைகளை அவர் தன் வாழ்நாளில் கேட்டதே இல்லை. பின்னர் அவர் இதைப் பின்வருமாறு விளக்கினார்; “நான் கேட்ட இந்த வார்த்தைகளின் வாய்மை, மென்மை மற்றும் நேர்த்தியைக் கண்டு வியந்தேன். குறைஷிகள் சொல்வது போல் இவர் கவிஞராகத்தான் இருக்க வேண்டும் என்று சத்தியம் செய்கிறேன் என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன்! இதற்கிடையில், எமது நபியவர்கள் ஆயத் அல் கரிமாக்களை தொடர்ந்து ஓதினார்கள்:
“நீங்கள் காணக்கூடியவற்றின் மீதும், நீங்கள் பார்க்க முடியாதவற்றின் மீதும் சத்தியமாக, இது (குர்ஆன் அல்-கரீம்) அல்லாஹு தஆலாவின் பார்வையில் மிகவும் கண்ணியமான ஒரு ரஸூல் மூலம் (அவனிடமிருந்து) கொண்டு வரப்பட்ட வார்த்தையாகும். இது ஒரு கவிஞரின் வார்த்தைகள் அல்ல. நீங்கள் எவ்வளவு குறைவாக நம்புகிறீர்கள்!..”9
ஹஸ்ரத் உமர் கூறுகிறார், “அவர் ஒரு சோதிடராக இருக்க வேண்டுமென்று மீண்டும் நான் எனக்குள் சொல்லிக் கொண்டேன். ஏனென்றால் நான் நினைத்ததை அவர் புரிந்துகொண்டார்!” ரஸூலுல்லாஹ் தொடர்ந்து ஸூராவை ஓதினார்:
“இது ஒரு சோதிடரின் வார்த்தையும் அல்ல. நீங்கள் எவ்வளவு குறைவாக நினைக்கிறீர்கள்! இது (குர்ஆன் அல்-கரீம்) உலகங்களின் ரப்பால் (முஹம்மத் அலைஹிஸ்ஸலாமுக்கு ஜிப்ரஈல் அலைஹிஸ்ஸலாம் மூலம்) இறக்கியருளப்பட்டது. அவர் (நபிகள்) நம் மீது (நாம் சொல்லாத) சில வார்த்தைகளை இட்டுக்கட்டினால், நிச்சயமாக, நாம் அவரை பலவந்தமாகப் பிடித்து, சந்தேகத்திற்கு இடமின்றி, அவருடைய உயிர் (கழுத்து) நரம்பைத் துண்டித்து, அவரை அழித்திருப்போம்! உங்களில் ஒருவராலும் அதைத் தடுத்திருக்க முடியாது! சந்தேகத்திற்கு இடமின்றி, இது (குர்ஆன் அல்-கரீம்) தக்வா (இறையச்சம்) உள்ளவர்களுக்கு ஒரு திட்டவட்டமான அறிவுரையாகும். உங்களில் சிலர் (உறுதிப்படுத்துவது போல்) மறுப்பவர்களும் உள்ளனர் என்பதை நாங்கள் அறிவோம். நிச்சயமாக, இது (குர்ஆன் அல்-கரீம்) காஃபிர்களுக்கு (தவிர்க்க முடியாத) ஏக்கமாக உள்ளது (அதை உறுதிப்படுத்தியவர்களுக்கு வழங்கப்படும் அருட்கொடைகளை ஆஃகிரத்தில் பார்ப்பார்கள்). நிச்சயமாக, அது (குர்ஆன் அல்-கரீம்) ஹக் அல்-யகீன் (இது முழுமையான அறிவின் உண்மை; இது துல்லியமான தகவல்களைக் கொண்டுள்ளது). எனவே உமது ரப்பின், மிகப் பெரியவனின் பெயரைப் போற்றுவீராக.10
"இது ஒரு சோதிடரின் வார்த்தையும் அல்ல. நீங்கள் எவ்வளவு குறைவாக நினைக்கிறீர்கள்! இது (குர்ஆன் அல்-கரீம்) உலகங்களின் ரப்பால் (முஹம்மத் அலைஹிஸ்ஸலாமுக்கு ஜிப்ரஈல் அலைஹிஸ்ஸலாம் மூலம்) இறக்கியருளப்பட்டது."
ஹாக்கா: 42-43
ரஸூலுல்லாஹ் முழு ஸூராவையும் ஓதி முடித்ததும் இஸ்லாத்தின் மீது ஒரு நாட்டம் ஏற்பட்டது என ஹஸ்ரத் உமர் கூறினார்.
ஹஸ்ரத் ஹம்ஸா முஸ்லிமாக மாறிய மூன்று நாட்களுக்குப் பிறகு, அபூஜஹ்ல் பல இணைவைப்பாளர்களை ஒன்று திரட்டி, “ஓ குறைஷியே! முஹம்மத் நமது சிலைகளை அவதூறு செய்துள்ளார். நமக்கு முன் வந்த நம் முன்னோர்கள் ஜஹன்னத்தில் வதைப்படுகிறார்கள், நாமும் அங்கே போவோம் என்று சொல்லியிருக்கிறார்! அவரைக் கொல்வதைத் தவிர வேறு வழியில்லை! அவரைக் கொல்பவருக்கு நூறு சிவப்பு ஒட்டகங்களையும் எண்ணற்ற தங்கத்தையும் நான் கொடுப்பேன்!” என்று கூறினான். ஒரு கணத்தில், கத்தாபின் மகன் உமரின் இதயத்திலிருந்து இஸ்லாத்தின் மீதான நாட்டம் மறைந்தது. அவர் துள்ளிக் குதித்து, “கத்தாபின் மகனைத் தவிர இந்த வேலையைச் செய்ய வேறு யாரும் இல்லை” என்றார். அவர்கள் அவரைப் பாராட்டி, “கத்தாபின் மகனே, முன்னே செல்! நீ செய்வதை நாம் பார்ப்போம்” என்றார்கள்.
அவர் வாளைக் கட்டிக்கொண்டு புறப்பட்டார். செல்லும் வழியில் நுஐம் இப்னு அப்துல்லாஹ்வைக் கண்டார். அவர் உமரிடம், “ஓ உமரே! இந்த வெறியோடும் கோபத்தோடும் எங்கே போகிறீர்?” என்று கேட்டார். அதற்கவர், "மக்களிடையே பிரிவினையையும் சகோதரர்களிடையே பகையையும் ஏற்படுத்திய முஹம்மதை நான் கொல்லப் போகிறேன்." என்று பதிலளித்தார். நுஐம், “ஓ உமரே! இது கடினமான வேலை. அவருடைய அஸ்ஹாப் அவரிடம் மிகுந்த கரிசனையையும் பக்தியையும் காட்டுகிறார்கள். அவருக்கு எதுவும் தீங்கு விளைவிக்காதபடி அவர்கள் மிகவும் கவனமாக இருக்கிறார்கள். அவர்களை அணுகுவது மிகவும் கடினம். நீங்கள் அவரைக் கொன்றாலும் அப்துல்முத்தலிபின் மகன்களிடமிருந்து உங்களால் தப்ப முடியாது” என்று கூறினார்.
இந்த வார்த்தைகளால் ஹஸ்ரத் உமர் கோபமடைந்தார். அவர் வாளை உருவிப் பிடித்து, “நீயும் அவர்களில் ஒருவனா? முதலில் உன்னை முடித்து விடுகிறேன்." என்று நுஐமிடம் கூறினார். அப்போது நுஐம், “ஓ உமரே! என்னை விட்டுவிடுங்கள்! உங்கள் சகோதரி பாத்திமா மற்றும் அவரது கணவர் ஸஈத் இப்னு ஸைத் ஆகியோரிடம் செல்லுங்கள். அவர்களும் முஸ்லிம்களாகிவிட்டார்கள்” என்று சொன்னார். ஹஸ்ரத் உமர் இந்த வார்த்தைகளை நம்பவில்லை. நுஐம் அவரிடம், “நீங்கள் நம்பவில்லை என்றால், அவர்களிடம் சென்று கேளுங்கள்! அப்போது நீங்கள் காண்பீர்கள்." என்றார்.
