ரஜீ சம்பவம்
உஹத் கஸாவின் முக்கிய வில்லாளிகளில் ஒருவரான ஹஸ்ரத் ஆஸிம் இப்னு தாபித் அந்தப் போரில் இணைவைப்பாளரான முஸாஃபி இப்னு தல்ஹா மற்றும் அவரது சகோதரர் ஹாரித் ஆகியோரைக் கொன்றார். அவர்களின் தாயார் சுலஃபா பின்த் ஸஅத், தனது இரண்டு மகன்களைக் கொன்ற ஹஸ்ரத் ஆஸிம் இப்னு தாபித்தின் தலையைக் கொண்டு வருபவர்களுக்கு நூறு ஒட்டகங்களை வழங்குவதாக வாக்குறுதி அளித்தார். ஹஸ்ரத் ஆஸிமின் மண்டையோட்டிலிருந்து மதுவைக் குடிப்பதாக அவர் சத்தியம் செய்தார். அத்துடன், எமது நாயகம் ரஸூலுல்லாஹ் அனுப்பிய படையெடுப்பில் அப்துல்லாஹ் இப்னு உனைஸ், லிஹ்யானின் மகன்களில் ஒருவரான காலித் இப்னு சுஃப்யானைக் கொன்றதால் லிஹ்யானின் மகன்கள் அதல் மற்றும் கரா கோத்திரங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டனர்.
"காயமடைந்த பின்னரும், அல்லாஹு தஆலா மற்றும் அவனுடைய ரஸூலின் அழைப்பின் பேரில் மீண்டும் ஓடிச் சென்றவர்களுக்கு, குறிப்பாக அவர்களில் நன்மை செய்பவர்களுக்கும் தீமையைத் தவிர்ப்பவர்களுக்கும் பெரும் வெகுமதி உண்டு."
ஆல இம்ரான்: 172.
மக்காவின் சுற்றுப்புறத்தில் வாழ்ந்த இவ்விரு கோத்திரத்தார்களும் திட்டம் தீட்டி தூதர்களைத் தயார் செய்தனர். அவர்கள், "நீங்கள் முஸ்லிம்களாக மாறிவிட்டீர்கள் என்று அவர்களிடம் கூறுங்கள்! ஸகாத்தை வழங்குங்கள். உங்களிடம் ஸகாத் சேகரிக்கவும் இஸ்லாத்தைக் கற்றுக் கொடுக்கவும் ஆசிரியர்களை அவர்களிடம் கேளுங்கள். அவ்வாறு வருபவர்களில் சிலரைக் கொன்று பழிவாங்குவோம். மற்றவர்களை மக்காவுக்கு அழைத்துச் சென்று குறைஷிகளிடம் விற்றுவிடுவோம்" என்று கூறினார்கள்.
ஹிஜ்ராவின் நான்காம் ஆண்டில், ஸஃபர் மாதத்தில், இந்த இரண்டு கோத்திரங்களிலிருந்தும் ஆறு அல்லது ஏழு பேர் கொண்ட ஒரு குழு எமது தலைவரான நபியிடம் வந்து, "நாங்கள் முஸ்லிம்களாக மாறிவிட்டோம். எங்களுக்கு குர்ஆனையும், இஸ்லாத்தையும் கற்றுக் கொடுப்பதற்காக ஆசிரியர்களை அனுப்புங்கள்!" என்று வேண்டினார்கள்.
இதற்கிடையில், மக்கா இணைவைப்பாளர்கள் போருக்கு தயாராகிறார்களா என்பதை அறிய எமது அன்பு நபி பத்து பேர் கொண்ட ஒரு இராணுவப் படையைத் தயார் செய்திருந்தார். அதல் மற்றும் கரா கோத்திரங்களிலிருந்து ஒரு ஆசிரியரைக் கேட்ட குழு வந்தபோது, அவர் இந்த பத்து பேர் கொண்ட ரோந்துக் குழுவை அந்தக் குழுவுடன் அனுப்பி, நிலைமையை விசாரித்து அறிவிக்குமாறு உத்தரவிட்டார்.
