எனது அன்பார்ந்த நபி

அவரது பிஃஸத் மற்றும் அழைப்புப் பணி

1

அவருக்கு முப்பத்தேழு வயதாக இருந்தபோது, ​​உலகின் தலைவர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அறியப்படாதவர்களிடமிருந்து "ஓ முஹம்மதே!" என்று அழைக்கும் குரல்களைக் கேட்பார். அவர் முப்பத்தெட்டு வயதான பிறகு, அவர் நூர்களை - ஒளிகளைக் காணத் தொடங்கினார். எமது அன்னை ஹஸ்ரத் கதீஜாவிடம் மட்டுமே அவர் தனது நிலைமைகளைப் பற்றிப் பேசுவார்.

முஹம்மத் அலைஹிஸ்ஸலாமின் நபித்துவம் அறிவிக்கப்படும் காலம் நெருங்கியபோது (கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு முன்பு), ​​அந்தக் காலத்தின் புகழ்பெற்ற இலக்கியவாதிகளில் ஒருவரான குஸ் இப்னு ஸாஇதா, உகாஸ் சந்தையில் ஒட்டகத்தின் மீது ஆற்றிய உரையின் போது அவர் வருகையைப் பற்றிய நற்செய்தியை ஒரு பெரிய கூட்டத்திற்கு முன்பாகக் கூறியிருந்தார். எமது அன்பு நபியவர்களும் பார்வையாளர்கள் மத்தியில் இருந்தார். குஸ் இப்னு ஸாஇதா தனது புகழ்பெற்ற உரையின் ஒரு பகுதியில் பின்வறுமாறு கூறினார்:

"மனிதர்களே! வாருங்கள், கேளுங்கள், காத்திருங்கள், பாடங்களை எடுத்துக் கொள்ளுங்கள்! உயிருள்ளவர்கள் இறக்கிறார்கள். இறப்பவர்கள் அழிகிறார்கள். என்ன நடக்குமோ அது நடக்கும்! கவனம் செலுத்துங்கள், நான் சொல்வதைக் கேளுங்கள்! வானங்களில் செய்திகள் உள்ளன, பூமியில் அறிகுறிகள் தென்படுகின்றன! அல்லாஹ்வின் மார்க்கமும், அதனுடன் அல்லாஹ்வின் தூதரும் வரவிருக்கிறார்கள். அவர் வருகை மிக விரைவில் நிகழும். அவருடைய நிழல் உங்கள் தலைக்கு மேல் விழுந்துவிட்டது. அவருக்குச் செவிசாய்த்து அவரை நம்புகிறவர்கள் எவ்வளவு பாக்கியவான்கள்! அவருக்குக் கீழ்ப்படியாதவர்களுக்கும் எதிர்ப்பவர்களுக்கும் கேடுதான்! அலட்சியத்தில் வாழ்வைப் போக்கும் உம்மத்களுக்கு அவமானமே!”

அக்காலத்தில், அரேபியாவில் மக்கள் இறைவன் விதித்த நிலைகளிலிருந்து விலகி, ஏழை - பணக்காரர், பலசாலி - பலவீனன், எஜமானன் - அடிமை போன்ற வகுப்புகளாகப் பிரிந்திருந்தனர். முன்னோர்கள் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் வந்தவர்களை ஒடுக்கினர். அவர்களை மனிதர்களாகவே கருதவில்லை. ஏழைகளின் சொத்துக்கள் அவர்களிடமிருந்து வலுக்கட்டாயமாக பறிக்கப்பட்டன. இதைத் தடுக்க எந்த அதிகாரமும் காணப்படவில்லை. அல்லாஹு தஆலாவை நம்புவதால் ஏற்படும் வெட்கத்தையும் பயத்தையும் இழந்து, அவர்கள் நல்லொழுக்கத்திலிருந்து வெகு தொலைவில் இருந்தனர். அனைத்து வகையான ஒழுக்கக்கேடு, கண்ணியம் மற்றும் மரியாதையை மிதித்துத் தள்ளுதல் போன்ற கீழ்த்தரமான செயல்கள் சுதந்திரமாகச் செய்யப்பட்டன. சூதாட்டம், மது, கேளிக்கை நிகழ்வுகள், ஒழுக்கக் கேடான செயல்கள் அனைத்தும் வெளிப்படையாக நிகழ்த்தப்பட்டன. தொடர்ச்சியான கொலைகள், விபச்சாரம் மற்றும் ஆக்கிரமிப்புகள் அழிவை ஏற்படுத்தின. அப்பாவி மக்களின் அழுகுரல்களும் கதறல்களும் வானத்தில் எதிரொலித்தன. அறநெறியில் மொத்த வீழ்ச்சி ஏற்பட்டது. மக்கள் அறியாமைக் கடலில் மூழ்கினர். பெண்கள் மலிவான பொருட்களைப் போல விற்கப்பட்டனர், சிறுமிகள் இரக்கமின்றி உயிருடன் புதைக்கப்பட்டனர். எல்லாவற்றிற்கும் மேலாக, அந்த ஈவிரக்கமற்ற, பிடிவாதமான, இதயமற்ற மக்கள் தங்கள் கைகளால் உருவாக்கப்பட்ட, எந்த நன்மையோ அல்லது எந்தத் தீங்கோ செய்ய முடியாத சிலைகளை வணங்குவதை ஒரு பெரிய கௌரவமாகக் கருதினர்.

ஆதம் அலைஹிஸ்ஸலாமின் காலத்திலிருந்து, இதுபோன்ற காட்டுமிராண்டித்தனம், வழிகேடு, அவநம்பிக்கை, துரோகம் ஆகியவை உலகில் காணப்படவில்லை. மக்கள் அரக்கர்களாக மாறியிருந்தனர். எல்லோரும் ஒருவருக்கொருவர் விரோதமாக இருந்ததால், எந்த நேரத்திலும் வெடித்துச் சிதறுவதற்கு சமூகம் தயாராக இருந்தது. அத்தகைய இருளில், மக்கள் அமைதி பெற, பேரின்ப சூரியன் உதித்தாக வேண்டும். அந்த சூரியன் உதிக்கும்போது, அவநம்பிக்கைக்குப் பதிலாக நம்பிக்கை வரும்; கொடூரத்திற்குப் பதிலாக நீதியும், அறியாமைக்குப் பதிலாக அறிவும் வரும்; மக்கள் முடிவில்லாத பேரின்பத்தை அடைவார்கள்.

இறுதியாக, உண்மையான கனவுகள் எமது அன்பான நபிக்கு காண்பிக்கப்படத் தொடங்கின. ஒரு ஹதீஸ் அஷ்-ஷரீப்பில், வஹீ முதலில் உண்மையான கனவுகளுடன் தொடங்கியது என்று கூறப்பட்டுள்ளது. அவரது கனவுகளில் அவர் கண்ட அனைத்தும் உண்மையாகிவிட்டது. இந்த நிலை ஆறு மாதங்கள் தொடர்ந்தது. வஹீ வருவதற்கான நேரம் நெருங்கியபோது, "ஓ முஹம்மதே!" என்ற குரல்களின் ஒலி அதிகரித்தது. அந்த நேரத்தில், அவர் தனிமையை விரும்பினார். அதனால் அவர் மக்களை விட்டும் விலகி, ஹிரா மலையில் உள்ள ஒரு குகையில், தஃபக்குரில் (அல்லாஹு தஆலாவின் பண்புகள் மற்றும் அருள்களைப் பற்றி ஆழமாகச் சிந்திப்பதில்) ஆழ்ந்தார். சில சமயங்களில், அவர் மக்காவிற்கு வந்து, கஃபாவைச் சுற்றி தவாஃப் (சுற்றி வருதல்) செய்துவிட்டு, தனது ஆனந்தகரமான வீட்டிற்குச் செல்வார். அவர் சிறிது நேரம் வீட்டில் தங்கி, பின்னர் அவருடன் சிறிது உணவை எடுத்துக்கொண்டு, ஹிரா மலையில் உள்ள குகைக்குத் திரும்புவார். அங்கு அவர் தபக்குர் மற்றும் இபாதத் (வழிபாடு) ஆகியவற்றில் ஆழ்ந்து ஈடுபடுவார். சில சமயம், பல நாட்கள் அங்கேயே தங்கியிருப்பார். அப்போது ஹஸுரத் கதீஜா அவருக்கு உணவை அனுப்புவார் அல்லது எடுத்துச் செல்வார்.2

முதல் வஹீ

"முஹம்மதே, உமது மேலாடையால் போர்த்திக் கொண்டிருப்பவரே! நீர் எழுந்து (அல்லாஹு தஆலாவின் வேதனையைப் பற்றி காஃபிர்களை) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக. அத்துடன், நீர் உம்முடைய இறைவனின் பெருமையைத் துதிப்பீராக."
முத்தஸ்ஸிர்: 1-3)

நமது நபிக்கு நாற்பது வயதானபோது, ரமழான் மாதமொன்றில், ஹிரா மலையில் உள்ள குகைக்குச் சென்று, தஃபக்குரில் மூழ்கினார். ரமழான் மாதம் 17ஆம் திகதி, திங்கட்கிழமை இரவு, நள்ளிரவுக்குப் பிறகு, அவர் தனது பெயரை அழைக்கும் குரலலொன்றைக் கேட்டார். அவர் தலையை உயர்த்தி சுற்றும் முற்றும் பார்த்தபோது, ​​மீண்டும் அதே குரல் கேட்டது. திடீரென்று ஒரு நூர் எங்கும் மூடியிருப்பதைக் கண்டார். அப்போது ஜப்ரஈல்3 அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அவர் முன் வந்து, “வாசிப்பீராக!” என்றார். எமது நபிகள் நாயகம், “எனக்கு எழுத்தறிவு இல்லை!” என்று பதிலளித்தார்கள். வானவர் அவரைப் பிடித்து, நமது நபியை அவர் பலவீனமடையும் வரை அழுத்தி, “வாசிப்பீராக!” என்றார். மீண்டும், நமது நபி, "எனக்கு எழுத்தறிவு இல்லை!" என்று பதிலளித்தார். வானவர் அவரை மீண்டும் அழுத்திப் பிடித்து, “வாசியுங்கள்!” என்றார். “எனக்கு எழுத்தறிவு இல்லை!” என்று நமது நபி சொன்னபோது, வனவர் மூன்றாவது முறையாக அவரை அழுத்தினார். பின்னர் அவர் எங்கள் நபியை விடுவித்து, ஸூரா அல்-அலக்கின் முதல் ஐந்து ஆயாத்களை (வசனங்களை) ஓதிக் காண்பித்தார். அவை மஆலில் பின்வருமாறு: "“(ஓ முஹம்மத் அலைஹிஸ்ஸலாம்!) அனைத்தையும் படைத்த உங்கள் ரப் அல்லாஹ்வின் பெயரைக் கொண்டு வாசிப்பீராக! உறைந்த இரத்தத்திலிருந்து ('அலக், உறைவு) மனிதனைப் படைத்தான்! (நபியே!) நீர் ஓதுவீராக! நிச்சயமாக அல்லாஹ் மிக்க கிருபையுடையவன். அவனே பேனாவின் மூலம் கற்றுக் கொடுத்தான்; மனிதனுக்கு அவன் அறியாதவற்றையும் கற்றுக் கொடுத்தான்".4 முஹம்மத் அலைஹிஸ்ஸலாம் அவருடன் ஓதினார். இவ்வாறே முதல் வஹீ வெளிப்படுத்தப்பட்டது. இவ்வாறே இஸ்லாத்தின் சூரியன் முழுப் பிரபஞ்சத்தையும் ஒளிர்விக்கும் வகையில் உதித்தது.5