நபியவர்களைக் கொல்வதில் ஹஸ்ரத் உமர் வெற்றி பெற்றால், மதப் பிரிவினை முடிவுக்கு வரும், ஆனால் அரேபியர்களின் வழக்கமாக இருந்த இரத்தப் பகை எழும்; குறைஷிகள் இரண்டாகப் பிரிந்து முடிவில்லாத போர்கள் தொடங்கும். இதனால், உமர் இப்னு கத்தாப் மட்டுமல்ல, கத்தாபின் மகன்கள் அனைவரும் கொல்லப்படுவார்கள். இருப்பினும், உமர் இப்னு கத்தாப் மிகவும் வலிமையானவர், தைரியமும் கோபமும் கொண்டவர் என்பதால் அவரால் இவற்றையெல்லாம் நினைத்துப் பார்க்க முடியவில்லை. தங்கையை நினைத்து வியந்து உடனே அவரது வீட்டிற்குச் சென்றார்.
அந்த நேரத்தில், ஸூரா தாஹா அண்மையில் இறக்கியருளப்பட்டிருந்தது. ஸஈத் மற்றும் பாத்திமா ரழியல்லாஹு அன்ஹுமா அதனை எழுதிக் கொண்டார்கள். அவர்கள் அஸ்ஹாப்களில் ஒருவரான ஹஸ்ரத் கப்பாப் இப்னு அரத்தை தங்கள் வீட்டிற்கு அழைத்து வந்தனர். அங்கு அவர்கள் ஸூரா தாஹாவைப் படித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு ஹஸ்ரத் உமரின் குரல் கதவு வழியாகக் கேட்டது. அவர் கதவை மிகவும் கடுமையாகத் தட்டினார். இடுப்பில் வாள் ஏந்தியிருந்த அவர் கோபமடைந்திருப்பதை அவர்கள் கண்டதும், அந்த ஏட்டையும் ஹஸ்ரத் கப்பாபையும் மறைத்தார்கள். பின்னர் கதவைத் திறந்தனர். உமர் வீட்டுக்குள் நுழைந்ததும், “என்ன படித்துக் கொண்டிருந்தீர்கள்?” என்று கேட்டார். அவர்கள், "ஒன்றுமில்லை!" என்றனர். அவருடைய கோபம் அதிகமாகி, “நான் கேட்டது உண்மைதான், அவருடைய மந்திரத்தால் நீங்களும் ஏமாந்துவிட்டீர்கள்” என்று கூச்சலிட்டார். அவர் ஹஸ்ரத் ஸஈதின் சட்டையின் கழுத்தைப் பிடித்து தரையில் வீசினார். அவரது சகோதரி தனது கணவரைக் காப்பாற்ற முயன்றபோது, அவர் அவரது முகத்தில் அறைந்தார். அவரது முகத்தில் இரத்தம் வருவதைக் கண்டதும் உமர் அவர்மீது இரக்கப்பட்டார். பாத்திமா காயமடைந்து இரத்தம் சிந்தினார். ஆனால், அவருடைய ஈமானின் வலிமை அவரை உறுதிப்படுத்தியது. அவர் அல்லாஹு தஆலாவிடம் அபயம் தேடினார். அவர் உமரிடம், “ஓ உமரே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி, அவனுடைய தூதரை நம்பாதிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது? இங்கு, நானும் என் கணவரும் முஸ்லிம்களாக மாறியதில் பெருமை அடைகிறோம். நீங்கள் எங்கள் தலைகளை வெட்டினாலும், நாங்கள் இதிலிருந்து திரும்ப மாட்டோம்” என்று கூறி, கலிமா அஷ்ஷஹாதாவை ஓதினார்.
ஹஸ்ரத் உமர் திடீரென்று தம் சகோதரியின் ஈமானின் முன்னே மென்மையாகி அமர்ந்தார்கள். மெதுவாக, "நீங்கள் படித்துக்கொண்டிருந்த ஏட்டை வெளியே கொண்டு வாருங்கள்" என்றார். பாத்திமா, "நீங்கள் உங்களை சுத்தம் செய்யாவிட்டால் நான் அதை உங்களுக்குக் கொடுக்க மாட்டேன்" என்றார். ஹஸ்ரத் உமர் குஸ்ல் அப்தஸ்த் (வணக்கத்துக்காக உடலங்கங்களைக் கழுவுதலை) செய்தார். பின்னர் ஃபாத்திமா குர்ஆன் அல் கரீமின் ஏட்டைக் கொண்டு வந்தார். ஹஸ்ரத் உமர் நல்ல வாசகராக இருந்தார். அவர் ஸூரா தாஹாவை வாசிக்க ஆரம்பித்தார். குர்ஆன் அல்-கரீமின் மொழிநடை, சரளமான தன்மை, அதன் பொருள், மேன்மை என்பன அவரது இதயத்தைப் படிப்படியாக மென்மையாக்கியது.
"வானங்களிலும், பூமியிலும், அவ்விரண்டிற்கும் இடையிலும், பூமியின் கீழும் உள்ளவை யாவும் அவனுக்கே உரியன"11 (என்று) மஆலில் உள்ள 'ஆயத் அல்-கரீமா'வைப் படித்தபோது, அவர் ஆழமாக சிந்திக்கத் தொடங்கினார். அவர், "பாத்திமாவே, இந்த எண்ணற்ற படைப்பினங்கள் அனைத்தும் நீங்கள் வணங்கும் அல்லாஹ்வுக்கே சொந்தமா?” என்று வினவினார். அதற்கு அவருடைய சகோதரி, “ஆம், அவ்வாறுதான். அதில் ஏதேனும் சந்தேகம் உள்ளதா?" என்றார். அவரது வியப்பு அதிகரித்தது அவர், "பாத்திமாவே! தங்கம், வெள்ளி, வெண்கலம், கல் ஆகியவற்றால் செய்யப்பட்ட சுமார் ஆயிரத்து ஐந்நூறு அலங்கரிக்கப்பட்ட சிலைகள் எங்களிடம் உள்ளன. அவற்றில் எதற்கும் பூமியில் எதுவும் சொந்தமில்லை." என்று கூறிவிட்டு, அவர் மேலும் சிலவற்றை வாசித்தார்:
"என் ரப்பே! இந்த மார்க்கத்தை அபூ ஜஹ்லைக் கொண்டு அல்லது 'உமர்' மூலம் வலுப்படுத்துவாயாக!"
ஹதீஸ் அஷ்-ஷரீஃப்
"அல்லாஹ்வைத் தவிர வணங்கப்பட வேண்டிய உண்மையான நாயன் இல்லை. அழகிய பெயர்கள் அவனுக்கே உரியன."12அவர் இந்த ஆயத் அல் கரிமாவைப் பற்றி சிந்தித்தார். "நிச்சயமாக, அது எவ்வளவு உண்மை!" என்று அவர் கூறினார். இதைக் கேட்டதும், கப்பாப், மறைந்திருந்த இடத்திலிருந்து வெளியே வந்து, "தக்பீர்" கூறினார்.
பிறகு, “உமரே, உங்களுக்கு ஒரு நற்செய்தி உள்ளது! ரஸூலுல்லாஹ் அல்லாஹு தஆலாவிடம், 'என் ரப்பே! இந்த மார்க்கத்தை அபூ ஜஹ்லைக் கொண்டு அல்லது 'உமர்' மூலம் வலுப்படுத்துவாயாக!" என்று பிரார்த்தித்தார்கள். இப்போது, இந்த அருள் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது." என்றார்.
அந்த ஆயத்துல் கரீமாவும் அந்தப் பிரார்த்தனையும் ஹஸ்ரத் உமரின் உள்ளத்தில் இருந்த குரோதத்தைத் துடைத்துவிட்டது. உடனே, “ரஸூலுல்லாஹ் எங்கே?” என்று கேட்டார். ரஸூலுல்லாஹ் மீதான அன்பினால் அவரது இதயம் நிறைந்தது. அன்று, ரஸூல் அல்-அக்ரம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஹஸ்ரத் அர்கமின் வீட்டில் தனது அஸ்ஹாபுக்கு போதனை செய்து கொண்டிருந்தார்கள். அஸ்ஹாப் அல்-கிராம் கூடி, அவருடைய ஒளிமயமான முகத்தைப் பார்த்து, அவரது இனிமையான, சக்திவாய்ந்த வார்த்தைகளைக் கேட்டு, தங்கள் இதயங்களை மெருகூட்டி, எல்லையற்ற மகிழ்ச்சி, இன்பம் மற்றும் உற்சாகத்தில் வெவ்வேறு நிலைகளுக்குள் நுழைவதன் மூலம் தங்கள் ஆத்மாக்களைப் புதுப்பித்துக் கொண்டனர்.