இந்த ஸரிய்யாவில் மர்ஸத் இப்னு அபீ மர்ஸத், காலித் இப்னு அபீ புகைர், ஆஸிம் இப்னு தாபித், குபைப் இப்னு அதிய், ஸைத் இப்னு தஸின்னா, அப்துல்லாஹ் இப்னு தாரிக், முஅத்திப் (முகீர்) இப்னு உபைத் ஆகியோரும் பெயர் தெரியாத மூன்று ஸஹாபிகளும் (ரழியல்லாஹு அன்ஹூம்) அடங்குவர்.
பகலில் மறைந்தும், இரவில் நடந்தும் இந்த கண்காணிப்புக் குழு விடியற்காலையில் ரஜீயின் நீர்நிலையை அடைந்தது. அவர்கள் அங்கு சிறிது நேரம் ஓய்வெடுத்து, அஜ்வா என்று அழைக்கப்படும் நல்ல தரமான மதீனா பேரீச்சம் பழங்களைச் சாப்பிட்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கிளம்பி அருகிலிருந்த மலையில் ஒளிந்து கொண்டனர்.
ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஹுஸைல் குலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணும் ரஜீயின் நீர்நிலைக்கு வந்தாள். பேரீச்சை விதைகளைப் பார்த்த அப்பெண், அங்கே சிலர் மதீனா பேரீச்சம்பழம் சாப்பிட்டதைப் புரிந்து கொண்டாள். "மதீனாவிலிருந்து சிலர் இங்கே வந்திருக்கிறார்கள்" என்று கத்திக்கொண்டே அவள் தன் கோத்திரத்தினரிடம் சென்று சொன்னாள். இதற்கிடையில், அஸ்ஹாப் அல்-கிராமில் இருந்து பத்து பேர் கொண்ட குழுவுடன் இருந்த அதல் மற்றும் கரா கோத்திரங்களின் தூதர்களில் ஒருவர், அவர்களுக்கு ஒரு சாக்குப்போக்கைக் கூறி அஙகிருந்து சென்றார். உடனே அவர் லிஹ்யானின் மகன்களிடம் சென்று இதனை அறிவித்தார்.
இந்தச் செய்தியைக் கேட்டதும் லிஹ்யானின் மகன்கள் செயலில் குதித்தனர். அவர்கள் இருநூறு வீரர்களைக் கொண்ட ஒரு படையை இந்தச் சிறிய படைக்கு எதிராக அனுப்பினர். அவர்களில் நூறு பேர் வில்லாளிகள். இந்த இணைவைப்பாளர்களின் குழு ஹஸ்ரத் ஆஸிம் இப்னு தாபித் மற்றும் அவரது நண்பர்கள் மலை உச்சியில் இருப்பதைக் கண்டு அவர்களைச் சூழ்ந்து கொண்டனர். இதற்கிடையில், பத்து ஸஹாபிகளின் நிலைமையைப் பற்றி இணைவைப்பாளர்களுக்கு அறிவித்த நபரும் அவர்களுடன் சேர்ந்து கொண்டார். தாங்கள் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்பதை அஸ்ஹாப் அல்-கிராம் அந்த நொடியில் உணர்ந்தார்கள். அவர்கள் போரிட முடிவு செய்து தங்கள் வாட்களை உருவினர். நிலைமையைப் புரிந்துகொண்ட இணைவைப்பாளர்கள், "நீங்கள் கீழே இறங்கி வந்தால், உங்களில் எவரையும் நாங்கள் கொல்ல மாட்டோம்" என்று கூறி அவர்களை ஏமாற்ற முயன்றனர். நாங்கள் ஒரு உறுதியான வாக்குறுதியை அளிக்கிறோம். வல்லாஹி, நாங்கள் உங்களைக் கொல்ல விரும்பவில்லை. எனினும், மக்காவாசிகளிடமிருந்து உங்களுக்காக மீட்கும் பொருளைப் பெற நாங்கள் விரும்புகிறோம்" என்று அவர்கள் கூறினார்கள்.
