எனது அன்பார்ந்த நபி

துன்புறுத்துதல், சித்திரவதை மற்றும் கொடுமை

இப்போது, ​​குறைஷிகளின் குறிப்பிடத்தக்க சில பலதெய்வவாதிகள் எமது நபியவர்கள் தனியாக இருப்பதைக் கண்டால், அவர்கள் அவரைத் தாக்கி, அவமதித்து, அவரை அடிக்க முயன்றனர். அவருடைய அஸ்ஹாபை - தோழர்களை சித்திரவதை செய்யவும் அவர்கள் தயங்கவில்லை. ஒரு நாள், குறைஷ் பலதெய்வவாதிகளின் முக்கியஸ்தர்கள் கஃபா அஷ்ஷரீபின் அருகில் அமர்ந்திருந்தனர். அவர்கள் எங்கள் நபியவர்களைப் பற்றிப் பேச ஆரம்பித்தார்கள், "நாங்கள் அவரைப் பொறுத்துக்கொண்டது போல் எதுவும் இல்லை. நாம் சிதறிப் போய்விட்டோம் என்று அவர் கூறுகிறார்; நமது தெய்வங்களை அவமதிக்கிறார்; நமது மதத்தைக் கண்டனம் செய்கிறார்; நமது சமூகத்தைப் பிளவுபடுத்துகிறார்; ஆனால் நாம் அதை சகித்துக்கொண்டு அமைதியாக இருக்கிறோம்." என்று கதைக்கலானார்கள். அந்த நேரத்தில் ஹபீப் அல்-அக்ரம் கஃபாவைத் தரிசிக்க வந்தார். அவர் ஹஜர் அல் அஸ்வத்தை முத்தமிட்டு தவாஃப் செய்யத் தொடங்கினார். நமது நபிகள் நாயகம் அவர்களின் அருகில் சென்று கொண்டிருந்த போது, ​​அவர்கள் அவரை அவமதிக்க ஆரம்பித்தார்கள். எமது தலைவர் ரஸூலுல்லாஹ் அந்த வார்த்தைகளைக் கேட்டு வருத்தப்பட்டார். ஆனால் அவர் எதுவும் பேசாமல் தனது தவாஃபைத் தொடர்ந்தார். அவர் மூன்றாவது முறையாக அவர்களைக் கடந்து சென்றபோது, ​​அவர் நின்று, “குறைஷியே! நான் சொல்வதைக் கேளுங்கள்! என் வாழ்வைக் கையில் வைத்திருக்கும் அல்லாஹு தஆலின் மீது சத்தியமாக, நீங்கள் கேவலமடைந்து விடுவீர்கள் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது!” என்று கூறினார். என்ன செய்வது என்று தெரியாமல் அங்கிருந்த பல தெய்வவாதிகள் உறைந்தனர். அவர்களால் ஒரு வார்த்தை கூட சொல்ல முடியவில்லை. அபூ ஜஹ்ல் மட்டுமே நமது ரஸூலுல்லாஹ்வின் முன்னிலையில் வந்து, "அபுல் காஸிமே! நீங்கள் ஒரு அந்நியன் அல்ல. எங்கள் அநாகரிகமான நடத்தை மீது கவனம் செலுத்த வேண்டாம். உங்களது இபாதத்தைத் தொடருங்கள். எங்களுடன் சேர்ந்து செல்லும் அளவுக்கு நீங்கள் அறிவற்றவர் அல்ல." என்று கூறினார். அதற்குப் பிறகு, முஹம்மத் அலைஹிஸ்ஸலாம் அங்கிருந்து புறப்பட்டார்.

மறுநாள், பலதெய்வவாதிகள் அதே இடத்தில் கூடியிருந்தனர். எங்கள் நபிக்கு எதிராகப் பேச ஆரம்பித்தார்கள். அந்த நேரத்தில், எம் நாயகம் ரஸூலுல்லாஹ் அங்கு வந்தார். பலதெய்வவாதிகள் திடீரென அல்லாஹு தஆலாவின் ஹபீப் மீது தாக்குதல் நடத்தினர். அவர்களில் மிகவும் துரதிஷ்டசாலியான உக்பா இப்னு முஐத் என்பவன் நமது நபியின் அருளப்பட்ட கழுத்தைப் பிடித்தான். நம் நபிக்கு மூச்சு விட முடியாத அளவு அவன் நபியவர்களது அருள்வாய்ந்த தொண்டையை அழுத்தினான். பின்னர், ஹஸ்ரத் அபூபக்ர் அங்கு வந்து, ரஸூலுல்லாஹ்வைப் பாதுகாக்க கூட்டத்தில் புகுந்து, சப்தமிட்டார். "அல்லாஹ் என் இறைவன் என்று கூறும் ஒரு மனிதனை நீங்கள் கொல்லப் போகிறீர்களா? அவர் உங்களுக்காக ரப்புல் ஆலமீனிடமிருந்து ஆயத்களைக் கொண்டு வந்துள்ளார்..." என்று அவர் அவர்களிடம் கூறினார். பலதெய்வவாதிகள் ஹபீபுல்லாஹ்வை விட்டுவிட்டு அபூபக்ர் அஸ்-ஸித்தீக்கை தாக்கினர். அவருடைய அருள்வாய்ந்த தலையை அவர்கள் அடித்து உதைத்தனர். உத்பா இப்னு ரபீஆ என்று அழைக்கப்படும் துரதிர்ஷ்டவசமான ஒருவன் ஹஸ்ரத் அபூபக்ரின் அருள்நிறைந்த முகத்தைத் தனது காலணிகளால் தாக்கி, அவரை இரத்தத்தில் தோய்த்தார். அப்போது அவர் அடையாளம் காண முடியாதவாறு மாறினார். தைம் சந்ததியைச் சேர்ந்தோர் அங்கு சென்று அவர்களைப் பிரித்திருக்காவிட்டால், அவர்கள் அவரை அடித்துக் கொன்றிருப்பார்கள். சோர்ந்து போன ஹஸ்ரத் அபூபக்ரை அவரது கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு துணியில் வைத்து அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். உடனே அவர்கள் கஃபாவை நோக்கித் திரும்பி வந்து, “அபூபக்ர் இறந்துவிட்டால் உத்பாவையும் கொன்று விடுவோம் என்று சத்தியம் செய்கிறோம்!” என்று கூறினார்கள். பின்னர் அவர்கள் ஹஸ்ரத் அபூபக்ரிடம் சென்றார்கள்.1

ஹஸ்ரத் அபூபக்ரால் நீண்ட நேரம் சுயநினைவு பெற முடியவில்லை. அவரது தந்தையும் பனீ தைம் வாசிகளும் அவரை எழுப்ப கடுமையாக முயன்றனர். மாலையில்தான் அவரால் சுயநினைவு பெற முடிந்தது. கண்களைத் திறந்தவுடன், பலவீனமான குரலில், “ரஸூலுல்லாஹ் என்ன செய்கிறார்? அவருடைய நிலை என்ன? அவர்கள் அவரையும் அவமதித்தனர்." என்று சொன்னார். அங்கிருந்தவர்கள் அவருடைய தாயார் உம் அல்-ஃகய்ர் அவர்களிடம், "அவர் ஏதாவது சாப்பிட விரும்புகிறாரா அல்லது குடிக்க விரும்புகிறாரா என்று கேளுங்கள்?" என்றனர். அபூபக்கர் அஸ்-ஸித்தீக்கிற்கு எந்த வலிமையும் இருக்கவில்லை. அவர் எதையும் சாப்பிட அல்லது குடிக்க விரும்பவில்லை. அங்கிருந்தவர்கள் வீட்டிலிருந்து சென்ற பிறகு, அவரது தாய் அவரிடம், "நீங்கள் என்ன சாப்பிட அல்லது குடிக்க விரும்புகிறீர்கள்?" என்று கேட்டார். அவர் கண்களைத் திறந்து, தன் உயிரை விட அதிகமாக நேசித்தவரைப் பற்றி விசாரித்தார், "ரஸூலுல்லாஹ்வின் நிலை என்ன? அவர் என்ன செய்கிறார்?" என்று வினவினார். அதற்கு அவருடைய தாயார், "சத்தியமாக, உங்கள் நண்பரைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது!" என்று கூறினார். ஹஸ்ரத் அபூபக்ர் அவரிடம், "ஃகத்தாபின் மகள் உம்மு ஜமீலிடம் சென்று ரஸூலுல்லாஹ்வைப் பற்றிக் கேளுங்கள்!" என்று கூறினார்.

உம்மு ஜமீல் ஹஸ்ரத் உமரின் சகோதரியாவார். அவர் முஸ்லிமாகிவிட்டார். அவரது தாயார் உம்முல்-ஃகய்ர் உம்மு ஜமீலிடம் சென்று, “என் மகன் அபூபக்ர் உங்களிடம் முஹம்மத் (அலைஹிஸ்ஸலாம்) பற்றிக் கேட்கிறார். அவருடைய நிலை என்ன?” என்று வினவினார். அதற்கு உம்மு ஜமீல், “முஹம்மத் அலைஹிஸ்ஸலாம் அல்லது அபூபக்ரின் நிலைமை பற்றி எனக்கு எதுவும் தெரியாது! நாம் அவர்களிடம் ஒன்றாகப் போகலாமா?"என்று கேட்டார். "ஆம்" என்று உம்முல் ஃகய்ர் சொன்னதுடன், அவர்கள் ஹஸ்ரத் அபூபக்ரிடம் சென்றனர். அபூபக்ர் ஸித்தீக் காயங்களுடனும், புண்களுடனும் இருந்ததை உம்மு ஜமீல் கண்டபோது, அவரால் தனது அலறலை அடக்க முடியவில்லை. "உங்களுக்கு இதைச் செய்தவர்கள் கொடூரமானவர்கள், மூர்க்கமானவர்கள். அவர்கள் உங்களுக்குச் செய்ததற்காக அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே அல்லாஹு தஆலாவிடம் எனது விருப்பம்!" என்று கூறி அழுதார். ஹஸ்ரத் அபூபக்ர் உம்மு ஜமீலிடம், “ரஸுலுல்லாஹ் என்ன செய்கிறார்?” என்று கேட்டார். உம்மு ஜமீல், "உமது தாய் இங்கே இருக்கிறார், நான் சொல்வதை அவர் கேட்பார்" என்று பதிலளித்தார். ஹஸ்ரத் அபூபக்ர், "அவரால் உமக்கு எந்தத் தீங்கும் வராது." என்று கூறினார். உம்மு ஜமீல், "அவர் உயிருடன் இருக்கிறார்" என்றார். அவர் மீண்டும், "அவர் இப்போது எங்கே இருக்கிறார்?" என்று கேட்டார். அதற்கு உம்மு ஜமீல், "அவர் அர்கமின் வீட்டில் இருக்கிறார்" என்று பதிலளித்தார். ஹஸ்ரத் அபூபக்ர், “வல்லாஹி, நான் ரஸூலுல்லாஹ்வைக் காணும் வரை நான் உண்ணவோ குடிக்கவோ மாட்டேன்” என்று கூறினார். அவருடைய தாய், “கொஞ்சம் பொறுத்திருப்போம், எல்லோரும் தூங்கும்போது போவோம்!” என்றார்.

எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்தபோது, வீதிகள் காலியாக இருந்தபோது, ஹஸ்ரத் அபூ பக்ர் தனது தாயார் மீது சாய்ந்தவராக உம்மு ஜமீலின் உதவியோடு மெதுவாக ரஸூல்லாஹ்விடம் சென்றார். அங்கு நபியவர்களையும் அவரது இஸ்லாமிய சகோதரர்களையும் கட்டிப்பிடித்து முத்தமிட்டார். ஹஸ்ரத் அபூபக்ரின் இந்த நிலை நமது நபியவர்களை மிகவும் வருத்தமடையச் செய்தது. ஹஸ்ரத் அபூபக்ர், “ரஸூலுல்லாஹ்வே! என் தாயும் தந்தையும் உமக்கு அர்ப்பணமாகட்டும்! அந்தக் கொடூரமான மனிதன் என் முகத்தைத் தரையில் தேய்த்து என்னை அடையாளம் காண முடியாதவனாக்கியதைத் தவிர எனக்கு வேறு எந்த வருத்தமும் இல்லை. எனக்குப் பக்கத்தில் என்னை உலகிற்குக் கொண்டு வந்த என் தாய் ஸல்மா இருக்கிறார். அவருக்காகப் பிரார்த்திக்கும்படி உங்களை வேண்டிக்கொள்கிறேன். உங்கள் பொருட்டால் அல்லாஹு தஆலா அவரை ஜஹன்னம் - நரக நெருப்பிலிருந்து காப்பாற்றுவான் என்பதே எனது நம்பிக்கை." என்று கூறினார். இதைக் கேட்ட நமது அன்பார்ந்த நபி ஸல்மா முஸ்லிமாக வேண்டும் என்று அல்லாஹு தஆலாவிடம் பிரார்த்தித்தார். எமது ரஸூலுல்லாஹ்வின் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்பட்டது. இவ்வாறு, உம்முல்-ஃகய்ர் அவர்களும் நேர்வழியை (ஹிதாயத்) அடைந்து முஸ்லிமானார். அவர் முதல் முஸ்லிம்களில் ஒருவர் என்ற பெருமையைப் பெற்றார்.

"அபூலஹபின் இரண்டு கைகளும் நாசமாகட்டும்; அவனும் நாசமாகட்டும். அவனுடைய (தந்தையிடமிருந்து அவன் பெற்ற) செல்வமும், அவன் சம்பாதித்தவையும் அவனுக்குப் பயனளிக்கவில்லை. அவனும், அவன் மனைவியும் (நரக) நெருப்பில் தள்ளப்படுவார்கள். அவள் கழுத்தில் ஒரு திருகப்பட்ட கயிறு இருக்கும்."
தப்பத்: 1-5

அபூலஹபின் இரண்டு கைகளும் நாசமடைக!

எங்கள் தலைவரான நபியின் வீடு அபூலஹப் மற்றும் உக்பா இப்னு முஐத் ஆகிய இரு மூர்க்கத்தனமான பலதெய்வ வழிபாட்டாளர்களின் வீடுகளுக்கு இடையில் இருந்தது. அவர்கள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எங்கள் அன்பான நபியை வேதனைப்படுத்த முயன்றனர். உண்மையில், அவர்கள் இரவில் ரஸூலுல்லாஹ்வின் வீட்டு வாசலுக்கு முன்பாக முட்களை வீசிவிடுவார்கள். அவரது மாமாவான அபூ லஹப் இதில் திருப்தி அடையவில்லை; அவன் பக்கத்து வீடான அதீய்யின் வீட்டிலிருந்து நபியவர்கள் மீது கல்லெறிந்து அவரைத் துன்புறுத்துவான். அவனது மனைவி, உம்மு ஜமீல் அவனைப் போலவே மோசமானவள்; ரஸூலுல்லாஹ் கடந்து செல்லும் பாதைகளில், தான் சேகரித்த முட்கள் நிறைந்த மரக்கிளைகளை எறிந்துவிட்டு, அவருடைய அருள்மிகு பாதங்களில் குத்தச் செய்வாள். ஒரு நாள், அபூலஹப், தான் கொண்டு வந்த அழுக்கை எங்கள் நபியின் வாசலில் கொட்டிக் கொண்டிருந்த போது, ​​ஹஸ்ரத் ஹம்ஸா அவனைக் கண்டார். உடனே ஓடிச்சென்று அண்ணன் அபூலஹபைப் பிடித்து, தான் கொண்டு வந்திருந்த அழுக்கை அவனது தலையில் கொட்டினார்.

அபூலஹபினதும் அவனது மனைவியினதும் இந்த வேதனைகளுக்குப் பிறகு, "அபூலஹபின் இரண்டு கைகளும் நாசமடைக, அவனும் நாசமடைக." எனத் தொடங்கும் ஸூரா அத்-தப்பத் அவர்கள் குறித்து இறக்கியருளப்பட்டது.

அபூலஹபின் மனைவி, உம்மு ஜமீல், அவர்கள் பற்றி ஓர் ஸூரா- அத்தியாயம் இறங்கியதைக் கேள்விப்பட்டபோது, அவள் ரஸூலுல்லாஹ்வைத் தேடத் தொடங்கினாள். அவர் கஃபாவில் இருப்பதை அறிந்து, ஒரு பெரிய கல்லை எடுத்துக்கொண்டு அங்கு சென்றாள். ஹஸ்ரத் அபூபக்ர் அந்த நேரத்தில் நமது நபியுடன் உரையாடிக் கொண்டிருந்தார். உம்மு ஜமீலைக் கையில் கல்லுடன் பார்த்ததும், "ரஸூலுல்லாஹ்வே! உம்மு ஜமீல் வருகிறாள். அவள் மிகவும் பொல்லாத பெண். அவள் உமக்குத் தீங்கு விளைவிப்பாள் என்று நான் அஞ்சுகிறேன். நீங்கள் துன்புறுத்தலுக்கு ஆளாகாமல் இருக்க தயவுசெய்து ஒரு மூலையில் பின்வாங்கி நில்லுங்கள்." என்று சொன்னார். "அவளால் என்னைப் பார்க்க முடியாது." என்று நமது நாயகம் ரஸூலுல்லாஹ் கூறினார். உம்மு ஜமீல் ஹஸ்ரத் அபூபக்ரின் முன் நின்று கீழ்த்தரமாகப் பேசத் தொடங்கினாள். "ஓ அபூபக்ரே! சீக்கிரம் சொல்லுங்கள், உங்கள் நண்பர் எங்கே! அவர் என்னையும் என் கணவரையும் கேலி செய்தார், அவர் ஒரு கவிஞராக இருந்தால், நானும் என் கணவரும் கவிஞர்கள். அதனால் நான் அவரை கேலி செய்கிறேன். நாம் அவருக்கு எதிராகக் கலகம் செய்கிறோம்; அவருடைய தூதுத்துவத்தை நாம் ஏற்கவில்லை; அவருடைய மதத்தை நாம் விரும்பவில்லை. நான் அவரைப் பார்த்தால், அவரது தலையில் இந்தக் கல்லால் அடிப்பேன் என்று நான் சத்தியம் செய்கிறேன்..." என்று ஆவேசமாகச் சொன்னாள். ஹஸ்ரத் அபூபக்ர், "எனது நாயகம் ஒரு கவிஞருமில்லை, அவர் உங்களை நையாண்டி செய்யவுமில்லை" என்று கூறியதும், உம்மு ஜமீல் அங்கிருந்து வெளியேறினாள். ஹஸ்ரத் அபூபக்ர் எமது நபிகள் நாயகத்தை நோக்கி, “ரஸூலல்லாஹ்வே! அவள் உங்களைப் பார்க்கவில்லையா?" என்று கேட்க, அவர், "அவள் என்னைப் பார்க்கவில்லை. அல்லாஹு தஆலா அவளது கண்களை என்னைப் பார்க்க முடியாதபடி செய்துவிட்டான்.”2 எனப் பதிலளித்தார்.

நமது நாயகம் நபியவர்களின் அருள்வாய்ந்த மகள்களில் ஹஸ்ரத் உம்மு குல்தும் அபூலஹபின் மகனான 'உதைபா'வுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். அபூலஹபின் மற்றொரு மகனான 'உத்பா'வுடன் ஹஸ்ரத் ருகையா நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்; ஆனால் அவர்கள் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஸூரா அத்-தப்பத் இறக்கப்பட்ட பின்னர், ஜஹன்னமுக்குத் தகுதியான அபூலஹப், அவனது மனைவி மற்றும் குறைஷியின் முக்கியஸ்தர்கள் என்போர் உத்பா மற்றும் உதைபாவிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தனர். "அவருடைய மகள்களை மணந்து கொள்வதன் மூலம், நீங்கள் அவருடைய சுமையை எளிதாக்கியுள்ளீர்கள். அவர் கஷ்டப்படுவதற்காக அவருடைய மகள்களை விவாகரத்து செய்யுங்கள். குறைஷிகளிடமிருந்து நீங்கள் விரும்பும் எந்தப் பெண்ணையும் நாங்கள் அழைத்து வந்து உங்களுக்கு வழங்குவோம்." என்று அவர்கள் கூறினர். அவர்களிருவரும் இந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டு, "சரி, நாங்கள் அவர்களை விவாகரத்து செய்துவிட்டோம்." என்று சொன்னார்கள். உதைபா என்ற அயோக்கியன் இன்னும் ஒருபடி சென்று நமது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் முன்னிலையில் வந்து, "ஓ முஹம்மதே! உன்னையும் உன் மதத்தையும் நான் அறியவில்லை. உனது மகளையும் விவாகரத்து செய்து விட்டேன். இனிமேல், உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமுமில்லை. நீ என்னிடம் வர வேண்டாம், நான் உன்னிடம் வரமாட்டேன்!" என்று கீழ்த்தரமாகப் பேசினான். பின்னர் அவன் எங்கள் அன்பு நபியைத் தாக்கி, அவருடைய அருள்மிகு ஆடையின் கழுத்துப் பகுதியைப் பிடித்தான். அவரது சட்டையைக் கிழித்து அவமானப்படுத்தினான். அப்போது, ​​நமது அன்பான நபிகள் நாயகம், “என் ரப்பே! உனது மிருகங்களில் ஒன்றை அவன் மீது சாட்டிவிடு!” என்று பிரார்த்தித்தார். துரதிர்ஷ்டவசமான 'உதைபா' தனது தந்தையிடம் சென்று இந்த நிகழ்வுகளை விவரித்தபோது, அபூ லஹப், "என் மகன் மீது முஹம்மதின் பிரார்த்தனையை நான் பயப்படுகிறேன்" என்று கூறினான்.