ஹஸ்ரத் உமர் வருவது அர்கமின் வீட்டிலிருந்து தெரிந்தது. அவரிடம் வாளும் இருந்தது. ஹஸ்ரத் உமர் திமிர்பிடித்தவராகவும், வலிமையானவராகவும் இருந்ததால், அஸ்ஹாப் அல்-கிராம் ரஸூலுல்லாஹ்வைச் சூழ்ந்து கொண்டார்கள். ஹஸ்ரத் ஹம்ஸா, “உமருக்கு பயப்பட என்ன உள்ளது? அவர் நல்ல நோக்கத்துடன் வந்தால் வரவேற்கலாம். இல்லை என்றால் அவர் வாளை உருவுவதற்குள் நான் அவரது தலையை துண்டித்து விடுவேன்!” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது, ரஸூலுல்லாஹ், "அவர் உள்ளே வரட்டும்!" என்றார்.
முன்னதாகவே, ஹஸ்ரத் உமர் வருகை தருவதாகவும், அவர் இஸ்லாத்தைத் தழுவ வருவதாகவும் ஜிப்ரஈல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நபியவர்களுக்குத் தெரிவித்திருந்தார்கள். எமது நாயகம் ரஸூலுல்லாஹ் ஹஸ்ரத் உமரை புன்னகையுடன் வரவேற்று, "அவரை விடுங்கள், அவரை விடுங்கள்" என்று கூறினார். ஹஸ்ரத் உமர் ரஸூலுல்லாஹ் முன் மண்டியிட்டார். ரஸூலுல்லாஹ் ஹஸ்ரத் உமரின் கரங்களைப் பிடித்துக் கொண்டு, “உமரே, நம்பிக்கை கொள்ளுங்கள்!” என்றார். ஹஸ்ரத் உமர் தூய்மையான இதயத்துடன் கலிமா அஷ்ஷஹாதாவை ஓதினார். மகிழ்ச்சியுடன், அஸ்ஹாப் அல்-கிராம் தக்பீர் சப்தங்களை வானத்தை நோக்கி உயர்த்தினார்கள்.
ஹஸ்ரத் உமர் முஸ்லிமாக மாறிய பின் தனது நிலையை பின்வருமாறு விவரித்தார்; “நான் முஸ்லிமாக மாறியபோது, அஸ்ஹாப் அல்-கிராம்கள் இணைவைப்பாளர்களிடமிருந்து மறைந்து, மறைவாகத் தங்கள் இபாதத்களைச் செய்து கொண்டிருந்தார்கள். இதனால் மிகவும் வருத்தமடைந்த நான், 'ஓ ரஸூலல்லாஹ்! நாம் சரியான பாதையில் அல்லவா இருக்கிறோம்?" என வினவினேன். அதற்கு எமது நாயகம், "ஆம்! "அல்லாஹ்வின் மீது சத்தியமாக, அவனது கரத்தில்தான் என் உயிர் இருக்கிறது, நீங்கள் இறந்தாலும் சரி, உயிருடன் இருந்தாலும் சரி, நிச்சயமாக நீங்கள் நேர்வழியில் இருக்கிறீர்கள்." என்றார். அப்போது நான், "ரஸூலல்லாஹ்வே! நாம் நேர்வழியில் செல்கிறோம், பலதெய்வவாதிகள் தவறான பாதையில் செல்கிறார்கள் என்றால், நாம் ஏன் நமது மார்க்கத்தை மறைக்க வேண்டும்? வல்லாஹி, நாம் நிராகரிப்பவர்களுக்கு எதிரான மார்க்கமாக இஸ்லாத்தை அறிவிக்க மிகவும் தகுதியுடையவர்களாக இருக்கிறோம். அல்லாஹு தஆலாவின் மார்க்கம் சந்தேகத்திற்கு இடமின்றி மக்காவில் மேலோங்கும். எங்கள் மக்கள் எங்களுக்கு நியாயமாக இருந்தால், அது சிறப்பானது, ஆனால் அவர்கள் கோபமடைந்தால், நாங்கள் அவர்களை எதிர்த்துப் போராடுவோம்." என்று கூறினேன். எமது நாயகம் ரஸூலுல்லாஹ் அவர்கள், "நாங்கள் எண்ணிக்கையில் மிகக் குறைவு!" எனக் கூறினார்.
நான், 'ஓ ரஸூலல்லாஹ்! உங்களை உண்மையான நபியாக அனுப்பிய அல்லாஹு தஆலாவின் மீது சத்தியம் செய்கிறேன், நான் இஸ்லாத்தைப் பற்றி தயக்கமோ பயமோ இல்லாமல் உட்கார்ந்து பேசாத இணைவைப்பாளர்களின் கூட்டம் கிடையாது. நாம் வெளிப்படுவோம்." என்று கூறினேன். அந்தக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதும், நாங்கள் இரண்டு வரிசையாக வெளியே சென்று ஹரம் அஷ்-ஷரீப் நோக்கி நடந்தோம். ஒரு வரிசையின் தலைமையில் ஹம்ஸாவும், மற்றொன்றில் நானும் இருந்தேன். நாங்கள் கண்ணியமான, கம்பீரமான நடையுடன் தரையை மிதித்து உறுதியான அடியெடுத்து மஸ்ஜிதுல் ஹரமுக்குள் நுழைந்தோம். குறைஷி முஷ்ரிக்குகள் ஹம்ஸாவையும் என்னையும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் அவ்வளவு சோகத்தையும் துக்கத்தையும் அனுபவித்தார்கள், ஒருவேளை அவர்கள் தங்கள் வாழ்நாளில் இதற்கு முன்பு இதுபோன்ற சோகத்தை அனுபவித்திருக்க மாட்டார்கள்."
ஹஸ்ரத் உமர் வந்தவுடன், அபூஜஹ்ல் முன்னோக்கி வந்து, “ஓ உமரே! இதன் பொருள் என்ன?” என்று கேட்டான். ஹஸ்ரத் உமர் அவனைக் கவனிக்காமல், “அஷ்ஹது அன் லா இலாஹ இல்லல்லாஹ் வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரஸூலுஹ்” என்றார். அபூஜஹ்லுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவன் திகைத்தான். ஹஸ்ரத் உமர் அந்த இணைவைப்பாளர்களின் குழுவை நோக்கித் திரும்பி, “குறைஷியே! நான் யாரென்று அறிந்தவர்களுக்குத் தெரியும்! நான் கத்தாபின் மகன் உமர் என்பதை அறியாதவர்கள் அறிந்து கொள்ளட்டும். தன் மனைவியை விதவையாகவும், தன் குழந்தைகளை அனாதையாகவும் ஆக்க விரும்புபவன் முன்னே வரலாம்! முன்னே வரும் எவரையும் என் வாளால் வெட்டி வீழ்த்துவேன்!” என்று முழங்கினார். குறைஷி முஷ்ரிக்குகள் நொடியில் அங்கிருந்து கலைந்து சென்றனர். ரஸூலுல்லாஹ்வும் அவருடைய உயர்ந்த அஸ்ஹாபும் ஒரு வரிசையை உருவாக்கி உரத்த குரலில் தக்பீர்களைச் சொன்னார்கள். மக்காவின் வானம் “அல்லாஹு அக்பர்! அல்லாஹு அக்பர்!" என்ற குரல்களால் ஒலித்தது! முதன்முறையாக, ஹரம் அஷ்-ஷரீஃபில் கூட்டமாக தொழுகை நிறைவேற்றப்பட்டது.13
ஹஸ்ரத் உமர் முஸ்லிமாக மாறியபோது, ஸூரா அல்-அன்ஃபாலின் 64ஆவது ஆயத் அல் கரீமா இறக்கியருளப்பட்டது. மஆலின்படி அது, “என் நபியே! அல்லாஹு தஆலாவும், உங்களைப் பின்பற்றும் நம்பிக்கையாளர்களும் உங்களுக்கு உதவியாளர்களாக இருக்கப் போதுமானவர்கள்.” ஹஸ்ரத் உமர் முஸ்லிமானதைக் கண்டு தயங்கிய சிலர் இஸ்லாத்தைத் தேர்ந்தெடுத்தனர். அவர்கள் அஸ்ஹாப் ஆகி கௌரவிக்கப்பட்டனர்.
முஸ்லிம்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியது.