"யா அல்லாஹ்! உனது மார்க்கத்தை நான் இந்நாள் வரை பாதுகாத்து வந்துள்ளேன். இந்த நாளின் முடிவில் என் உடலைக் காப்பாற்றுமாறு நான் உன்னிடம் மன்றாடுகிறேன்!"
ஆஸிம் இப்னு தாபித் (ரழியல்லாஹு அன்ஹ்)
ஆஸிம் இப்னு தாபித், மர்ஸத் இப்னு அபீ மர்ஸத், காலித் இப்னு அபீ புகைர் (ரழியல்லாஹு அன்ஹும்) ஆகியோர் "இணைவைப்பாளர்களின் வார்த்தைகளையும் வாக்குறுதிகளையும் நாங்கள் ஒருபோதும் ஏற்க மாட்டோம்" என்று கூறி அவர்களின் அனைத்து சலுகைகளையும் நிராகரித்தனர். ஹஸ்ரத் ஆஸிம் இப்னு தாபித், "இணைவைப்பாளர்களின் பாதுகாப்பை ஒருபோதும் ஏற்க மாட்டேன் என்று நான் சத்தியம் செய்துள்ளேன். அவர்களின் பாதுகாப்பையும் வார்த்தைகளையும் நம்பி நான் கீழே இறங்கி சரணடைய மாட்டேன் என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கிறேன்" என்று கூறினார். அவர் கைகளை உயர்த்தி, "என் இறைவா! எங்கள் நிலைமையை உனது நபிக்குத் தெரிவிப்பாயாக!" என்று பிரார்த்தனை செய்தார். அல்லாஹு தஆலா ஹஸ்ரத் ஆஸிமின் பிரார்த்தனையை ஏற்று எமது நாயகம் ரஸூலுல்லாஹ்விடம் விடயத்தை அறிவித்தான்.
ஹஸ்ரத் ஆஸிம் இணைவைப்பாளர்களிடம், "நாங்கள் மரணத்தைப் பற்றி அஞ்சவில்லை. ஏனெனில், நாங்கள் எங்கள் மார்க்கத்தில் உறுதியாக இருக்கிறோம் (நாங்கள் இறந்தவுடன் ஷஹீதுகளாகி ஜன்னாவுக்குச் செல்கிறோம்) என்று கூறினார். முஷ்ரிக்குகளின் தலைவர் அவரிடம், "ஆஸிமே! உங்களையும் உங்கள் நண்பர்களையும் வீணாக்காதீர்கள், சரணடையுங்கள்!" என்று கூறியபோது, ஆஸிம் இப்னு தாபித் அம்பு எய்தார். அவர் அம்பெய்து கொண்டிருந்தபோது, அவர் இந்த வரிகளை ஓதிக் கொண்டிருந்தார்:
நான் வலிமையானவன், என்னிடம் எந்தக் குறையும் இல்லை.
என் வில்லின் தடித்த நாண் இழுக்கப்பட்டது.
மரணம் உண்மை, வாழ்க்கை பொய்யானது, தற்காலிகமானது.
அவை அனைத்தும் நிறைவேறும், விதியில் உள்ள அனைத்து விஷயங்களும்.
மக்கள் இறுதியாக அல்லாஹு தஆலாவிடம் திரும்பிச் செல்வார்கள்.
நான் உன்னுடன் சண்டையிடவில்லை என்றால், என் தாய்,
(அவளது வேதனையால்) அவளது நல்லறிவை இழக்க நேரிடும்.