சில நாட்களுக்குப் பிறகு, அபூ லஹப் தனது மகன் உதைபாவை வணிகத்திற்காக டமஸ்கஸுக்கு அனுப்பினான். இரவு ஜர்கா என்ற இடத்தில் வணிகக் கூட்டம் நின்றிருந்தது. ஒரு சிங்கம் அங்குமிங்கும் நடக்க ஆரம்பித்தது. இதைப் பார்த்த உதைபா, “ஐயோ! முஹம்மத் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று நான் சத்தியம் செய்கிறேன்! இந்த சிங்கம் என்னை சாப்பிடும்! அவர் மக்காவில் இருந்தாலும், அவர் என் கொலையாளி!" என்று புலம்பினான். சிறிது நேரம் கழித்து, சிங்கம் மறைந்தது. உதைபா தூங்குவதற்கு அவர்கள் ஒரு உயர்ந்த இடத்தை அமைத்தனர். இரவில் மீண்டும் சிங்கம் வந்தது. வணிகக் கூட்டத்தில் இருந்த ஒவ்வொரு நபரையும் மோப்பம் பிடித்தபடி, அது உதைபாவிடம் சென்று அவன் மீது பாய்ந்தது. அது அவனது வயிற்றைக் கிழித்து, அவனது தலையைப் பிடித்து, கொடூரமாகக் கடித்து, அவனைக் கொன்றது. உதைபா இறக்கும் போது, ​​"முஹம்மத் மக்களில் மிகவும் உண்மையுள்ளவர் என்று நான் உங்களிடம் கூறவில்லையா?" என்று சொன்னான். தன் மகன் சிங்கத்தால் கடித்துக் கொல்லப்பட்டதைக் கேள்விப்பட்ட அபூலஹப், “என் மகனுக்காக முஹம்மத் செய்த பிரார்த்தனைக்கு நான் பயப்படுகிறேன் என்று நான் சொல்லவில்லையா?” என்று அழுதான்.3

நமது அன்பு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) முடிவில்லாத பேரின்பத்திற்கு மக்களை அழைத்து, அல்லாஹு தஆலாவின் இருப்பு மற்றும் ஏகத்துவத்தை நம்புவதற்கு அவர்களை அழைப்பதன் மூலம் ஜஹன்னமில் எரிவதிலிருந்து அவர்களைக் காப்பாற்ற முயன்றார். ஆனால், பலதெய்வவாதிகள், “இது எங்கள் மூதாதையரின் மதம்” என்று கூறி, உருவ வழிபாட்டைத் தொடர்ந்தனர். மனித நேயத்துடன் வாழவும், கண்ணியமாகவும், கௌரவமாகவும் இருக்கவும், இழிநிலையை ஒழிக்கவும், உயர்ந்த ஆன்மீக நிலைக்கு உயரவும் நமது நாயகம், நபி அழைப்பு விடுத்தார். ஆனால், அவர்கள் தங்கள் மூடத்தனத்திலேயே பிடிவாதமாக இருந்தார்கள். அபூலஹப் அவரை அவமதித்து துன்புறுத்தியவர்களின் தலைவனாவான். அவன் தொடர்ந்து ரஸூலுல்லாஹ்வைப் பின்தொடர்ந்து, மக்கள் அவருக்கு செவிமடுப்பதைத் தடுக்கவும், அவர்களின் மனதில் சந்தேகத்தை உருவாக்கவும் முயன்றான். நமது நாயகம் ரஸூலுல்லாஹ் பொது இடங்களிலும், கடைத் தெருக்களிலும், “மக்களே! லா இலாஹ இல்லல்லாஹ் என்று கூறுங்கள், அதனால் நீங்கள் இரட்சிப்பைப் பெறுவீர்கள்!" என்று கூறும் போது அவன் ரஸூலுல்லாஹ்வைத் தொடர்ந்து வந்து, “"மக்களே! அது என் மருமகன்தான் பேசுகிறான். அவனுடைய வார்த்தைகளை நம்பாதீர்கள். அவனை விட்டு விலகி இருங்கள்!" என்று கூறுவான்.

ஒரு நாள், முஹம்மத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கஃபா அஷ்ஷரீபில் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். அபூஜஹ்ல், ஷைபா இப்னு ரபீஆ, உத்பா இப்னு ரபீஆ, உக்பா இப்னு அபீ முஐத் உள்ளிட்ட குறைஷிகளின் முக்கியஸ்தர்களில் ஏழு பேர் கொண்ட குழு ரஸூலுல்லாஹ்வின் அருகில் வந்து அமர்ந்தது. முந்தைய நாள் வெட்டப்பட்ட ஒட்டகத்தின் கழிவுகளும் எச்சமும் அங்கேயே விடப்பட்டிருந்தன. கேவலமான அபூஜஹ்ல் தன்னைச் சுற்றியிருப்பவர்களிடம் திரும்பி, "முஹம்மத் ஸஜ்தா (தொழுகையில் ஸஜ்தா) செய்யும்போது, ​​அந்த ஒட்டகத்தின் கழிவுகளை எடுத்து அவரது தோள்களுக்கு இடையில் வைப்பது யார்?" என்று ஒரு அசிங்கமான வாய்ப்பை வழங்கினான். அவர்களில் மிகக் கொடூரமான, மிருத்தனமான, இரக்கமற்ற, மிகவும் துரதிர்ஷ்டவசமான உக்பா இப்னு அபீ முஐத், “நான் செய்கிறேன்” என்று கூறி, உடனடியாக எழுந்தான். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸஜ்தாவில் இருந்தபோது, அவரது அருள்மிகு தோள்களில் ஒட்டகத்தின் கழிவுகளை வைத்தான். இதைப் பார்த்த பலதெய்வவாதிகள் அடக்க முடியாமல் சிரிக்க ஆரம்பித்தனர்.

"அபூஜஹ்லே! வல்லாஹி, நீங்கள் இதை விட்டுவிடுங்கள் அல்லது அல்லாஹு தஆலா உங்களுக்கு ஒரு பேரழிவை ஏற்படுத்துவான்."
எமது அன்பார்ந்த நபி முஹம்மத் அலைஹிஸ்ஸலாம்

எங்கள் நபிகள் நாயகம் ஸஜ்தாவை நீட்டித்துக் கொண்டிருந்தார். அவர் அவரது அருள்வாய்ந்த தலையை உயர்த்தவில்லை. அந்த நேரத்தில், அஸ்ஹாப் அல்-கிராமில் ஒருவரான அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் இந்தக் காட்சியைக் கண்டார். அவர் இந்த சம்பவத்தை பின்வருமாறு விவரிக்கிறார்:

"நான் ரஸூலுல்லாஹ்வைப் பார்த்ததும் என் தலையில் ரத்தம் கொட்டியது. ஆனால், பல தெய்வ வழிபாடு செய்பவர்களிடமிருந்து என்னைக் காக்க என்னிடம் எந்த மக்களும், கோத்திரமும் இல்லை. நான் தனியாகவும் பலவீனமாகவும் இருந்தேன். அந்த நேரத்தில் என்னால் பேசக்கூட முடியவில்லை. நான் மிகவும் சோகத்துடன் நின்று ரஸூலுல்லாஹ்வைப் பார்த்துக் கொண்டிருந்தேன். பல தெய்வ வழிபாடு செய்பவர்களிடமிருந்து என்னைப் பாதுகாத்துக் கொள்ளும் சக்தியோ, பாதுகாவலரோ எனக்கு இருந்திருந்தால், ரஸூல் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் அருள்மிகு தோள்களில் வைக்கப்பட்டிருந்த கழிவுகளை நான் எடுத்து எறிந்திருப்பேன். நான் காத்திருந்தபோது, ​​ரஸூலுல்லாஹ்வின் மகள் ஹஸ்ரத் பாத்திமாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த நேரத்தில், பாத்திமா ஒரு சிறுமியாக இருந்தார். அவர் ஓடி வந்து, தன் தந்தையின் தோளில் இருந்ததைத் தூக்கி எறிந்தார். இதைச் செய்தவர்களுக்கு எதிராக அவர் கடுமையான வார்த்தைகளையும் பிரார்த்தனையையும் சொன்னார்.

எதுவுமே நடக்காதது போல் தொழுகையை முடித்துவிட்டு, எமது நாயகம் ரஸூலுல்லாஹ் மூன்று முறை, "யா அல்லாஹ்! அந்தக் குறைஷிக் குழுவை உன்னிடமே விட்டு விடுகிறேன்! யா அல்லாஹ்! அபூஜஹ்ல் அம்ர் இப்னு ஹிஷாமை உன்னிடமே விட்டு விடுகிறேன்! யா அல்லாஹ்! உத்பா இப்னு ரபீயாவை உன்னிடமே விட்டு விடுகிறேன்! யா அல்லாஹ்! ஷைபா இப்னு ரபீயாவை உன்னிடமே விட்டு விடுகிறேன்! யா அல்லாஹ்! உக்பா இப்னு முஐத்தை உன்னிடமே விட்டு விடுகிறேன்! யா அல்லாஹ்! உமய்யா இப்னு கலஃபை உன்னிடமே விட்டு விடுகிறேன்! யா அல்லாஹ்! வலீத் இப்னு உத்பாவை உன்னிடமே விட்டு விடுகிறேன்! யா அல்லாஹ்! உமாரா இப்னு வலீதை உன்னிடமே விட்டு விடுகிறேன்!" என்று கூறினார்கள். இந்தப் பிரார்த்தனையைக் கேட்டு, பலதெய்வவாதிகள் சிரிப்பதை நிறுத்தினார்கள். பயப்பட ஆரம்பித்தார்கள். ஏனெனில் பைத்துல்லாஹ்வில் கூறப்பட்ட பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படும் என்று அவர்கள் நம்பினார்கள். எமது நபியவர்கள் அபூஜஹ்லிடம், 'வல்லாஹி, நீங்கள் இதை விட்டுவிடுங்கள் அல்லது அல்லாஹு தஆலா உங்களுக்குப் பேரழிவை ஏற்படுத்துவான்' என்று கூறினார்கள். அல்லாஹு தஆலாவின் மீது சத்தியமாக, ரஸூலுல்லாஹ் யாரின் பெயர்களைக் குறிப்பிட்டார்களோ அவர்கள் ஒவ்வொரு நபரும் பத்ர் (கஸாவில்) போரில் கொல்லப்பட்டு, வெப்பத்தால் துர்நாற்றம் வீசும் சடலமாக பத்ர் குழிக்குள் தள்ளப்பட்டதை நான் கண்டேன்".

ஒரு நாள் அபூஜஹ்ல், பைத்துல்லாஹ்வில் உள்ள குறைஷி முஷ்ரிக்குகளை நோக்கி, “குறைஷி மக்களே! நீங்கள் பார்ப்பது போல், முஹம்மத் நமது மதத்தைக் கண்டிக்கவும், நமது சிலைகளுக்கும், அவற்றை வணங்கும் நம் தந்தைகளுக்கும் எதிராகப் பேசவும், நம்மை முட்டாள்களாகக் கருதவும் தயங்குவதில்லை. நாளை, என்னால் சுமக்க முடியாத ஒரு பெரிய கல்லை இங்கு கொண்டு வருவேன் என்றும், அவர் தொழுகையில் ஸஜ்தா செய்யும் போது நான் அவரது தலையில் அடிப்பேன் என்றும் நான் உங்கள் முன் சத்தியம் செய்கிறேன். அதற்குப் பிறகு, அப்துல்முத்தலிபின் மகன்களுக்கு எதிராக நீங்கள் என்னைப் பாதுகாப்பீர்களா இல்லையா என்பது முக்கியமல்ல. நான் அவரைக் கொன்ற பிறகு அவருடைய உறவினர்கள் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யலாம்” என்று கூறினான். அங்கிருந்த பலதெய்வவாதிகள், “நீ அவரைக் கொன்றால், உன்னைப் பாதுகாப்போம் என்றும், உன்னை யாரிடமும் ஒப்படைக்க மாட்டோம் என்றும் சத்தியம் செய்கிறோம்!” என்று கூறி அவனைத் தூண்டினார்கள்.

காலையில், அபூஜஹ்ல் கையில் ஒரு பெரிய கல்லுடன் கஃபாவிற்கு வந்தான். அவன் பலதெய்வவாதிகளுடன் அமர்ந்து காத்திருக்கத் தொடங்கினான். வழக்கம் போல், நமது அன்பான நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பைத்துல்லாஹ்வுக்கு வந்து தொழத் தொடங்கினார். அபூ ஜஹ்ல் எழுந்து நின்று ரஸூலுல்லாஹ்வைக் கல்லால் அடிப்பதற்காக அவர் பக்கம் சென்றான். இந்த சம்பவத்தை அனைத்து முஷ்ரிக்குகளும் உற்சாகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர். அவர் ரஸூலுல்லாஹ்வை நெருங்கியபோது, அபூஜஹ்ல் திடீரென்று நடுங்கத் தொடங்கினான். பெரிய கல் அவன் கைகளில் இருந்து விழுந்தது; அவன் முகம் சாம்பல் நிறமாக மாறி, அவன் மிகுந்த பயத்தோடு பின்வாங்கினான். அப்போது பலதெய்வவாதிகள் ஆச்சரியத்துடன் அபூஜஹ்லிடம் வந்து, "ஓ அம்ர் இப்னு ஹிஷாமே! சொல்லுங்கள், என்ன நடந்தது?" என்று வினவினர். அபூஜஹ்ல், "நான் அவரைக் கொல்ல கல்லைத் தூக்கியபோது, ​​​​ஒரு கொடிய ஒட்டகம் என் முன் தோன்றியது. சத்தியமாக, இவ்வளவு நீளமான, கூர்மையான பற்களுடைய, கம்பீரமான ஒட்டகத்தை நான் என் வாழ்நாளில் பார்த்தோ கேள்விப்பட்டோ இல்லை. நான் இன்னும் அருகில் சென்றிருந்தால், அது நிச்சயமாக என்னைக் கொன்றிருக்கும்." என்று கூறினான்.

மீண்டும் ஒரு நாள், அபூஜஹ்ல் பல தெய்வ வழிபாடு செய்பவர்களைக் கூட்டி, “அப்துல்லாஹ்வின் அனாதை நமாஸ் செய்து - தொழுது தன் முகத்தை இங்கே பூமியில் தேய்க்கிறாரா?” என்று கேட்டான். அவர்கள், "ஆம்" என்றனர். அதற்கு அபூஜஹ்ல், "அவரை நான் அப்படிப் பார்த்தால், அவரது தலையை என் காலால் நசுக்கிவிடுவேன்" என்று பதிலளித்தான். 

ஒரு நாள், நபிமார்களின் தலைவரான நபிகள் நாயகம் கஃபாவில் தொழுது கொண்டிருந்தார். அபூஜஹ்ல் தனது நண்பர்களுடன் அமர்ந்திருந்தான். அவர் எழுந்து நின்று ரஸூலுல்லாஹ் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை நோக்கி நடந்தான். அவன் மிக அருகில் சென்றான். ஆனால், திடீரென்று அவன் ஓடி வந்து, முகத்தை துடைத்துக்கொண்டிருந்தான். பலதெய்வவாதிகள் அவனிடம் சென்று, “உனக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள். அபூஜஹ்ல், “எங்களிடையே நெருப்புக் குழி தோன்றியது. சிலர் என்னை நோக்கி சரமாரியாக வந்து கொண்டிருப்பதைக் கண்டதும் நான் திரும்பி விட்டேன்" என்று கூறினான்.

வலீத் இப்னு முகீரா, அபூ ஜஹ்ல் (அம்ர் இப்னு ஹிஷாம்), அஸ்வத் இப்னு முத்தலிப், உமையா இப்னு கலஃப், அஸ்வத் இப்னு அப்தியக்வாஸ், ஆஸ் இப்னு வாஇல் மற்றும் ஹாரித் இப்னு கய்ஸ் போன்ற பலதெய்வவாதிகளின் முக்கியஸ்தர்கள் ரஸூலுல்லாஹ்வைப் பார்க்கும் போதெல்லாம், "அவர் தன்னை ஒரு நபியாகக் கற்பனை செய்கிறார்; ஜிப்ரஈல் (ஜிப்ரீல்) அவரிடம் வந்ததாக சொல்கிறார்" என்று கூறி அவரைப் பரிகாசம் செய்தனர். இந்நிலையில், ஹபீப் அல்-அக்ரம் மிகவும் வருத்தப்பட்ட ஒரு நாளில், ஜிப்ரஈல் அலைஹிஸ்ஸலாம் சில ஆயத்துல்-கரீமாக்களைக் கொண்டு வந்தார். அவை மஆலின்படி,

“(என் ரஸூலே!) நிச்சயமாக உமக்கு முன் அனுப்பப்பட்ட நபிமார்களும் பரிகாசம் செய்யப்பட்டார்கள். ஆனால், அவர்களைப் பரிகாசம் செய்தவர்களை, அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்த காரணத்தால், துன்பமும் வேதனையும் சூழ்ந்து கொண்டது."4

“உங்களை ஏளனம் செய்பவர்களுக்கு எதிராக நிச்சயமாக நாங்கள் போதுமானவர்கள். அவர்கள் அல்லாஹு தஆலாவுடன் மற்றொரு கடவுளை இணையாக்கியவர்கள். (அவர்களுக்கு என்ன நடக்கும்) என்பதை அவர்கள் விரைவில் அறிந்து கொள்வார்கள். நிச்சயமாக, உங்கள் நெஞ்சு இறுகுவதையும், அவர்களின் (பல தெய்வ வழிபாடு, குர்ஆன் அல்-கரீமுக்கு எதிரான அவதூறுகள் மற்றும் உங்களுக்கு எதிரான கேலி) வார்த்தைகளால் நீங்கள் வருத்தப்படுவதையும் நாங்கள் அறிவோம்.”5

ஒரு நாள், அகிலங்களின் ஸுல்தான், கஃபா அஷ்ஷரீஃபில் தவாஃப் செய்து கொண்டிருந்தபோது, ஜிப்ரஈல் அலைஹிஸ்ஸலாம் வந்து, "உங்களை ஏளனம் செய்தவர்களை அழிக்கும்படி எனக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது" என்று கூறினார். சிறிது நேரத்திற்குப் பிறகு, வலீத் இப்னு முகீரா அந்த வழியாகச் சென்றான். ஜிப்ரஈல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நபியவர்களிடம், “கடந்து செல்லும் இவர் எப்படிப்பட்டவர்?” என்று கேட்டபோது, "அல்லாஹ்வுடைய மிகக் கெட்ட அடியார்களில் ஒருவனாக இருக்கிறான்" என்று நபியவர்கள் கூறினார்கள். ஜிப்ரஈல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வலீதின் காலைச் சுட்டிக்காட்டி, “நான் அவனை அழித்துவிட்டேன்!” என்றார். சிறிது நேரம் கழித்து, அஸ் இப்னு வாஇல் கடந்து சென்றான். அவனைப் பற்றி விசாரித்து, அதே பதிலைக் கேட்டபோது, அவர் அவனது வயிற்றைக் காட்டி, "நானும் அவனை அழித்து விட்டேன்" என்றார். அஸ்வத் இப்னு முத்தலிப் கடந்து செல்லும் போது, ​​அவர் அவனது கண்களை சுட்டிக்காட்டினார். அப்தியக்வாஸைக் கண்டதும், அவர் அவனது தலையை சுட்டிக்காட்டினார். ஹாரித் இப்னு கைஸ் கடந்து செல்லும் போது, ​​அவர் அவனது வயிற்றைக் காட்டி, “முஹம்மதே! அல்லாஹு தஆலா அவர்களின் தீங்கிலிருந்து உங்களைக் காப்பாற்றினான். விரைவில், அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு பேரழிவை எதிர்கொள்வார்கள்." என்று ஜிப்ரஈல் அலைஹிஸ்ஸலாம் கூறினார்.

“(என் ரஸூலே!) நிச்சயமாக உமக்கு முன் அனுப்பப்பட்ட நபிமார்களும் பரிகாசம் செய்யப்பட்டார்கள். ஆனால், அவர்களைப் பரிகாசம் செய்தவர்களை, அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்த காரணத்தால், துன்பமும் வேதனையும் சூழ்ந்து கொண்டது."
அன்ஆம்: 10

அஸ் இப்னு வாஇலின் காலில் ஒரு முள் குத்தியது. பல மருந்துகளை உபயோகித்தும் அதனைக் குணப்படுத்த முடியவில்லை. கடைசியில், அவனது கால் ஒட்டகத்தின் கழுத்து அளவுக்கு வீங்கி, "முஹம்மதின் அல்லாஹ் என்னைக் கொன்றான்" என்று கூச்சலிட்டு இறந்து போனான்.

அஸ்வத் இப்னு முத்தலிப் பார்வையற்றவனாகிவிட்டான். ஜிப்ரஈல் அலைஹிஸ்ஸலாம் ஒரு மரத்தின் மீது அவனது தலையை அடித்து அழித்தார்.

அஸ்வத் இப்னு அப்தியக்வாஸ் பாத் அஸ்ஸமூம் என்ற இடத்தில் இருந்தபோது, ​​அவனது முகமும் உடலும் கருமையாக மாறியது. அவன் தனது வீட்டிற்குத் திரும்பி வந்தபோது, ​​​​அவனது குடும்பத்தினர் அவனை அடையாளம் காணவில்லை. அவர்கள் அவனை விரட்டினர். மனவேதனையால் வீட்டு வாசலில் தலையை இடித்துக்கொண்டு இறந்தான்.

ஹாரித் இப்னு கைஸ் உப்பு நிறைந்த மீன்களை சாப்பிட்டான். அவனுக்கு மிகவும் தாகம் எடுக்க ஆரம்பித்தது. நிறைய தண்ணீர் குடித்தாலும் தாகம் தணிக்க முடியவில்லை. கடைசியில், அவன் வயிறு வெடித்து மரணித்தான்.

ஒரு இரும்புத் துண்டு வலீத் இப்னு முகீராவின் கெண்டைக்காலைக் குத்தியது. அவனது காயம் குணமடையவில்லை. அவன் நிறைய இரத்தத்தை இழந்தான், "முஹம்மதின் அல்லாஹ் என்னைக் கொன்றான்" என்று கூச்சலிட்டவாறு அவன் இறந்தான்.