கஃபா அல்-முஅஸ்ஸமாவின் முன்னைய நிலை – மக்கா அல்-முகர்ரமா
"அபிசீனியாவுக்குத் திரும்பிச் செல்லுங்கள், அதனால் நீங்கள் அல்லாஹு தஆலாவின் பெயரால் பாதுகாக்கப்படுவீர்கள்."
ஹதீஸ் அஷ்-ஷரீஃப்
அவர் ஒவ்வொரு விடயத்திலும் ரஹ்மானின் பெயரை உச்சரிப்பார்,
புகழப்படும் நபி, அந்த பெருந்தன்மையின் ஊற்று.
அவர் அருளுக்கும் அறிவுக்கும் கருணைக்கும் ஆதாரமாக இருந்தார்,
அவருடைய ஆன்மா நல்லொழுக்கங்களால் நிறைந்தது, அந்த தாராள மனப்பான்மையின் ஊற்று.
அவர் ஹக்கின் அனைத்து உயிரினங்களிடமும் மென்மையாகவும் பணிவாகவும் இருந்தார்,
அவர் தாராள மனப்பான்மையின் ஊற்றின் மூலம் கருணையும் தயவையும் வழங்குவார்.
அபிசீனியாவிற்கு இரண்டாம் புலம்பெயர்வு
அஸ்ஹாப் அல்-கிராம் (அலைஹிமுர்-ரிழ்வான்) மக்காவிற்குத் திரும்பியதும், பலதெய்வவாதிகள் அவர்களை மீண்டும் துன்புறுத்தவும் வேதனை செய்யவும் தொடங்கினர். அவர்கள் தங்கள் அடக்குமுறையை அதிகரித்துக் கொண்டே வந்தனர். எல்லாவிதமான சித்திரவதைகளையும் தயக்கமின்றி செய்தனர். ஒரு நாள், ஹஸ்ரத் உஸ்மான், “ரஸூலல்லாஹ்வே! அபிசீனியாவை ஒரு நல்ல வர்த்தக இடமாக நான் கண்டேன். அங்கு ஒரு மாத வர்த்தகத்தில் ஈடுபட்டால் அதிக லாபம் கிடைக்கும். அல்லாஹு தஆலா புலம்பெயர்வதற்கான இலக்கைக் கட்டளையிடும் வரை, முஸ்லிம்களுக்கு இதைவிட சிறந்த இடம் வேறில்லை. குறைந்த பட்சம் முஃமின்கள் (நம்பிக்கையாளர்கள்) குறைஷிகளின் கொடுமையிலிருந்து விடுபடுவார்கள். நஜ்ஜாஸ் எமக்குப் பல சலுகைகளையும் நன்மைகளையும் வழங்குவார்." என்றார். அதற்கு, எமது நபியவர்கள், "அபிசீனியாவுக்குத் திரும்பிச் செல்லுங்கள், அதனால் நீங்கள் அல்லாஹு தஆலாவின் பெயரால் பாதுகாக்கப்படுவீர்கள்." என்று கூறினார்கள்.
ஹஸ்ரத் உஸ்மான் நபியவர்களிடம், “ரஸூலல்லாஹ்வே! நீங்கள் அங்கு சென்றால், ஒருவேளை அவர்கள் முஸ்லிம்களாக மாறுவார்கள். அவர்கள் வேதத்தையுடைய மக்களாக இருப்பதால், இஸ்லாத்தை எளிதில் ஏற்றுக்கொள்வார்கள். அவர்கள் தமது ஆதரவைத் தடுக்க மாட்டார்கள்" என்று கூறிய போது, எமது நபிகள் நாயகம், “அமைதியும் ஆறுதலும் அடைய இதுவரை எனக்குக் கட்டளையிடப்படவில்லை. ஹிஜ்ரத் தொடர்பாக அல்லாஹு தஆலாவின் கட்டளைக்காக நான் காத்திருக்கிறேன். எனக்குக் கட்டளையிட்டபடி செயற்படுவேன்” என்று பதிலளித்தார்.
பிஃஸத்தின் ஆறாவது ஆண்டில், ஒரு அறிவிப்பின்படி, 83 ஆண்கள் மற்றும் 18 பெண்கள் என மொத்தம் 101 அஸ்ஹாப் அல்-கிராம் (ரழியல்லாஹு அன்ஹும்) அபிசீனியாவுக்கு இரண்டாவது முறையாகப் புறப்பட்டனர். ஹஸ்ரத் ஜஃபர் இப்னு அபீ தாலிப் இந்தப் பயணக் கூட்டத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். அவர்கள் பாதுகாப்பாக நஜ்ஜாஸியின் தேசத்திற்கு வந்து சேர்ந்தனர். ஹஸ்ரத் உம்மு ஸலமா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் அபிசீனியாவில் சந்தித்த நிகழ்வுகளைப் பின்வருமாறு விவரித்தார்:
“நாங்கள் அபிசீனியாவுக்கு வந்தபோது, ஒரு நல்ல அயலவரைச் சந்தித்தோம். அவர்தான் (அபிசீனியாவின்) நஜ்ஜாஸ் ஆட்சியாளர். எமது ஒவ்வொரு விருப்பத்தையும் அவர் நிறைவேற்றினார். நம் மார்க்கத்தின் கட்டளைகளை நாம் விரும்பியபடி செய்ய அனுமதித்தார். நாம் தாராளமாக அல்லாஹு தஆலாவை வணங்க முடியுமாக இருந்தது. அங்கு நாம் ஒருபோதும் பாதிக்கப்படவில்லை. நாம் எந்தக் கெட்ட வார்த்தைகளையும் கேட்கவில்லை."
மக்கா பலதெய்வவாதிகள் நிலைமையை அறிந்ததும், அபிசீனியர்களின் ஆட்சியாளரிடம் இரண்டு தூதர்களை அனுப்ப முடிவு செய்தனர். அவர்கள் நஜ்ஜாஸுக்கு மிகவும் மதிப்புமிக்க பரிசுகளைத் தயாரித்தனர். அவர் மிகவும் விரும்பிய மக்காவின் தோல் பொருட்களை அவர்கள் தயாரித்தனர். மதகுருமார்களுக்கும் அரச அதிகாரிகளுக்கும் பரிசுகளை ஏற்பாடு செய்தனர். அப்துல்லாஹ் இப்னு அபீ ரபீஆ மற்றும் அம்ர் இப்னு ஆஸ் ஆகியோர் இந்தப் பணிக்கு நியமிக்கப்பட்டனர். இந்த இரண்டு தூதுவர்களுக்கும் நஜ்ஜாஸ் முன்னிலையில் என்ன சொல்ல வேண்டும் என்று கற்பிக்கப்பட்டது. அவர்களிடம், “நீங்கள் ஆட்சியாளரிடம் பேசுவதற்கு முன், அவருடைய அதிகாரிகள் மற்றும் தளபதிகள் ஒவ்வொருவருக்கும் பரிசுகளைக் கொடுங்கள். பின்னர், நஜ்ஜாஸின் பரிசுகளை அவருக்கு வழங்குங்கள். அதன் பிறகு, முஸ்லிம்களை உங்களிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளுங்கள். நஜ்ஜாஸ் முஸ்லிம்களை சந்தித்துப் பேச அனுமதிக்காதீர்கள்.” என்று அறிவுறுத்தப்பட்டது.14
தூதர்கள் அபிசீனியாவுக்கு வந்தனர். அரச அதிகாரிகளைச் சந்தித்துப் பரிசுகளை வழங்கிய பிறகு, அவர்கள் ஒவ்வொருவரிடமும், “எமக்கு மத்தியில் சிலர் தோன்றியிருக்கிறார்கள். உங்களுக்கும் எங்களுக்கும் தெரியாத ஒரு புதிய மதத்தை அவர்கள் உருவாக்கியுள்ளனர். அந்த மக்களை அவர்களின் தாயகத்திற்கு அழைத்துச் செல்ல விரும்புகிறோம். உங்கள் ஆட்சியாளரிடம் அவர்களைப் பற்றி நீங்கள் பேசும்போது, அவர்கள் உங்கள் ஆட்சியாளரிடம் பேசுவதற்கு முன், அந்த நபர்களை எங்களுக்கு வழங்குவதை உறுதிப்படுத்த முயற்சியுங்கள். அவர்களைச் சிறந்த முறையில் சமாளிப்பது அவர்களின் சொந்த பெற்றோராலும் அயலவர்களாலுமே சாத்தியமானது. அவர்களுக்கு இவர்களை நன்றாகத் தெரியும்.” என்று சொல்லி வைத்தார்கள்.15 அதிகாரிகள் இந்த ஆலோசனையை ஏற்றுக்கொண்டனர். பின்னர், மக்கா தூதர்கள் நஜ்ஜாஸிடம் பரிசுகளை சமர்ப்பித்தனர். நஜ்ஜாஸ் பரிசுகளை ஏற்றுக்கொண்டார். அவர்களை அழைத்து, அவர்களுடன் சிறிது நேரம் பேசினார்.