ஆஸிமின் அம்பறாத்துணியில் ஏழு அம்புகள் இருந்தன. தான் எய்யும் ஒவ்வொரு அம்பிலும் ஒரு இணைவைப்பாளரைக் கொன்றார். அவரது அம்புகள் தீர்ந்தபோது, அவர்களில் பலரைத் தன் ஈட்டியால் கொன்றார். ஆனால், அவரது ஈட்டி முறிந்தது. உடனே தன் வாளை உருவி அதன் உறையை முறித்தார். பிறகு, "என் அல்லாஹ்! உனது மார்க்கத்தை நான் இந்நாள் வரை பாதுகாத்து வந்துள்ளேன். இந்த நாளின் முடிவில் என் உடலைக் காப்பாற்றுமாறு நான் உன்னிடம் மன்றாடுகிறேன்." என்றார். ஆஸிம் இப்னு தாபித் மற்றும் பிற ஸஹாபிகளின் "அல்லாஹு அக்பர்!" என்ற முழக்கங்கள் மலைகளை அதிர வைத்தன. இருநூறு பேருக்கு எதிராக பத்து முஜாஹிதுகள் மரணத்தை நோக்கிப் போராடிக் கொண்டிருந்தனர். அவர்களை அணுகியவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்களுடைய செயலுக்கான விலையை செலுத்திக்கொண்டிருந்தனர். ஆஸிம் அவரது இரு கால்களிலும் காயமடைந்து இறுதியில் தரையில் விழுந்தார். இறைநிராகரிப்பாளர்கள் அவருக்கு மிகவும் பயந்ததால், அவர் வீழ்ந்த பிறகும் கூட அவர்களால் அவரை நெருங்க முடியவில்லை. அவர்கள் தூரத்திலிருந்து அம்புகளை எய்து அவரை ஷஹீதாக்கினர். அன்று, அங்கிருந்த பத்து ஸஹாபிகளில் ஏழு பேர் ஷஹீதாக்கப்பட்டனர். அவர்களில் மூன்று பேர் சிறைபிடிக்கப்பட்டனர்.
லிஹ்யானின் மகன்கள் ஆஸிம் இப்னு தாபித்தின் அருள்மிகுந்த தலையை வெட்டி அதை சுலஃபா பின்த் ஸஅதுக்கு விற்க விரும்பினர். எனினும் ஹஸ்ரத் ஆஸிம் இப்னு தாபிதின் பிரார்த்தனையை அல்லாஹு தஆலா ஏற்றுக் கொண்டான். தேனீக்களின் கூட்டத்தை அனுப்பினான். ஒரு மேகம் போல அவை ஆஸிம் இப்னு தாபித் மீது வட்டமிட்டன. இணைவைப்பாளர்கள் அவரை நெருங்க முடியவில்லை. கடைசியில், "அவரை விட்டுவிடுவோம். மாலையில் தேனீக்கள் கலைந்து போகும், அதன் பிறகு தலையை வெட்டி எடுத்துச் செல்வோம்" என்றார்கள்.
மாலையில் அல்லாஹு தஆலா பலத்த மழை பெய்யச் செய்தான். சிற்றோடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஆஸிம் இப்னு தாபித்தின் அருள்மிகுந்த உடலை அறியப்படாத இடத்திற்கு எடுத்துச் சென்றது. எவ்வளவோ தேடியும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால், இணைவைப்பாளர்களால் ஹஸ்ரத் ஆஸிம் இப்னு தாபித்தின் எந்தப் பகுதியையும் வெட்ட முடியவில்லை. தேனீக்கள் அவரைப் பாதுகாத்த சம்பவம் பற்றிக் குறிப்பிடப்பட்டபோது, ஹஸ்ரத் உமர், "அல்லாஹு தஆலா நிச்சயமாக தனது முஃமினான அடியானைப் பாதுகாக்கிறான். ஆஸிம் இப்னு தாபித் உயிருடன் இருந்தபோது இணைவைப்பாளர்களிடமிருந்து பாதுகாக்கப்பட்டதைப் போலவே, அல்லாஹு தஆலா அவரது மரணத்திற்குப் பிறகு அவரது உடலைப் பாதுகாத்தான், இணைவைப்பாளர்களை அவரைத் தொட அவன் அனுமதிக்கவில்லை." என்றார். இதன் காரணமாகவே ஆஸிம் இப்னு தாபித் நினைவுகூரப்படும் போதெல்லாம் அவர் "தேனீக்களால் பாதுகாக்கப்பட்டவர்" என்று குறிப்பிடப்பட்டார்.1