இவ்வாறு, ஒவ்வொருவரும் தங்களுக்குத் தகுதியானதைப் பெற்றனர். அத்துடன், நிச்சயமாக இணைவைப்பவர்கள் நரகத்தில் என்றென்றும் தங்கி விடுவார்கள் என்று ஆயத் அல்-கரீமாவில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு நாள், நமது பிரியமான நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹகம் இப்னு அபுல் ஆஸை சந்தித்தார். அவர் வெளியேறிய பிறகு, ஹகம் எங்கள் நாயகம் ரஸூலுல்லாஹ்வை அவனது வாய், முகம் மற்றும் உடலை அசைத்துக் கேலி செய்தான். ரஸூல் அல்-அக்ரம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) இதை நபித்துவத்தின் நூரின் ஒளியின் மூலம் பார்த்தார். அவன் அப்படியே இருக்கப் பிரார்த்தனை செய்தார். ஹகமின் உடல் நடுங்க ஆரம்பித்து, அவனது வாழ்நாள் முடியும் வரை அப்படியே இருந்தது.

அஸ்ஹாப் அல்-கிராமுக்கு செய்யப்பட்ட சித்திரவதைகள்

பலதெய்வவாதிகள் நமது நபிகள் நாயகத்தை மட்டும் துன்புறுத்தவில்லை. அவர்கள் அவருடைய புகழ்பெற்ற அஸ்ஹாப் (ரழியல்லாஹு அன்ஹும்) அவர்களையும் சித்திரவதை செய்தனர். அவர்கள் ஏழைகளையும் உதவியற்றவர்களையும் குறிப்பாக நாடினார்கள்; அவர்கள் அவர்களை ஒடுக்கி, அவர்களுக்கு கற்பனை செய்ய முடியாத சித்திரவதைகளைச் செய்தார்கள். சித்திரவதைக்கு மிகவும் ஆளானவர்களாக பிலால் அல்-ஹபஷி, அன்னை ஸின்னீரா, கப்பாப் இப்னு அரத், அம்மார் இப்னு யாஸர் மற்றும் அவரது குடும்பத்தினர் (ரழியல்லாஹு 'அன்ஹம் அஜ்மஈன்) உள்ளனர். அவர்களில் சிலரை சூடான கற்களால் எரிப்பார்கள்; அவர்களில் சிலரை அவர்கள் பசியுடனும் தாகத்துடனும் வைத்திருந்து, "முஹம்மதின் மதத்தை கைவிடுங்கள்" என்று கூறி அவர்களை சித்திரவதை செய்தனர். ஆனால் அவர்கள் தாங்க முடியாத வேதனைகளை எல்லாம் தாங்கிக்கொண்டு இஸ்லாத்தை விட்டு வெளியேறாமல் இருந்தனர்.

அல்லாஹ் ஒருவனே! அல்லாஹ் ஒருவனே!

உமையா இப்னு கலஃப் என்ற பல தெய்வ வழிபாட்டாளரின் அடிமையாக ஹஸ்ரத் பிலால் இருந்தார். அவர் அபூபக்ர் அஸ்-ஸித்தீக் மூலம் முஸ்லிமானார். உமையா தனது பன்னிரெண்டு அடிமைகளில் பிலாலை மிகவும் விரும்பியதால், அவரை சிலைகளின் ஆலயத்தின் காவலராக உமையா நியமித்திருந்தான். ஹஸ்ரத் பிலால் முஸ்லிமாக மாறியபோது, அவர் அனைத்து சிலைகளையும் ஸஜ்தாவின் நிலையில் வைத்தார். இதை அறிந்த உமையா அதிர்ச்சி அடைந்தான். அவன் அவரை அழைத்து, "நீர் முஸ்லிமாகிவிட்டீர், முஹம்மதின் இறைவனுக்கு ஸஜ்தா செய்கிறீர் என்று அவர்கள் கூறுகிறார்கள். அப்படித்தானே?" என்று வினவினான். அதற்கு ஹஸ்ரத் பிலால், “ஆம், நான் மிகப் பெரியவனும் வல்லமையும் கொண்ட அல்லாஹு தஆலாவுக்கு ஸஜ்தா செய்கிறேன்” என்று பதிலளித்தார். உமையா தனக்குப் பிடிக்காத இந்தப் பதிலைப் பெற்றவுடன், அவன் உடனே வேதனைகளையும் சித்திரவதைகளையும் தொடங்கினான். நண்பகலில், சூரியன் உச்சத்தில் இருக்கும் போது, ​​அவரது ஆடைகளை அவிழ்த்து, அவரது வெற்று உடலில் எரிந்த கற்களை வைத்து எரிப்பான். அவரை முதுகில் கிடத்தி, சூடான கற்களை அடுக்கி, சிலவற்றை வயிற்றில் வைத்த பிறகு, “இஸ்லாத்தைக் கைவிடு! லாத் மற்றும் உஸ்ஸா சிலைகளை நம்பு!" என்று கூறுவான். இருப்பினும், ஹஸ்ரத் பிலால் ஒவ்வொரு முறையும் "அல்லாஹ் ஒருவனே, அல்லாஹ் ஒருவனே!" என்று கூறி தனது ஈமானைப் பிரகடனப்படுத்துவார்.

உமையா இப்னு கலஃப் அவரது இந்தப் பொறுமையைக் கண்டதும், கோபமடைந்து, முட்கள் மீது இழுத்துச் செல்வதன் மூலம் அவரது உடலைக் காயப்படுத்தி சித்திரவதை செய்தான். தனது உடலிலிருந்து பெருமளவில் பாய்ந்து கொண்டிருந்த இரத்தத்தைப் பொருட்படுத்தாமல், ஹஸ்ரத் பிலால், "யா அல்லாஹ்! உன்னிடமிருந்து வரக்கூடியவற்றில் நான் திருப்தியடைகிறேன்! யா அல்லாஹ்! உன்னிடமிருந்து வரக்கூடியவற்றில் நான் திருப்தியடைகிறேன்!" என்று சொல்லி, தனது ஈமானில் நிலைத்திருப்பார். ஹஸ்ரத் பிலால் தனது இந்த நிலையைப் பின்வருமாறு விவரிக்கிறார்:

"அந்தக் கொடிய உமையா பகல் பொழுதில் என்னைக் கட்டி வைத்தான்; இரவில் என்னைத் துன்புறுத்தினான். அது ஒரு சூடான நாள். எப்போதும் போல, அவன் என்னை சித்திரவதை செய்ய ஆரம்பித்தான். "எங்கள் சிலைகளை வணங்கு! முஹம்மதின் அல்லாஹ்வை நிராகரி! அவரை நிராகரி, அவரை நிராகரி!" என்று கூறி, இஸ்லாத்தைக் கைவிட என்னை வற்புறுத்தினான். "அல்லாஹ் ஒருவனே! அல்லாஹ் ஒருவனே!" என்று நான் கூறுவேன். என் மீதான கோபத்தைப் போக்க, அன்று ஒரு பெரிய பாறையை என் மார்பில் வைத்தான். அந்த நேரத்தில், நான் சுயநினைவை இழந்தேன். நான் சுயநினைவுக்கு வந்தபோது, ​​என் உடலில் இருந்த பாறை அகற்றப்பட்டதையும், சூரியன் மேகங்களுக்குப் பின்னால் சென்றதையும் கண்டேன். நான் அல்லாஹு தஆலாவுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டு, “ஓ பிலாலே! ஜனாப் அல்-ஹக்கிடமிருந்து வரும் அனைத்தும் அழகாகவும் இனிமையாகவும் உள்ளன." என்று கூறிக் கொண்டேன்."

மீண்டும் ஒரு நாள், உமையா இப்னு கலஃப் பிலால் அல்-ஹபஷியை வெளியே அழைத்து வந்து சித்திரவதை செய்தான். அவன் அவரது ஆடைகளை அவிழ்த்து, அவரது உள்ளாடைகளை மட்டும் விட்டுவிட்டு, அவரை வெப்பத்தில் சூடான மணலில் படுக்க வைத்தான். பின்னர் அவர் மீது கற்களைக் குவித்தான். இணைவைப்பாளர்கள் ஒன்று கூடி, அவரைக் கொடூரமாகத் துன்புறுத்தினார்கள்; "நீ உனது மார்க்கத்தை விட்டு விலகிக் கொள்ளாவிட்டால், நிச்சயமாக நாங்கள் உன்னைக் கொன்று விடுவோம்" என்று கூறினார்கள். இந்தத் தாங்க முடியாத சித்திரவதைகளின் போதும், பிலால் அல்-ஹபஷி, "அல்லாஹ் ஒருவனே! அல்லாஹ் ஒருவனே!" என்று கூறிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில், நமது அன்பு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கடந்து சென்றார். ஹஸ்ரத் பிலால் அல்-ஹபஷியின் நிலையை அவர் கண்டபோது, அவர் மிகவும் வருத்தமடைந்தார். "அல்லாஹ்வின் பெயரைச் சொல்வது உங்களைக் காப்பாற்றும்" என்று அவரிடம் கூறினார்.

அவர் தம் வீட்டிற்குத் திரும்பிச் சென்ற சிறிது நேரத்திலேயே, ஹஸ்ரத் அபூபக்ர் வந்தார். பிலால் அல்-ஹபஷி அனுபவித்த சித்திரவதைகள் குறித்து அபூ பக்ரிடம் அவர் கூறினார். "நான் மிகவும் கவலைப்படுகிறேன்" என்றார். ஹஸ்ரத் அபூபக்ர் உடனே அங்கு சென்றார். அவர் பலதெய்வவாதிகளிடம், “பிலாலுக்கு இதைச் செய்வதால் உங்களுக்கு என்ன லாபம்? இந்த நபரை எனக்கு விற்று விடுங்கள்" என்று கூறினார். அதற்கு அவர்கள்; "நீர் எங்களிடம் உலகமளவு தங்கத்தைக் கொடுத்தாலும் நாங்கள் அவரை விற்பதில்லை" என்று கூறினார்கள். தொடர்ந்து, "எனினும், நாம் உமது அடிமை ஆமிருக்குப் பகரமாக அவரைப் பரிமாறிக் கொள்ள முடியும்." என்றார்கள். ஹஸ்ரத் அபூபக்ரின் அடிமை ஆமீர் அவரது வர்த்தக வியாபாரத்தை நடத்தி நிறைய பணம் சம்பாதிப்பவராக இருந்தார். அவருக்கு சொந்தமான சொத்துக்களைத் தவிர, அவரிடம் பத்தாயிரம் தங்க நாணயங்கள் இருந்தன. ஹஸ்ரத் அபூபக்ரின் உதவியாளராக இருந்த அவர், அவரது அனைத்து விவகாரங்களையும் மேற்கொண்டு வந்தார். எனினும், அவர் அல்லாஹ்வை நிராகரிப்பவராகவே தொடர்ந்து இருந்தார். ஹஸ்ரத் அபூபக்ர், “அமீரின் அனைத்து சொத்துக்களையும், பிலாலுக்கான பணத்தையும் உமக்கு அளிக்கின்றேன்." என்று கூறினார். இதனால் உமையா இப்னு கலஃபும் மற்ற இணைவைப்பாளர்களும் மகிழ்ந்தனர். "நாங்கள் அபூபக்ரை ஏமாற்றிவிட்டோம்" என்று அவர்கள் கூறினார்கள்.

ஹஸ்ரத் அபூபக்ர் உடனடியாக பிலால் அல்-ஹபஷியின் மீதிருந்த கனமான கற்களை அகற்றி அவரைத் தூக்கிக் கொண்டார். கடுமையான சித்திரவதைகளால் பிலால் அல்-ஹபஷி பலவீனமாக இருந்தார். ஹஸ்ரத் அபூபக்ர் அவரது கையைப் பிடித்தபடி அவரை நேரடியாக நம் அன்பான நபியிடம் அழைத்து வந்து, “ஓ ரஸுலல்லாஹ்வே! அல்லாஹ்வின் அன்பிற்காக நான் இன்று பிலாலை விடுதலை செய்தேன்." என்று கூறினார். எங்கள் நாயகம் ரஸூலுல்லாஹ் மகிழ்ச்சியடைந்தார். அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்காக அவர் அதிகம் பிரார்த்தனை செய்தார். அப்போதுதான் ஜிப்ரஈல் அலைஹிஸ்ஸலாம் ஸூரா அல்-லைலின் 17ஆவது மற்றும் 18ஆவது ஆயத் அல்-கரீமாக்களைக் கொண்டு வந்தார். அபூபக்ர் நரகத்திலிருந்து வெகு தொலைவில் உள்ளார் என்பதை அந்த இறை வசனங்கள் அறிவித்தன. மஆலின்படி, அவ்வசனங்களில், "அல்லாஹு தஆலாவின் பார்வையில் தூய்மையாக இருக்கவும், அல்லாஹு தஆலா வாக்குறுதியளித்த அருள்களைப் பெறவும், தனது செல்வத்தை நன்மையின் பாதையில் செலவழிப்பவர் (ஹஸ்ரத் அபூபக்ர் போன்றவர்) நரகத்திலிருந்து (ஜஹன்னத்திலிருந்து) பாதுகாக்கப்படுவார்" என்று கூறப்பட்டுள்ளது.

"(ஓ பிலாலே!) அல்லாஹு தஆலாவின் பெயரைச் சொல்வது உங்களைக் காப்பாற்றும்."
ஹதீஸ் அஷ்-ஷரீஃப்

கற்பனை செய்ய முடியாத சித்திரவதை

ஹஸ்ரத் கப்பாப் இப்னு அரத் தனது மார்க்கத்தைக் கைவிடும்படி வற்புறுத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டவர்களில் ஒருவர். ஹஸ்ரத் கப்பாபுக்கு யாரும் இல்லை. அவர் உம்மு அன்மார் என்ற பலதெய்வ வழிபாடு செய்த பெண்ணின் அடிமையாக இருந்தார். அவருக்குப் பாதுகாப்பளிக்கும் உறவினர்கள் எவருமில்லாததால், இணைவைப்பாளர்கள் ஒன்று கூடி, அவருடைய ஆடைகளைக் கழற்றி, அவருடைய உடலில் முட்களால் வெட்டினார்கள். சில சமயங்களில், இரும்பினால் செய்யப்பட்ட சட்டையை அவரது நிர்வாண உடலில் போட்டு, வெட்ட வெளியில் சூரியனுக்குக் கீழே நீண்ட நேரம் வைத்து விடுவார்கள். சூரியனின் கீழ் அல்லது நெருப்பில் சூடான கற்களை அவரது நிர்வாண உடலின் மீது அழுத்தி, "உனது மதத்தைக் கைவிடு! லாத்தையும், உஸ்ஸாவையும் வணங்கு" என்று கூறுவார்கள். கப்பாப் தனது மார்க்கத்தில் உறுதியாக இருந்தார். "லா இலாஹ இல்லல்லாஹ், முஹம்மதுன் ரஸூலுல்லாஹ்" என்று கூறி அவர்களை எதிர்த்தார்.

ஒரு நாள், பலதெய்வவாதிகள் ஒன்று கூடி கிராமத்தின் சதுக்கத்தில் நெருப்பை மூட்டினர். அவர்கள் ஹஸ்ரத் கப்பாபைக் கட்டி, அங்கே கொண்டு வந்தனர். அவர்கள் அவரது ஆடைகளைக் கழற்றி, நெருப்பில் படுக்க வைத்தனர். அவர்கள் அவரை தனது மார்க்கத்தைக் கைவிடச் செய்யப் போகிறார்கள் அல்லது அவரை நெருப்பில் எரிக்கப் போகிறார்கள். நெருப்பின் நடுவில் குப்புறமாகக் கிடத்தப்பட்ட ஹஸ்ரத் கப்பாப், “அல்லாஹ்வே! என் நிலையை நீ பார்க்கிறாய்; என் நிலைமை உனக்குத் தெரியும். என் இதயத்தில் என் நம்பிக்கையை நிலைநிறுத்துவாயாக, எனக்கு மிகுந்த பொறுமையைக் கொடுப்பாயாக! ” என்று பிரார்த்தனை செய்தார். இணைவைப்போரில் ஒருவன் ஹஸ்ரத் கப்பாபின் மார்பின் மீது மிதித்தான். ஆனால், அல்லாஹு தஆலா முஃமின்களைக் காப்பாற்றுகிறான் என்பதை அவர்கள் அறியவில்லை.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்கள் கப்பாபிடம் இந்த சம்பவத்தைப் பற்றிக் கேட்டபோது, ​​அவர் தனது முதுகைத் திறந்து, தீக்காயங்களைக் காட்டி, “அவர்கள் எனக்காக நெருப்பைக் கொளுத்திவிட்டு என்னை அதற்குள் இழுத்துச் சென்றனர். என் சதைதான் அந்த நெருப்பை அணைத்தது.” என்று கூறினார்.

ஹஸ்ரத் கப்பாபை அவர்கள் வெளியில் இப்படிச் சித்திரவதை செய்து கொண்டிருந்த போது, ​​அவருடைய உரிமையாளர் உம்மு அன்மர் ஒரு இரும்பை நெருப்பில் சூடாக்கி, அவரது மார்க்கத்தை கைவிடச் செய்ய, அதை அவரது தலையில் அழுத்துவாள். அவர் தனது மார்க்கத்திற்காக இத்தனை துன்பங்களையும் தாங்கிக் கொண்டார். அவர்கள் கூறியதை அவர் நிறைவேற்றவில்லை. தனது நம்பிக்கையைக் கைவிடவும் அவர் தயாராக இல்லை.

ஒரு நாள் ஹஸ்ரத் கப்பாப் நமது அன்பு நபியின் முன்னிலையில் சென்று, “ஓ ரஸூலல்லாஹ்! பலதெய்வ வழிபாடு செய்பவர்கள் என்னை எங்கு பார்த்தாலும் நெருப்பால் கொளுத்துகிறார்கள். வீட்டில், என் உரிமையாளர் உம்மு அன்மார் என் தலையை சூடாக்கப்பட்ட இரும்பினால் எரிக்கிறார். உங்கள் பிரார்த்தனைக்காக நான் மன்றாடுகிறேன்!” என்று கூறினார். அப்போது அவரது முதுகிலும் தலையிலும் இருந்த தீக்காயங்களைக் காட்டினார். நமது நபிகள் நாயகம் அவர் மீது மிகவும் பரிதாபப்பட்டார். அவர் தனது மார்க்கத்தை விட்டுவிடாததன் காரணமாக அனுபவித்த வேதனையை நபியவர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை. அவர், "என் இறைவனே! கப்பாபுக்கு உதவி புரிவாயாக!" என்று பிரார்த்தனை செய்தார். ஜனாப் அல் ஹக் உடனடியாகத் தனது ரஸூலின் பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டான். உம்மு அன்மருக்குத் தலையில் கடுமையான வலியை ஏற்படுத்தினான். அவள் தலைவலி காரணமாக இரவு முழுவதும் தவித்தாள். தீயில் சூடேற்றப்பட்ட இரும்பினால் அவளது தலையில் சூடு வைக்க வேண்டும் என்று கூறப்பட்டது. இறுதியில், அவள் கப்பாப்பை அழைத்து, இரும்புக் கம்பியை நெருப்பில் சூடாக்கி, அவள் தலையில் சூடு வைக்கும்படி கட்டளையிட்டாள்...

இஸ்லாத்தின் ஆரம்ப நாட்களில், பலதெய்வவாதிகள் கப்பாப் இப்னு அரத் மீது அதிக கவனம் செலுத்தவில்லை. ஆனால் முஸ்லிம்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இறுதியில், அவர்கள் விஷயத்தை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவர்கள் ஹஸ்ரத் கப்பாப் மீது தங்கள் வேதனையை அதிகப்படுத்தினார்கள். அவர்கள் அவரைக் கடுமையாகத் தாக்கி, அடித்து, காயப்படுத்தி, சித்திரவதை செய்தனர்.

இவை அனைத்தையும் மீறி, ஹஸ்ரத் கப்பாப் தனது ஈமானை எந்த விதத்திலும் சமரசம் செய்யவில்லை. ஆனால் அந்த சித்திரவதைகள், வேதனைகள் சகிக்க முடியாததாகிவிட்டன. அவர் பிரபஞ்சத்தின் தலைவரிடம் நடந்ததை விளக்கி, “ஓ ரஸூலல்லாஹ்! நாங்கள் அனுபவித்து வரும் சித்திரவதைகளிலிருந்து விடுபட பிரார்த்தனை செய்யுங்கள்” என்று வேண்டினார்.

அதற்கு, எங்கள் ஆசான் ரஸூலுல்லாஹ் அவர்கள், "உங்களுக்கு முன் வந்த உம்மத்களில் இப்படிப்பட்டவர்கள் இருந்தார்கள். அவர்களின் தோலையும் சதையையும் உரித்து இரும்புச் சீப்பால் சீவினார்கள், ஆனால் இந்த சித்திரவதையால் அவர்களை மார்க்கத்திலிருந்து விலக்க முடியவில்லை. அவர்களது தலைகள் கத்தியால் இரண்டாக வெட்டப்பட்டன. இந்த சித்திரவதைகள் அவர்களை மார்க்கத்திலிருந்து விலக்கிவிடவில்லை. நிச்சயமாக அல்லாஹு தஆலா இதை (இஸ்லாத்தை) பூர்த்தி செய்வான். இதை எல்லா மதங்களையும் விட உயர்ந்ததாக ஆக்குவான். அப்போது, ஸனாவிலிருந்து ஹழ்ரமௌத் வரை தனியாகப் பயணிக்கும் ஒரு மனிதன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் பயப்பட மாட்டான். தன் ஆடுகளின் மீது ஓநாய் தாக்குதலைத் தவிர வேறு எதையும் பற்றிக் கவலைப்பட மாட்டான். ஆனால் நீங்கள் அவசரப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள்." என்று கூறி, ஒரு பிரார்த்தனையைச் செய்து, அவரது முதுகில் தட்டினார். ஆத்மாக்களுக்கு மருந்தாகவும், ஊட்டமாகவும் இருக்கும் ரஸூலுல்லாஹ்வின் இந்த அழகிய வார்த்தைகள், கப்பாபின் வலியைத் தணித்தன.