தூதர்கள் நஜ்ஜாஸிடம், “ஆட்சியாளரே! எங்கள் மக்களில் சிலர் உங்கள் நாட்டில் தஞ்சம் புகுந்துள்ளனர். அவர்கள் தங்கள் தேசத்தின் மதத்தை விட்டுவிட்டார்கள், அவர்கள் உங்கள் மதத்தையும் தழுவவில்லை. அவரவர் மனதிற்கு ஏற்ற மதம் அவர்களுக்கு உள்ளது. அந்த மதத்தைப் பற்றி உங்களுக்கும் எங்களுக்கும் தெரியாது. அவர்கள் சார்ந்த தேசத்தின் முக்கியஸ்தர்கள் எங்களை உங்களிடம் அனுப்பியுள்ளனர். அந்த முக்கியஸ்தர்கள் உங்கள் நாட்டில் தஞ்சம் புகுந்தவர்களின் தந்தைகளும் உறவினர்களுமாவர். நீங்கள் அவர்களை திருப்பி அனுப்ப வேண்டும் என்பதே அவர்களின் விருப்பம். ஏனென்றால் அவர்கள்தான் அந்த நபர்களின் நிலைமையை நன்கு அறிவார்கள். அந்த நபர்கள் தமது சொந்த மதத்தில் சகித்துக்கொள்ளாததை அவர்கள் நன்கு அறிவார்கள்...” என்று கூறினார்கள்.
அம்ர் இப்னு ஆஸ் மற்றும் அப்துல்லாஹ் இப்னு அபீ ரபீஆ இருவரும், தமது வார்த்தைகளைக் கேட்டு நஜ்ஜாஸ் மன்னன் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப செயற்பட வேண்டும் என்பதையே மிகவும் விரும்பினர். தூதர்களின் உரைக்குப் பிறகு, நஜ்ஜாஸின் அதிகாரிகள் பேச அனுமதி பெற்று, “அவர்கள் சொன்னது மிகவும் உண்மை. அவர்களின் மக்களால்தான் அவர்களை சிறப்பாகச் சமாளிக்க முடியும், அவர்கள் விரும்புவதையும் விரும்பாததையும் இனங்காண முடியும். எனவே, அந்த மக்களை அனுப்பி விடுங்கள், அவர்கள் தமது சொந்த மக்களிடமும் சொந்த தேசத்திற்கும் போகட்டும்." என்று ஆலோசனை கூறினார்கள்.
இந்த வார்த்தைகளால், நஜ்ஜாஸ் மிகவும் கோபமடைந்து, “வல்லாஹி, இல்லை! நான் அந்த மனிதர்களை அனுப்ப மாட்டேன். என்னிடத்தில் தஞ்சம் புகுந்தவர்களை, என் நாட்டிற்கு வந்தவர்களை என்னால் காட்டிக் கொடுக்க முடியாது. அவர்கள் மற்றவர்களை விட என்னை விரும்பி என் நாட்டிற்கு வந்தனர். எனவே, நான் குடியேறியவர்களை எனது அரண்மனைக்கு வரவழைப்பேன், இந்த மனிதர்களின் வார்த்தைகளைப் பற்றி அவர்கள் என்ன சொல்வார்கள் என்று அவர்களிடம் கேட்டு, அவர்களின் பதில்களைக் கேட்பேன். புலம்பெயர்ந்தவர்கள் இவர்கள் சொல்வது போல் இருந்தால், நான் அவர்களை வந்தவர்களுக்குக் கொடுத்து, அவர்களைத் தங்கள் சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்புவேன். இல்லையென்றால், அவர்கள் என் நாட்டில் இருக்கும் வரை நான் அவர்களைப் பாதுகாப்பேன், அவர்களுக்கு நல்லவனாக இருப்பேன்." என்று கூறினார்.
முன்னதாக, நஜ்ஜாஸ் புனித வேதங்களைப் படித்திருந்தார். முஹம்மத் அலைஹிஸ்ஸலாம் வருவதற்கான காலம் நெருங்கிவிட்டதையும், அவருடைய மக்கள் அவரை நம்பமாட்டார்கள் என்பதையும், அவர்கள் அவரைப் பொய்யர் என்று கூறி மக்காவிலிருந்து வெளியேற்றுவார்கள் என்பதையும் அவர் அறிந்திருந்தார்.
நஜ்ஜாஸ் மக்கா தூதர்களிடம், “அவர்கள் யாரை நம்புகிறார்கள்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “முஹம்மத்” என்று பதிலளித்தார்கள். இந்த பெயரைக் கேட்டதும், அவர் ஒரு நபி என்று நஜ்ஜாஸ் புரிந்து கொண்டார். ஆனால் அதை வெளிப்படுத்தவில்லை. அவர் அவர்களிடம், "அவரது மதமும் மதப்பிரிவும் என்ன, அவர் மக்களை எதற்கு அழைக்கிறார்?" என்று மீண்டும் கேட்டார். அம்ர், "அவருக்கு எந்த மதப்பிரிவும் இல்லை" என்று பதிலளித்தார். அப்போது நஜ்ஜாஸ், “எனக்கு மதம் அல்லது மதப்பிரிவு தெரியாத, என்னிடத்தில் தஞ்சம் புகுந்த ஒரு சமூகத்தை நான் எப்படி திருப்பி அனுப்புவேன்? நாம் சபையைக் கூட்டுவோம். அவர்களையும் அழைத்து வாருங்கள், அவர்கள் உங்களை எதிர்கொள்ளட்டும். இதன்மூலம், ஒவ்வொருவரின் நிலையும் தெளிவாகி, அவர்களுடைய மதத்தையும் நான் அறிந்து கொள்வேன்." என்று கூறினார். அவர்கள் முஸ்லிம்களை அரண்மனைக்கு அழைத்தார்கள்.
"ஸஜ்தா செய்வது அல்லாஹு தஆலாவுக்கு மட்டுமே"
ஹதீஸ் அஷ்-ஷரீஃப்
முஸ்லிம்கள் முதலில் தங்களுக்குள் கலந்தாலோசித்து, "அபிசீனிய ஆட்சியாளரை மகிழ்விக்கவும் அவரது சுபாவத்திற்கு ஏற்றவாறு இருக்கவும் நாம் என்ன சொல்ல வேண்டும்?" என்று கேட்டனர். ஹஸ்ரத் ஜஃபர், “வல்லாஹி, இந்தப் பிரச்சினையைப் பற்றி எங்களுக்குத் தெரிந்ததெல்லாம் எங்கள் நபி சொன்னதுதான். முடிவு எதுவாக இருந்தாலும் நாங்கள் திருப்தி அடைகிறோம்." என்றார். அனைவரும் சம்மதித்து ஹஸ்ரத் ஜஃபர் மட்டும் பேசுவார் என்று ஒருமனதாக முடிவு செய்தனர். அவர்கள் நஜ்ஜாஸின் முன்னிலைக்கு வந்தனர். நஜ்ஜாஸ் தனது அறிஞர்களைக் கூட்டினார். ஒரு பெரிய சபை கூடியது. பின்னர், அவர்கள் புலம்பெயர்ந்தவர்களை அழைத்து வந்தனர். முஸ்லிம்கள் வந்ததும் அவர்கள் அரசருக்கு மரியாதை செலுத்தினார்கள். ஆனால் ஸஜ்தா (சிரம் பணிதல்) செய்யவில்லை. நஜ்ஜாஸ் அவர்களிடம், “நீங்கள் ஏன் சிரம் பணியவில்லை?” என்று கேட்டார். அவர்கள், “நாங்கள் அல்லாஹு தஆலாவைத் தவிர வேறு எவருக்கும் ஸஜ்தா செய்வதில்லை. அல்லாஹு தஆலாவைத் தவிர வேறு எவருக்கும் ஸஜ்தா செய்வதிலிருந்து நபியவர்கள் எங்களைத் தடை செய்து, 'ஸஜ்தா செய்வது அல்லாஹு தஆலாவுக்கு மட்டுமே' என்று கூறியுள்ளார்கள்." என்றனர்.