மிகுந்த நடுக்கத்துடனும் அதிர்ச்சியுடனும், எமது தலைவர் ரஸூலுல்லாஹ் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஹிரா மலையின் குகையிலிருந்து வெளியே வந்து இறங்கத் தொடங்கினார்கள். மலையின் நடுவில் வந்தபோது, ​​ஒரு குரல் கேட்டது. ஜப்ரஈல் அலைஹிஸ்ஸலாம் "முஹம்மதே! நீங்கள் அல்லாஹு தஆலாவின் தூதர், நான் ஜிப்ரஈல்" என்று கூறினார். மேலும் அவர் அடித்த இடத்திலிருந்து தண்ணீர் வெளியேறியது. அந்த நீரின் மூலம் அவர் வுழூ (வணக்கத்துக்காக உடலுறுப்புகளைக் கழுவுதல்) செய்யத் தொடங்கினார். எமது நபிகள் நாயகம் அவரைக் கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஜிப்ரஈல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வூழு செய்து முடித்ததும், நமது நபியவர்களிடம், தான் பார்த்தபடி வுழூச் செய்யச் சொன்னார்கள். நபியவர்கள் தமது வுழூவை செய்துமுடித்த பின்னர், ஜிப்ரஈல் (அலைஹிஸ்ஸலாம்) இமாமாக ஆனார்.6 அவர்கள் இரண்டு ரக்அத்கள் தொழுகையைத் தொழுதார்கள். அதற்குப் பிறகு, ஜிப்ரஈல் அலைஹிஸ்ஸலாம் நபியவர்களிடம் இவ்வாறு கூறினார்: “முஹம்மதே!  "உமக்கு உமது இறைவன் அவனது ஸலாத்தை(சாந்தியை) தெரிவித்தான். அத்துடன், அவன் உங்களிடம், "நீங்கள்தான் ஜின்கள் மற்றும் மனிதர்களுக்கான எனது தூதர். எனவே அவர்களை (அல்லாஹு தஆலாவின் ஏகத்துவத்தை நோக்கி) தவ்ஹீதுக்கு அழையுங்கள்.'' என்று கூறினான்." பின்னர் அவர் வானத்தில் ஏறினார். இவ்வாறாக, நமது அன்பார்ந்த நபியவர்கள் ஜப்ரஈல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களைப் பார்த்தார்கள்; அவர்களுடன் பேசினார்கள்.

பாறைகளதும் மரங்களதும் ஸலாம்

எங்கள் நபியவர்கள் தனது அன்பு நிறைந்த வீட்டிற்கு வரும் வரை, அவர் கடந்து செல்லும் ஒவ்வொரு கல்லும் மரமும் "அஸ்ஸலாமு அலைக்க, யா ரஸூலல்லாஹ்" என்று சொல்வதைக் கேட்டார். அவர் வீட்டிற்குள் நுழைந்ததும், “என்னைப் போர்த்தி விடுங்கள், என்னைப் போர்த்தி விடுங்கள்." என்றார். அவருடைய நடுக்கம் நீங்கும் வரை அவர் அமைதியாக ஓய்வெடுத்தார். பின்னர் அவர் கண்டதை எமது தாயார் ஹஸ்ரத் கதீஜாவிடம் கூறினார். தொடர்ந்து அவர், "ஜிப்ரஈல் (அலைஹிஸ்ஸலாம்) என் கண்களில் இருந்து மறைந்துவிட்டார். ஆனால், அவரது மகத்துவமும், வலிமையும், அவர் மீதான அச்சமும் என்னை விட்டு இன்னும் அகலவில்லை. மக்கள் என்னை பைத்தியம் என்று சொல்லி, என்னை இழிவுபடுத்தி விடுவார்களோ என்று பயந்தேன்." என்றார். இந்த நிலைகளுக்காகவும் இந்நாட்களுக்காகவும் காத்திருந்து அதற்குத் தயாராக இருந்த ஹஸ்ரத் கதீஜா அவர்கள், “அல்லாஹு தஆலா உங்களைப் பாதுகாக்கட்டும். ஹக் தஆலா உங்கள் மீது அருள் புரிகிறான்; உங்களுக்கு அருளைத் தவிர வேறெதனையும் அவன் விரும்பவில்லை. அல்லாஹு தஆலாவின் பொருட்டு, நீங்கள் இந்த உம்மத்தின் நபியாக இருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். ஏனென்றால் நீங்கள் விருந்தினர்களை நேசிக்கின்றீர்கள். நீங்கள் உண்மையைச் சொல்கிறீர்கள், நீங்கள் நம்பகமானவர். நீங்கள் பலவீனமானவர்களுக்கும் தேவைப்படுபவர்களுக்கும் உதவுகிறீர்கள், அனாதைகளை பாதுகாக்கிறீர்கள். நீங்கள் நல்ல குணமுள்ளவர். இந்த குணங்களைக் கொண்டிருப்பவருக்கு எந்த பயமும் இருக்கக் கூடாது" என்று நபியவர்களிடம் கூறினார்.7

பின்னர், இந்த நிலைமை பற்றி விசாரிக்க, அவர்கள் வரகா இப்னு நவ்பலிடம் சென்றனர். நமது ரஸூலுல்லாஹ் சொன்னதைக் கேட்ட பிறகு, வரகா, “முஹம்மத் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களே! இது நல்ல செய்தி! ஹஸ்ரத் ஈஸா அறிவித்த இறுதி நபி நீங்கள்தான் என்று அல்லாஹு தஆலா மீது நான் சத்தியம் செய்கிறேன். உங்களிடம் வந்த வானவர் உங்களுக்கு முன் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் வந்த ஜிப்ரஈல் அலைஹிஸ்ஸலாம் ஆவார். ஆ! இன்னும் நான் இளமையாக இருந்து, அவர்கள் உங்களை மக்காவிலிருந்து வெளியேற்றும் நேரத்தை அடைந்திருக்க வேண்டுமே! அப்போது நான் உங்களுக்கு உதவி செய்ய விரைந்து வருவேன். மிக விரைவில், நீங்கள் உங்களது மார்க்கத்தை அறிவிக்கவும், ஜிஹாத் (புனிதப் போர்) செய்யவும் கட்டளையிடப்படுவீர்கள்." என்று நபியவர்களிடம் கூறிவிட்டு, அவர்களது அருள்மிகு கையை முத்தமிட்டார். அதன் பிறகு, சிறிது காலத்திலேயே அவர் மரணித்து விட்டார்.8

அறிவிப்பதற்கான உத்தரவு

நம் அன்பு நபியின் நபித்துவத்தை அறிவிக்கும் முதல் வஹீ இப்படித்தான் வந்தது. அதன் பிறகு, மூன்று வருடங்களாகியும் அது வரவில்லை. இதற்கிடையில், இஸ்ராஃபீல் (அலைஹிஸ்ஸலாம்) என்ற வானவர் வந்து அவருக்கு சில விஷயங்களைக் கற்றுக் கொடுத்தார். அவை வஹீயாக இருக்கவில்லை. இந்த நேரத்தில், எமது ரஸூலுல்லாஹ் அவ்வப்போது துன்பப்படுவார். அவ்வாறு எமது நாயகம் சோகமாக இருந்தபோது, ஜிப்ரஈல் (அலைஹிஸ்ஸலாம்) தோன்றி, "ஹபீபுல்லாஹ்வே! நீங்கள் அல்லாஹு தஆலாவின் தூதராக இருக்கிறீர்கள்" என்று கூறினார். அதனால் அவரது சோகம் குறைந்தது. எமது நபிகள் நாயகம் இவ்வாறு கூறினார்கள், “வஹீ நிறுத்தப்பட்டிருந்த காலப்பகுதியில் நான் ஹிரா மலையில் நடந்து கொண்டிருந்தபோது, ​​திடீரென்று வானத்தில் ஒரு சத்தம் கேட்டது. அப்போது நான் மேலே பார்த்தேன். அப்போது ஜிப்ரஈல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களைக் கண்டேன். அவர் வானத்திற்கும் பூமிக்கும் இடையில் உள்ள ஒரு அரியணையில் அமர்ந்திருந்தார். பயம் என்னைப் பீடித்தது. நான் வீட்டிற்குச் சென்றேன். "ஏதாவது ஒன்றின் மூலம் என்னைப் போர்த்தி விடுங்கள்" என்று நான் சொன்னேன். அப்போதுதான் ஹக் தஆலா ஸூரா அல்-முத்தஸ்ஸிரின் முதல் வசனங்களை அனுப்பினான்." அது மஆலின் படி பின்வருமாறு, "முஹம்மதே, உமது மேலாடையால் போர்த்திக் கொண்டிருப்பவரே! நீர் எழுந்து (அல்லாஹு தஆலாவின் வேதனையைப் பற்றி காஃபிர்களை) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக. அத்துடன், நீர் உம்முடைய இறைவனின் பெருமையைத் துதிப்பீராக. உங்கள் ஆடைகளை சுத்தமாக வைத்திருப்பீராக!"9இதற்குப் பிறகு, வஹீ மீண்டும் நின்றுவிடவில்லை.