ஹஸ்ரத் கப்பாபிற்கு பலர் கடன்பட்டிருந்தனர். குறிப்பாக மூர்க்கமான பலதெய்வவாதியான அஸ் இப்னு வாஇல் கணிசமான தொகையை செலுத்த வேண்டியிருந்தது. அதைக் கேட்க அவனிடம் சென்றான். அஸ் இப்னு வாஇல் கப்பாபிடம், "நீ முஹம்மதை நிராகரித்தால் ஒழிய, நான் உனக்கு என் கடனை செலுத்தமாட்டேன்" என்று கூறினான். அதற்கு ஹஸ்ரத் கப்பாப், “வல்லாஹி, நான் என் வாழ்விலும், மரணத்திற்குப் பின்னரும், நான் என் கப்ரிலிருந்து எழும்பும்போதும் என் நபியை நிராகரிக்கவே மாட்டேன். நான் எல்லாவற்றையும் கைவிடுவேன்; ஆனால், இந்த நிராகரிப்பை என்னால் செய்ய முடியாது." என்றார். அதற்கு, அஸ் இப்னு வாஇல், “நாம் இறந்த பிறகு உயிர்த்தெழுப்பப்படுவோமா? அப்படி ஒன்று இருந்தால் எனக்கு என் சொத்து, பிள்ளைகள் இரண்டும் கிடைக்கும். அன்றுதான் உனக்கு என் கடனை அடைப்பேன்." என்று கூறினான்.

அஸ் இப்னு வாஇலின் இந்த வார்த்தைகளுக்குப் பிறகு, அல்லாஹு தஆலா குர்ஆன் அல்-கரீமின் ஸூரா மர்யமின் 77-79 ஆவது ஆயத் அல்-கரிமாக்களை இறக்கியருளினான். அவை, மஆலின்படி பின்வருமாறு, " (எனது ஹபீபே!) நம்முடைய வசனங்களை நிராகரித்துவிட்டு, (மறுமையில்) நான் நிச்சயமாக செல்வமும், பிள்ளைகளும் கொடுக்கப்படுவேன்" என்று கூறுபவனை நீர் பார்த்தீரா?அவன் (ஃகைபை) மறைவானவற்றைக் கண்டும் இருக்கிறானா? அல்லது அர்ரஹ்மானிடம் (மிக இரக்கமுள்ளவனிடம்) வாக்குறுதி பெற்றுள்ளானா? இல்லை, அது அப்படி இல்லை! அவன் சொன்னதை நாம் எழுதுவோம். (இதன் அடிப்படையில், கியாமத் நாளில் அவனைக் கணக்குக் கேட்போம்). மென்மேலும், நாம் அவனுக்கு வேதனையை அதிகமாக்குவோம்."

மயங்கி விழும் வரை சித்திரவதை

சித்திரவதை தொடர்பாக, பலதெய்வவாதிகள் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு இடையே வேறுபாடு காட்டவில்லை. முதல் முஸ்லிம்களில் ஒருவரான, யாரும் இல்லாத பெண் ஸின்னீராவும் ஒரு அடிமையாக இருந்தார். முஸ்லிமாக மாறியதை அறிந்த (இணைவைப்பாளர்கள்) முஷ்ரிக்குகள் அவரை சித்திரவதை செய்யத் தயங்கவில்லை. அவர்கள் அவரை லாத் மற்றும் உஸ்ஸா சிலைகளை வணங்கக் கட்டாயப்படுத்தி, அவர் சுவாசிக்க முடியாமல் மயக்கமடையும் வரை அவரை சித்திரவதை செய்து கழுத்தை நெரிப்பார்கள். அதையெல்லாம் மீறி, அவர் மார்க்கத்தைக் கைவிடவில்லை; அவர்களின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படியவில்லை. குறிப்பாக அபூ ஜஹ்ல் அவரை மிகவும் சித்திரவதை செய்தான். இதன் விளைவாக, ஸின்னீரா பார்வையற்றவராக ஆனார். ஒருமுறை அபூ ஜஹ்ல் அவரிடம், "நீ பார்த்தாயா! லாத், உஸ்ஸா இருவரும் உன்னைக் குருடாக்கிவிட்டார்கள்." என்று கூறி கேலி செய்தான். அதற்கு அன்னை ஸின்னீரா, தனது ஈமானின் வெளிப்பாடாக, "ஓ அபூ ஜஹ்லே! வல்லாஹி, நீ சொல்வது போல் அல்ல. லாத், உஸ்ஸா என்று நீங்கள் அழைக்கும் சிலைகள் பயனற்றவை; அவற்றை வணங்குபவர்களையும் வணங்காதவர்களையும் அவை அறியவில்லை. நிச்சயமாக என் இறைவன் என்னைக் கண் பார்வை பெறச் செய்வதிலும், என்னை முன்னிருந்த நிலைக்குத் திரும்பச் செய்வதிலும் ஆற்றலுடையவன்." என்று கூறினார்.

ஹஸ்ரத் ஸின்னீராவின் அசைக்க முடியாத ஈமானால் அபூ ஜஹ்ல் திகைத்துப் போனான். அல்லாஹு தஆலா ஸின்னீராவின் பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டான். அவரது கண்கள் முன்பை விட நன்றாகப் பார்க்க ஆரம்பித்தன. அபூ ஜஹ்லும், குறைஷிய முஷ்ரிக்குகளும் இந்த நிலைமையைக் கண்டிருந்தாலும், அவர்கள் முரட்டுத்தனமாக இருந்தனர்; அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. "இதுவும் அவர்களுடைய நபியின் சூனியமேயன்றி வேறில்லை. முஹம்மதின் பாதையைப் பின்பற்றும் முட்டாள்களைப் பற்றி நீங்கள் வியப்படையவில்லையா? அவர்களின் பாதை நல்லதாகவும் உண்மையாகவும் இருந்திருந்தால், நாங்கள் அதை முதலில் பின்பற்றியிருப்போம். நமக்கு முன்பே ஓர் அடிமை உண்மையைக் கண்டறிந்தான். அப்படித்தானே?" என்று பரிகாசம் செய்தனர்.

இதன் பின்னணியில், அல்லாஹு தஆலா ஸூரா அல்-அஹ்காஃபின் 11ஆவது ஆயத் அல்-கரீமாவை இறக்கியருளினான். அவை மஆலின்படி, "இதில் (இஸ்லாத்தில்) ஏதாவது நன்மை இருந்திருந்தால், அவர்கள் (ஏழைகளும், உதவியற்றவர்களும்) நம்மை முந்திக்கொண்டு, அதற்கு நம்மை முந்திச் சென்றிருக்க மாட்டார்கள்" என்று காஃபிர்கள் முஃமின்களிடம் கூறினார்கள். இன்னும், அவர்கள் இதன் மூலம் (விசுவாசிகளைப் போல குர்ஆன் அல்-கரீம் மூலம்), நேர்வழி பெறாததால், "இது (முஹம்மதால் மீண்டும் வெளிவந்த) ஒரு பழைய பொய்யாகும்" என்று கூறுவார்கள்."

தார் அல்-அர்கம்

“ஓ அபூஜஹ்லே! வல்லாஹி, நீ சொல்வது போல் அல்ல. லாத், உஸ்ஸா என்று நீங்கள் அழைக்கும் சிலைகள் பயனற்றவை; அவற்றை வணங்குபவர்களையும் வணங்காதவர்களையும் அவை அறியவில்லை. நிச்சயமாக என் இறைவன் என்னைக் கண் பார்வை பெறச் செய்வதிலும், என்னை முன்னிருந்த நிலைக்குத் திரும்பச் செய்வதிலும் ஆற்றலுடையவன்."
ஸின்னீரா (ரழியல்லாஹு அன்ஹா)

நமது அன்பு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அஸ்ஹாப் (தோழர்கள்) மீது முஷ்ரிக்குகள் நடத்திய கொடுமை மற்றும் சித்திரவதைகளால் மிகவும் வருத்தமடைந்தார்கள். இஸ்லாத்தை பரப்பவும் கற்கவும் பாதுகாப்பான இடம் அவசியமாக இருந்தது. இந்தப் புனித கடமைக்காக ஹஸ்ரத் அர்கமின் வீட்டை நமது நாயகம் தேர்ந்தெடுத்தார்.6 இந்த வீடு ஸஃபா மலைக்குக் கிழக்கே ஒரு குறுகிய தெருவில் உயர்ந்த இடத்தில் இருந்தது. இதிலிருந்து கஃபா அல்-முஅஸ்ஸமாவை எளிதாகக் காணலாம். வீட்டின் நுழைவாயில் மற்றும் வெளியேறும் வழிகள் கடந்து செல்லும் நபர்களை அவதானிக்க மிகவும் வசதியாக இருந்தன. அத்துடன், ஹஸ்ரத் அர்கம் மக்காவின் முக்கியஸ்தர்களில் ஒருவராகவும், உயர் அந்தஸ்தில் இருப்பவராகவும் இருந்தார். எமது நாயகம் ஹபீப் அல்-அக்ரம் இந்த வீட்டில் தனது அஸ்ஹாபுக்கு இஸ்லாத்தை விளக்கிக் கொண்டிருந்தார். முஸ்லிம்களாக மாறப் போகிறவர்கள் இந்த இல்லத்திற்கு வந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதன் மூலம் கௌரவிக்கப்படுவார்கள். இதயங்களை குணப்படுத்தும் நமது நபியவர்களின் அருள்வாய்ந்த வார்த்தைகளைக் கேட்பதன் மூலம் அருள்பாளிக்கப்படுவார்கள். அவர்கள் தமது தலையில் பறவைகள் வந்து நின்றிருப்பதைப் போலவும் அவர்கள் பேசினால் அவை தலையிலிருந்து பறந்து சென்றிவிடும் என்பதைப் போலவும் மிகவும் அமைதியாக, மூச்சுவிடும் சப்தம் கூடக் கேட்காமல் நமது நபியின் பேச்சைக் கேட்பார்கள். அவர் அருளிய வார்த்தைகளை ஒரு வார்த்தையும் தவறவிடாமல், விழுங்குவது போல மனப்பாடம் செய்வார்கள். நமது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தனது பகல் நேரத்தை அர்கமின் வீட்டிற்காக ஒதுக்கி, காலை முதல் மாலை வரை அவருடைய அஸ்ஹாபுக்குக் கற்பிப்பார்கள். இந்த வீடு 'தார் அல்-இஸ்லாம்' ஆகும். இது முஸ்லிம்களின் முதல் தலைமையகமாகும். முஸ்லிம்களின் முதல் கூட்டம் இங்கு கூடி, இணைவைப்பவர்களின் அனைத்து வகையான தீமைகளிலிருந்தும் பாதுகாக்கப்பட்டனர்.

கொடிய சித்திரவதை

அம்மார் இப்னு யாஸர் கூறுகிறார், “நான் ரஸூலுல்லாஹ்வைப் பார்த்து முஸ்லிமாக மாற தார் அல்-அர்கமுக்குச் செல்ல விரும்பினேன். நான் வாசலில் ஹஸ்ரத் சுஹைபைக் கண்டேன். நான் அவரிடம், 'இங்கே என்ன செய்கிறாய்?' என்று கேட்டேன். அதே கேள்வியை அவர் என்னிடம் கேட்டார். நான், 'ஹஸ்ரத் முஹம்மதின் முன்னிலையில் சென்று, அவருடைய வார்த்தைகளைக் கேட்டு, முஸ்லிமாக மாற விரும்புகிறேன்' என்றேன். 'அதற்காகத்தான் நானும் வந்தேன்' என்று அவர் கூறினார். நாங்கள் ஒன்றாக அவரது உன்னதமான, மரியாதைக்குரிய சபையில் நுழைந்தோம். அவர் இஸ்லாத்தைப் பற்றி எங்களுக்கு அறிவித்தார். நாங்கள் மகிழ்ச்சியுடன் முஸ்லிம்களாக மாறிவிட்டோம்.7

தனது மார்க்த்தை வெளிப்படுத்தத் தயங்காத முஜாஹித்களில் ஒருவராக அம்மார் இருந்தார். அவர் தனது மார்க்கத்தைக் கைவிடாதபடி மிகக் கடுமையான சித்திரவதைகளைச் சகித்தார். பலதெய்வவாதிகள் அவரைத் தனியாகக் கண்டால், அவர்கள் அவரை ரம்தா பகுதிக்கும், மக்காவின் பாறைகளுக்கும் அழைத்துச் சென்று, அவரது ஆடைகளைக் களைந்து, அவருக்கு இரும்புச் சட்டையைப் போடுவார்கள். கொளுத்தும் வெயிலில் அப்படியே வைத்து அவர் சித்திரவதை செய்யப்பட்டார். சில சமயங்களில் அவரது முதுகு நெருப்பால் எரிக்கப்பட்டது. மேலும் அவர் முடிவில்லா சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டார். ஒவ்வொரு முறையும் அவர்கள், "நிராகரி! நிராகரி! லாத்தையும் உஸ்ஸாவையும் வணங்கு! நீ இரட்சிக்கப்படுவாய்!" என்று கூறுவார்கள். ஹஸ்ரத் அம்மார் இந்தத் தாங்க முடியாத சித்திரவதைகளுக்கு மிகுந்த பொறுமையுடன் பதிலளிப்பார். "என் இறைவன் அல்லாஹ், என் நபி முஹம்மத் அலைஹிஸ்ஸலாம்" என்று அவர் கூறுவார். இதைக் கண்டு அவர்கள் மேலும் கோபமடைவார்கள்; எரிந்த கற்களை அவர் மார்பில் போடுவார்கள், சில சமயங்களில் அவரை ஒரு கிணற்றில் எறிந்து தண்ணீரில் மூழ்கடிக்க முயற்சிப்பார்கள். அம்மார் இப்னு யாஸர் ஒரு நாள் நம் அன்பிற்குரிய நபியின் முன்னிலையில் வருகை தந்து, ​​“ரஸூலல்லாஹ்வே! பலதெய்வவாதிகளால் எங்களுக்கு இழைக்கப்படும் சித்திரவதைகள் உச்சகட்டத்தை எட்டியுள்ளன." என்று கூறினார். எங்கள் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஹஸ்ரத் அம்மார் மீது இரக்கம் கொண்டு, "யாஹ்ஸனின் தந்தையே, பொறுமையாக இருங்கள்!" என்று சொன்னார். பின்னர் அவர், "யா ரப்பீ! அம்மாரின் குடும்பத்தைச் சேர்ந்த யாரையும் ஜஹன்னமின் (நரகின்) வேதனையைச் சுவைக்கச் செய்ய வேண்டாம்!" என்று பிரார்த்தனை செய்தார்.

முதல் தியாகி, முதல் இரத்தம்

ஹஸ்ரத் அம்மாரின் தந்தை யாஸர், அவரது தாயார் ஸுமையா மற்றும் அவரது சகோதரர் அப்துல்லாஹ் ஆகியோர் ஒரு குடும்பமாக முஸ்லிம்களாகினர். முஷ்ரிக்குகள் ஹஸ்ரத் அம்மாரை சித்திரவதை செய்ததை விட அதிகமாக அவர்களை சித்திரவதை செய்தார்கள். சித்திரவதைகளின் போது, அவர்கள் இறைவனைப் பழிக்கும் வார்த்தைகளைச் சொல்ல வேண்டும் என்று அவர்கள் விரும்புவார்கள். ஆனால் இவர்கள், "நீங்கள் எங்கள் தோலைக் கழற்றி, எங்கள் சதையை வெட்டினாலும், நாங்கள் உங்களுக்குச் செவிசாய்க்க மாட்டோம்" என்று பதிலளித்து, "லா இலாஹ இல்லல்லாஹ், முஹம்மதுன் ரஸூலுல்லாஹ்" என்று கூறுவார்கள்.

மீண்டும் ஒரு நாள், பாத் என்ற இடத்தில், யாஸரின் குடும்பத்தினர் சித்திரவதை செய்யப்பட்டபோது, ​​எங்கள் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அவ்வழியாகச் சென்று கொண்டிருந்தார்கள். அவருடைய அஸ்ஹாப் அனுபவித்த இந்தத் தாங்க முடியாத வேதனைகளைக் கண்டு அவர் மிகவும் வருத்தமடைந்தார். ஹஸ்ரத் யாஸர், ​​“யா ரஸூலல்லாஹ்! நம் வாழ்க்கை இத்தகைய வேதனைகள் நிறைந்ததாக இருக்குமா?" என்று கேட்டபோது, நபியவர்கள், "யாஸர் குடும்பத்தாரே, பொறுமையாக இருங்கள்! அம்மார் குடும்பத்தாரே, மகிழ்ச்சியடையுங்கள்! சந்தேகத்திற்கு இடமின்றி, உங்கள் வெகுமதியின் இடம் ஜன்னாஹ்தான்" என்று பதிலளித்தார்.

மறுபடியும் ஒரு நாள், மக்காவில் உள்ள இணைவைப்பாளர்கள் அம்மாரை நெருப்பால் துன்புறுத்தினார்கள். எங்கள் நாயகம் ரஸூலுல்லாஹ் அங்கு வந்து, "நெருப்பே! நீ இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்கு இருந்தது போல் அம்மாருக்கும் குளிர்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் இரு!" என்று கூறினார். பின்னர், அம்மார் தனது முதுகைக் காட்டியபோது, தீக்காயத்தின் அடையாளம் காணப்பட்டது. ரஸூலுல்லாஹ்வின் பிரார்த்தனைக்கு முன்னர் அந்த அடையாளம் தோன்றியிருந்தது.

"யாஸர் குடும்பத்தாரே, பொறுமையாக இருங்கள்! அம்மார் குடும்பத்தாரே, மகிழ்ச்சியடையுங்கள்! சந்தேகத்திற்கு இடமின்றி, உங்கள் வெகுமதியின் இடம் ஜன்னாஹ்தான்"
ஹதீஸ் அஷ்-ஷரீஃப்

மீண்டும், அவர்கள் யாஸர் குடும்பத்தை சித்திரவதை செய்த ஒரு நாளில், அவர்கள் ஹஸ்ரத் யாஸர் மற்றும் அவரது மகன் அப்துல்லாஹ்வை அம்புகளால் குத்திக் கொலை செய்தனர். அபூஜஹ்ல் ஹஸ்ரத் சுமைய்யாவின் கால்களைக் கயிறுகளால் கட்டியிருந்தான். அவன் இரண்டு ஒட்டகங்களை கயிறுகளின் முனைகளில் கட்டி, எதிர் திசைகளில் ஓட்டிச் சென்றான். ஹஸ்ரத் சுமைய்யா தனது உடல் கிழிக்கப்பட்டு, கொல்லப்பட்டார். எமது நபிகள் நாயகமும் அவரது அஸ்ஹாப் அல்-கிராம்களும் (அலைஹிமுர் ரிழ்வான்) அபூஜஹ்ல் மற்றும் பிற முஷ்ரிக்குகள் யாஸர் குடும்பத்தை சித்திரவதை செய்து கொலை செய்த செய்தியைக் கேட்டபோது மிகவும் வருத்தமடைந்தனர். இந்த நிகழ்வு அஸ்ஹாப் இன்னும் ஒன்றுபடுவதற்குக் காரணமாக அமைந்தது.8

அஸ்ஹாப் அல்-கிராம் தொழுகை முடிந்ததும், அவர்கள் தனிமையான இடங்களுக்குச் சென்று, தங்கள் இபாதத்தை இரகசியமாகச் செய்வார்கள். இதுபோன்ற இன்னொரு நாள்; ஸஅத் இப்னு அபீ வக்காஸ், ஸஅத் இப்னு ஸைத், அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத், அம்மார் இப்னு யாஸர், கப்பாப் இப்னு அரத் ஆகியோர் மக்காவின் அபூ துப் என்ற பள்ளத்தாக்கில் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் அஹ்னாஸ் இப்னு ஷரீக்கும் அவனைப் பின்தொடர்ந்து சில இணைவைப்பாளர்களும் வந்து அவர்களின் இபாதத்தை கேலி செய்து கொச்சைப்படுத்தத் தொடங்கினர். ஹஸ்ரத் ஸஅத் இப்னு அபீ வக்காஸும் அவருடைய நண்பர்களும் இதைப் பொறுக்க முடியாமல் பலதெய்வவாதிகளைத் தாக்கினர். ஹஸ்ரத் ஸஅத் ஒரு ஒட்டக எலும்பைக் கண்டு, அதைக் கொண்டு காஃபிர்களில் ஒருவனின் தலையைப் பிளந்தார். பலதெய்வவாதிகள் பயந்து ஓடிவிட்டனர். இவ்வாறு, முதன்முறையாக, முஸ்லிம்கள் காஃபிர்களின் இரத்தத்தை சிந்தினர்.

அபூதர் கிஃபாரி இஸ்லாத்தைத் தழுவுதல்

ஒருவர் பின் ஒருவராக, மக்கள் நேர்வழியை (ஹிதாயத்) அடைந்து கொண்டிருந்தனர், மேலும் இஸ்லாத்தின் நூர் மக்காவிற்கு வெளியே பரவி, உலகை ஒளிரச் செய்யத் தொடங்கின. இஸ்லாமியர்களின் எழுச்சி மற்றும் பரவலின் செய்திகளை எதிர்கொண்டு, அதைத் தடுக்க பல வழிமுறைகளை முஷ்ரிக்குகள் முயற்சித்தனர். இறுதியில், இந்த செய்தி பனீ கிஃபார் கோத்திரத்தினருக்கும் சென்றது. இந்தச் செய்தியை அபூதர் கிஃபாரி கேட்டவுடன், அவர் தனது சகோதரர் உனைஸை மக்காவிற்கு அனுப்பி, நிலைமையை விசாரிக்குமாறு கேட்டார். உனைஸ் மக்காவுக்குச் சென்று, எங்கள் நாயகம் நபியின் அமர்வுகளில் கலந்து கொண்டார். அவர் மீது அபிமானத்துடன் திரும்பி வந்தார். அவருடைய சகோதரர் ஹஸ்ரத் அபூதர், “என்ன செய்தி கொண்டு வந்தீர்கள்?” என்று கேட்டபோது, " எங்கள் நாயகமே! வல்லஹி, நான் ஒரு மிக உன்னதமான மனிதனைப் பார்த்தேன், அவர் எப்போதும் நல்லதைக் கட்டளையிடுகிறார்; தீமையைத் தடை செய்கிறார்." என்று பதிலளித்தார். "அவரைப் பற்றி மக்கள் என்ன சொல்கிறார்கள்?” என்று அபூதர் கிஃபாரி கேட்டபோது, ​​அவரது காலத்தின் புகழ்பெற்ற கவிஞர்களில் ஒருவரான உனைஸ், "அவர் ஒரு கவிஞர், ஒரு சூனியக்காரர், ஒரு மந்திரவாதி என்று அவர்கள் கூறுகிறார்கள். இருப்பினும், அவரது வார்த்தைகள் சூனியக்காரர்கள் அல்லது மந்திரவாதிகள் போல் இல்லை. மேலும், அவருடைய வார்த்தைகளை கவிஞர்களின் ஒவ்வொரு கவிதைகளுடனும் ஒப்பிட்டுப் பார்த்தேன். அவை அவற்றை ஒத்ததாக இல்லை. இந்தத் தனித்துவமான சொற்களை யாருடைய சொற்களுடனும் ஒப்பிட முடியாது. வல்லாஹி, அந்த நபர் உண்மையைச் சொல்கிறார். அவரை நிராகரிப்பவர்கள் பொய்யர்களும், வழி கேடர்களுமே." என்று கூறினார்.