நஜ்ஜாஸ் புலம்பெயர்ந்தவர்களிடம், “என்னுடைய இருப்பிடத்திற்கு வந்த சமூகமே! சொல்லுங்கள். நீங்கள் ஏன் என் நாட்டிற்கு வந்தீர்கள்? உங்கள் நிலைமை என்ன? நீங்கள் வியாபாரிகள் அல்ல; உங்களிடம் அதற்கான கோரிக்கையும் இல்லை. உங்களிடம் அனுப்பப்பட்டுள்ள உங்கள் நபியின் நிலை என்ன? உங்கள் தேசத்திலிருந்து வந்தவர்கள் செய்ததைப் போல நீங்கள் ஏன் என்னை வாழ்த்தவில்லை?" என்று வினவினார். அதற்கு ஜஃபர் ரழியல்லாஹு அன்ஹு கூறினார்:
“ஆட்சியாளரே! முதலில், நான் உங்களுக்கு மூன்று விஷயங்களைச் சொல்கிறேன். நான் உண்மையைப் பேசினால், அதை ஏற்றுக்கொள்ளுங்கள்; நான் பொய் சொன்னால் அதை மறுத்து விடுங்கள். முதலில், அவர்கள் இருவரில் ஒருவர் மட்டும் பேசவும், மற்றவர் அமைதியாக இருக்கவும் கட்டளையிடுங்கள்!” என்றார். அம்ர் இப்னு ஆஸ், “நான் பேசுகிறேன்” என்றார். நஜ்ஜாஸ், "ஜஃபரே, நீங்கள் முதலில் பேசுங்கள்" என்றார். ஹஸ்ரத் ஜஃபர், “எனக்கு மூன்று குறிப்புகள் உள்ளன. ஒன்று, சிறைபிடிக்கப்பட்டு எஜமானர்களிடம் திரும்ப வேண்டிய அடிமைகளா நாங்கள் என்பதை தயவு செய்து அந்த மனிதரிடம் கேளுங்கள்." என்றார். நஜ்ஜாஸ், “அம்ரே! அவர்கள் அடிமைகளா?” என்று கேட்டார். அதற்கு அம்ர், “இல்லை! அவர்கள் அடிமைகள் அல்ல; அவர்கள் சுதந்திரமானவர்கள்!" என்று பதிலளித்தார். தொடர்ந்து, ஹஸ்ரத் ஜஃபர், "நாங்கள் யாருடைய இரத்தத்தையாவது அநியாயமாக சிந்தினோமா, அதனால் யாருடைய இரத்தம் சிந்தப்பட்டதோ அவர்களிடமே நாங்கள் திருப்பி ஒப்படைக்கப்பட வேண்டுமா என்பதை அவர்களிடம் கேளுங்கள் என்றார். "இவர்கள் யாரையாவது அநியாயமாகக் கொன்றார்களா?" என்று நஜ்ஜாஸ் அம்ரிடம் கேட்டபோது, அம்ர், "இல்லை, அவர்கள் ஒரு துளி இரத்தம் கூட சிந்தவில்லை!" என்று பதிலளித்தார். ஹஸ்ரத் ஜஃபர் நஜ்ஜாஸிடம், "நாம் அநியாயமாக மற்றவர்களின் சொத்துக்களில் இருந்து எடுத்த எந்தவொரு பொருளும் இருக்கிறதா, அதை நாங்கள் செலுத்த கடமைப்பட்டுள்ளோமா?" என்பதை அம்ரிடம் கேட்குமாறு வேண்டினார். "அம்ரே! இந்த மக்களுக்கு கடன்கள் இருந்தால், அது பெருந்தொகை தங்கமாக இருந்தாலும், நான் அதை செலுத்துவேன், சொல்லுங்கள்." என்று நஜ்ஜாஸ் கேட்க, அதற்கு அவர், "இல்லை, ஒரு கிராத் (பணம்) கூட இல்லை" என்றார். "அப்படியானால் அவர்களிடமிருந்து உங்களுக்கு என்ன வேண்டும்?" என்று நஜ்ஜாஸ் கேட்டபோது, அதற்கு அம்ர், "நாங்கள் அவர்களுடன் ஒரே மதத்தைச் சேர்ந்தவர்களாகவும், ஒரே பாதையில் பயணிப்பவர்களாகவும் இருந்தோம். அவர்கள் இந்த மதத்தைக் கைவிட்டு விட்டு, முஹம்மதுக்கும் அவருடைய மதத்திற்கும் கீழ்ப்படிந்தவர்களாக மாறிவிட்டனர்." என்றார். நஜ்ஜாஸ் ஜஃபரிடம், "நீங்கள் ஏன் உமது மதத்தை விட்டுவிட்டு வேறொரு மதத்தைப் பின்பற்றினீர்கள்? நீங்கள் உம்முடைய சமூகத்தாரின் மார்க்கத்தை விட்டுவிட்டீர்கள்; இன்னும், நீங்கள் என்னுடைய மார்க்கத்திலுமில்லை; ஆகவே, எந்த மார்க்கத்தை நீங்கள் பின்பற்றுகிறீர்கள்? நீங்கள் அதைப் பற்றி என்னிடம் சொல்ல முடியுமா?" என்று கேட்டார்.
ஹஸ்ரத் ஜஃபர் அவர்கள், “ஆட்சியாளரே! நாங்கள் அறியாத மக்களாக இருந்தோம். சிலைகளை வணங்கினோம். நாம் இறந்த விலங்குகளின் சடலங்களை சாப்பிட்டு, எல்லா வகையான தீமைகளையும் செய்தோம். நாங்கள் எங்கள் உறவினர்களுடனான உறவைத் துண்டித்தோம், எங்கள் அண்டை வீட்டாரை மோசமாக நடத்தினோம். எங்கள் பலமானவர்கள் பலவீனமானவர்களை ஒடுக்கினார்கள், நாம் இரக்கத்தை அறியவில்லை. அல்லாஹு தஆலா எமது தேசத்தில் ஒரு நபியை அனுப்பும் வரை நாங்கள் இந்த நிலையில் இருந்தோம். அவருடைய நம்பகத்தன்மை, கற்பொழுக்கம், தூய்மை மற்றும் உன்னதத்தை நாங்கள் அறிந்தோம். அல்லாஹு தஆலாவின் இருப்பு மற்றும் ஏகத்துவத்தில் நம்பிக்கை கொள்ளுமாறும், அவனை வணங்குமாறும், நாமும் நம் முன்னோர்களும் வணங்கிய கற்கள் மற்றும் சிலைகளை கைவிடவும் அந்த நபி நம்மை அழைத்தார். உண்மையைப் பேசவும், நம்பிக்கை துரோகம் செய்யாமல், உறவினர்களின் உரிமைகளைக் கடைப்பிடிக்கவும், அண்டை வீட்டாருடன் நல்லுறவைப் பேணவும், பாவங்கள் மற்றும் இரத்தம் சிந்துவதைத் தவிர்க்கவும் அவர் கட்டளையிட்டார். எல்லா வகையான ஒழுக்கக்கேடுகளிலிருந்தும், பொய் சொல்வது, அனாதைகளின் சொத்துக்களை அபகரிப்பது மற்றும் கற்புடைய பெண்களை அவதூறு செய்வதிலிருந்தும் அவர் எங்களைத் தடை செய்தார். இணை வைக்காமல் அல்லாஹு தஆலாவை வணங்குமாறு கட்டளையிட்டார். நாம் இவற்றை ஏற்று, அல்லாஹு தஆலாவிடமிருந்து அவர் கொண்டு வந்ததை நம்பி, அவர் கட்டளையிட்டதை நிறைவேற்றினோம். நாங்கள் அல்லாஹு தஆலாவை வணங்கினோம். அவர் ஹராமாக்கியதை நாங்கள் ஹராமாக (தடுக்கப்பட்டது) கருதி, அவர் எங்களுக்கு ஹலாலாக்கியதை நாங்கள் ஹலாலாக (அனுமதிக்கப்பட்டதாகக்) கருதி, அதன்படி நடந்தோம். அதனால்தான் எமது மக்கள் எமக்கு விரோதமாக நடந்துகொண்டு எம்மைத் துன்புறுத்தினர். எமது மார்க்கத்தை விட்டும், அல்லாஹு தஆலாவை வணங்குவதை விட்டும் தடுக்கவும், மீண்டும் சிலைகளை வணங்குவதற்கும் எம்மை அவர்கள் பல்வேறு சித்திரவதைகளுக்கு உட்படுத்தினார்கள். எம்மைத் துன்புறுத்தினார்கள். எம்மை ஒடுக்கினார்கள். எமக்கும் எமது மார்க்கத்திற்கும் இடையில் குறுக்கிட்டு, எம்மை மார்க்கத்திலிருந்து பிரிக்க முயன்றனர். அதனால் நாங்கள் எங்கள் நாட்டை, வீட்டை விட்டு உங்கள் நாட்டில் தஞ்சம் புகுந்தோம். மற்றவர்களை விட நாங்கள் உங்களை விரும்பினோம். உங்களின் பாதுகாப்பையும் நட்புறவையும் நாங்கள் நாடுகிறோம். உங்கள் பக்கத்தில், நாங்கள் துன்புறுத்தலையும் அநீதியையும் சந்திக்க மாட்டோம் என்று நாங்கள் நம்புகிறோம்." என்று கூறினார். ஹஸ்ரத் ஜஃபர் தனது உரையைப் பின்வருமாறு தொடர்ந்தார்.