எமது நாயகம், பஃக்ர் அல்-காஇனாத் ('அலைஹி அப்ழலுஸ்-ஸலவாத்) இஸ்லாத்திற்கு மக்களை அழைக்கவும், அல்லாஹு தஆலாவின் கட்டளைகளையும் தடைகளையும் அறிவிக்கவும் தொடங்கினார். வஹீ கொண்டு வரும் போது, ஜிப்ரஈல் அலைஹிஸ்-ஸலாம் சில நேரங்களில் ஒரு மனிதனின் வடிவத்தை எடுத்துக்கொள்வார். அத்துடன் அஸ்ஹாப் அல்-கிராமில் ஒருவரான திஹ்யா அல்-கல்பி போல தோற்றமளிப்பார். சில சமயங்களில், அவர் நம் நபியின் இதயத்தில் உதிப்பை ஏற்படுத்துவார். அந்தச் சமயங்களில் எமது ரஸூலுல்லாஹ் அவரைப் பார்க்க மாட்டார். சில சமயம் கனவிலும், சில சமயம் பயங்கர சத்தத்துடனும் வருவார். பிந்தையது எமது நபிக்கு வந்த வஹீயின் மிகவும் கடினமான, சிரமமான வடிவமாகும். இதுபோன்ற சூழ்நிலைகளில், குளிர்ந்த நாட்களில் கூட, ரஸூலுல்லாஹ்வின் நெற்றியில் வியர்வை வரும். அவர் ஒட்டகத்தின் மீது இருந்தால், அந்த ஒட்டகம் வஹியின் எடையால் தரையில் படுத்துவிடும். அவர் அருகில் இருந்த ஸஹாபிகளும் வஹீயின் கனத்தை உணர்வார்கள். ஜிப்ரஈல் அலைஹிஸ்ஸலாம் பல முறை தனது அசல் வடிவத்தில் வந்துள்ளார்.

அல்லாஹு தஆலா நமது நபிக்கு வானவரோ அல்லது எந்த மறைவோ இல்லாமல், அதாவது எந்த இடையீடும் இல்லாமல் நேரடியாகவும் வஹீயை வெளிப்படுத்தியுள்ளான். அந்த சூழ்நிலை மிஃராஜ் இரவில் ஏற்பட்டது.

முதல் வஹீயுடன் தனது நபித்துவக் கடமையைத் தொடங்கிய நமது தலைவர் முஹம்மத் முஸ்தபா (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இருபத்தி மூன்று ஆண்டுகளாக இஸ்லாத்தை எடுத்துரைத்தார். இந்தக் காலகட்டத்தின் பதின்மூன்று வருடங்கள் மக்காவில் கடந்தன, பத்து வருடங்கள் மதீனாவில் கடந்தன. குர்ஆன் அல்-கரீம் 22 வருடங்கள், 2 மாதங்கள் மற்றும் 22 நாட்களில் அருளப்பட்டு நிறைவடைந்தது.

முஹம்மத் அலைஹிஸ்ஸலாம் ஒரு உம்மீ ஆவார், அதாவது, அவர் எழுதவோ, வாசிக்கவோ தெரியாத, அதனை யாரிடமிருந்தும் கற்காதவாராக இருந்தார். அவர் மக்காவில் பிறந்து வளர்ந்தவர். அவர் குறிப்பிட்ட மனிதர்களின் மத்தியில் வளர்ந்தார். அப்படியிருந்தும், அவர் தவ்ராத், இன்ஜீல் மற்றும் கிரேக்க மற்றும் ரோமானிய காலங்களில் எழுதப்பட்ட புத்தகங்களில் காணப்படும் நிகழ்வுகள் மற்றும் தகவல்களைப் பற்றித் தெரிவித்தார். இஸ்லாத்தின் செய்தியை அறிவிக்க, அவர் ரோம, பாரசீக மற்றும் அபிசீனிய ஆட்சியாளர்களுக்கும் மற்ற அரபு சுல்தான்களுக்கும் ஹிஜ்ராவின் ஆறாவது ஆண்டின் இறுதியிலும் ஏழாவது ஆண்டின் தொடக்கத்திலும் கடிதங்களை அனுப்பினார்.

அறுபதுக்கும் மேற்பட்ட வெளிநாட்டுத் தூதர்கள் அவரிடம் வந்தனர். இந்நிலை குர்ஆன் அல்கரீமில், மீஆலில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது,  "இந்த குர்ஆன் அல்-கரீம் இறங்குவதற்கு முன்பு நீங்கள் எந்தப் புத்தகத்தையும் படிக்கவில்லை. நீங்கள் எதனையும் எழுதவில்லை. நீங்கள் எழுத்தறிவு பெற்றவராக இருந்திருந்தால், நீங்கள் அதை மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொண்டீர்கள் என்று அவர்கள் சொல்லியிருக்கலாம்."10

ஒரு ஹதீஸ் அஷ்-ஷரீபில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது, "நான் முஹம்மத், உம்மி நபி... எனக்குப் பிறகு எந்த நபியும் வர மாட்டார். "11மீண்டும், குர்ஆன் அல்-கரீமில், மஆலின் படி இவ்வாறு இடம்பெற்றுள்ளது, “அவர் (முஹம்மத் அலைஹிஸ்ஸலாம்) தனது சொந்த விருப்பத்தின் படி பேசவில்லை. அவருடைய வார்த்தைகள் அவருக்கு வஹீ மூலம் அறிவிக்கப்படுபவை தவிர வேறில்லை.”12

“அவர் (முஹம்மத் அலைஹிஸ்ஸலாம்) தனது சொந்த விருப்பத்திலிருந்து பேசுவதில்லை. அவருடைய வார்த்தைகள் அவருக்கு வஹீயாக அறிவிக்கப்பட்டவையே தவிர வேறில்லை."
நஜ்ம்: 3-4

முதல் முஸ்லிம்கள் (ஸாபிகூன் அல்-இஸ்லாம்)

எமது நாயகம் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு முதல் வஹீ வந்த பிறகு, எமது அன்னை ஹஸ்ரத் கதீஜா நம்பிக்கை கொண்ட முதல் நபராக இருந்தார்.13 அவர் எந்தத் தயக்கமும் இன்றி, இஸ்லாத்தைத் தழுவி, முதல் முஸ்லிம் என்ற பெருமையைப் பெற்றார். ஜிப்ரஈல் அலைஹிஸ்ஸலாம் நபியவர்களுக்குக் கற்றுக் கொடுத்தது போல் எமது தாயார் ஹஸ்ரத் கதீஜா அவர்களுக்கு நபியவர்கள் வுழூ (வணக்கத்திற்காகக் உடலுறுப்புகளைக் கழுவுதல்) செய்யக் கற்றுக் கொடுத்தார்கள். பிறகு, எமது நாயகம் நபியவர்கள் இமாமாக ஆனார். அத்துடன் அவர்கள் இரண்டு ரக்அத்கள் நமாஸ் (தொழுகையை) தொழுதார்கள். எமது அன்னை ஹஸ்ரத் கதீஜா எமது அன்பான நபியின் ஒவ்வொரு சொல்லையும், ஒவ்வொரு கட்டளையையும் முழுமையாகக் கடைப்பிடித்தார். இவ்வாறு, அவர் அல்லாஹு தஆலாவின் முன் மிக உயர்ந்த அந்தஸ்துகளை அடைந்தார். எப்பொழுதெல்லாம் எங்கள் நாயகம் ரஸூலுல்லாஹ் அவர்கள், நிராகரிப்பாளர்களின் ஏளனத்தால் வேதனைப்பட்டு, சோகமாக இருந்தாரோ, அப்போதெல்லாம் அவர் அவருக்கு ஆறுதல் கூறி அவருடைய துயரத்தைத் தணிப்பார். "ரஸூலுல்லாஹ்வே! வருத்தப்பட வேண்டாம், கவலைப்பட வேண்டாம். இறுதியில், நமது மார்க்கம் பலம் பெறும், இணைவைப்பவர்கள் நஷ்டமடைவார்கள். உங்கள் தேசத்தவர்கள் உங்களுக்குக் கீழ்ப்படிவார்கள்..." என்று அவர் ஆறுதல் கூறுவார். அவருடைய ஆதரவின் காரணமாக, ஒரு நாள் ஹஸ்ரத் ஜிப்ரஈல் வந்து, “ரஸூலுல்லாஹ்வே! கதீஜாவுக்கு அல்லாஹு தஆலாவின் ஸலாத்தை தெரிவியுங்கள்." என்று கூறினார். அப்போது எமது நபிகள் நாயகம் அவர்கள், "கதீஜாவே! ஜிப்ரஈல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் அல்லாஹு தஆலாவின் ஸலாத்தை உங்களுக்குத் தெரிவிக்கிறார்கள்.” எனக் கூறினார்கள்.14

நமது நபிகள் நாயகம் ஒருமுறை கூறினார்கள், “நோய், துக்கம், தலைவலி எதுவும் இல்லாத ஜன்னாஹ்வில் முத்தால் கட்டப்பட்ட வீட்டைப் பற்றிய நற்செய்தியை கதீஜாவுக்குச் சொல்லுமாறு அல்லாஹு தஆலா எனக்குக் கட்டளையிட்டான்.”

ஹஸ்ரத் கதீஜாவுக்குப் பிறகு, முஸ்லிமாக மாறிய அடுத்த நபர் நமது நாயகம் ரஸூலுல்லாஹ்வின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான ஹஸ்ரத் அபூ பக்ர் ஆவார். ஹஸ்ரத் அபூபக்ர் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு கனவு கண்டார்: முழு நிலவு வானத்திலிருந்து இறங்கி கஃபா அல்-முஅஸ்ஸமாவுக்கு வந்தது; அது துண்டுகளாக உடைந்தது, ஒவ்வொரு துண்டுகளும் மக்காவில் உள்ள ஒரு வீட்டின் மீது விழுந்தன; பின்னர் இந்தத் துண்டுகள் ஒன்றாக வந்து வானத்திற்கு உயர்ந்தன. அபூ பக்ர் வீட்டில் விழுந்த துண்டு வானத்திற்கு உயரவில்லை. இச்சம்பவத்தைப் பார்த்த ஹஸ்ரத் அபூபக்ர், சந்திரனின் இந்தத் துண்டை வெளியேற விடாமல் தடுப்பது போல், உடனடியாக வீட்டின் கதவை மூடினார்.