இச்செய்தியைக் கேட்ட, அபூதர் கிஃபாரி மக்காவுக்குச் சென்று, எமது நபியைப் பார்த்து முஸ்லிமாக மாற முடிவு செய்தார். ஒரு தடியையும் கொஞ்சம் உணவையும் எடுத்துக் கொண்டு உற்சாகமாக மக்காவிற்குப் புறப்பட்டார். அவர் மக்காவிற்கு வந்தபோது, அவர் தனது நோக்கங்களைப் பற்றி யாரிடமும் சொல்லவில்லை; ஏனென்றால், முஷ்ரிக்குகள் நமது நபி மற்றும் புதிய முஸ்லிம்களுக்குக் கடுமையாக விரோதமாக இருந்தனர். அத்துடன் அவர்கள் தங்கள் வேதனையை அதிகரித்தனர். குறிப்பாக, ஏழை மற்றும் உதவியற்ற முஸ்லிம்களை அவர்கள் சித்திரவதை செய்தனர். அபூதர் மக்காவில் யாரையும் அறிந்திருக்கவில்லை. அவர் ஒரு அந்நியர். எனவே, அவர் யாரிடமும் எதையும் கேட்கவில்லை. கஃபா அருகே, அவர் ரஸூலுல்லாஹ்வைப் பார்க்க ஒரு வாய்ப்பிற்காகக் காத்திருந்தார். மேலும் அவர் இருக்கும் இடத்தை அறிய ஒரு அடையாளத்தைத் தேடினார்.

மாலையில், அவர் ஒரு தெரு முனையில் பின்வாங்கினார். ஹஸ்ரத் அலி அபூதர்ரைப் பார்த்தார். அவர் அந்நியர் என்று புரிந்து கொண்டு தன் வீட்டிற்கு அழைத்து வந்தார். அவர் தனது நிலைமையைப் பற்றிக் கேட்காததால், அபூதர் தனது ரகசியத்தை வெளியிடவில்லை. காலையில் மீண்டும் கஃபாவிற்குச் சென்றார். மாலை வரை அலைந்தாலும் அவரால் தன் விருப்பத்தை அடைய முடியவில்லை. அவர் முந்தைய இடத்திற்கு சென்று அமர்ந்தார். ஹஸ்ரத் அலி மீண்டும் அந்த இரவில் அங்கு சென்று கொண்டிருந்தார். அவர், “எனவே இந்த ஏழை இன்னும் தன் வீடு எங்கிருக்கிறது என்பதை அறியவில்லை” என்று கூறி, அவரை மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். காலையில், அவர் மீண்டும் பைத்துல்லாஹ்வுக்குச் சென்று மாலையில் மீண்டும் அந்த மூலையில் ஓய்வு பெற்றார். ஹஸ்ரத் அலி அவரை மீண்டும் தனது வீட்டிற்கு அழைத்தார். இந்த முறை, அவர் எங்கிருந்து வந்தார், ஏன் வந்தார் என்று கேட்டார். ஹஸ்ரத் அபூதர், "நீங்கள் எனக்கு சரியான தகவலைத் தருவதாக உறுதியான வாக்குறுதி அளித்தால், நான் உங்களுக்குச் சொல்வேன்" என்றார். ஹஸ்ரத் அலி, "என்னிடம் சொல்லுங்கள். உங்கள் நிலைமையை நான் யாருக்கும் வெளிப்படுத்த மாட்டேன்." என்று சொன்னபோது, அபூதர் கிஃபாரி, "இங்கே ஒரு நபி வந்ததாக நான் கேள்விப்பட்டேன். நான் அவரைச் சந்தித்து அவரோடு பேசவே இங்கு வந்தேன்" என்று கூறினார். எமது நாயகம், ஹஸ்ரத் அலி, "நீங்கள் உண்மையைக் கண்டுபிடித்து, புத்திசாலித்தனமான செயலைச் செய்துள்ளீர்கள். இப்போது நான் அந்த நபரிடம் செல்கிறேன். என்னைப் பின்தொடர்ந்து, நான் நுழையும் வீட்டிற்குள் நுழையுங்கள். உங்களுக்குத் தீங்கு விளைவிக்கும் ஒரு நபர் சாலையில் இருக்கிறார் என்பதை நான் புரிந்து கொண்டால், நான் என் காலணிகளைச் செம்மைப்படுத்துவது போல நடிப்பேன். பிறகு நீங்கள் எனக்காகக் காத்திருக்காமல் என்னைக் கடந்து செல்ல வேண்டும்" என்று அபூதர்ரிடம் சொன்னார்.

அபூதர் கிஃபாரி ஹஸ்ரத் அலியைப் பின்தொடர்ந்தார். இறுதியாக, நம்முடைய நபியின் அருள்மிகு முகத்தைப் பார்த்து அவர் கௌரவிக்கப்பட்டார். அத்துடன், அவர் நபியவர்களுக்கு, "அஸ்ஸலாமு அலைக்கும்" என்று கூறி வாழ்த்தினார். இந்த வாழ்த்துதான் இஸ்லாத்தில் முதல் ஸலாமாகும். அபூதர் கிஃபாரிதான் ஸலாம் சொன்ன முதல் நபராவார். எங்கள் நாயகம், நபியவர்கள் ஸலாமுக்குப் பதிலளித்தார்கள்; "அல்லாஹு தஆலாவின் கருணை உங்கள் மீது இருக்கட்டும்" என்று கூறினார்கள். நபியவர்கள் அவரிடம், “நீங்கள் யார்?” என்று கேட்டார்கள். அதற்கவர், "நான் கிஃபார் கோத்திரத்தைச் சேர்ந்தவன்" என்றார். நமது நபி, “எவ்வளவு காலமாக இங்கு இருக்கின்றீர்கள்?” என்று கேட்டார்கள். அவர், "நான் மூன்று பகல்களும் மூன்று இரவுகளும் இங்கே இருக்கிறேன்." என்று பதிலளித்தார். "உமக்கு யார் உணவளித்தது?" என்று கேட்கப்பட்ட போது, “ஸம்ஸமைத் தவிர வேறு எந்த உணவையும் பானத்தையும் என்னால் பெற்றுக் கொள்ள முடியவில்லை. நான் ஸம்ஸம் அருந்திய வரை, எனக்கு தாகமோ பசியோ ஏற்படவில்லை." என்றார். நபியவர்கள், "ஸம்ஸம் மிகவும் பாக்கியம் மிக்கது. அது பசியுள்ளவர்களைத் திருப்திப்படுத்துகிறது." என்று கூறினார்கள். அப்போது அபூதர் கிஃபாரி எங்கள் நபியவர்களிடம், “இஸ்லாத்தைப் பற்றி எனக்குக் கூறுங்கள்” என்றார். அவருக்கு நமது நபியவர்கள் கலிமா அஷ்ஷஹாதாவை ஓதிக் காட்டினார்கள். அவர் அதனை மீட்டிக் கூறியதுடன், இஸ்லாத்தின் மூலம் அவர் கௌரவிக்கப்பட்டார். அத்துடன் அவர் முதல் முஸ்லிம்களில் ஒருவரானார்.9

முஸ்லிமாக மாறிய பின் ஹஸ்ரத் அபூதர் கிஃபாரி நபியவர்களிடம், "யா ரஸூலல்லாஹ்! உங்களை உண்மையான நபியாக அனுப்பிய ஜனாப் அல்-ஹக் மீது சத்தியம் செய்கிறேன், இதை நான் இணைவைப்பாளர்கள் மத்தியில் வெளிப்படையாக அறிவிப்பேன்." என்றார். அவர் கஃபாவிடம் சென்று உரத்த குரலில், “குறைஷ் சமூகமே! 'அஷ்-ஹது அன் லா இலாஹ இல்லல்லாஹ் வ அஷ்-ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரஸூலுஹ் (அல்லாஹு தஆலாவைத் தவிர வேறு கடவுள் இல்லை என்று நான் சாட்சி கூறுகிறேன். மேலும் முஹம்மத் அலைஹிஸ்ஸலாம் அவனுடைய அடியாரும் ரஸூலும் ஆவார்)'' என்று பிரகடனப்படுத்தினார். இதைக் கேட்டதும், பலதெய்வவாதிகள் உடனடியாக அவரைத் தாக்கினர். கற்கள், கட்டைகள் மற்றும் எலும்புத் துண்டுகளால் அவரை அடித்து, ரத்தம் கொட்டச் செய்தனர். இந்த நிலையைக் கண்ட ஹஸ்ரத் அப்பாஸ், “இவரை விடுங்கள், நீங்கள் இவரைக் கொன்றுவிடுவீர்கள்! அவர் உங்கள் வணிகக் கூட்டம் செல்லும் பாதையில் அமைந்துள்ள ஒரு கோத்திரத்தைச் சேர்ந்தவர். மீண்டும் அப்பகுதியால் எப்படி செல்லப் போகிறீர்கள்?" என்று கூறி, அவர் ஹஸ்ரத் அபூதர்ரை பலதெய்வவாதிகளின் கையிலிருந்து காப்பாற்றினார். ஒரு முஸ்லிமாக மாறியதன் மூலம் கௌரவம் பெற்ற மகிழ்ச்சியில் அபூதர்ரால் அமைதியாக இருக்க முடியவில்லை. அடுத்த நாள், அவர் மீண்டும் கஃபாவின் அருகில் கலிமா அஷ்ஷஹாதாவை சப்தமாகச் சொன்னார். பலதெய்வவாதிகள் அவரை அடித்தனர். அவர் தரையில் விழுந்தார். மறுபடியும் ஹஸ்ரத் அப்பாஸ் வந்து அவரை அவர்களிடமிருந்து காப்பாற்றினார்.

"வல்லாஹி, அந்த நபர் சொல்வது உண்மைதான். அவரை நம்பாதவர்கள் பொய்யர்கள் மற்றும் வழிகேடர்கள்."
ஹஹ்ரத் உனைஸ் கிஃபாரி (ரழியல்லாஹு அன்ஹ்)

எங்கள் நாயகம் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஹஸ்ரத் அபூதர் கிஃபாரிக்கு தனது சொந்த ஊருக்குத் திரும்பி இஸ்லாத்தைப் பரப்பும்படி கட்டளையிட்டார்கள். இந்த உத்தரவின் பேரில், அவர் தனது கோத்திரத்திற்குத் திரும்பி, அல்லாஹு தஆலாவின் ஏகத்துவத்தைப் பற்றியும், முஹம்மத் அலைஹிஸ்ஸலாம் அல்லாஹ்வின் ரஸூல் என்றும் கூறினார். அவர் தெரிவித்தவை உண்மையானவை என்றும், அவர்கள் வணங்கும் சிலைகள் பொய்யானவை, போலியானவை மற்றும் அர்த்தமற்றவை என்றும் கூறினார். அவர் பேச்சைக் கேட்ட கூட்டத்திலிருந்த சிலர் எதிர்க்கத் தொடங்கினர். இதற்கிடையில், கோத்திரத்தின் தலைவரான ஹப்பாஃப், கூச்சலிட்டவர்களை அமைதிப்படுத்தி, "காத்திருங்கள், அவர் சொல்வதைக் கேட்டுப் பார்ப்போம்" என்றார். இந்நிலையில், ஹஸ்ரத் அபூதர் பின்வருமாறு தொடர்ந்தார்: “நான் முஸ்லிமாக மாறுவதற்கு முன்பு, நான் ஒரு நாள், நுஹாம் என்ற சிலையிடம் சென்று அதன் முன் சிறிது பால் வைத்தான். ஒரு நாய் அங்கு வந்து, அந்தப் பாலைக் குடித்துவிட்டு, சிலையை அழுக்காக்குவதை நான் பார்த்தேன். இதைத் தடுக்கும் சக்தி சிலைக்கு இல்லை என்பது எனக்கு நன்றாகப் புரிந்தது. நாய் கூட இழிவுபடுத்தும் சிலையை வணங்குவதை நீங்கள் எப்படி விரும்புகிறீர்கள்? இது பைத்தியக்காரத்தனம் இல்லையா? அதைத்தான் நீங்கள் வணங்குகிறீர்கள்” என்றார்.

அனைவரும் தலை குனிந்து நின்றனர். அவர்களில் ஒருவர், “அப்படியானால், நீங்கள் சொல்லும் நபி என்ன சொல்கிறார்? அவர் சொல்வது உண்மை என்பதை எப்படிப் புரிந்துகொண்டீர்கள்?” என்று கேட்டார். ஹஸ்ரத் அபூதர் உரத்த குரலில், “அல்லாஹு தஆலா ஒருவன் என்றும், அவனைத் தவிர வேறு கடவுள் இல்லை என்றும் அவர் கூறுகிறார். அல்லாஹ் தான் அனைத்தையும் படைத்தவன், அனைத்திற்கும் சொந்தக்காரன் என்று கூறுகிறார். தன்னை நம்பும்படி மக்களை அழைக்கிறார். அவர் அவர்களை நன்மை, நல்லொழுக்கம் மற்றும் ஒருவருக்கொருவர் உதவி செய்ய அழைக்கிறார். சிறுமிகளை உயிருடன் புதைப்பதன் தீமையையும், நீங்கள் செய்யும் மற்ற எல்லாத் தீய செயல்களின் அசிங்கத்தையும், அநீதி மற்றும் கொடுமையையும் அவர் வெளிப்படுத்துகிறார். அத்துடன் அவற்றைத் தவிர்ந்து கொள்ளுமாறு அவர் எடுத்துரைக்கிறார்” என்று விவரித்ததுடன், இஸ்லாத்தை விரிவாக விளக்கினார். அவர் தனது இனத்தின் அனைத்துத் தவறான வழிகளையும் கூறினார். பின்னர், இந்தத் தவறுகளின் தீங்கு மற்றும் அசிங்கத்தை விவரித்தார். கோத்திரத்தின் தலைவர் ஹப்பாஃப் மற்றும் அவரது சொந்த சகோதரர் உனைஸ் உட்பட பார்வையாளர்களில் பலர் முஸ்லிம்களாக மாறினர்.10

கஃபாவில் குர்ஆன் அல் கரீமை வெளிப்படையாக ஓதுதல்

ஒரு நாள், அஸ்ஹாப் அல்-கிராம் ஓர் ஒதுக்குப்புறமான இடத்தில் கூடியிருந்தனர். அவர்கள், “வல்லாஹி, ரஸூலுல்லாஹ்வைத் தவிர வேறு யாராலும் குறைஷி முஷ்ரிக்குகளை குர்ஆன் அல்கரீமை வெளிப்படையாகக் கேட்கச் செய்ய முடியாது. குர்ஆன் அல்-கரீமை வெளிப்படையாக ஓதி அவர்களைக் கேட்க வைப்பவர்கள் யாராவது இருக்கிறார்களா?” என்று பேசிக் கொண்டிருந்தார்கள். ஹஸ்ரத் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் அவர்களும் அங்கு இருந்தார்கள். அவர், "நான் அவர்களைக் கேட்கச் செய்வேன்!" என்றார். அஸ்ஹாப்களில் சிலர், “அப்துல்லாஹ்! பல தெய்வ வழிபாடு செய்பவர்கள் உங்களுக்குத் தீங்கு செய்வார்கள் என்று நாங்கள் அஞ்சுகிறோம். தேவைப்படும்போது பலதெய்வவாதிகளிடமிருந்து அவரைப் பாதுகாக்கும் ஒரு கோத்திரத்தைச் சேர்ந்த, மக்களைக் கொண்ட ஒரு நபரை நாங்கள் விரும்புகிறோம்." என்றனர். அவர், “என்னைப் போக அனுமதியுங்கள். ஜனாப் அல்-ஹக் என்னைப் பாதுகாப்பான்" என்றார்.

மறுநாள் நண்பகலுக்கு முன், அவர் மகாம் அல்-இப்ராஹீமுக்கு வந்தார். பலதெய்வவாதிகள் அங்கு கூடியிருந்தனர். இப்னு மஸ்ஊத் நின்றவாறு, பஸ்மலா அஷ்ஷரீஃபை மொழிந்து, ஸூரா அர்-ரஹ்மானை ஓத ஆரம்பித்தார். பலதெய்வவாதிகள் ஒருவரையொருவர், “உம்மு அப்தின் மகன் என்ன சொல்கிறான்? முஹம்மத் கொண்டு வந்த வார்த்தைகளை அவன் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும்” என்று கூறி அவரைத் தாக்கினார்கள். அவரை அடித்து, அறைந்து, உதைத்து, முகம் மற்றும் கண்களை கருமையாக்கி, அடையாளம் தெரியாதவாறு செய்தனர். இருப்பினும், அவர் அடிக்கப்படும்போதும் தொடர்ந்து ஓதினார். அவர் முகத்தில் காயங்களுடன் அஸ்ஹாப் அல்-கிராம்களிடம் திரும்பினார். இதனால் மிகவும் வருத்தமடைந்த அஸ்ஹாப் அல்-கிராம்கள், “உமக்கு இப்படி நடக்குமென்று நாங்கள் அஞ்சினோம். கடைசியில் நாங்கள் பயந்தபடியே நடந்தது.” என்றனர்.

இருப்பினும், அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் வருத்தப்படவில்லை. "அல்லாஹு தஆலாவின் எதிரிகளை இன்று போல் பலவீனமாக நான் பார்த்ததே இல்லை, நீங்கள் விரும்பினால், நாளை காலையும், நான் அவர்களைக் கேட்கச் செய்ய முடியும்" என்றார். அஸ்ஹாப் அல்-கிராம், “இல்லை, இதுவே உமக்குப் போதும். அந்த மூர்க்கமான காஃபிர்களுக்குப் பிடிக்காததை நீர் கேட்கச் செய்தீர்” என்றனர்.11

துஃபைல் இப்னு அம்ர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்

நமது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மக்காவில் இஸ்லாத்தைப் பகிரங்கமாக பரப்பத் தொடங்கிய ஆண்டுகளில், அவர் மக்களை இரவும் பகலும் இஸ்லாத்தின் பக்கம் அழைத்தார். நமது நாயகம் ரஸூலுல்லாஹ்வின் இந்த முயற்சிகளைத் தடுக்க மக்காவின் பல தெய்வ வழிபாட்டாளர்கள் முயன்றனர். 

அவர் சொன்னதை ஏற்றுக்கொண்டு நம்புபவர்களுக்கு எல்லாவிதமான பொய்களும் அவதூறுகளும் சித்திரவதைகளும் வழங்கப்படத் தகுந்தவை என்று அவர்கள் கருதினர். நம் நபியுடன் யாராவது பேசுவதைக் கண்டால் உடனே அவரிடம் சென்று அவர் சொல்வதைக் கேட்டு நம்பாமல் இருக்க எல்லாவிதமான சூழ்ச்சிகளையும் பொய்களையும் கூறினார்கள். மக்காவிற்கு வருபவர்கள் அவரை சந்திக்காமல் இருக்க தங்களால் முடிந்த அனைத்தையும் செய்தார்கள்.

முஸ்லிம்கள் துன்பத்திலிருந்த சூழலில், காஃபிர்களால் துன்புறுத்தப்பட்டபோதும், துஃபைல் இப்னு அம்ர் தவ்ஸி மக்காவிற்கு வந்தார். இதைக் கண்ட முஷ்ரிக்குகளின் தலைவர்கள் அவரிடம் சென்று, “துஃபைலே! எங்கள் ஊருக்கு வந்திருக்கிறீர்கள். நம்மிடையே தோன்றிய அப்துல்முத்தலிபின் அனாதைக்கு பல வியப்பூட்டும் நிலைகள் உண்டு. அவரது வார்த்தைகள் சூனியம் போன்றவை. அவற்றின் மூலம் தந்தையிடமிருந்து மகனையும், சகோதரனிடமிருந்து சகோதரனையும், கணவனை மனைவியிடமிருந்தும் பிரிக்கிறார்! அவர் தனது கருத்துக்களால் அமைதியைக் குழைக்கிறார். அவருடைய வார்த்தைகளைக் கேட்கும் மகன் தன் தந்தையின் பேச்சைக் கேட்பதில்லை; அவர் அவருக்குக் கீழ்ப்படிகிறார். இப்போது, யாரும் ஒருவரையொருவர் கேட்பதில்லை, மக்கள் முஸ்லிம்களாக மாறுகிறார்கள். எங்களுக்கு நேர்ந்த இந்தப் பிரிவினைக் கேடு உங்களுக்கும் உங்கள் மக்களுக்கும் வந்துவிடுமோ என்று அஞ்சுகிறோம். இது உங்களுக்கான எங்கள் அறிவுரையாக இருக்கட்டும்; அவரிடம் பேசாதீர்கள்! அவரிடம் ஒரு வார்த்தையும் சொல்லாதீர்கள், அவருடைய வார்த்தைகளைக் கேட்காதீர்கள். அவர் சொல்வதைக் கவனிக்காதீர்கள்! மிகவும் கவனமாக இருங்கள். அதிக நேரம் இங்கே இருக்க வேண்டாம். உடனே இங்கிருந்து கிளம்புங்கள்!” என்று கூறினார்கள். மீதமுள்ளவற்றை துஃபைல் இப்னு அம்ர் பின்வருமாறு கூறுகிறார்:

"நான் சத்தியம் செய்கிறேன், அவர்கள் இதைப் பல முறை கூறியிருக்கிறார்கள். நான் அவருடன் பேசக்கூடாது, அவருடைய வார்த்தைகளைக் கேட்கக்கூடாது என்று முடிவு செய்தேன். உண்மையில், நான் கஃபாவுக்குள் நுழையும் போது அவருடைய வார்த்தைகளைக் கேட்கலாம் என்று பயந்து என் காதுகளில் பருத்தியை அடைத்தேன். மறுநாள், காலையில், நான் கஃபாவுக்குச் சென்றேன். ரஸூல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அங்கு தொழுவதைப் பார்த்தேன். நான் அவர் அருகில் சென்றேன். ஜனாப் அல்-ஹக்கின் ஹிக்மத் (மறைக்கப்பட்ட தெய்வீகக் காரணம்) படி, அவர் ஓதியதில் சில என் காதை எட்டின. நான் கேட்ட வார்த்தைகள் அவ்வளவு அழகானவை. நான் என்னிடம் இவ்வாறு கூறிக்கொண்டேன்: "நான் நல்லதையும் தீயதையும் பிரித்தறிய முடியாத மனிதனல்ல. அத்துடன், நான் ஒரு கவிஞன். இவர் சொல்வதை நான் ஏன் கேட்கக் கூடாது? அவருடைய வார்த்தைகளை நான் நன்றாகக் கண்டால், நான் அவற்றை ஏற்றுக்கொள்வேன்; இல்லையென்றால், நான் அவர்களை விட்டுவிடுவேன்." தொடர்ந்து, ரஸூலுல்லாஹ் தொழுகையை நிறைவேற்றிவிட்டு அவருடைய வீட்டிற்குத் திரும்பும் வரை நான் ஓரிடத்தில் ஒளிந்துகொண்டு அங்கேயே காத்திருந்தேன்.