“வாழ்த்துக்களைப் பொறுத்தவரை, நாங்கள் உங்களை ரஸூலுல்லாஹ்வின் வாழ்த்துக்கள் மூலம் வாழ்த்தினோம். நாங்கள் ஒருவரையொருவர் அதே வழியில் வாழ்த்துகிறோம். ஜன்னத்தில் உள்ளவர்களின் வாழ்த்துக்களும் இப்படித்தான் இருக்கும் என்று நமது நபிகள் நாயகம் நமக்கு அறிவித்துள்ளார்கள். அதனால்தான் அந்த வகையில் மாண்புமிகு உங்கள் முன்பாக வாழ்த்தை முன்வைத்தோம். எமது நபிகள் நாயகம் மக்களுக்கு ஸஜ்தா செய்வது அனுமதிக்கப்படாது என்று கூறியதால், அல்லாஹு தஆலாவைத் தவிர வேறு எவருக்கும் ஸஜ்தா செய்வதிலிருந்து அல்லாஹு தஆலாவிடம் நாம் பாதுகாப்புத் தேடுகிறோம்."
நஜ்ஜாஸ், ஹஸ்ரத் ஜஃபரிடம், "அல்லாஹ் இறக்கியருளியதில் உங்களுக்கு ஏதேனும் தெரியுமா?" என்று கேட்டபோது அவர், "ஆம்" என்றார். "எனக்கு ஓதிக் காட்டுங்கள்" என்று நஜ்ஜாஸ் கேட்டார். ஹஸ்ரத் ஜஃபர் ஸூரா மர்யமின் முதல் ஆயத்களை ஓதத் தொடங்கினார் (அது ஸூரா அல்-அன்கபூத் அல்லது அர்-ரூம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது). அதனைக் கேட்ட நஜ்ஜாஸ் அழுதார். அவரது கண்ணீர் தாடியை நனைத்தது. அங்கிருந்த பாதிரியார்களும் அழுதனர். நஜ்ஜாஸும் பாதிரியார்களும், “ ஜஃபரே! இந்த இனிமையான, அழகான வார்த்தையை இன்னும் கொஞ்சம் சொல்லுங்கள்." என்றனர். ஹஸ்ரத் ஜஃபர் ஸூரா அல்-கஹ்பின் தொடக்கத்தில் இருந்து ஓதினார். அது மஆலின்படி பின்வருமாறு:
"உங்களையும், நீங்கள் யாருடைய பக்கத்திலிருந்து வந்திருக்கிறீர்களோ அவரையும் வாழ்த்துகிறேன்! நான் இதை நம்புகிறேன்; அவர் அல்லாஹ்வின் ரஸூல் (தூதர்). இன்ஞீலில் (பைபிளில்) அவரைப் பற்றி நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். மர்யமின் மகன் ஈஸாவுக்கும் இந்த ரஸூல் பற்றித் தெரிவிக்கப்பட்டது.
நஜ்ஜாஸ் அஸ்ஹமா
“சொற்களில் ஒழுங்கீனமோ, அர்த்தத்தில் முரண்பாடோ இல்லாத (அதிகப்படியான மற்றும் குறைகளுக்கு அப்பாற்பட்ட) சரியான வேதத்தை (குர்ஆன் அல்-கரீம்) அவனது அடியாரான (முஹம்மத் அலைஹிஸ்ஸலாம்) மீது இறக்கியருளிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் சொந்தமானது. அதன் மூலம் அவர் இறைநிராகரிப்பாளர்களை அவனது மிகக் கடுமையான தண்டனை (ஜஹன்னம்) மூலம் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்கும், நற்செயல்களைச் செய்யும் விசுவாசிகளுக்கு அழகான வெகுமதி (ஜன்னா) பற்றி, அவர்கள் அங்கே என்றென்றும் தங்குவார்கள் என்று நற்செய்தி சொல்வதற்கும் (அது இறக்கியருளப்பட்டது). இன்னும், "அல்லாஹ் ஒரு குமாரனை எடுத்துக் கொண்டான்" என்று கூறுபவர்களை அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும் (இந்த வேதம் இறக்கப்பட்டது). அல்லாஹு தஆலா (தனக்கு) ஒரு குமாரனை ஏற்படுத்தினான் என்று அவர்கள் கூறுவதில் அவர்களுக்கு யாதொரு அறிவும் இல்லை. அவர்களுடைய மூதாதையர்களுக்கும் (அது) இல்லை. அவர்களுடைய வாய்களிலிருந்து வெளிப்படும் (இந்த) வார்த்தை மிகவும் கெட்டது. அவர்கள் பொய்யைத் தவிர வேறெதையும் கூறுவதில்லை. (என் ரஸூலே!) அவர்கள் இந்தக் குர்ஆன் அல்-கரீமை நம்பவில்லை என்றால், அவர்கள் மீது நீங்கள் துக்கமடைந்து, கோபமடைந்து உம் உயிரை மாய்த்துக் கொள்ளப் போகிறீரா? நிச்சயமாக நாம் பூமியிலுள்ளவற்றை (காடுகள், ஆறுகள், சுரங்கங்கள், விலங்குகள் மற்றும் தாவரங்கள்...) அலங்காரமாகவே ஆக்கினோம்; (இதன் மூலம்) எவர்கள் (தங்கள் செயல்களில்) மிக அழகானவர்களாக இருக்கிறார்கள் என்பதை நாம் சோதிப்பதற்காக (அவற்றைப் படைத்தோம்)."16
நஜ்ஜாஸ், “வல்லாஹி, இது ஒரே மெழுகுவர்த்தியில் இருந்து பிரகாசிக்கும் ஒளி. மூஸா மற்றும் ஈஸா (அலைஹிமஸ்ஸலாம்) அவர்களும் இதனுடன் வந்தனர்." என்று சொல்வதை அவரால் தவிர்க்க முடியவில்லை. அவர் குறைஷித் தூதுவர்களிடம் திரும்பி, “வல்லாஹி, நீங்கள் போங்கள், நான் அவர்களை உங்களிடம் ஒப்படைக்கவும் மாட்டேன், அவர்களுக்குத் தீங்கு செய்யவும் மாட்டேன்” என்றார்.
அப்துல்லாஹ் இப்னு அபீ ரபீஆ மற்றும் அம்ர் இப்னு ஆஸ் ஆகியோர் நஜ்ஜாஸின் முன்னிலையிலிருந்து வெளியேறினர்.17 அப்துல்லாஹ்விடம் அம்ர், "சத்தியமாக நான் நஜ்ஜாஸின் முன்னிலையில் அவர்களின் தவறுகளில் ஒன்றை வெளிப்படுத்துவேன். நான் அவர்களை வேரறுப்பதை நீங்கள் காண்பீர்கள்." என்றார். அவரது நண்பர் அம்ருக்கு, "அவர்கள் எங்களுக்கு எதிரானவர்களாக இருந்தாலும், அவர்கள் எங்கள் உறவினர்கள்; இதைச் செய்யாதீர்கள்" என்றார். அதற்கு அம்ர், "ஈஸாவை அவர்கள் அல்லாஹ்வின் அடியாராகக் கருதுகிறார்கள் என்பதை நான் நஜ்ஜாஸுக்கு அறிவிப்பேன்" என்று கூறினார்.