அபூபக்ர் கனவிலிருந்து உற்சாகத்துடன் எழுந்தார்கள். காலையில் எழுந்ததும், யூத அறிஞர்களில் ஒருவரிடம் விரைந்து சென்று, தம் கனவைப் பற்றிக் கூறினார். "இது தெளிவற்ற கனவுகளில் ஒன்றாகும்; எனவே, இதை விளக்க முடியாது" என்று அந்த அறிஞர் கூறினார். ஆனால் இந்தக் கனவு அபூபக்ருடைய மனதில் நிலைத்திருந்தது. யூத அறிஞரின் பதிலால் அவர் திருப்தி அடையவில்லை. ஒருமுறை அவர் வியாபாரத்திற்காக வெளியே சென்றபோது அவர் பாதிரியார் பஹீராவின் பிரதேசத்தைக் கடந்து சென்றார். தனது கனவின் விளக்கத்தை பஹீராவிடம் கேட்டபோது, பஹீரா "நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?" என்று கேட்டார். ஹஸ்ரத் அபூபக்ர், "நான் குறைஷைச் சேர்ந்தவன்" என்று சொன்னபோது, பஹீரா கூறினார், "ஒரு நபி அங்கு வருவார், அவருடைய வழிகாட்டுதல் மக்கா எங்கும் சென்றடையும். அவர் உயிருடன் இருக்கும் போது நீங்கள் அவருடைய வஸீராகவும், அவருடைய மரணத்திற்குப் பிறகு அவருடைய கலீஃபாவாகவும் இருப்பீர்கள். இந்த பதிலைக் கேட்டு ஹஸ்ரத் அபூபக்ர் அதிர்ச்சியடைந்தார். நமது நபிகள் நாயகம் தனது நபித்துவத்தை அறிவிக்கும் வரை அவர் தனது கனவையும் அதன் விளக்கங்களையும் யாரிடமும் கூறவில்லை. நமது அன்பிற்குரிய நபி முஹம்மத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நபித்துவத்தை அறிவித்ததும், ஹஸ்ரத் அபூபக்ர் அவர்கள் உடனடியாக எங்கள் நாயகம் நபியிடம் ஓடிச்சென்று, "உங்கள் ஆதாரம் என்ன?" என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள், "நீர் ஒரு யூத அறிஞரிடம் விளக்கம் கேட்ட கனவுதான் என் நபித்துவத்திற்குச் சான்று. அந்த அறிஞர், 'அது அபத்தமான கனவுகளில் ஒன்று, அதை விளக்க முடியாது' என்றார். பின்னர் பாதிரியார் பஹீரா அதைச் சரியாக விளக்கினார்." என்றார்கள். பின்னர் நபியவர்கள் ஹஸ்ரத் அபூபக்ரை நோக்கி, “ஓ அபாபக்ரே! நான் உங்களை அல்லாஹ்விடமும் அவனுடைய ரஸூலிடமும் அழைக்கிறேன்." என்று கூறினார்கள்.

இதைக் கேட்ட ஹஸ்ரத் அபூபக்ர், நீங்கள் அல்லாஹு தஆலாவின் தூதர் என்பதற்கு நான் சாட்சியாக இருக்கிறேன். உங்கள் நபித்துவம் உண்மை, அது உலகத்தை ஒளிரச் செய்யும் ஒரு நூர்" என்று கூறி முஸ்லிமாகிவிட்டார்.

மற்றொரு அறிவிப்பில், ஹஸ்ரத் அபூபக்ர் அவர்கள் யெமனுக்கு நபித்துவம் அறிவிக்கப்படுவதற்கு முன்பு வணிகத்திற்காகச் சென்றிருந்தார்கள். அவரது பயணத்தில், அவர் யெமனில் உள்ள அஸ்த் கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு முதியவரைச் சந்தித்தார், அவர் பல புத்தகங்களைப் படித்தவராக இருந்தார். அந்த முதியவர் ஹஸ்ரத் அபூபக்ரைப் பார்த்து, "நீங்கள் மக்காவாசிகளில் ஒருவர் என்று நினைக்கிறேன்" என்று கூறியபோது, ​​ஹஸ்ரத் அபூபக்ர், "ஆம்" என்று பதிலளித்தார். தொடர்ந்து, இந்த உரையாடல் அவர்களுக்குள் நடந்தது:

- நீங்கள் குறைஷியா?

- ஆம்

- நீங்கள் பனீ தமீமைச் சேர்ந்தவரா?

- ஆம்

- இன்னும் ஒரு அடையாளம் உள்ளது.

- அது என்ன?

- உங்கள் வயிற்றைக் காட்டுங்கள், நான் பார்க்க வேண்டும்.

- அதன் மூலம் நீங்கள் நோக்கம் என்ன என்று சொல்லுங்கள்

மக்காவில் ஒரு நபி தோன்றுவார் என்று புத்தகங்களில் படித்திருக்கிறேன். இரண்டு பேர் அவருக்கு உதவுவார்கள். ஒருவர் இளைஞர்; மற்றவர் முதியவர். இளைஞர் பல சிரமங்களை எளிதாக்குவார், பல தொல்லைகளைத் தடுப்பார். வயதானவர், மாறாக, வெள்ளை நிறமும், மெல்லிய இடுப்பும், வயிற்றில் கருப்பு மச்சமும் கொண்டவராக இருப்பார். அந்த நபர் நீங்கள்தான் என்று நான் நினைக்கிறேன். உங்கள் வயிற்றைத் திறந்து காட்டுங்கள், நான் பார்க்கிறேன்.

"ஸாபிகூன் அல் இஸ்லாம், அதாவது, முதல் முஸ்லிம்கள்: அபூ பக்ர் அஸ் ஸித்தீக், அலி இப்னு அபீ தாலிப், ஸைத் இப்னு ஹாரிஸா, உஸ்மான் இப்னு அஃப்பான், அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ப், ஸஅத் இப்னு அபீ வக்காஸ், ஸுபைர் இப்னு ஆவ்வாம், தல்ஹா இப்னு உபைதுல்லாஹ்
(ரழியல்லாஹு அன்ஹும் அஜ்மயீன்)

இதைக் கேட்ட ஹஸ்ரத் அபூபக்ர் தனது அருள்மிகு வயிற்றைக் காட்டினார். அவர் அவரது தொப்புளில் கருப்பு மச்சத்தைக் கண்டதும், "நான் சத்தியம் செய்கிறேன், அது நீங்கள்தான்!" என்று கூறினார். அத்துடன் அவருக்கு நிறைய ஆலோசனைகளை வழங்கினார்.

ஹஸ்ரத் அபூபக்ர் தனது வேலையை முடித்துவிட்டு, அந்த முதியவரிடம் விடைபெறச் சென்றார். அவர் எமது நபியைப் பற்றி சில கவியடிகளைக் கூற விரும்பினார். அதன் பிறகு, முதியவர் பன்னிரண்டு கவியடிகளைப் படித்தார். ஹஸ்ரத் அபூபக்ர் அவற்றை மனப்பாடம் செய்தார்.

ஹஸ்ரத் அபூபக்ர் தனது பயணத்திலிருந்து மக்கா அல்-முகர்ரமாவுக்குத் திரும்பியபோது, ​​குறைஷியின் முக்கியஸ்தர்களான 'உக்பா இப்னு அபீ முஐத், ஷைபா, அபூ ஜஹ்ல் மற்றும் அபுல் புஹ்தாரி ஆகியோர் அவரைச் சந்திக்க அவரது வீட்டிற்கு வந்தனர்.

எமது தலைவரான அபூபக்ர் அங்கு வந்தவர்களிடம், "உங்களிடையே ஏதாவது நடந்ததா?" என்று கேட்டார். அதற்கு அவர்கள், "இதை விட விசித்திரமான நிகழ்வு இருக்கிறதா: அபூ தாலிபின் அனாதை தனது நபித்துவத்தை ஒப்புக்கொள்கிறார். நாங்கள், எங்கள் தந்தைகள் மற்றும் தாத்தாக்கள் தவறான மதத்தைச் சேர்ந்தவர்கள் என்று எங்களிடம் கூறுகிறார். நீங்கள் இல்லையென்றால், நாங்கள் அவரை இது வரை உயிருடன் விட்டிருக்க மாட்டோம். நீங்கள் அவருடைய நல்ல நண்பர்; நீங்கள்தான் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும்." என்று கூறினார்கள்.

ஹஸ்ரத் அபூபக்ர், அவர்களை அனுப்பிவிட்டு, எங்கள் நபிகள் நாயகம் ஹஸ்ரத் கதீஜாவின் வீட்டில் இருப்பதை அறிந்து கொண்டார். அவர் அங்கு சென்று அவர்களது கதவைத் தட்டினார். எமது நபிகள் நாயகம் அவரை வரவேற்றபோது, ​​“முஹம்மதே! உங்களைப் பற்றிய இந்த வதந்திகள் என்ன?” என்று வினவினார். அதற்கு எங்கள் நபிகள் நாயகம், “நான் ஹக் தஆலாவின் நபியாவேன். நான் உங்களுக்கும் ஆதமின் அனைத்து சந்ததியினருக்கும் அனுப்பப்பட்டுள்ளேன். இதில் நம்பிக்கை வையுங்கள், இதனால் நீங்கள் ஹக் தஆலாவின் திருப்தியைப் பெறுவீர்கள். அத்துடன் (நரகத்திலிருந்து) ஜஹன்னமிடமிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வீர்கள்." என்று சொன்னார்கள். ஹஸ்ரத் அபூபக்ர், "இதற்கு என்ன ஆதாரம்?" என்று கேட்டபோது, எமது ரஸூல் அல் அக்ரம், "நீங்கள் யெமனில் சந்தித்த அந்த முதியவர் சொன்னதே இதற்குச் சான்றாகும்" என்றார்கள்.

ஹஸ்ரத் அபூபக்ர், “நான் யெமனில் பல இளைஞர்கள் மற்றும் முதியவர்களை சந்தித்தேன்" என்று கூறினார். அதற்குப் பதிலளித்த எமது நபிகள் நாயகம், “உங்களிடம் பன்னிரெண்டு கவியடிகளை ஒப்படைத்து என்னிடம் அனுப்பிய முதியவர்” என்று கூறி, பன்னிரண்டு கவியடிகளையும் படித்தார். ஹஸ்ரத் அபூபக்ர், “இதை உங்களுக்கு அறிவித்தது யார்?” என்று கேட்டபோது, “எனக்கு முன் வந்த நபிமார்களிடம் வந்த வானவர்” என்று நம் நபி கூறினார். நம் நபி இதைச் சொன்னவுடன், அவர் நபியவர்களது அருள்மிகு கையைக் கேட்டு, அதைப் பிடித்து, “அஷ்-ஹது அன் லா இலாஹ இல்லல்லாஹ் வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹூ வ ரஸூலுஹ்” என்று கூறி முஸ்லிமாக ஆனார்.15

ஹஸ்ரத் அபூபக்ர் தனது வாழ்நாளில் முதன்முறையாக உணர்ந்த பெரும் மகிழ்ச்சியுடன் முஸ்லிமாக தனது வீட்டிற்குத் திரும்பினார். உண்மையில், இது ஒரு ஹதீஸ் அஷ்-ஷரீபில் கூறப்பட்டுள்ளது, "நான் எவருக்கு ஈமானை - இறை விசுவாசத்தை வழங்கினாலும் அவர் முகத்தைத் திருப்பி வைப்பார்; அத்துடன் தயக்கத்துடனே பார்ப்பார். அபூபக்ர் அஸ்-ஸித்தீக் மட்டுமே ஈமானை ஏற்றுக் கொள்ளத் தயங்கவில்லை."