"எங்கள் நபிகள் நாயகம், "என் ரப்பே! தவ்ஸ் மக்களுக்கு நேரான வழியைக் காட்டுவாயாக, அவர்களை இஸ்லாமிய மார்க்கத்தின்பால் கொண்டு வருவாயாக!" என்று பிரார்த்தித்தார். அவர் என்னிடம், "உமது மக்களிடம் திரும்புங்கள்! புன்னகைத்த முகத்துடனும் இனிய வார்த்தைகளுடனும் அவர்களை இஸ்லாத்திற்கு அழைப்பதைத் தொடருங்கள்! அவர்களிடம் மென்மையாக இருங்கள்!'' என்று கூறினார்."
துஃபைல் இப்னு அம்ர் (ரழியல்லாஹு அன்ஹ்)

பிறகு நான் அவரைப் பின்தொடர்ந்தேன். அவர் வீட்டிற்குள் நுழைந்ததும் நானும் உள்ளே சென்று, 'முஹம்மதே (அலைஹிஸ்ஸலாம்)! நான் இந்த தேசத்திற்கு வந்தபோது, உங்கள் மக்கள் என்னிடம் இதையும் அதையும் சொன்னார்கள். நான் உங்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினர். பயத்தில், நான் உங்கள் வார்த்தைகளைக் கேட்காதபடி, பருத்தியால் என் காதுகளை அடைத்தேன். ஆனால், அல்லாஹு தஆலா நீங்கள் ஓதிய சிலவற்றை எனக்குக் கேட்கச் செய்தான். நான் அவற்றை மிகவும் அழகாகக் கண்டேன். இப்போது, நீங்கள் சொல்ல வேண்டியதைச் சொல்லுங்கள்! நான் ஏற்கத் தயாராக இருக்கிறேன்."என்று கூறினேன்.

எங்கள் நாயகம் ரஸூலுல்லாஹ் இஸ்லாத்தைப் பற்றி என்னிடம் கூறினார். சில குர்ஆன் அல்-கரீம் ஆயத்களை ஓதினார். நான் சத்தியம் செய்கிறேன், அதை விட அழகான வார்த்தைகளை நான் என் வாழ்நாளில் கேட்டதில்லை. உடனே, நான் கலிமா அஷ்ஷஹாதாவைச் சொல்லிவிட்டு முஸ்லிமாகிவிட்டேன்.

அந்த நேரத்தில் நான், "ரஸூலல்லாஹ்வே! நான் என் மக்கள் மத்தியில் செல்வாக்கு மிக்க, மரியாதைக்குரிய நபர். அவர்கள் யாரும் என்னை எதிர்ப்பதில்லை. நான் சென்று அவர்களை இஸ்லாமிய மார்க்கத்திற்கு அழைக்கிறேன். அல்லாஹு தஆலா எனக்கு ஓர் அடையாளத்தைக் கொடுப்பதற்காக துஆ செய்யுங்கள்! எனவே, நான் என் மக்களை இஸ்லாத்திற்கு அழைக்கும்போது அந்த அடையாளம் எனக்கு எளிதாகவும் உதவியாகவும் இருக்கும்!" என்றேன். எனது இந்த வேண்டுகோளின் பேரில், எமது நாயகம் ரஸூலுல்லாஹ் அவர்கள், "யா அல்லாஹ்! அவருக்கு ஓர் அத்தாட்சியை ஏற்படுத்துவாயாக!" என்று பிரார்த்தித்தார்கள்.

இதையடுத்து, நான் சொந்த ஊருக்குத் திரும்பினேன். ஓர் இருண்ட இரவில், என் கோத்திரம் வசிக்கும் மலைப்பகுதியை நோக்கிய மலையை நான் அடைந்தபோது, என் நெற்றியில் ஒரு தீபம் தோன்றி பிரகாசிக்கத் தொடங்கியது. அப்போது நான், 'யா அல்லாஹ்! இந்த ஒளியை என் நெற்றியிலிருந்து வேறு இடத்திற்கு மாற்றுவாயாக! நான் என் மார்க்கத்தை விட்டு விலகியதால் அல்லாஹ் இதை என் நெற்றியில் வைத்தான் என்று, இதனை தெய்வீகத் தண்டனையாக தவ்ஸ் கோத்திரத்தைச் சேர்ந்த அறிவிலிகள் கருதி விடுவார்கள்." என்று பிரார்த்தனை செய்தேன். அந்த ஒளி உடனே என் கையிலிருந்த சாட்டையின் நுனியில் வந்து விளக்கு போலத் தொங்கியது. நான் என் கோத்திரத்தவர்களின் தாயகத்தை நெருங்கி சரிவில் இறங்கத் தொடங்கியபோது, அங்கிருந்தவர்கள் என் சாட்டையின் நுனியில் ஒரு விளக்கு போல் ஒளிரும் ஒளியை ஒருவருக்கொருவர் காட்டிக் கொண்டனர். இந்த நிலையில், சரிவில் இறங்கி எனது வீட்டிற்கு வந்தேன். முதலில் எனது தந்தை வந்து என்னைப் பார்த்தார். என் மீதுள்ள அன்பினால் என்னை கட்டியணைத்துக் கொண்டார். என் தந்தை மிகவும் வயதானவர்.

நான் அவரிடம், "என் தந்தையே! நீங்கள் இப்போது இருக்கும் நிலையில் இருந்தால், நான் உங்களைச் சேர்ந்தவனல்ல, நீங்களும் என்னைச் சேர்ந்தவரல்ல!" என்று கூறினேன். இதைக் கேட்ட என் தந்தை வியந்து, "என்ன காரணம், மகனே?" என்று கேட்டார். அவருக்குப் பதிலளிக்கும் விதமாக, "நான் முஹம்மத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மார்க்கத்தைத் தழுவி ஒரு முஸ்லிமாக ஆனேன்" என்று கூறினேன்.

அதற்கு என் தந்தை, 'என் மகனே, நீ தழுவிய மார்க்கத்தை நானும் தழுவுகிறேன். உங்கள் மதமும் என் மதமாக இருக்கட்டும்!" என்று கூறி, கலிமா அஷ்ஷஹாதாவைச் சொல்லி முஸ்லிமானார். அதன் பிறகு, இஸ்லாத்தைப் பற்றி எனக்குத் தெரிந்ததை அவருக்குக் கற்றுக் கொடுத்தேன். பிறகு அவர், துவைத்து சுத்தமான ஆடைகளை அணிந்தார். பின்னர், என் மனைவி என்னிடம் வந்தாள். அவளிடமும் அதே விஷயங்களைச் சொன்னேன். அவளும் அவற்றை ஏற்றுக்கொண்டு முஸ்லிமானாள்.

காலையில், நான் தவ்ஸ் கோத்திரத்தவர்களிடம் சென்றேன். நான் இஸ்லாத்தை விளக்கி அவர்கள் அனைவரையும் அதற்கு அழைத்தேன். ஆனால் அவர்கள் ஏற்றுக் கொள்வதில் தாமதம் செய்தார்கள். நீண்ட நாட்களாக எதிர்த்தார்கள். அவர்கள் தங்கள் பாவ மற்றும் தீய செயல்களை விட்டுவிடவில்லை. மேலும் அவர்கள் என்னைப் போலவே நடித்து, பேசிக்காட்டி என்னைக் கேலி செய்தனர். அவர்கள் வட்டி வசூலிப்பதிலும், சூதாட்டத்திலும் இருந்ததால், அவர்கள் என் பேச்சைக் கேட்கவில்லை. அவர்கள் இஸ்லாத்தைப் பின்பற்றுவதைத் தவிர்த்தனர். அவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனது நபிக்கும் எதிராகக் கலகம் செய்தனர்.

சிறிது காலத்திற்குப் பிறகு, நான் மக்காவுக்கு வந்து ரஸூலுல்லாஹ்விடம் என் மக்களைப் பற்றி முறையிட்டேன்; நான், "யா ரஸூலல்லாஹ்! தவ்ஸ் கோத்திரத்தவர்கள் அல்லாஹு தஆலாவுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்துள்ளனர். இஸ்லாத்தைத் தழுவுவதற்கான எனது அழைப்பை அவர்கள் ஏற்கவில்லை. அவர்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்!" என்றேன். அனைவரின் மீதும் மிகுந்த இரக்கமும் கருணையும் கொண்டிருந்த நம் அன்புத் தூதர், தம் கைகளை உயர்த்தி, கஃபாவை நோக்கித் திரும்பி, 'என் ரப்பே! தவ்ஸ் மக்களுக்கு நேர் வழியைக் காட்டுவாயாக, அவர்களை இஸ்லாமிய மார்க்கத்தின் பக்கம் கொண்டு வருவாயாக!" என்று பிரார்த்தனை செய்தார். பிறகு அவர் என்னிடம், "உமது மக்களிடம் திரும்புங்கள்! புன்னகைத்த முகத்துடனும் இனிய வார்த்தைகளுடனும் அவர்களை இஸ்லாத்தின் பக்கம் அழைப்பதைத் தொடருங்கள்! அவர்களிடம் கனிவாக இருங்கள்!" என்று கூறினார்கள். உடனே நான் சொந்த ஊருக்குப் போனேன். நான் தவ்ஸ் மக்களை இஸ்லாத்திற்கு அழைப்பதை நிறுத்தவே இல்லை.”12

விழாக்களில் அழைப்பு விடுத்தல்

ஒவ்வொரு வருடமும், பல்வேறு நகரங்களில் இருந்து மக்கள் குறிப்பிட்ட நாட்களில் கஃபா அல்முஅஸ்ஸாமாவை தரிசிக்க மக்காவிற்கு வருவார்கள். எமது தலைவர் ரஸூல் அல்-அக்ரம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், வருபவர்களை வரவேற்று ஒவ்வொரு குழுவிற்கும் இஸ்லாத்தைப் பற்றிக் கூறுவார்கள். அல்லாஹு தஆலா ஒருவனே என்றும், அவர் ஒரு உண்மையான நபி என்றும், இரட்சிப்பு இந்தப் பாதையில்தான் உள்ளது என்றும் அவர்களுக்குத் தெரிவிப்பார்.

ஒரு நாள், வலீத் இப்னு முஃகீரா இணைவைப்பாளர்களைக் கூட்டிச் சென்று, “குறைஷ் மக்களே! மீண்டும் கஃபாவை தரிசிக்கும் பருவம் வந்துவிட்டது. முஹம்மதின் குரல் உலகம் முழுவதும் பரவுகிறது. அரபுக் கோத்திரங்கள் அவரிடம் வருகிறார்கள்; அவர்களின் இதயங்கள் அவரது இனிமையான வார்த்தைகளால் வெப்பமடைகின்றன. மேலும் அவர்கள் அவருடைய மதத்தை ஏற்றுக்கொள்கிறார்கள். நாம் ஒரு தடுப்பு நடவடிக்கையைக் கண்டுபிடிக்க வேண்டும். அவரைப் பற்றி பலவிதமாகச் சொல்லி ஒருவருக்கொருவர் முரண்படாமல் இருக்க நாம் ஒரு விஷயத்தில் உடன்படுவோம்." என்று சொன்னான்.

குறைஷிகள், “அப்துஸ் ஷம்ஸின் தந்தையே! நீங்கள் எங்களில் மிகவும் தொலைநோக்குடையவர். நீங்கள் எதைப் பொருத்தமாகப் பார்க்கிறீர்களோ அதை நாங்கள் அவர்களுக்குச் சொல்வோம்" என்று கூறினார்கள்.

அதற்கு வலீத், “இல்லை, நீங்கள் சொல்லுங்கள், நான் கேட்கிறேன்” என்று பதிலளித்தபோது, அவர்கள், “அவர் ஒரு சோதிடர் என்று சொல்வோம்” என்றார்கள். வலீத் உடனே ஆட்சேபித்து, “இல்லை! அவர் ஒரு சோதிடர் அல்ல என்று நான் சத்தியம் செய்கிறேன். எத்தனையோ சோதிடர்களைப் பார்த்திருக்கிறோம். உண்மையையும் பொய்யையும் தயக்கமின்றி சொல்கிறார்கள். முஹம்மதின் பாராயணங்கள், சோதிடர்கள் உருவாக்கும் விஷயங்களைப் போல் இல்லை. அத்துடன், இதுவரை முஹம்மதிடம் இருந்து ஒரு பொய்யையும் நாங்கள் கேட்டதில்லை. அப்படிச் சொன்னால் எம்மை யாரும் நம்ப மாட்டார்கள்." என்று கூறினான்.

இம்முறை அவர்கள், “அவன் பைத்தியக்காரன் என்று சொல்லலாம்” என்றார்கள். வலீத் மீண்டும் எதிர்த்தான். அவன், “இல்லை! அவர் பைத்தியமோ மனநோயாளியோ இல்லை என்று சத்தியம் செய்கிறேன். நாம் பைத்தியக்காரனை அறிவோம், பைத்தியக்காரத்தனத்தின் அறிகுறிகளைப் புரிந்துகொள்கிறோம். அவர் மூச்சுத் திணறவோ, நடுங்கவோ, அபத்தமாகப் பயப்படவோ இல்லை. அப்படிச் சொன்னால் அவர்கள் நம்மை மறுத்துவிடுவார்கள்” என்று சொன்னான்.

குறைஷிகள், "அவர் ஒரு கவிஞர் என்று சொல்லலாம்" என்றார்கள். வலீத் மீண்டும் எதிர்த்தான். “அவரும் ஒரு கவிஞர் அல்ல! எல்லா வகையான கவிதைகளையும் நாம் நன்கு அறிவோம். அவர் சொல்வது எந்த வகையான கவிதைகளையும் போல இல்லை." என்றான்.

இம்முறை, “அவர் ஒரு சூனியக்காரர் என்று சொல்லலாம்” என்றார்கள். வலீத், “அவர் சூனியக்காரர் அல்ல. சூனியக்காரர்களையும் அவர்களின் சூனியத்தையும் நாம் பார்த்திருக்கிறோம்; அவர்களை எங்களுக்கு நான்கு தெரியும். அவரது வார்த்தைகளில் சூனியம் இல்லை. முஹம்மதின் வார்த்தைகள் உலகம் முழுவதையும் வென்றுள்ளன. அவர் ஒரு அறியப்படாத நபரல்ல. நாம் மக்களை அவரிடமிருந்து விலக்கி, அவருடன் பேசவிடாமல் தடுக்க முடியாது. பேச்சாற்றலிலும், சரளத்திலும், அழகும் பொருளும் கொண்டு பேசுவதிலும் அவர் மற்றவர்களை விட உயர்ந்தவர்." என்று விவரித்தான்.

குறைஷிகள் வேறு எதுவும் சொல்ல முடியாதபோது, “நீங்கள் எங்களில் மூத்தவர், அனுபவம் வாய்ந்தவர், நீங்கள் சொல்வதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்” என்று வலீதிடம் கூறினார்கள்.

இதனைத் தொடர்ந்து, வலீத் இப்னு முஃகீரா சிறிது நேரம் யோசித்தான். பின்னர் அவன் தன்னைச் சுற்றியுள்ளவர்களைத் தூண்டிவிட்டு, “மீண்டும், அவரை மந்திரவாதி என்றும் சூனியக்காரர் என்றும் அழைப்பதே சிறந்தது; இது மிகவும் நியாயமான தேர்வாகும். ஏனென்றால், அவருடைய வார்த்தைகளால், அவர் மக்களை அவர்களின் கோத்திரத்தினரை விட்டும் உறவினர்களிடமிருந்தும் பிரிக்கிறார். அவர் சகோதரனை சகோதரனிடமிருந்தும் நண்பர்களை ஒருவரிடமிருந்தும் அந்நியப்படுத்துகிறார்." என்று கூறினான்.

“இல்லை, நான் போய் மீண்டும் ஓதுகிறேன். பலதெய்வவாதிகளை இன்று போல் பலவீனமாக நான் பார்த்ததில்லை. அவர்களின் இந்த பலவீனம் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்கள் எனக்கு செய்யும் வேதனைகளால் நான் வலியை உணரவில்லை."
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழியல்லாஹு அன்ஹ்)

குறைஷிகள் உடனே கலைந்து சென்று மக்காவில் இருந்தவர்களிடம், “முஹம்மத் ஒரு சூனியக்காரர்!” என்று கூறினார்கள். அதை மக்களிடையே பரப்பினார்கள். கோத்திரங்களைச் சேர்ந்தோர் கஃபாவைத் தரிசிக்க வரத் தொடங்கியபோது, எமது நபிகள் நாயகத்துடன் பேசக்கூடாது என்று எச்சரிக்கப்படாதவர்கள் யாரும் இருக்கவில்லை.

இணைவைப்பாளர்களின் இத்தகைய செயல்களால், அனைத்து அரபு தேசத்தைச் சேர்ந்த மக்களும் இஸ்லாத்தின் மீது ஆர்வம் காட்டத் தொடங்கினர். மேலும் அவர்களின் மனதில் சிலைகள் பற்றிய சந்தேகங்களும் கேள்விகளும் எழுந்தன.