மறுநாள், அவர் நஜ்ஜாஸிடம் சென்று, “ஆட்சியாளரே! அவர்கள் மர்யமின் மகன் ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களைப் பற்றி தவறாகப் பேசுகிறார்கள். அவர்களிடம் ஒரு மனிதனை அனுப்பி, ஈஸா அலைஹிஸ்ஸலாமைப் பற்றி அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேளுங்கள்." என்று வேண்டினார். ஹஸ்ரத் ஈஸாவைப் பற்றிய அவர்களின் எண்ணங்களைப் பற்றி விசாரிப்பதற்காக நஜ்ஜாஸ் ஒரு மனிதனை முஸ்லிம்களிடம் அனுப்பினார்.
முஸ்லிம்கள் மீண்டும் ஒருவரையொருவர், "அவர் ஈஸா அலைஹிஸ்ஸலாமைப் பற்றிக் கேட்டால் நாங்கள் என்ன சொல்வோம்?" என்று கேட்டார்கள். ஹஸ்ரத் ஜஃபர், “வல்லாஹி, அல்லாஹு தஆலா ஹஸ்ரத் ஈஸாவைப் பற்றி வெளிப்படுத்தியதையும், எமது நபிகள் நாயகம் எங்களிடம் கொண்டு வந்ததையும் நாங்கள் கூறுவோம்.” என்றார்.
அவர்கள் நஜ்ஜாஸ் முன்னிலையில் சென்றபோது, அவர் அவர்களிடம், "மர்யமின் மகன் ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?" என்று கேட்டார். அதற்கு ஹஸ்ரத் ஜஃபர், “எமது நபியவர்கள் அல்லாஹு தஆலாவிடமிருந்து, கொண்டுவந்து எடுத்துரைத்ததையே நாங்கள் ஈஸா அலைஹிஸ்ஸலாம் பற்றிக் கூறுகிறோம். அவர் அல்லாஹு தஆலாவின் அடிமையும், ரஸூலும் அவனது வார்த்தையும் ஆவார் என்பதை நாங்கள் நம்புகிறோம். அல்லாஹு தஆலா ஹஸ்ரத் மர்யமில் அந்த வார்த்தையை வைத்தான். அவர் கற்பு மிக்கவராகவும், உலகையும் மனிதர்களையும் துறந்து ஹக் தஆலாவுக்காக தன்னை அர்ப்பணித்தவராகவும் இருந்தார். மர்யமின் மகன் ஈஸாவின் நிலைமையும் மகிமையும் அதுதான். அல்லாஹு தஆலா மண்ணிலிருந்து ஹஸ்ரத் ஆதாமைப் படைத்தது போல், தந்தையில்லாமல் ஈஸா அலைஹிஸ்ஸலாமைப் படைத்தான் என்று நாங்கள் கூறுகிறோம்" என்று விளக்கினார். நஜ்ஜாஸ் தனது கையை தரையை நோக்கி நீட்டி ஒரு வைக்கோலை எடுத்து, “மர்யமின் மகன் ஈஸா, நீங்கள் சொன்னதைத் தவிர வேறொன்றுமில்லை என்று நான் சத்தியம் செய்கிறேன். இந்த வைக்கோல் அளவுக்குக் கூட அவருக்கும் நீங்கள் சொல்வதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை." என்று கூறினார்.
இந்த வார்த்தைகளை நஜ்ஜாஸ் சொன்னபோது, அவரைச் சுற்றிலும் இருந்த அரச அதிகாரிகளும், தளபதிகளும் தங்களுக்குள் முணுமுணுக்கவும், புலம்பவும் தொடங்கினார்கள்.
இதைப் பார்த்த நஜ்ஜாஸ் அவர்களிடம், "நீங்கள் என்ன சொன்னாலும் நான் அவர்களைப் பற்றி நன்றாகவே நினைக்கிறேன், நான் சத்தியம் செய்கிறேன்" என்றார். பின்னர் அவர் முஸ்லிம் புலம்பெயர்ந்தோரிடம் திரும்பி, "உங்களையும், நீங்கள் யாருடைய பக்கத்திலிருந்து வந்திருக்கிறீர்களோ அவரையும் வாழ்த்துகிறேன்! நான் இதை நம்புகிறேன்; அவர் அல்லாஹ்வின் ரஸூல் (தூதர்). இன்ஞீலில் (பைபிளில்) அவரைப் பற்றி நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். மர்யமின் மகன் ஈஸாவுக்கும் இந்த ரஸூல் பற்றித் தெரிவிக்கப்பட்டது. அவர் இங்கே இருந்தால், நான் அவருடைய காலணிகளை எடுத்துச் செல்வேன், அவருடைய கால்களைக் கழுவுவேன் என்று சத்தியம் செய்கிறேன்! தயவு செய்து எந்த விதமான தாக்குதலுக்கும் ஆளாகாமல் என் தேசத்தின் தீண்டப்படாத பகுதிக்கு சென்று பாதுகாப்பாகவும் அமைதியாகவும் வாழுங்கள். உங்களுக்குத் தீங்கு விளைவிக்கும் எவரையும் நான் அழிப்பேன். அவர்கள் எனக்கு ஒரு மலை தங்கத்தை கொடுத்தாலும், உங்களில் ஒருவரைக் கூட நான் வருத்தப்படுத்த மாட்டேன்!" என்று சொன்னார்.
அதன் பிறகு, குறைஷித் தூதர்கள் கொண்டு வந்த பரிசுகளைப் பற்றி நஜ்ஜாஸ், “எனக்கு இவை தேவையில்லை! அல்லாஹு தஆலா மற்றவர்களால் அபகரிக்கப்பட்ட எனது உடைமைகளைத் திருப்பித் தரும்போதும், என் மக்களை எனக்குக் கீழ்ப்படியச் செய்தபோதும் என்னிடம் லஞ்சம் வாங்கவில்லை" என்று சொன்னார். அத்துடன் அவர்களின் அன்பளிப்புகளையும் திருப்பிக் கொடுத்தார். குறைஷ் தூதர்கள் வெறுங்கையுடன் திரும்பினர். அதிர்ஷ்டசாலியான நஜ்ஜாஸ் இஸ்லாத்தைத் தழுவி, அஸ்ஹாப் அல்-கிராமை மிகவும் மகிழ்வித்தார்.18
ஹக் பிரபஞ்சத்தைப் படைத்தான்
முஹம்மதின் அன்பிற்காக ஹக் இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்தான்.
அவன் முஹம்மதின் மகிழ்ச்சிக்காக சந்திரனையும் சூரியனையும் படைத்தான்.
அவன், ஆகுக என்றான், பிரபஞ்சம் உருவானது, லவ்ஹ் மற்றும் பேனா எழுதப்பட்டது.
முஹம்மதின் மகிமைக்காக கடைசி வேதம் ஓதப்பட்டது.
அவ்லியா வந்தனர், சூழ்ந்து கொண்டனர், வாசலில் தலை குனிந்தனர்,
முஹம்மதின் நூருக்கு தவ்ஹீத் திக்ர் கூறினர்.
வைஸல் கரானி அடைந்தார், ஆனால் அவர் இன்னும் ஆசைப்பட்டார்.
முஹம்மதின் அன்பிற்காக எட்டு ஜன்னாக்கள் அலங்கரிக்கப்பட்டன.
வானத்தில் பறவைகள், சுற்றிலும் பச்சை நிறமாக மாறுகின்றன,
மரங்கள் முஹம்மதின் அன்பிற்காக பழம் கொடுக்கின்றன.
நம்பிக்கையற்றோர் வந்து அவரிடமிருந்து ஈமானைப் பெற்றனர்.
அவர்கள் முஹம்மதின் அன்பிற்காக ஒரு நாளைக்கு ஐந்து முறை தொழுதனர்.
வானவர்கள் வந்து வரிசையாக நின்றனர்,
முஹம்மதின் அன்பிற்காக ஒரு நாளைக்கு ஐந்து முறை தொழுதனர்.
யூனுஸ் அவரைப் புகழ்கிறார், குர்ஆனின் ஆயத் அவரைப் புகழ்கிறது,
முஹம்மதின் அன்பை நினைவில் வைத்து ஸலவாத் சொல்லுங்கள்.
“என் நபியே! அல்லாஹு தஆலாவும், உங்களைப் பின்பற்றும் நம்பிக்கையாளர்களும் உங்களுக்கு உதவியாளர்களாக இருக்கப் போதுமானவர்கள்."
அல்-அன்பால்: 64