ஒரு நாள், ஹஸ்ரத் அலி அவர்கள் நமாஸ் (தொழுகை) செய்து கொண்டிருந்த எமது நபியையும் எமது அன்னை ஹஸ்ரத் கதீஜாவையும் பார்த்தார்கள். அவருக்கு பத்து அல்லது பன்னிரண்டு வயது இருக்கும். நமாஸ் முடிந்ததும், “இது என்ன?” என்று கேட்டார். ரஸூல் அல்-அக்ரம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், “இது அல்லாஹு தஆலாவின் மார்க்கமாகும். நான் உங்களை இந்த மார்க்கத்திற்கு அழைக்கிறேன். நிச்சயமாக அல்லாஹ் ஒருவனே; அவனுக்கு இணையாளர்கள் எவருமில்லை. அல்லாஹ் ஒருவனே, அவனுக்கு எந்தப் பங்குதாரரும் இல்லை, அவனுக்கு நிகர் யாருமில்லை என்று நம்புமாறு நான் உங்களை அழைக்கிறேன்…" என்று கூறினார்கள். அதற்கு ஹஸ்ரத் அலி, "முதலில் நான் என் தந்தையுடன் இது பற்றிக் கலந்தாலோசிக்கிறேன்." என்று கூறினார். ரஸூலுல்லாஹ் அவரிடம், "நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாவிட்டால், இந்த ரகசியத்தை யாரிடமும் சொல்லாதீர்கள்!" என்றார்கள். மறுநாள் காலையில், ஹஸ்ரத் அலி ரஸூலுல்லாஹ்வின் முன்னிலையில் வந்து, " ரஸூலுல்லாஹ்வே! எனக்கு இஸ்லாத்தைக் கற்றுக் கொடுங்கள்!" என்று கூறினார். தொடர்ந்து அவர் முஸ்லிமாக ஆனார்.16 முஸ்லிமாக மாறிய மூன்றாவது நபர் ஹஸ்ரத் அலி ஆவார். நமது ரஸூல் அல்-அக்ரமுக்காக அவர் செய்த தியாகம் மற்றும் தன்னை விட நம் நபியை விரும்பியமை என்பன எல்லாப் புகழுக்கும் அப்பாற்பட்டவை.

முஸ்லிமாக மாறிய முதல் நபர்களில் ஸைத் இப்னு ஹாரிஸாவும் ஒருவர். ஹஸ்ரத் கதீஜா, ஹஸ்ரத் அபூபக்ர் மற்றும் ஹஸ்ரத் அலி ஆகியோருக்குப் பிறகு அவர் நான்காவது முஸ்லிமாக ஆனார். அத்துடன், விடுதலை செய்யப்பட்ட அடிமைகளில் முதல் முஸ்லிமாக அவர் இருப்பதன் மூலமும் அவர் மேன்மை பெறுகிறார். அவருடன் அவரது மனைவி உம்மு அய்மனும் முஸ்லிமானார்.17

ஹஸ்ரத் அபூபக்ர் முஸ்லிமாக மாறியதும், அவர் உடனடியாக தனது அன்பான நண்பர்களிடம் சென்றார். அவர்களும் இஸ்லாத்தைத் தழுவும்படி அவர்களை வற்புறுத்தினார். அஸ்ஹாப் அல்-கிராமில் குறிப்பிடத்தக்கவர்களான உஸ்மான் இப்னு அஃப்பான், தல்ஹா இப்னு உபைதுல்லாஹ், ஸுபைர் இப்னு அவ்வாம், அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ப், ஸஅத் இப்னு அபீ வக்காஸ் போன்றவர்கள்; அவர்கள் தங்கள் கோத்திரங்களிலும் குறிப்பிடத்தக்கவர்களாக இருந்தனர்.18 எமது அன்னை ஹஸ்ரத் கதீஜாவுக்குப் பிறகு முஸ்லிம்களாக மாறிய இந்த எட்டு பேரும் ஸாபிகூன் அல்-இஸ்லாம், அதாவது முதல் முஸ்லிம்கள் என்று அழைக்கப்பட்டனர்.

ஹஸ்ரத் உஸ்மான், அவர் எப்படி முஸ்லிமாக ஆனார் என்பதை விவரிக்கிறார், "எனக்கு ஒரு தாய்வழி அத்தை இருந்தார். அவர் ஒரு சோதிடர். ஒரு நாள், நான் அவரைப் பார்க்கச் சென்றேன், அவர் என்னிடம் 'உனக்கு ஒரு மனைவி கிடைப்பாள். அவளுக்கு முன் உனக்கு மனைவி இருக்க மாட்டாள், உனக்கு முன் அவளுக்கு கணவன் இருக்க மாட்டான். அவள் ஒரு அழகான, பக்தியுள்ள பெண்ணாகவும், ஒரு பெரிய நபியின் மகளாகவும் இருப்பாள்." என்று சொன்னார். அத்தையின் வார்த்தைகளால் நான் வியந்தேன். மீண்டும், அவர் என்னிடம், "ஒரு நபி வந்திருக்கிறார். வஹீ வானத்திலிருந்து அவரிடம் இறங்கியுள்ளது." என்றார். நான் அவரிடம், "என் அத்தையே! இதுபோன்ற ஒரு ரகசியத்தை நகரத்தில் நான் கேள்விப்பட்டதில்லை. எனவே, இந்த வார்த்தையை தெளிவுபடுத்துங்கள்." என்று சொன்னேன். அப்போது என் அத்தை, "முஹம்மத் இப்னு அப்துல்லாஹ்வுக்கு நபித்துவம் வந்துவிட்டது. அவர் மக்களை இறைமார்க்கத்திற்கு அழைக்கிறார். விரைவில், உலகம் அவருடைய மார்க்கத்தால் பிரகாசிக்கும். எதிரிகள் தலை துண்டிக்கப்படுவார்கள்." என விவரித்தார்.

என் அத்தை சொன்ன வார்த்தைகள் என் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. நான் கவலைப்பட்டேன். ஹஸ்ரத் அபூபக்ருக்கும் எனக்கும் இடையே ஒரு பெரிய நட்பு இருந்தது. நாங்கள் ஒருவரையொருவர் பிரிந்ததில்லை. இரண்டு நாட்களுக்குப் பிறகு, இந்த விஷயத்தைப் பற்றி விசாரிக்க நான் ஹஸ்ரத் அபூபக்ரிடம் சென்றேன். என் அத்தையின் வார்த்தைகளை நான் அவரிடம் சொன்னபோது, ​​அவர், 'உஸ்மானே! நீங்கள் ஒரு புத்திசாலி நபர். பார்க்காத, கேட்காத, யாருக்கும் எந்த உபகாரமும், தீங்கும் செய்யாத சில கற்கள் எப்படி தெய்வீகத் தகுதிக்கு உரியனவாகும்?" என என்னிடம் கேட்டார். "நீங்கள் சொல்வது சரிதான். என் அத்தையின் வார்த்தைகள் சரியானவை." என்று நான் சொன்னேன்."

ஹஸ்ரத் உஸ்மானிடம் இஸ்லாத்தைப் பற்றிக் கூறிய பிறகு, ஹஸ்ரத் அபூபக்ர் அவரை மனிதர்கள் மற்றும் ஜின்களின் நபியான ரஸூலுஸ் ஸகலைனின் முன்னிலைக்கு அழைத்துச் சென்றார். ஹஸ்ரத் உஸ்மானிடம் நமது அன்பான நபி அவர்கள், "உஸ்மானே! ஜன்னாஹ்வில் விருந்தினராக வருமாறு ஹக் தஆலா உங்களை அழைக்கிறான். இந்த அழைப்பை ஏற்றுக் கொள்ளுங்கள். நான் எல்லா மக்களுக்கும் நேர்வழியின் வழிகாட்டியாக அனுப்பப்பட்டிருக்கிறேன்." என்று கூறினார்கள். ரஸூலுல்லாஹ்வின் உன்னதமான பழக்கவழக்கங்கள் மற்றும் சிரித்த முகத்துடன் அவர் சொன்ன வார்த்தைகளால் கவரப்பட்ட ஹஸ்ரத் உஸ்மான், “அஷ்ஹது அன் லா இலாஹ இல்லல்லாஹ் வ அஷ்ஹது அன்ன முஹம்மதின் அப்துஹு வ ரஸூலுஹ்” என்று கூறி மிகுந்த ஆர்வத்துடனும் பணிவுடனும் முஸ்லிமாக ஆனார்.

நபித்துவத்தின் முதல் மூன்று ஆண்டுகளில், நமது நாயகம் ரஸூலுல்லாஹ் ரகசியமாக மக்களை இஸ்லாத்திற்கு அழைத்தார். மக்கள் படிப்படியாக ஒருவர் பின் ஒருவராக முஸ்லிம்களாக மாறினர். அக்காலகட்டத்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கை முப்பதைத்தான் எட்டியது. அவர்கள் தங்கள் வீடுகளில் தங்கள் இபாதத்களைச் செய்பவர்களாகவும் குர்ஆன் அல்-கரீமின் இறக்கியருளப்பட்ட ஆயத் அல்-கரீமாக்களை ரகசியமாக ஓதுபவர்களாகவும் மனப்பாடம் செய்பவர்களாகவும் இருந்தனர்.

நெருங்கிய உறவினர்களை அழைத்தல்

நமது நாயகம் ரஸுலுல்லாஹ் அவர்கள் ஸூரா அல்-முத்தஸ்ஸிரின் வஹீ மூலம் மக்களை இஸ்லாத்திற்கு அழைக்கத் தொடங்கினார். அவர் இரகசியமாக அழைப்பு விடுத்தார். சிறிது காலம் கழித்து, "உங்கள் நெருங்கிய உறவினர்களை அல்லாஹு தஆலாவின் வேதனையைக் கொண்டு அச்சமூட்டி, சரியான மார்க்கத்திற்கு அழையுங்கள்" என்றவாறு மஆலில் இடம்பெறும் ஆயத் அல்-கரீமா,19 இறக்கியருளப்பட்டது. இதைத் தொடர்ந்து, எமது நாயகம் முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹஸ்ரத் அலியை அனுப்பி, தனது உறவினர்கள் அனைவரையும் அபூதாலிபின் வீட்டிற்கு அழைத்து, அவர்களை இறைமார்க்கத்திற்கு அழைக்கச் செய்தார். ஒரு தட்டு உணவையும், ஒரு கிண்ணத்தில் பாலையும் அவர்கள் முன் வைத்தார். பின்னர் அவர் பஸ்மலாஹ் கூறி முதலில் சாப்பிடத் தொடங்கினார். "நீங்களும் தயவுசெய்து சாப்பிடுங்கள்" என்று அவரது உறவினர்களிடம் அவர் கூறினார். அந்தச் சபையில் நாற்பதுபேர் இருந்தார்கள். இருப்பினும், வழங்கப்பட்ட உணவை அவர்கள் அனைவரும் தாராளமாகவும் சிறிதும் குறைவின்றியும் சாப்பிட்டார்கள். வந்தவர்கள் இந்த அதிசயத்தைக் கண்டு வியந்தனர். உணவுக்குப் பிறகு, எமது நபிகள் நாயகம் தம் உறவினர்களை இஸ்லாத்திற்கு அழைப்பதற்காகப் பேசவிருந்தார். அவரது மாமா அபூ லஹப் குரோதத்துடன், “இதுபோன்ற சூனியத்தை நாங்கள் இதற்கு முன்பு பார்த்ததில்லை. உங்கள் உறவினர் உங்களையெல்லாம் மயக்கிவிட்டார். என் சகோதரனின் மகனே! உன்னைப்போல் தீமையை வரவழைக்கும் யாரையும் நான் பார்த்ததில்லை” என்று திட்டிக்கொண்டே வார்த்தைகளைத் தொடர்ந்தார்.