அல்லாஹு தஆலா காஃபிர் வலீத் இப்னு முகீஃராவை கசப்பான வேதனையைச் சுவைக்கச் செய்வேன் என்று ஆயத் அல் கரீமாக்களை இறக்கியருளினான். உண்மையில், அல்லாஹு தஆலா ஸூரா அல்-முத்தஸ்ஸிரின் 11-29 ஆவது ஆயத் அல்-கரீமாக்களில், மஆலின்படி, இவ்வாறு கூறுகிறான்: "(என் ரஸூலே!) நான் தனியாக (செல்வமின்றி) படைத்த நபரை (வலீத் இப்னு முகீஃராவைப் போன்ற ஒரு நம்பிக்கையற்றவனை) என்னிடம் விட்டுவிடுங்கள். அந்த நம்பிக்கையற்றவனுக்கு நான் தகுந்த தண்டனையைக் கொடுப்பேன்! நான் அவனுக்கு ஏராளமான செல்வங்களைக் கொடுத்தேன் (எதுவும் இல்லாத அந்த நன்றிகெட்டவனுக்கு, பலவகைப் பழத்தோட்டங்கள், திராட்சைத் தோட்டங்கள் மற்றும் பொருட்களைக் கொடுத்து, பின்னர் பல நலவுகளை அடையச் செய்தேன்.) நான் அவனுக்கு (வலிமை வாய்ந்த எந்தத் தாக்குதலையும் உடனடியாகத் தடுக்கும் ஆற்றலுள்ள) பிள்ளைகளைக் கொடுத்தேன். அவர்கள் அவனைக் கண்காணித்து, அவனுக்குப் பக்கத்தில் எப்போதும் தயாராக இருப்பவர்கள். அவனுக்கு நான் (எல்லாவற்றையும்) எளிதாக்கிக் கொடுத்தேன். (அவன் மக்காவில் உயர் அந்தஸ்தை அடைந்தான். அவனுக்கு ரைஹானத் அல்-அரப் என்ற புனைப்பெயர் இருந்தது.) நிச்சயமாக அவன் தம் சமூகத்தாரிடம் கண்ணியமானவனாக இருந்து வந்தான். பின்னரும், நாம் அவனுக்கு (மறுமையில்) அதிகமாகக் கொடுப்போம் என்று அவன் ஆசைப்படுகிறான். இல்லை! அவனது ஆசைகள் இறுதி வரை வழங்கப்பட மாட்டாது! (அல்லாஹ்வை மறுப்போரின், பேராசை கொண்டோரின் ஆசை நிறைவேறாது; அவர்களுடைய பொருள்களும், பிள்ளைகளும் பெருகாது.) நிச்சயமாக அவன் நம் (ஆயத்களை) அத்தாட்சிகளை நம்பாமல் பிடிவாதமாக இருக்கிறான். நிச்சயமாக நான் ஜஹன்னத்தில் உள்ள அந்த வழுக்கும் பாறையில் அவனை கடுமையாகத் தள்ளுவேன்! (ஜஹன்னத்தின் கடுமையான மற்றும் வலிமிகுந்த வேதனையில் நான் அவனைத் தகுந்தவாறு தண்டிப்பேன்) மற்றும் நான் அவனை சிரமத்திலும் கஷ்டத்திலும் ஆழ்த்துவேன்! (ஒரு நாள், எமது நபிகள் நாயகம் கஃபாவில் குர்ஆன் அல்-கரீமை சப்தமாக ஓதிக் கொண்டிருந்தார். அப்போது வலீத் இப்னு முகீஃராவை ஆயத்துல்-கரீமாக்கள் ஆழமாகப் பாதித்தன. அவன் குறைஷிகளிடம் சென்று, "நான் அந்த வார்த்தைகளைக் கேட்டேன். முஹம்மத் சொன்னது ஒரு மனிதனின் அல்லது ஜின்களின் வார்த்தைகளாக இருக்க முடியாது. அவை கவிதையோ அல்லது ஒரு சோதிடரின் வார்த்தைகளோ அல்ல. அவர் பொய் சொல்லவில்லை. நான் பல சுருக்கமான வார்த்தைகளைக் கேட்டிருக்கிறேன். அவை நான் கேள்விப்பட்ட எதையும் போலில்லை. அவர் பொய் சொல்வதை நீங்கள் எப்போதாவது கேட்டிருக்கிறீர்களா?" என்று கேட்டான். குறைஷிகள் மிகவும் கவலையடைந்து, 'ஐயோ! இந்த புத்திசாலியையும், இந்தப் பணக்கார, செல்வாக்கு மிக்க மனிதனையும் நாம் இழந்துவிட்டோம்! முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வார்த்தைகள் இவரையும் பாதித்து விட்டன." என்று கூறினார்கள். உடனே அபூஜஹ்லை அவரிடம் அனுப்பினார்கள். அபூஜஹ்ல் வந்து, "என்ன இவ்வளவு துக்கமாகவும் சோகமாகவும் இருக்கிறீர்? முஹம்மதின் மந்திரம் உம்மையும் தொட்டதா; அவருடைய செல்வங்களும் சொத்துக்களும் உங்களைப் பாதித்ததா? நாம் ஒரு முடிவு எடுத்தோம். நீங்கள் செல்வங்களுக்கும் சொத்துக்களுக்கும் ஆசைப்பட்டால், நீங்கள் விரும்பும் அளவுக்கு செல்வங்களையும் சொத்துக்களையும் உங்களுக்கு வழங்குவோம். இந்தத் தவறான பாதையில் செல்ல வேண்டாம்." என்று கூறினான். வலீத் இப்னு முகீஃரா, "நான் குறைஷிகளில் மிகப் பெரிய பணக்காரன். நீ எப்படி எனக்கு இப்படி ஒரு விஷயத்தை வழங்க முடியும்!" என்று வினவினான். அதற்கு அபூஜஹ்ல், "சரி! "அவர் ஓதிக் காண்பித்த குர்ஆனைப் பற்றி நீங்கள் ஏன் புகழ்ந்து பேசினீர்கள்?" என்று கேட்டான். (அதன்பிறகு, அந்த மறுப்பாளர், அவன் ரஸூலுல்லாஹ்விடம் கேட்ட குர்ஆன் அல்கரீமைத் தாக்குவதற்காக) சில விஷயங்களைத் தனது மனதில் கற்பனை செய்து (சதி செய்து) பின்னர், அவன் (அதன் முடிவை) திட்டமாக நிர்ணயித்தான். (அவன்) முந்தைய விஷயங்களை நிராகரிக்கும் ஒரு சாத்தியமில்லாத மதிப்பீட்டை முன்வைத்தான். பின்னரும், (அவன்) அழியட்டும்; அவன் (இதை) எவ்விதமாக திட்டமிட்டுள்ளான்! பின்னர், அவன் (அபூ ஜஹ்லைப்) பார்த்தான். அவன் முகத்தைச் சிமிட்டி, முகத்தைச் சுருக்கிக் கொண்டான். "இது முன்னோர்களிடமிருந்து வந்த சூனியமேயன்றி வேறில்லை. இது வெறும் மனிதனின் சொல்லே அன்றி வேறில்லை!" என்று அவன் கூறி, புறக்கணித்துப் பெருமையடித்தான். (எனினும், குர்ஆன் அல்-கரீம் ஒரு அற்புதமான வார்த்தை என்றும், மனிதர்கள் மற்றும் ஜின்களின் வார்த்தைகளுக்கும் அதற்கும் எந்த ஒற்றுமையும் இல்லை என்றும் அந்த நபர் முன்பு தனது மக்களிடையே ஒப்புக்கொண்டான். பின்னர் அந்த மறுப்பாளன் தனது மக்களைத் திருப்திப்படுத்த தனது வார்த்தைகளை மாற்றி, குர்ஆனை அவதூறாகப் பேசினான். அதனால் அவன் தன்னை இறை தண்டனைக்குத் தகுதியானவனாக ஆக்கிக் கொண்டான்). நான் அவனை ஜஹன்னமில் (ஸகரில்) போடுவேன். ஸகர் என்றால் என்ன தெரியுமா? (கடுமையான நெருப்பு என்றால் என்னவென்று உங்களுக்கு எப்படித் தெரியும்? அதன் குணாதிசயங்கள் பற்றி உங்களுக்குத் தெரியுமா?) அது வெளியாவதோ, வெளியேற்றுவதோ இல்லை! (அதாவது, அது ஒரு மனிதனைக் கொல்லாது, அதேநேரம் வாழவும் விடாது! உள்ளே நுழைபவர்களை வெளியே விடாது, துன்புறுத்துவதை நிறுத்தாது.) அது மனிதனின் அனைத்துத் தோல்களையும் உரித்து (எரித்து கருப்பாக்கி) எலும்புகளை வெளிப்படுத்தக் கூடியது."

பலதெய்வவாதிகள் குர்ஆன் அல்-கரீமை செவிமடுத்தல்

பலதெய்வவாதிகளின் முக்கியஸ்தர்கள் பல்வேறு தந்திரங்கள் மற்றும் கொடுமைகளால் மக்கள் இஸ்லாத்தைத் தழுவுவதைத் தடுத்தனர். முஹம்மத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஓதிய ஆயத் அல் கரீமாக்களைக் கேட்க மக்கா மக்களுக்குத் தடை விதித்தனர். இருப்பினும், அவர்களே இரவு நேரத்தில் நமது அன்பு நபிகள் நாயகம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வீட்டின் அருகே ரகசியமாக வந்து ஒரு மூலையில் ஒளிந்துகொண்டு அதனைக் கேட்பார்கள். விடியற்காலை வந்ததும், வானம் ஒளிர்ந்ததும், பலதெய்வவாதிகளின் முக்கியஸ்தர்கள், அவர்கள் இரவில் ஒருவரையொருவர் அறியாமல், குர்ஆன் அல்-கரீமைக் கேட்க வந்ததைக் கண்டு, ஒருவரையொருவர் நிந்தித்து, “நாம் இனிமேல் இப்படிச் செய்யாதிருப்போம்." என்று கூறிக் கொள்வார்கள். ஆனாலும், மறுநாள் இரவு, ஒருவருக்கொருவர் தெரிவிக்காமல் மீண்டும் சென்று, ஒரு மூலையில் ஒளிந்துகொண்டு கேட்பார்கள். காலையில், அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து ஆச்சரியப்படுவார்கள். பின்னர், அவர்கள் பிரிந்து சென்று விடுவார்கள், இனி ஒருபோதும் அவ்வாறு செய்யக்கூடாது என்று அவர்கள் சத்தியம் செய்தார்கள். ஆனால் அவர்களால் தங்கள் வார்த்தைகளைக் காப்பாற்ற முடியவில்லை. இருப்பினும், அவர்களின் நஃப்ஸைப் பின்பற்றி, பெருமையுடன் செயற்பட்டார்கள். மற்ற பல பலதெய்வவாதிகள் தங்களைக் கண்டிப்பார்கள் என்று பயந்து, மேலும் பல வீண் எண்ணங்களால், அவர்கள் இறைநம்பிக்கையாளர்களாக மாறவில்லை. அத்துடன் அவர்கள் மற்றவர்களையும் தடுத்தனர். மேலும், “முஹம்மத் ஒரு சூனியக்காரர்” என்று தெருக்களில் கூச்சலிட்டனர்.

ஒரு மதியம், பலதெய்வவாதிகள் கஃபாவைச் சுற்றிக் கூடி, “முஹம்மதை அழைத்து இந்த விஷயத்தைப் பற்றி விவாதிப்போம்! அதனால், இறுதியில், மக்கள் எங்களைக் கண்டிக்க மாட்டார்கள். அவர்கள் எங்களை மன்னிப்பார்கள்." என்று கதைத்துக் கொண்டனர். அவர்கள் எமது நாயகம் ரஸூலுல்லாஹ் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு ஒரு செய்தி அனுப்பினார்கள். இந்த அழைப்பின் பேரில், எமது நபிகள் நாயகம் கஃபாவிற்கு வந்து, பல தெய்வீகவாதிகளின் எதிரே அமர்ந்தார்.

“கொடூரமான, கடின இதயம் கொண்ட அறிவற்றவர்கள் உங்களை நம்ப மாட்டார்கள். அவர்கள் பெரும்பாலும் முனாஃபிக்கள் ஆவர்.”
தவ்பா: 98

பலதெய்வவாதிகள், “முஹம்மதே! உம்முடன் ஓர் உடன்படிக்கைக்கு வர உம்மை நாம் இங்கு அழைத்தோம். அரேபியர்களில் உம்மைப் போன்று தன் மக்களுக்குத் தொல்லை விளைவித்தவர் இல்லை என்று சத்தியம் செய்கிறோம்! நீர் எங்கள் மதத்தை கண்டித்தீர்! எங்கள் தெய்வங்களை அவமதித்தீர்! எங்கள் நம்பிக்கையை நீர் பாராட்டவில்லை! எங்கள் ஒற்றுமையைப் பிரித்து எங்களை ஒருவருக்கு ஒருவர் எதிர்த்துக் கொள்ளும்படி செய்தீர்! நீர் எங்களுக்கு செய்யாத தீமையே இல்லை! உம்முடைய இந்த செயல்களாலும், வார்த்தைகளாலும் நீர் பணக்காரராக மாற விரும்பினால், நீர் விரும்புவதை விட அதிகமான செல்வங்களை சேகரிப்போம். நீர் புகழும் மரியாதையும் பெற விரும்பினால், உம்மை நாம் தலைவராக ஏற்றுக்கொள்வோம். நீர் ஆட்சியாளராக விரும்பினால், உம்மை எமது ஆட்சியாளர் என்று அறிவித்து உம்மைச் சுற்றி ஒன்று திரள்வோம். நீர் ஏதோவொன்றின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்தால், அதிலிருந்து உம்மைக் காப்பாற்றுவோம். இது ஜின்களால் ஏற்படும் நோயாக இருந்தால், அதன் சிகிச்சைக்காக நாம் நமது செல்வம் முழுவதையும் செலவழிப்போம்!” என்று பேரம் பேசினார்கள்.

அவர்கள் சொல்வதை பொறுமையாகக் கேட்டபின், உலகத்தின் தலைவர் இந்த அருமையான பதிலைக் கூறினார்: “ஓ குறைஷி சமுதாயமே! நீங்கள் சொன்ன விஷயங்கள் எதுவும் என்னிடம் இல்லை. நான் உங்களிடம் கொண்டு வந்த பொருட்களைக் கொண்டு, உங்கள் பொருட்களைக் கேட்கவோ, உங்கள் மத்தியில் புகழையும் மதிப்பையும் பெறவோ, உங்கள் ஆட்சியாளராக இருக்கவோ விரும்பவில்லை. எனினும், அல்லாஹு தஆலா என்னை உங்களிடம் நபியாக அனுப்பி, எனக்கு ஒரு வேதத்தை இறக்கி வைத்தான். உங்களுக்கு (ஏற்றுக்கொள்பவருக்கு) நன்மாராயங் கூறுபவனாகவும், (ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு ஜஹன்னமைப் பற்றி) அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனாகவும் நான் இருக்கின்றேன். எனது ரப்பின் இந்தக் கட்டளையை நான் உங்களுக்குத் தெரிவித்து, உங்களுக்கு அறிவுரை வழங்கினேன். நான் கொண்டு வந்ததை நீங்கள் ஏற்றுக்கொண்டால், அது இவ்வுலகிலும், ஆஃகிரத்திலும் உங்களுக்கு நற்பலனாக அமையும். நீங்கள் ஏற்றுக் கொள்ளாமல் மறுத்தால், எனக்கும் உங்களுக்கும் இடையே அல்லாஹு தஆலா தீர்ப்பளிக்கும் வரை ஜனாப் அல்-ஹக்கின் கட்டளையை நிறைவேற்றுவதற்காக அனைத்து சிரமங்களையும் சகித்துக்கொள்வது எனது கடமையாகும்."

அப்போது அபூ ஜஹ்ல், உமய்யா இப்னு கலஃப் மற்றும் இதர பலதெய்வவாதிகள் நமது நபியவர்களிடம், “முஹம்மதே! வாழ்வாதாரத்தில் எங்களை விடக் கடினமான சூழ்நிலையில் உள்ளவர்கள் யாரும் இல்லை என்பதை நீர் அறிவீர். நீர் ஒரு நபி என்பதால், எங்களுக்கு இடையூறாக இருக்கும் அந்த மலைகளை அகற்றி எங்கள் வாழ்வாதாரத்தை பலப்படுத்தும்படி உமது ரப்பிடம் கேளுங்கள்! அவன் நமது நிலத்தை விரிவுபடுத்தி, டமஸ்கஸ் மற்றும் ஈராக் நதிகளைப் போல நதிகளை அதில் ஓடச் செய்ய வேண்டும்! கூடுதலாக, அவன் நம் முன்னோர்களில் சிலரை, குறிப்பாக குஸைய் இப்னு கிலாபை உயிர்த்தெழுப்ப வேண்டும். குஸைய் இப்னு கிலாப் ஒரு உண்மையுள்ள, சிறந்த மனிதர். உமது வார்த்தைகள் உண்மையா பொய்யா என்று நாம் அவரிடம் கேட்போம்! அவர் உம்மை ஏற்றுக்கொண்டால், நீர் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றினால், நாங்கள் உம்மை ஏற்றுக்கொள்வோம். இவ்வாறே, உமது ரப்பின் பார்வையில் உமது நிலையையும் நாம் அறிவோம். நீர் எங்களுக்காக இவற்றைச் செய்யவில்லையென்றால், உமது ரப்பிடமிருந்து உமக்காக ஏதாவது ஒன்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும். உமது வார்த்தைகளை உறுதிப்படுத்தி, உம்மிடமிருந்து எம்மை விரட்டும் ஒரு வானவரை அனுப்பும்படி அவரிடம் கேளுங்கள்! மேலும், உமது ரப் உமக்கு தோட்டங்கள், மாளிகைகள் மற்றும் பொக்கிஷங்களை வழங்க வேண்டும். இதனால் நீர் பொருளாதார கஷ்டங்களிலிருந்து தப்பிக்க வேண்டும்! ஏனென்றால், நீர் சந்தைகளில் நடந்து, எங்களைப் போலவே உமது வாழ்வாதாரத்திற்காக உழைக்கிறீர்!" என்று கோரிக்கைகளை முன்வைத்தனர்.

எமது நாயகம், ஃபக்ர் அல்-ஆலம், அவர்களிடம், “நான் இவற்றைக் கொண்டு உங்களிடம் அனுப்பப்படவில்லை. அல்லாஹு தஆலா எனக்கு அனுப்பியதைத்தான் நான் ஜனாப் அல்-ஹக்கிடமிருந்து உங்களிடம் கொண்டு வந்துள்ளேன். நான் அதை உங்களிடம் தெரிவித்தேன். நான் எனது ரப்பிடம் (செல்வத்தைக்) கேட்கும் ஆள் அல்ல. அல்லாஹு தஆலா என்னை (உங்களில் நான் கொண்டு வந்ததை ஏற்றுக்கொள்பவர்களுக்கு ஜன்னா கிடைக்குமென்று) நன்மாராயங் கூறுபவனாகவும், (உங்களில் நான் கொண்டு வந்ததை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு ஜஹன்னம் விதியாகுமென்று) அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனாகவுமே அனுப்பியுள்ளான்." என்று சொன்னார்கள்.

இந்த நேரத்தில், பலதெய்வவாதிகள் நபியவர்களிடம், “உமது ரப்பால் அவன் விரும்பிய எதையும் செய்ய முடியும் என்பதால், வானத்தைப் பிளந்து எங்கள் மீது விழச் செய்யும்படி அவனிடம் கேளுங்கள்! நீங்கள் இதைச் செய்யாவிட்டால், நாங்கள் உங்களை நம்ப மாட்டோம்!" என்றார்கள். எமது நாயகம் அவர்களிடம், "அது அல்லாஹு தஆலாவுக்கு சொந்தமானது. அவன் உங்களுக்கு அவ்வாறு செய்ய விரும்பினால், அவன் நிச்சயமாகச் செய்வான்!” என்று கூறினார். இதைத் தொடர்ந்து, இணைவைப்பாளர்கள், விடாப்பிடியாக நபியவர்களிடம், “முஹம்மதே! நாம் உம்முடன் அமர்ந்திருப்பதையும், உம்மிடம் என்ன கேட்டோம் என்பதையும், என்ன கேட்கப் போகிறோம் என்பதையும் உமது இறைவன் உம்மிடம் முன்பே தெரிவிக்கவில்லையா? அவற்றை உமது ரப் அறியவில்லையா? நீர் எங்களிடம் தெரிவித்ததை நாம் ஏற்கவில்லை என்றால் அவன் எங்களுக்கு என்ன செய்வானென்று அவன் ஏன் சொல்லவில்லை? உமது வார்த்தைகளுக்கு நீர் வானவர்களைச் சாட்சியாகக் கொண்டுவரும் வரை, நாம் உம்மை நம்ப மாட்டோம். இனிமேல் உம்மீது எமக்கு எந்தப் பொறுப்பும் இல்லை. உம்மை நாம் சும்மா விடமாட்டோம் என்று சத்தியம் செய்கிறோம். ஒன்று, நாம் உம்மை அழிப்போம், அல்லது நீங்கள் எம்மை அழிப்பீர்கள்!” என்று கூறினார்கள். அவர்கள் நெருங்கி வருவதற்குப் பதிலாகத் தம்மை விட்டு வெகுதூரம் விலகிச் செல்வதைக் கண்ட நமது அன்பார்ந்த நபியவர்கள் அவ்விடத்தை விட்டு வெளியேறினார்கள்.13

“கியாமத் நாளில் அவர்களை முகம் குப்புறக் குருடர்களாகவும், ஊமைகளாகவும், செவிடர்களாகவும் உயிர்ப்பிப்போம்! அவர்களின் தங்குமிடம் ஜஹன்னம் ஆகும், அதன் சுடர் குறையும் போதெல்லாம் நாம் அதனை அதிகரிப்போம்!"
இஸ்ரா: 97

பிரபஞ்சத்தின் சுல்தானை மக்கா பலதெய்வவாதிகள் நிராகரித்தவுடன், அல்லாஹு தஆலா ஜிப்ரஈல் அலைஹிஸ்ஸலாம் மூலம் ஒரு வஹியை அனுப்பினான். அத்துடன் அவர்களுக்கு ஆயத் அல்-கரிமாக்களை இறக்குவதன் மூலம் பதிலளித்தான். அவர்கள் அனுபவிக்கவுள்ள கடுமையான வேதனைகளைப் பற்றி அறிவித்தான். ஸூரா அல்-அன்ஆமின் 4 ஆவது ஆயத் அல்-கரீமா முதல் 11 ஆவது ஆயத் அல்-கரீமா வரை, மஆலின் படி பின்வருமாறு: “அவர்களின் ரப்பின் ஆயத்களில் அவர்கள் புறக்கணிக்காத எந்த ஆயத்தும் (ஆயத்களில் ஒரு ஆயத், ஆதாரங்களில் ஒரு ஆதாரம் அல்லது குர்ஆன் அல்-கரீமின் அற்புதங்களில் ஓர் அற்புதம்) இல்லை. சத்தியம் (குர்ஆன் அல் கரீம்) அவர்களிடம் வந்தபோது, அவர்கள் அதை மறுத்தார்கள். ஆனால், அவர்கள் ஏளனம் செய்து கேலி செய்த செய்திகள் (தண்டனை) விரைவில் அவர்களுக்கு வந்து சேரும். அவர்களுக்கு முன் பல தலைமுறைகளை நாம் அழித்ததை அவர்கள் (மக்காவாசிகள்) பார்க்கவில்லையா? இது அவர்களுக்கு நெருக்கமாகத் தெரியவில்லையா? நாங்கள் உங்களுக்கு வழங்காத அனைத்து வாய்ப்புகளையும் அவர்களுக்கு வழங்கியிருந்தோம். அவர்கள் மீது வானத்திலிருந்து ஏராளமான மழையை அனுப்பினோம். (அவர்களின் பழத்தோட்டங்கள், பண்ணைகள் மற்றும் மாளிகைகளின்) கீழ் ஆறுகளை ஓடச் செய்தோம். பின்னர் அவர்களுடைய பாவங்களுக்காக (அந்த அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தாததற்காக) அவர்களை அழித்தோம். அவர்களின் இடத்தில் மற்ற தலைமுறைகளை உருவாக்கினோம். காகிதத்தில் எழுதப்பட்ட ஒரு புத்தகத்தை நாங்கள் உங்களுக்கு இறக்கிவைத்திருந்தால், அவர்கள் அதைத் தங்கள் கைகளால் பிடித்துக் கொண்டிருந்தால், மீண்டும் அந்த காஃபிர்கள், தங்கள் பிடிவாதத்தால், 'இது வெளிப்படையான மந்திரம் தவிர வேறில்லை' என்று கூறியிருப்பார்கள். மேலும், அவர்கள், 'குறைந்த பட்சம் (முஹம்மத் அலைஹிஸ்ஸலாம் ஒரு நபி என்று எங்களிடம் கூறும், நாங்களும் பார்க்க முடியுமான) ஒரு வானவர் அவரிடம் அனுப்பப்பட்டிருக்க வேண்டுமே" என்று கூறுகின்றனர். நாம் ஒரு வானவரை அனுப்பியிருந்தால் (அப்போது அவர்கள் விசுவாசிகளாக ஆகவில்லையெனின்) நிச்சயமாக அவர்களது காரியம் முடிந்திருக்கும் (அனைவரையும் அழித்தொழிக்கும் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கும்). அப்போது அவர்களுக்கு ஒரு கண் இமைக்கும் அளவு கூட அவகாசம் அளிக்கப்பட்டிருக்காது. அல்லது அவர்களுக்கு இரண்டாவது பார்வை கொடுக்கப்பட்டிருக்காது. நாம் அவரை (நபியை) ஒரு வானவராக ஆக்கியிருந்தால், நிச்சயமாக அவரை மீண்டும் ஒரு மனிதனாக (உருவத்தில்) காட்டி அவர்களை அதே சந்தேகத்தில் தள்ளியிருப்போம். உண்மையில், உங்களுக்கு முன் இருந்த நபிமார்களும் ஏளனம் செய்யப்பட்டு, கேலி செய்யப்பட்டனர்; அவர்களின் கேலிக்குத் தண்டனையாக, அவர்கள் முற்றிலும் பேரழிவாலும் வேதனையாலும் சூழப்பட்டனர். (நபியே!) நீர் அவர்களிடம், "பூமியில் பயணம் செய்து, நபிமார்களை மறுத்தவர்களின் முடிவு எப்படியமைந்தது என்பதைப் பாருங்கள்" என்று கூறுவீராக."