சிறைபிடிக்கப்பட்ட மூன்று ஸஹாபிகள் குபைப் இப்னு அதிய், ஸைத் இப்னு தஸின்னா மற்றும் அப்துல்லாஹ் இப்னு தாரிக் (ரழியல்லாஹு அன்ஹூம்) ஆவர். லிஹ்யானின் மகன்கள் அவர்களை வில்லின் நாண்களால் கட்டினர். அவர்களில் அப்துல்லாஹ் இப்னு தாரிக் மக்கா இணைவைப்பாளர்களிடம் செல்ல மறுத்தார். அவர் அவர்களை எதிர்த்தார். "ஷஹீதான என் நண்பர்களுக்கு ஜன்னா கௌரவம் கிடைத்திருக்கிறது" என்று முழக்கமிட்டார். தன் கைகளின் கட்டுகளை அறுத்தெறிந்தார். இருப்பினும், லிஹ்யானின் மகன்கள் அவரைக் கல்லால் அடித்து உயிர்த்தியாகம் செய்ய வைத்தனர். ஹஸ்ரத் குபைப் இப்னு அதிய்யும், ஹஸ்ரத் ஸயீத் இப்னு தஸின்னாவும் "ரஸூலுல்லாஹ் வழங்கிய வேவு பார்க்கும் கடமையை நிறைவேற்ற எமக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும்" என்று எண்ணி விடாப்பிடியாக இருந்தனர்.
"முஹம்மத் அலைஹிஸ்ஸலாமின் ஒரு முடிக்குக் கூட தீங்கு விளைவிப்பதை நான் ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டேன்!"
குபைப் இப்னு அதிய் (ரழியல்லாஹு அன்ஹ்)
லிஹ்யானின் மகன்கள் அவர்கள் இருவரையும் மக்காவுக்கு அழைத்துச் சென்றனர். பத்ர், உஹத் போர்களில் கொல்லப்பட்டதற்காக இணைவைப்பாளர்கள், பழிவாங்கும் வெறுப்பினாலும், பேராசையினாலும் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தனர், அவர்கள் ஒரு வாய்ப்பை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஹஸ்ரத் குபைப் இணைவைப்பாளரான ஹுஜைர் இப்னு அபீ இஹாப் அத்-தமீமியால் பத்ர் கஸாவில் கொல்லப்பட்ட தனது சகோதரருக்காகப் பழிவாங்குவதற்காக வாங்கப்பட்டார். ஹஸ்ரத் ஸயீத் இப்னு தஸின்னா தனது தந்தை உமையா இப்னு கலஃபுக்காகப் பழிவாங்குவதற்காக ஸஃப்வான் இப்னு உமையாவால் வாங்கப்பட்டார்; அவரும் பத்ர் கஸாவில் கொல்லப்பட்டவர். இணைவைப்பாளர்கள் அவ்விருவரையும் கொல்ல எண்ணினார்கள். இருப்பினும், அவர்கள் போர் செய்யத் தடைசெய்யப்பட்ட மாதங்களில் இருந்ததால், அவர்கள் அவர்களைச் சிறையில் அடைத்து, அக்காலம் கடந்து செல்லும் வரை காத்திருந்தனர். அவ்விருவரையும் அவர்கள் தனித்தனியாக வைத்திருந்தார்கள். இந்த சிறையிருப்பை எதிர்கொள்வதில் இரு ஸஹாபிகளும் மிகுந்த பொறுமையையும், வலிமையையும், கண்ணியத்தையும் காட்டினர்.