"அல்லாஹ்வுடைய வேதனையைப்பற்றி அச்சமூட்டி, உம்முடைய நெருங்கிய உறவினர்களை சரியான மார்க்கத்திற்கு அழைப்பீராக!"
அஷ்-ஷுஅரா: 214

அப்போது நமது நபி அபூ லஹபிடம், "குறைஷிகளும் அனைத்து அரேபிய கோத்திரங்களும் செய்ய முடியாத தீமையை நீங்கள் எனக்கு செய்து விட்டீர்கள்!" என்று கூறினார். அவர்களில் யாரும் முஸ்லிம்களாக மாறாமல் கலைந்து சென்றனர்.

இந்த சம்பவத்திற்குப் பிறகு, அவர் தனது உறவினர்களை மீண்டும் அழைத்தார். ஹஸ்ரத் அலி மீண்டும் அனைவரையும் அழைத்தார். முன்பு போலவே, அவர்களுக்கு முன்னால் உணவு வைக்கப்பட்டிருந்தது. உணவருந்தி முடிந்ததும், நமது நபியவர்கள் எழுந்து நின்று, "ஹம்த் - புகழ் அல்லாஹு தஆலாவுக்கு மட்டுமே சொந்தமானது. நான் அவனிடம் மட்டுமே உதவி கேட்கிறேன். நான் அவனை நம்புகிறேன், அவனையே சார்ந்திருக்கிறேன். அல்லாஹு தஆலாவைத் தவிர வேறு இறைவன் இல்லை என்பதை நான் நன்கு அறிவேன். அவனுக்குச் சமமானவனும், அவனுக்கு இணையானவனும் எவருமில்லை." என்று கூறினார். அவர் தம்முடைய வார்த்தைகளைத் தொடர்ந்தார், "நான் எந்த வகையிலும் பொய் சொல்லவில்லை; நான் உண்மையைச் சொல்கிறேன். அல்லாஹு தஆலா ஒருவனே, அவனைத் தவிர வேறு கடவுள் இல்லை என்று நம்பும்படி நான் உங்களை அழைக்கிறேன். அவன் உங்களுக்கும் மனிதகுலத்திற்கும் அனுப்பிய அவனுடைய நபியாக நான் இருக்கிறேன். வல்லாஹி, நீங்கள் தூங்குவதைப் போலவே இறப்பீர்கள்; நீங்கள் தூக்கத்திலிருந்து விழிப்பதைப் போலவே எழுப்பப்படுவீர்கள், உங்கள் எல்லா செயல்களுக்கும் நீங்கள் கணக்குக் கேட்கப்படுவீர்கள்; உங்கள் நல்ல செயல்களுக்கு நீங்கள் வெகுமதி பெறுவீர்கள், உங்கள் தீய செயல்களுக்கு நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள். இத்தகையோர் சுவர்க்கத்திலோ அல்லது நரகத்திலோ நிரந்தரமாக இருப்பார்கள். நிச்சயமாக நான் உங்களுக்கு ஆகிரத்தின் (மறுமையின்) வேதனைகளைக் கொண்டு எச்சரிக்கை செய்பவர்களில் முதன்மையானவன்." என்றும் கூறினார்.

இந்த வார்த்தைகளைக் கேட்ட பிறகு, அபூதாலிப், “என்னுடைய மரியாதைக்குரிய மருமகனே! உங்களுக்கு உதவுவதை விட மதிப்புமிக்க எதுவும் எனக்குத் தெரியாது. நாங்கள் உங்கள் ஆலோசனையையும் உங்கள் வார்த்தைகளையும் உண்மையாக ஏற்றுக்கொண்டோம். இப்போது இங்கு கூடியிருப்பவர்கள் உங்கள் பாட்டன் அப்துல்முத்தலிபின் பிள்ளைகள். நான் நிச்சயமாக அவர்களில் ஒருவன். நீங்கள் எதை விரும்புகிறீர்களோ, அதற்காக நான் முதலில் ஓடுவேன். உங்களைச் சூழ்ந்து உங்களைப் பாதுகாப்பதை ஒரு நொடி கூட நான் நிறுத்த மாட்டேன் என்று உறுதியளிக்கிறேன். உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதை நீங்கள் தொடர்ந்து செய்யுங்கள். எனினும், எனது பழைய மதத்தை விட்டு வெளியேறுவது தொடர்பாக எனது நஃப்ஸ் (உடல் ஆத்மா) எனக்குக் கீழ்ப்படியவில்லை." என்று கூறினார்.

அபூலஹபைத் தவிர, நபியவர்களுடைய உறவினர்களும், மாமாக்களும் மென்மையாகப் பேசினார்கள். இருப்பினும், அபூ லஹப் மரியாதைக் குறைவாகப் பேசி மிரட்டல் விடுத்தார். “அப்துல்முத்தலிபின் மகன்களே! மற்றவர்கள் அவருடைய கைகளைக் கட்டி, அவரைத் தடுத்து நிறுத்துவதற்கு முன், அவரைத் தடுத்து நிறுத்துங்கள். இன்று அவர் சொல்வதை நீங்கள் ஏற்றுக்கொண்டால், நீங்கள் அவமானப்படுத்தப்படுவீர்கள், அவமதிக்கப்படுவீர்கள். நீங்கள் அவரைப் பாதுகாக்க முயற்சித்தால், நீங்கள் அனைவரும் கொல்லப்படுவீர்கள்." என்று அபூ லஹப் கூறினார். அப்போது, அபூ லஹபுக்குப் பதிலளிக்கும் விதமாக நபிகளாரின் அத்தை, “என் சகோதரரே! என் சகோதரனின் மகனையும் அவரது மார்க்கத்தையும் தனியாக விட்டுவிடுவது உங்களுக்குப் பொருந்துமா? வல்லாஹி - அல்லாஹ்வின் மீது ஆணையாக, இன்று வாழும் அறிஞர்கள், அப்துல் முத்தலிபின் சந்ததியினரில் இருந்து ஒரு நபி வருவார் என்று கூறுகிறார்கள். இதோ, அந்த நபி இவர்தான்." என்று கூறினார்.

இந்த வார்த்தைகளை மீறி அபூ லஹப் தனது அசிங்கமான பேச்சைத் தொடர்ந்தார். அபூ லஹப் மீது கோபமடைந்த அபூதாலிப், “கோழையே! வல்லாஹி, நாம் உயிருடன் இருக்கும் வரை அவருக்கு உதவியாளர்களாகவும் பாதுகாவலர்களாகவும் இருக்கிறோம்." என்று கூறினார். அவர் முஹம்மத் அலைஹிஸ்ஸலாம் பக்கம் திரும்பி, “என் சகோதரனின் மகனே! உங்கள் ரப்பை நம்பும்படி நீங்கள் மக்களை அழைக்க விரும்பும் நேரத்தை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்; நான் ஆயுதம் ஏந்தி உங்களுடன் காட்சியளிப்பேன்” என்று கூறினார். பின்னர், நமது நாயகம், ஃபக்ர் அல்-காயினாத் மீண்டும் பேசத் தொடங்கினார். “அப்துல்முத்தலிபின் மகன்களே! வல்லாஹி, நான் கொண்டு வந்ததை விட அதாவது இந்த மார்க்கத்தை விட உன்னதமான அல்லது நன்மையான ஒரு விடயத்தை தம்முடைய மக்களுக்குக் கொண்டு வந்தவர் அரேபியர்களில் எவரும் இல்லை. இது உலகத்திலும், ஆகிரத்திலும் (மறுமையிலும்) உங்கள் வாழ்க்கைக்கு நல்லது. மொழிவதற்கு எளிதான, அதிக எடையுள்ள இரண்டு வார்த்தைகளைச் சொல்ல நான் உங்களை அழைக்கிறேன். அதுதான், அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை என்றும், நான் அவனுடைய அடியானும் தூதுவனும் ஆவேன் என்றும் சாட்சியமளிப்பதாகும். இதற்கு உங்களை அழைக்குமாறு அல்லாஹு தஆலா எனக்குக் கட்டளையிட்டுள்ளான். உங்களில் யார் எனது அழைப்பை ஏற்று இந்தப் பாதையில் எனக்கு உதவுவீர்கள்?'' என்று நபியவர்கள் கேட்டார்கள். யாரும் எதுவும் சொல்லவில்லை; அவர்கள் அனைவரும் தலை குனிந்தனர். நமது நபியவர்கள் மூன்று தடவைகள் தம்முடைய வார்த்தைகளை திரும்பத் திரும்பச் சொன்னார்கள். ஒவ்வொரு முறையும், ஹஸ்ரத் அலி எழுந்து நின்றார். மூன்றாவது முறையாக, அவர், "ரஸூலல்லாஹ்வே! நான் இவர்களில் இளையவன் என்றாலும், நான் உங்களுக்கு உதவுவேன்." என்று கூறினார். இதைக் கேட்ட ரஸூலுல்லாஹ் ஹஸ்ரத் அலியின் கையைப் பிடித்தார். மற்றவர்கள் ஆச்சரியத்துடன் கலைந்து சென்றனர்.

அல்லாஹு தஆலாவின் ஹபீப் தனது உறவினர்களின் இந்த அணுகுமுறையால் மிகவும் வருத்தப்பட்டார். இருப்பினும், அவர் மனஉளைச்சலுக்கு ஆளாகாமல், ஜஹன்னமிடமிருந்து (நரகிலிருந்து) அவர்களை மீட்டு, பேரின்பத்தை அடைவதற்காக அவர்களைத் தொடர்ந்து அழைத்தார்.