ஸூரா அல்-ஃபுர்கானில் 7ஆவது ஆயத் அல்-கரீமா முதல் 10ஆவது வரை, மஆலின்படி பின்வருமாறு கூறப்பட்டுள்ளது: “நிராகரிப்பவர்கள், "இது என்ன வகையான நபி? அவர் சாப்பிடுகிறார், குடிக்கிறார், அத்துடன் நம்மைப் போன்றே தெருக்களில் நடக்கிறார். இவர் (முஹம்மத்) ஓர் நபியாக இருந்திருந்தால், அவரிடம் மலக்குகள் வந்திருப்பார்கள். அவருக்கு உதவியாளர்கள் இருந்திருப்பார்கள், அவர்களும் நமக்கு செய்திகளைக் கொண்டு வந்து (ஜஹன்னம்) நரகத்தைப் பற்றி நம்மை அச்சுறுத்தியிருப்பார்கள். அல்லது அவருடைய ரப் அவருக்குப் பொக்கிஷங்களை அனுப்புவான், அல்லது அவர் பழத்தோட்டங்களையும் பண்ணைகளையும் வைத்திருப்பார், அவற்றின் மூலம் அவர் விரும்பியதை சாப்பிட்டிருப்பார்." என்று கூறுகின்றனர். அந்தக் கொடுமைக்காரர்கள் ஒருவருக்கொருவர், "நீங்கள் அவரைப் பின்பற்றினால், நீங்கள் ஒரு சூனியக்காரனைப் பின்தொடர்கிறீர்கள்" என்று கூறினர். (எனது ஹபீபே!) அவர்கள் உங்களைப் பற்றி என்ன மோசமான கூற்றுக்களைக் கொண்டுள்ளனர் என்பதைக் கவனியுங்கள்; அவர்கள் சரியான பாதையில் இருந்து விலகி, மதவெறியில் விழுந்துவிட்டனர். அவர்கள் இனி மதவெறியிலிருந்து வெளியே வந்து சரியான பாதைக்கு வழி தேட முடியாது. அல்லாஹு தஆலா எவ்வளவு உயர்ந்தவன், அவன் நாடினால், அதைவிடச் சிறந்த (உலகில்) பழத்தோட்டங்களையும், பண்ணைகளையும், அவற்றின் கீழ் ஆறுகள் ஓடும் தோட்டங்களையும், உங்களுக்கு அரண்மனைகளையும் உருவாக்கித் தருவான்!”

மேலும், 21ஆம் ஆயத் அல்-கரீமாவில், "எம்மைச் சந்திப்பதை நம்பாதவர்கள், '(முஹம்மத் உண்மையைச் சொல்கிறார் என்று எங்களுக்குத் தெரிவிக்க) எமக்காக வானவர்கள் இறக்கப்பட்டிருக்க வேண்டாமா? அல்லது நாங்கள் எங்கள் ரப்பைப் பார்த்திருக்க வேண்டாமா? என்று கூறுகின்றனர். நிச்சயமாக அவர்கள் தங்களைப்பற்றி மிக உயர்ந்த கருத்தை வைத்துக்கொண்டு, மிகப் பெரிய இழிவான வழிகேட்டிலேயே சென்று விட்டனர்..."

ஸூரா ஸபஃவில், 9ஆவது ஆயத் அல்-கரீமா, மஆலின்படி பின்வருமாறு, “நாம் நாடியிருந்தால், (குரோசஸைப் போல, அவர்கள் நமது அத்தாட்சிகளைக் கண்டு, மறுத்ததால்) பூமி அவர்களை விழுங்கச் செய்திருப்போம். அல்லது (அய்காவின் மக்களுக்கு நாம் செய்தது போல்) அவர்கள் மீது வானத்திலிருந்து துண்டுகளை விழச் செய்திருப்போம் ”.

ஸூரா அல்-இஸ்ராவின் 97ஆவது ஆயத் அல்-கரீமாவில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது, “...கியாமத் நாளில் அவர்களை முகம் குப்புறக் குருடர்களாகவும், ஊமைகளாகவும், செவிடர்களாகவும் உயிர்த்தெழுப்புவோம்! அவர்களின் தங்குமிடம் ஜஹன்னம் ஆகும், அதன் சுடர் குறையும் போதெல்லாம் நாம் அதனை அதிகரிப்போம்!"

பலதெய்வவாதிகள் அவர்களைப் பற்றிய ஆயத் அல்-கரீமாக்கள் இறக்கியருளப்பட்ட பிறகு தங்கள் விரோதத்தை அதிகப்படுத்திக் கொண்டனர். குறிப்பாக உபை இப்னு கலஃப் மற்றும் அவனது சகோதரர் உமய்யா ஆகியோர் எங்கள் நாயகம் ரஸுலுல்லாஹ்வை மிகவும் வருத்தமடையச் செய்தனர். துர்திர்ஷ்டக்காரனான உபை எமது நபியின் முன்னிலையில் ஒரு எலும்புத் துண்டுடன் வந்தான். பிறகு, “முஹம்மதே! உமது அல்லாஹ் இந்த எலும்பை அழுகிய பிறகு உயிர்ப்பிப்பான் என்று சொல்கிறீர், அது சரியா? எனவே, இந்த எலும்பை அழுகிய பிறகு உமது ரப் உயிர்ப்பிப்பான் என்று நீர் நம்புகிறீர்!” என்று கூறிவிட்டு அந்த எலும்பை நொறுக்கி, அதன் தூசியை நம் அன்பான நபியை நோக்கி ஊதினான். தொடர்ந்து, “முஹம்மதே! இப்படி அழிந்து போன பிறகு இதை யாரால் உயிர்ப்பிக்க முடியும்?” என்று ஏளனமாகக் கேட்டான். எமது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், “ஆம். அல்லாஹு தஆலா உன்னையும் அதையும் கொன்றுவிடுவான்... பிறகு உன்னை உயிர்ப்பித்து ஜஹன்னத்தில் போடுவான்." என்று கூறினார். இந்த சம்பவத்தின் போது, ஜனாப் அல்-ஹக் பின்வரும் ஆயத் அல்-கரீமாக்களை இறக்கியருளினான். அவை மஆலின்படி: “ஒரு துளி விந்தணுவிலிருந்து நாம் அவரைப் படைத்தோம் என்பதை அந்த நபர் (நம்பிக்கையற்றவர்) பார்க்கவில்லையா; அவர் அதனை உறுதியாக நம்பவில்லையா? இன்னும், அவர் வெளிப்படையாக சர்ச்சைக்குரியவராக மாறினார். தன் படைப்பையே மறந்துவிட்டு, 'அழிந்து நொறுங்கிப் போன இந்த எலும்பை உயிர்ப்பிப்பவர் யார்?' என்று எமக்கு உதாரணம் காட்டினார். (என் ரஸூலே!) கூறுவீராக, 'அவற்றை (அவை இல்லாத நிலையில்) முதன்முதலாகப் படைத்தவனே அவற்றை உயிர்ப்பிப்பான், மேலும் அவனே படைக்கப்பட்ட ஒவ்வொன்றையும் சரியாக அறிந்தவன். அவன் (அல்லாஹு தஆலா) ஒரு பச்சை மரத்திலிருந்து உங்களுக்கு நெருப்பைக் கொடுத்தான். இப்போது நீங்கள் அதிலிருந்து நெருப்பை மூட்டுகிறீர்கள். வானத்தையும் பூமியையும் படைத்தவனால் அவற்றைப் போன்றவற்றைப் படைக்க முடியாதா? நிச்சயமாக, அவன் வல்லவன்; அவன் அனைத்தையும் படைத்தவன்; அவன் அனைத்தையும் நன்றிந்தவன்...'”14

காலித் இப்னு ஸஈத் இஸ்லாத்தைத் தழுவுதல்

இஸ்லாத்திற்கான அழைப்பின் ஆரம்ப நாட்களில், காலித் இப்னு ஸஈத் ஒரு கனவு கண்டார். அவரது கனவில், அவர் ஜஹன்னத்தின் விளிம்பில் நின்று கொண்டிருந்தார். அவரது தந்தை அவரை உள்ளே தள்ள முயன்றார். அந்த நேரத்தில், நமது நபி அவரை இடுப்பைப் பிடித்து ஜஹன்னத்தில் விழாமல் காப்பாற்றுவதை அவர் பார்த்தார். அவர் அலறியடித்து எழுந்தார். “வல்லாஹி, இந்தக் கனவு நிஜம்” என்றார். அவர் வெளியே சென்றபோது, ஹஸ்ரத் அபூபக்ரைக் கண்டார். அவருடைய கனவைப் பற்றிக் கூறினார். ஹஸ்ரத் அபூபக்ர் அவரிடம், “உமது கனவு உண்மைதான்; இந்த நபர் அல்லாஹு தஆலாவின் நபியாவார். இப்போது, அவரிடம் சென்று (அல்லாஹ்வுக்கு) அடிபணியுங்கள்! நீங்கள் அவரைப் பின்பற்றுங்கள், அவர் கொண்டு வந்த மார்க்கத்தை ஏற்று, அவருடன் இருங்கள். நீங்கள் கனவில் கண்டது போல் ஜஹன்னத்தில் விழுந்துவிடாமல் அவர் உங்களைப் பாதுகாப்பார். ஆனால் உங்கள் தந்தை ஜஹன்னத்தில் இருப்பார்!" என்று கூறினார்.

ஹஸ்ரத் காலித் இப்னு ஸஈத் கனவின் தாக்கத்தில் இருந்தார். நேரத்தை வீணாக்காமல், அவர் உடனடியாக அஜ்யாத் என்ற இடத்திற்குச் சென்று, முஹம்மத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் முன்னிலையில், “ஓ முஹம்மதே! நீங்கள் மக்களை எதற்கு அழைக்கிறீர்கள்?" என்று வினவினார்.

நமது நபிகள் நாயகம் அவர்கள், "இணை இல்லாத ஒரே அல்லாஹ்வை நம்பும்படியும், முஹம்மத் (அலைஹிஸ்ஸலாம்) அவனது அடிமையும் நபியும் ஆவார் என்று நம்பும்படியும் மக்களை நான் அழைக்கிறேன். சில கற்களை வணங்குவதைக் கைவிடுமாறு நான் மக்களை அழைக்கிறேன். அவை கேட்கவோ, பார்க்கவோ, தீங்கு செய்யவோ, நன்மை செய்யவோ முடியாதவை. அவற்றை யார் வணங்குகிறார்கள் அல்லது வணங்குவதில்லை என்று கூட அவற்றுக்குத் தெரியாது." என்று கூறினார்கள்.

இதைக் கேட்ட காலித் இப்னு ஸஈத் உடனடியாக முஸ்லிமாகிவிட்டார். “வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹு தஆலாவைத் தவிர வேறு யாரும் இல்லை என்று நானும் சாட்சி சொல்கிறேன், மேலும் நீங்கள் அல்லாஹு தஆலாவின் நபி என்று மீண்டும் சாட்சி கூறுகிறேன்." என்று ஷஹாதாவை மொழிந்தார். அவர் முஸ்லிமாக மாறியது நமது நபியை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்தது. அவருக்குப் பிறகு, அவரது மனைவி உமையாவும் முஸ்லிமாகி கௌரவிக்கப்பட்டார்.

ஹஸ்ரத் காலித் இப்னு ஸஈத் தனது சகோதரர்களும் முஸ்லிம்களாக மாற வேண்டும் என்று விரும்பி அதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். அவர்களில் உமர் இப்னு ஸஈத் அவர்களும் முஸ்லிமாகிவிட்டார்கள். இஸ்லாத்தின் தீவிர எதிரியான அவரது தந்தை அபூ உஹைஹா, காலித் மற்றும் உமர் முஸ்லிம்களாக மாறியதையும், அவர்கள் மக்காவில் ஒதுக்குப்புறமான இடத்தில் தொழுவதையும் அறிந்த போது, அவர் தனது முஸ்லிமல்லாத பிள்ளைகளை அனுப்பி, அவர்களைத் தன்னிடம் கொண்டு வந்தார். பின்னர், புதிய மார்க்கத்தைக் கைவிடும்படி அவர்களிடம் கூறினார். அவர்களைத் திட்டி, அடிக்க ஆரம்பித்தார்.

பின்னர் அவர் காலித் இப்னு ஸஈதிடம், “நீ முஹம்மதுக்கு அடிபணிந்துவிட்டாயா? ஆனால், அவர் தனது சொந்த மக்களுக்கு எதிராகச் செயல்படுவதை நீ காண்கிறாய், அவர் கொண்டு வந்ததைக் கொண்டு நமது சிலைகளையும் முன்னோர்களையும் அவர் அவமதிக்கிறார்." என்றார்.

ஹஸ்ரத் காலித் இப்னு ஸஈத் தனது தந்தையிடம், “அல்லாஹ்வின் மீது சத்தியமாக, முஹம்மத் அலைஹிஸ்ஸலாம் உண்மையைச் சொல்கிறார். நான் அவருக்கு அடிபணிந்து விட்டேன். நான் இறந்துவிடுவேன், ஆனால் நான் என் மார்க்கத்தை விட்டு வெளியேற மாட்டேன்" என்று கூறியபோது, அவரது தந்தை மேலும் கோபமடைந்தார்.

அவர் ஒரு தடி உடைந்து போகும்வரை அவரை அடித்துவிட்டு, “என் கெட்ட மகனே! நீ எங்கு வேண்டுமானாலும் செல். சத்தியமாக, நான் உனக்கு உண்ண ரொட்டித் துண்டு கூட கொடுக்க மாட்டேன்!” என்றார்.

ஹஸ்ரத் காலித் தந்தையிடம், "நீங்கள் எனது கொடுப்பனவை நிறுத்தினால், நிச்சயமாக அல்லாஹு தஆலா எனக்கு வாழ்வாதாரத்தை வழங்குவான்." என்று கூறினார்.

“அல்லாஹ்வே! அவர்களின் பாவங்களை மன்னிப்பாயாக! ஏனென்றால், அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று அவர்களுக்கே தெரியாது."
ஹதீஸ் அஷ்ஷரீஃப்

அவருடைய தந்தை மற்ற பிள்ளைகளை மிரட்டினார், “உங்களில் யாராவது அவனிடம் பேசினால், நான் அவனுக்கு செய்யாததை உங்களுக்கு செய்வேன்." என்றார். அவர் ஹஸ்ரத் காலிதை வீட்டின் பாதாள அறையில் அடைத்து, மக்காவின் வெப்பத்தில் மூன்று நாட்கள் பசியுடனும் தாகத்துடனும் இருக்க விட்டுவிட்டார்.

ஹஸ்ரத் காலித் இப்னு ஸஈத் ஒரு வாய்ப்பைக் கண்டுபிடித்து தனது தந்தையிடமிருந்து தப்பித்தார். அவரது தந்தை கடுமையான நோயால் பாதிக்கப்பட்டார். இஸ்லாத்தின் மீதான பகையால், நோயுற்ற படுக்கையில் கிடந்த அபூ உஹைஹா, “இந்த நோயிலிருந்து நான் குணமடைந்து, மீண்டால் மக்காவில் உள்ள அனைவரும் எங்கள் சிலைகளை வணங்குவார்கள். அவற்றைத் தவிர வேறு யாரையும் அவர்களால் வணங்க முடியாது” என்று கூறிக் கொண்டிருந்தார். இஸ்லாத்தின் மீது தந்தையின் பகையை முடிவுக்குக் கொண்டு வரவும், தனது இஸ்லாமிய சகோதரர்களுக்குத் தீங்கு விளைவிப்பதைத் தடுக்கவும், ஹஸ்ரத் காலித் தனது கைகளை உயர்த்தி, "உலகங்களைப் படைத்த என் அல்லாஹ்வே! என் தந்தைக்கு இந்த நோயைக் குணப்படுத்தாதே” என்று பிரார்த்தித்தார். ஜனாப் அல்-ஹக் அவரது பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டான்; அபூ உஹைஹா குணமடைய முடியாமல் இறந்து போனார்.

முஸ்அப் இப்னு உமைர் இஸ்லாத்தைத் தழுவுதல்

முஸ்அப் இப்னு உமைர் (ரழி-அல்லாஹு அன்ஹ்) குறைஷியரில் உயர்ந்த, செல்வந்த குடும்பத்தைச் சேர்ந்தவர். நம் நபியின் அருளப்பட்ட வார்த்தைகளைக் கேட்டதும், அவரது உள்ளத்தில் மிகுந்த அன்பு எழுந்தது. அதனால் அவரைப் பார்க்க ஆசைப்பட்டார். இறுதியாக, அவர் தார் அல்-அர்கமுக்குச் சென்று முஸ்லிமாக ஆனார். அதை அறிந்த அவருடைய தாயும் தந்தையும் அவரிடமிருந்து எல்லாவற்றையும் பறித்து, சித்திரவதை செய்யத் தொடங்கினர். அவரை மார்க்கத்தைக் கைவிடச் செய்ய, அவர்கள் அவரை தங்கள் வீட்டின் பாதாள அறையில் அடைத்து, பல நாட்கள் பசியிலும் தாகத்திலும் இருக்க வைத்தனர். அரேபியாவின் சுட்டெரிக்கும் வெயிலில், அவர்கள் அவரைக் கடுமையாக, தாங்க முடியாதளவு சித்திரவதை செய்தனர். ஹஸ்ரத் முஸ்அப் இப்னு உமைர் இந்தக் கடுமையான, இரக்கமற்ற வேதனைகளை அனுபவித்தபோதும் இஸ்லாத்தைக் கைவிடவில்லை.

ஒரு முஸ்லிமாக மாறுவதற்கு முன்பு, ஹஸ்ரத் முஸ்அப் தனது குடும்பத்தின் செல்வத்தின் காரணமாக செழிப்புடனும், வசதி வாய்ப்புகளுடனும் வளர்க்கப்பட்டார். எல்லோரும் அவர் மீது பொறாமை கொண்டனர். அவர் ஒரு முஸ்லிமாக மாறியதும், அவரது குடும்பம் அவரிடமிருந்து அனைத்தையும் பறித்து, சித்திரவதைக்கு உள்ளாக்கியது. ஒரு நாள், முஸ்அப் இப்னு உமைர், தனது மார்க்கத்திற்காக எல்லா சிரமங்களையும் சகித்துக்கொண்டு, எமது நாயகம் ரஸூலுல்லாஹ்வின் முன்னிலைக்குச் சென்றார். ஹஸ்ரத் அலி அவரது வருகையைப் பின்வருமாறு விவரித்தார்; “நாங்கள் ரஸூலுல்லாஹ்வுடன் அமர்ந்திருந்தோம். அந்த நேரத்தில் முஸ்அப் இப்னு உமைர் வந்தார். ஒட்டு போட்ட ஆடைகளை அணிந்து பரிதாபமான நிலையில் அவர் இருந்தார். ரஸூலுல்லாஹ் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவரது நிலையைக் கண்டதும், அவருடைய அருள்மிகு கண்கள் கண்ணீரால் நிரம்பின. சித்திரவதைகளையும் வறுமையையும் முஸ்அப் அனுபவித்த போதிலும், அவர் தனது மார்க்கத்தைக் கைவிடவில்லை. இதனைப் பற்றி ரஸூலுல்லாஹ் நபித்தோழர்களிடம், “இவருடைய இதயத்தை அல்லாஹு தஆலா ஒளிரச் செய்திருப்பதைப் பாருங்கள். அவருடைய பெற்றோர் அவருக்கு சிறந்த உணவும் பானமும் கொடுத்து ஊட்டுவதை நான் பார்த்திருக்கிறேன். அல்லாஹு தஆலா மற்றும் அவனது ரஸூலின் மீதான அன்பு அவரை நீங்கள் பார்க்கும் நிலைக்கு மாற்றியுள்ளது" என்று கூறினார்.

"என் அஸ்ஹாபே (தோழர்களே)! இப்போது பூமியில் பரவிச் செல்லுங்கள். விரைவில் அல்லாஹு தஆலா உங்களை மீண்டும் ஒன்று சேர்ப்பான்!"
ஹதீஸ் அஷ்-ஷரீஃப்

ஆர்வத்துடன் ஹக்கை அழையுங்கள்!
நீங்கள் அதிக அனுகூலத்தைப் பெறுவீர்கள்,
எல்லாக் கதவுகளும் உங்களுக்காகத் திறக்கும்,
ஜமாலுல்லாஹ் உங்களுக்காகத் தோன்றும்.
ஷம்ஸ் தப்ரீஸி இதை அறிவார், உலகம் நிலைக்காது, அழியும்,
அனைத்து படைப்புகளும் அழியும்,
அல்லாஹ் மட்டுமே என்றென்றும் வாழ்வான்.
ஸலாத்துல்லாஹ் ஸலாமுல்லாஹ்,
அலைக்க, யா ரஸூலல்லாஹ்.