“என் மாமாவே! அவர்கள் என் வலது கையில் சூரியனையும், என் இடது கையில் சந்திரனையும் கொடுத்தாலும் (அவர்கள் என்ன வாக்குறுதி அளித்தாலும்) இந்த மார்க்கத்தை நான் ஒருபோதும் கைவிட மாட்டேன் என்பதை அறிந்து கொள்ளுங்கள். ஒன்று, அல்லாஹு தஆலா இந்த மார்க்கத்தை உலகம் முழுவதற்கும் பரப்புவான்; அப்போது என் கடமை முடிந்து விடும்; அல்லது இந்தப் பாதையில் என் உயிரைத் தியாகம் செய்வேன்."
எமது அன்பார்ந்த நபி முஹம்மத் அலைஹிஸ்ஸலாம்

பிஃஸத் - நபித்துவத்தின் நான்காம் ஆண்டில், ஸூரா அல் ஹிஜ்ரின் 94 ஆவது ஆயத் அருளப்பட்டது. மஆலின் படி, “(எனது ஹபீபே!) உமக்குக் கட்டளையிடப்பட்டதை (கட்டளைகள் மற்றும் தடைகள்) பிரகடனப்படுத்துங்கள். எனவே, இணைவைப்பவர்களை விட்டும் நீங்கள் விலகியிருங்கள். அவர்களின் வார்த்தைகளுக்கு செவிசாய்க்காதீர்கள்!" என்ற இறை கட்டளை இறக்கியருளப்பட்டது. எங்கள் அன்பான நபி மக்காவாசிகளை வெளிப்படையாக இஸ்லாத்திற்கு அழைக்க ஆரம்பித்தார். ஒரு நாள், அவர் ஸஃபா மலையில் ஏறி, “குறைஷி மக்களே! இங்கே கூடி என் வார்த்தைகளைக் கேளுங்கள்!” என்று அழைப்பு விடுத்தார். கோத்திரத்தவர்கள் ஒன்றுகூடிய பிறகு, “என் மக்களே! நீங்கள் எப்போதாவது என்னிடமிருந்து ஒரு பொய்யைக் கேட்டிருக்கிறீர்களா?" என்று நபியவர்கள் வினவினார்கள். "இல்லை, நாங்கள் கேட்டதில்லை" என்று அவர்கள் அனைவரும் ஒன்றாகப் பதிலளித்தனர். "அல்லாஹு தஆலா எனக்கு நபித்துவத்தை அளித்து, என்னை உங்களுக்குத் தூதராக அனுப்பியுள்ளான்." என நபியவர்கள் கூறினார்கள். பின்னர் அவர் ஸூரா அல்-அஃராஃபின் 158-ஆவது வசனத்தை ஓதினார்: - மஆலின் படி, "(என் ஹபீபே!) அவர்களிடம், 'மக்களே! நான் உங்கள் அனைவருக்கும் அனுப்பப்பட்ட அல்லாஹு தஆலாவின் ரஸூல். அல்லாஹு தஆலா பூமிக்கும் வானத்திற்கும் சொந்தக்காரன். அவனே உயிர்ப்பிப்பவனாகவும், மரிக்கச் செய்பவனாகவும் இருக்கின்றான். அவனையன்றி (வேறு) கடவுள் இல்லை என்று கூறூவீராக." அங்கு கேட்பவர்களின் மத்தியில் இருந்த அபூ லஹப், நிராகரிப்பில் பிடிவாதமாக இருந்தவராக, "என் சகோதரனின் மகனுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது! நமது சிலைகளை வணங்காத, நம் மதத்தில் இல்லாதவரின் வார்த்தைகளைக் கேட்காதீர்கள்!" என்று கோபத்துடன் கத்தினார். அங்குள்ள மக்கள் கலைந்து சென்றனர். யாரும் இஸ்லாத்தைத் தழுவவில்லை. எமது நபி நம்பகமானவர், உயர்ந்த ஒழுக்கம் உடையவர் என்பதை அவர்கள் அறிந்திருந்தும், அவர்கள் அவரைப் புறக்கணித்தார்கள்; அவர்கள் விரோதமாக மாறினர்.

மீண்டும் ஒரு நாள், "உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதை (கட்டளைகள் மற்றும் தடைகள்) பிரகடனப்படுத்துங்கள்" என்ற அல்லாஹு தஆலாவின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, நமது நபி ஸஃபா மலையில் ஏறினார். "ஸபாஹா! இங்கே வாருங்கள், கூடி வாருங்கள்; உங்களுக்கான முக்கியமான செய்தி என்னிடம் உள்ளது!” என அவர் மக்களை அழைத்தார்.20 88 இந்த அழைப்பின் பேரில் கோத்திரத்தவர்கள் ஓடி வந்தனர். அவர்கள் ஆச்சரியத்துடனும் ஆர்வத்துடனும் காத்திருக்க ஆரம்பித்தார்கள். வராதவர்கள் தங்கள் வேலையாட்களை அனுப்பி கூட்டத்தின் காரணத்தை அறிந்து வரச் சொன்னார்கள். வந்திருந்தோரில் ஒரு குழு, “முஹம்மதே-அல்-அமீன் (நம்பிக்கைக்குரிய முஹம்மதே)! எதற்காக எங்களை இங்கு ஒன்று கூட்டினீர்கள்? நீங்கள் எங்களுக்கு எதனை அறிவிக்கப் போகிறீர்கள்?" என்று வினவினர். அப்போது நமது நபிகள் நாயகம், “குறைஷிக் கோத்திரத்தாரே!” என்று தனது உரையைத் தொடங்கினார். அனைவரும் கவனத்துடன் கேட்டுக் கொண்டிருந்தனர். "உங்களுக்கும் எனக்கும் இடையிலான நிலைமை, எதிரிகள் நெருங்கி வருவதைக் கண்டு, தம் குடும்பத்தாரிடம் விரைந்து சென்று, "ஸபாஹா – (மக்களே! நாம் எதிரிகளால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளோம்; போர் செய்யத் தயாராகுங்கள்)" என்று கூக்குரலிடும் நபரின் நிலைக்கு ஒப்பானது. அவன் எதிரி தன் குடும்பத்தினரிடம் அவனுக்கு முன்பே சென்று, அவர்களைத் துன்புறுத்துவார்கள் என்று அஞ்சுகிறான். குறைஷி மக்களே! அந்த மலைக்குப் பின்னால் ஒரு எதிரிப் படை இருக்கிறது, அது உங்களைத் தாக்கப் போகிறது என்று நான் சொன்னால் நீங்கள் நம்புவீர்களா?" என்று நபியவர்கள் அவர்களிடம் கேட்டார்கள். "ஆம், நாங்கள் நம்புவோம். நாங்கள் இதுவரை உங்களிடமிருந்து உண்மையைத் தவிர வேறு எதையும் கண்டதில்லை. நீங்கள் பொய் பேசியதை நாங்கள் பார்த்ததில்லை!” என்று அவர்கள் பதிலளித்தார்கள்.

அதன்பின், ஒவ்வொரு கோத்திரத்தின் பெயரையும் பட்டியலிட்டவராக, “ஹாஷிமின் சந்ததியினரே! அப்துல் மனாஃபின் மகன்களே! அப்துல்முத்தலிபின் மகன்களே! நிச்சயமாக நான், கண்டிப்பாக நிகழும் கடுமையான வேதனையைப் பற்றி எச்சரிக்கை செய்பவனாக இருக்கின்றேன். அல்லாஹு தஆலா எனது நெருங்கிய உறவினர்களை ஆகிரத்தின் (மறுமையின்) வேதனையைக் கொண்டு அச்சமூட்டி எச்சரிக்குமாறு எனக்குக் கட்டளையிட்டான். லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீகலஹ் (அல்லாஹ் ஒருவன், அவனைத் தவிர வேறு கடவுள் இல்லை) என்று கூறி இஸ்லாத்தைத் தழுவ உங்களை நான் அழைக்கிறேன். நான் அவனுடைய அடியானும், ரஸூலும் ஆவேன். இதை நம்பினால் நீங்கள் ஜன்னாஹ் - சுவனம் செல்வீர்கள். நீங்கள் 'லா இலாஹ இல்லல்லாஹ்' என்று கூறாத வரையில் என்னால் இவ்வுலகில் உங்களுக்கு உதவவும் முடியாது, ஆகிரத்தில் - மறுமையில் எந்த நன்மையும் செய்யவும் முடியாது." என்று பிரச்சாரம் செய்தார். கேட்டுக் கொண்டிருந்த கோத்திரத்தவர்களிடையே இருந்த அபூ லஹப், "இதற்காகவா எங்களை ஒன்று கூட்டினீர்?" என்று கேட்டார். அத்துடன், தரையில் இருந்து எடுத்த ஒரு கல்லை, நம்முடைய பிரியமான நபி மீது வீசினார். மற்றவர்களிடமிருந்து அப்படி எந்த எதிர்ப்பும் வரவில்லை. அவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டு கலைந்து சென்றனர்.21

அவர்கள் சூரியனை என் வலது கையில் கொடுத்தாலும்!

இவ்வாறான அழைப்புகளுக்குப் பிறகு, நம் அன்பான நபிகள் நாயகம் ஒருவரையோ அல்லது மக்கள் குழுவையோ எங்கு பார்த்தாலும் இஸ்லாத்தை எடுத்துரைப்பார். அல்லாஹு தஆலாவை நம்புவதன் மூலமும், நஃப்ஸ் (சரீர ஆன்மா), அடக்குமுறை, அநீதி மற்றும் எல்லா வகையான கெட்ட செயல்களையும் பின்பற்றுவதைத் தவிர்ப்பதன் மூலமும் உண்மையான இரட்சிப்பு சாத்தியமாகும் என்று அவர் கூறினார். தங்கள் நஃப்ஸின் ஆசைகளையும் இச்சைகளையும் பின்பற்றியவர்கள், பலவீனமானவர்களை அடக்கி, ஒழுக்கக் கேட்டில் உச்சத்திற்குச் சென்றவர்கள் இதைக் கடுமையாக எதிர்த்தனர். அவர்களின் அனைத்து தீய செயல்களும் முடிவுக்கு வரும் என்று பார்த்த அவர்கள், முஹம்மத் அலைஹிஸ்ஸலாம், அவர்களிடம் சொன்னதை மறுத்தனர். அவர்கள் அவருக்கும் நம்பிக்கையாளர்களுக்கும் பகைவர்களாக மாறினார்கள்.

ஆரம்பத்தில், பல தெய்வ வழிபாட்டாளர்கள் இஸ்லாத்தைக் கேலி செய்தனர். பின்னர், அவர்கள் தங்கள் அழுத்தங்களையும் வேதனைகளையும் அதிகரிக்க முடிவு செய்தனர். அவர்கள் முஃமின்களைத் துன்புறுத்தவும், இஸ்லாத்தை அணைத்து விடவும் விரும்பினார்கள். அவர்களின் தலைவர்கள் அபூ ஜஹ்ல், உத்பா, ஷைபா, அபூ லஹப், உக்பா இப்னு அபி முஐத், அஸ் இப்னு வாஇல், அஸ்வத் இப்னு முத்தலிப், அஸ்வத் இப்னு அப்தி யக்வாஸ், வலீத் இப்னு முகீரா...போன்றோராவர்.

ஒரு நாள், உத்பா, ஷைபா மற்றும் அபூஜஹ்ல் ஆகியோர் அபூ தாலிபிடம் வந்து, "நீங்கள் எங்களில் மூத்தவர். நாங்கள் எப்போதும் உங்களை மதிக்கிறோம், கண்ணியப்படுத்துகிறோம். இப்போது, உங்கள் சகோதரனின் மகன் ஒரு புதிய மதத்தை ஆரம்பித்துள்ளார். அவர் எங்கள் சிலைகளை அவமதிக்கிறார். நாம் இறைநிராகரிப்பாளர்கள் என்று குற்றம் சாட்டுகிறார். அவருக்கு அறிவுரை கூறுங்கள். அவரை இந்த வேலையைக் கைவிடச் செய்யுங்கள். அவர் அவ்வாறு செய்யவில்லையென்றால், அவரை எப்படி எதிர்கொள்வது என்பது எங்களுக்குத் தெரியும்...” என்று கூறினார்கள். அபூ தாலிப் அவர்களை சமாதானப்படுத்தி அவர்களைத் திருப்பி அனுப்பினார். நமது தூதரை தொந்தரவு செய்யாமல் இருக்க நாடி, இந்த நிகழ்வை அவரிடம் கூறாமல் மறைத்தார். சிறிது காலம் கழித்து, இணைவைப்பாளர்கள் மீண்டும் ஒன்று கூடி அபூதாலிபிடம் வந்தனர். அவர்கள், “நாங்கள் முன்பே உங்களிடம் வந்து நிலைமையை உங்களுக்குத் தெரிவித்திருந்தோம். நீங்கள் எங்கள் வார்த்தைகளைக் கேட்கவில்லை. இப்போதும் அவர் நம் சிலைகளைப் பற்றிக் கேவலமாகப் பேசிக்கொண்டே இருக்கிறார். எங்களுக்கு இனி பொறுமை இல்லை. எங்கள் இரத்தத்தின் கடைசித் துளி வரை உங்கள் இருவருடனும் நாம் போராடுவோம். மக்காவில், அவர் அல்லது நாம் அழிந்து போவோம்." என்று கூறினார்கள். அபூ தாலிப் அவர்களை சமாதானப்படுத்த முயன்றார். ஆனால் அவர்கள் தங்கள் பிடிவாதத்தில் உறுதியாக இருந்தனர்.22

அபூதாலிப் எமது நாயகம் ரஸூலுல்லாஹ் வருத்தப்படுவதை விரும்பவில்லை. அவர்களுக்கும் அவர்களின் மக்களுக்கும் இடையே எந்தப் பகையும் ஏற்படுவதை அவர் விரும்பவில்லை. அவர் எங்கள் நபியிடம் வந்து, “முஹம்மதே! எங்கள் மக்கள் அனைவரும் உங்கள் மீது பகைமை கொண்டு என்னிடம் புகார் கொடுக்க வந்தனர். உறவினர்களிடையே பகைமை இருப்பது நல்லதல்ல. நீர் அவர்களை நிராகரிப்பாளர்கள் என்று கூறாதிருக்க வேண்டுமென்று அவர்கள் விரும்புகிறார்கள். ஆகவே, நீர் அவர்களை "அவர்கள் வழி கெட்டவர்கள்" என்று கூறாதிருக்க வேண்டுமென்று அவர்கள் விரும்புகிறார்கள்." என்று கூறினார். அதற்கு எமது நாயகம் ஹபீப் அல்-அக்ரம், “என் மாமாவே! அவர்கள் என் வலது கையில் சூரியனையும், என் இடது கையில் சந்திரனையும் கொடுத்தாலும் (அவர்கள் என்ன வாக்குறுதி அளித்தாலும்) இந்த மார்க்கத்தை நான் ஒருபோதும் கைவிட மாட்டேன் என்பதை அறிந்து கொள்ளுங்கள். ஒன்று, அல்லாஹு தஆலா இந்த மார்க்கத்தை உலகம் முழுவதற்கும் பரப்புவான்; அப்போது என் கடமை முடிந்து விடும்; அல்லது இந்தப் பாதையில் என் உயிரைத் தியாகம் செய்வேன்." என்று கூறி எழுந்து நின்றார். அவரது அருள்வாய்ந்த கண்கள் கண்ணீரால் நிறைந்தன.

“குறைஷியே! நான் சொல்வதைக் கேளுங்கள்! என் வாழ்வைக் கையில் வைத்திருக்கும் அல்லாஹு தஆலின் மீது சத்தியமாக, நீங்கள் கேவலமடைந்து விடுவீர்கள் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது!”
எமது அன்பார்ந்த நபி முஹம்மத் அலைஹிஸ்ஸலாம்

அபூ தாலிப், நமது நாயகம் ரஸூலுல்லாஹ் வருத்தப்பட்டதைக் கண்டு, அவர் கூறியதைப் பற்றி வருத்தப்பட்டார். அவரைக் கட்டிப்பிடித்து, "என் சகோதரனின் மகனே! நீர் உமது வழியில் தொடர்வீராக, நீர் விரும்பியதைச் செய்வீராக. நான் உயிருடன் இருக்கும் வரை நான் உம்மைப் பாதுகாப்பேன்" என்று கூறினார்.23

அபூதாலிப் ஹஸ்ரத் முஹம்மதைப் பாதுகாக்கிறார் என்பதை பல தெய்வீகவாதிகளின் பத்து முக்கியஸ்தர்கள் அறிந்து கொண்டபோது, ​​அவர்கள் உமாரா இப்னு வலீதைத் தம்முடன் அழைத்துக்கொண்டு அபூதாலிபிடம் சென்றனர்.

அவர்கள் அவருக்கு ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு வாய்ப்பை வழங்கினர், "அபூ தாலிப் அவர்களே! இந்த உமாரா மிக அழகானவர், மிகவும் ஒழுக்கமானவர், மக்கா இளைஞர்களில் மிகவும் வலிமையானவர் என்பது உங்களுக்குத் தெரியும். அவர் ஒரு கவிஞரும் கூட. நாம் அவரை உங்களுக்குக் கொடுப்போம், உங்கள் சொந்த வியாபாரத்தில் அவரைப் பயன்படுத்துங்கள். உமாராவுக்கு ஈடாக முஹம்மதை எங்களுக்குக் கொடுங்கள், நாங்கள் அவரைக் கொல்வோம். அப்போது ஒரு மனிதனுக்குப் பகரமாக ஒரு மனிதன் என்றாகி விடும்! உங்களுக்கு இன்னும் என்ன வேண்டும்?" என்று பேரம் பேசத் தொடங்கினர். அபூ தாலிப் கோபமடைந்தார். "முதலில் உங்கள் சொந்த மகன்களை எனக்குக் கொடுங்கள். நான் அவர்களைக் கொன்றுவிடுவேன். பிறகு என் மருமகனை உங்களுக்குக் கொடுப்பேன்" என்று அவர் கோபத்துடன் சொன்னார். அப்போது, அவர்கள் நிலைமையின் தீவிரத்தைப் புரிந்து கொண்டு அவரிடம், "ஆனால், அவர் செய்வதை எங்கள் பிள்ளைகள் செய்வதில்லை..." என்று சொன்னார்கள். அதற்கு அபூதாலிப், “உங்கள் எல்லாப் பிள்ளைகளையும் விட என் மருமகன் சிறந்தவர் என்று நான் சத்தியம் செய்கிறேன். நீங்கள் சொல்வதன்படி, நீங்கள் உங்கள் மகனை எனக்குக் கொடுத்து, என்னை வளர்க்கச் செய்வீர்கள், அதே நேரத்தில் நீங்கள் என் செல்ல மருமகனைக் கொண்டுபோய் கொன்றுவிடுவீர்கள்! ஒரு பெண் ஒட்டகம் கூட தன் குழந்தையைத் தவிர வேறு யாருக்காகவும் ஏங்குவதில்லை அல்லது பாதுகாப்பதில்லை. இது முற்றிலும் நியாயமற்றது; மேலும் இது பகுத்தறிவற்றது. இப்போது, ​​இது கை மீறிப் போய்விட்டது. யார் என் அன்பான முஹம்மத் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்கு விரோதியாக இருக்கிறாரோ, நான் அவருக்கு விரோதியாக இருக்கிறேன். இதை அறிந்து, உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள்!" என்று கூறினார்.24 பலதெய்வவாதிகள் எழுந்து கோபத்துடன் அங்கிருந்து சென்றனர்.

அபூதாலிப் உடனடியாக ஹாஷிமின் மகன்களையும் அப்துல்முத்தலிபின் மகன்களையும் ஒன்று சேர்த்தார். அவர்களுக்கு நிலைமையை விளக்கி, நமது அன்பான நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு உதவி செய்யுமாறு அவர்களை வற்புறுத்தினார். ரஸூலுல்லாஹ்வைக் கொல்ல முயலும் ஆயுதங்கள் உடைக்கப்படும். இந்த விஷயத்தில் அவர்கள் இணைவைப்பாளர்களுக்கு எதிராக ஒன்றிணைந்தனர். அபூலஹப் மட்டும் அவர்களுடன் சேரவில்லை. அபூதாலிப் தாலிப் அவர்களிடம், “வீரர்களே! நாளை, நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் வாளைக் கட்டிக்கொண்டு என்னைப் பின்தொடருங்கள்" என்றார். அடுத்த நாள், அபூதாலிப் எங்கள் நபிகள் நாயகத்தின் வீட்டிற்குச் சென்றார். அனைவரும் சேர்ந்து, ஹரம் அஷ்-ஷரீப் நோக்கி நடந்தார்கள். ஹாஷிமின் சந்ததியினரின் இளைஞர்கள் அவர்களைப் பின்தொடர்ந்தனர். அவர்கள் கஃபாவை அடைந்து முஷ்ரிக்குகளுக்கு முன்னால் நின்றனர். அபூதாலிப் பல தெய்வ வழிபாடு செய்பவர்களிடம், “குறைஷ் சமூகமே! நீங்கள் என் மருமகனைக் கொல்ல முடிவு செய்துள்ளீர்கள் என்று கேள்விப்பட்டேன். எனக்குப் பின்னால் இருக்கும் இளைஞர்கள் கையில் வாள் வைத்து என் சமிக்ஞைக்காகக் காத்திருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? நான் சத்தியம் செய்கிறேன், நீங்கள் முஹம்மதைக் கொன்றால், நான் உங்களில் யாரையும் உயிருடன் விடமாட்டேன்!..." என்று பிரகடனம் செய்தார். பிறகு, நம் அன்பிற்குரிய நபியைப் புகழ்ந்து கவிதைகளைப் படிக்கத் தொடங்கினார். அங்கிருந்த பலதெய்வவாதிகள் கலைந்து சென்றனர். அவர்களில் அபூஜஹ்ல் முதன்மையானவராக இருந்தார்.