குபைப் இப்னு அதிய் வைக்கப்பட்டிருந்த வீட்டில் இருந்த விடுதலை பெற்ற பெண் அடிமை (பின்னாளில் முஸ்லிமாக மாறியவர்) மாவியா பின்வருமாறு கூறினார்:
"குபைப் நான் இருந்த வீட்டின் ஒரு அறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரை விட சிறந்த கைதியை நான் பார்த்ததே இல்லை. ஒரு நாள், அவர் ஒரு பெரிய திராட்சைக் குலையை ஒரு குடம் போல வைத்திருப்பதைப் பார்த்தேன். ஒவ்வொரு நாளும், அவர் ஒரு திராட்சைக் குலையுடன் காணப்பட்டார். அந்தப் பருவத்தில், குறிப்பாக மக்காவில் திராட்சைப் பழங்கள் கிடைப்பது சாத்தியமில்லை. அல்லாஹு தஆலா அவருக்கு உணவளித்துக் கொண்டிருந்தான். அவர் சிறை வைக்கப்பட்டிருந்த அறையில் தொழுது குர்ஆன் அல்-கரீம் ஓதுவார். அவர் ஓதிய குர்ஆனை செவிமடுத்த பெண்கள் அவருக்காக அழுது பரிதாபப்படுவார்கள். சில நேரங்களில், 'உங்களுக்கு ஏதாவது வேண்டுமா?' என்று நான் கேட்டபோது, 'சுத்தமான தண்ணீரை எனக்குக் கொடுங்கள், விக்கிரகங்களுக்குப் பலியிடப்பட்ட மிருகங்களின் இறைச்சியை எனக்குக் கொண்டு வராதீர்கள், அவர்கள் எப்போது என்னைக் கொல்வார்கள் என்பதை முன்கூட்டியே எனக்குத் தெரிவியுங்கள், எனக்கு வேறு எதுவும் வேண்டாம்' என்று அவர் கூறுவார். அவர் கொல்லப்படும் நாள் குறிக்கப்பட்டபோது, நான் அவரிடம் சென்று தெரிவித்தேன். இதை அவர் அறிந்தபோது, அவர் சிறிதளவு கூட மாற்றத்தையோ அல்லது சோகத்தையோ காட்டவில்லை. அந்த நாள் நெருங்கியபோது, அவர் இறப்பதற்கு முன்பு தனது உடலை சுத்தம் செய்ய விரும்புவதாகவும், ஒரு சவரக்கத்தியை கேட்டதாகவும் கூறினார். என் பிள்ளையிடம் ஒரு சவரக் கத்தியைக் கொடுத்து அனுப்பினேன். பிள்ளை அவரிடம் சென்றதும், எனக்கு திடீரென்று பயம் ஏற்பட்டது. நான், 'ஐயோ! இந்த மனிதன் சவரக்கத்தியால் பிள்ளையை வெட்டுவான். ஏனெனில், அவன் எப்படியும் கொல்லப்படுவான்.' என்று பயந்து பிள்ளையைப் பார்க்க ஓடினேன். குபைப் பிள்ளையிடமிருந்து கத்தியை வாங்கி முழங்காலில் வைத்து பாசம் காட்டினார். இந்தக் காட்சியை பார்த்ததும் நான் பயத்தில் அலறினேன். நிலைமையை உணர்ந்த அவர், 'இந்தப் பிள்ளையை நான் கொன்று விடுவேன் என்று நினைக்கிறாயா? எமது மார்க்கத்தில் அப்படி எதுவும் இல்லை. ஒருவரை அநியாயமாகக் கொல்வது எமது நடத்தை மற்றும் கௌரவத்தின் ஒரு பகுதி அல்ல' என்றார்.
குபைப் இப்னு அதியையும், ஸைத் இப்னு தஸின்னாவையும் கொல்வதற்கு இணைவைப்பாளர்கள் உடன்பட்ட நாள் வந்தது. அன்றைய தினம் அதிகாலையில், இணைவைப்பாளர்கள் அவர்களை சங்கிலிகளை அவிழ்த்து, மக்காவுக்கு வெளியே உள்ள தனீம் என்ற இடத்திற்கு அழைத்துச் சென்றனர். (தனீம் கஃபாவிலிருந்து 5-8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இங்குள்ள மலையின் பெயர் தனீம் ஆகும்) மக்காவாசிகளும், இணைவைப்பாளர்களில் முக்கியஸ்தர்களும் மரண தண்டனையைக் காணக் குழுமியிருந்தார்கள். பெரும் கூட்டம் இருந்தது.
இணைவைப்பாளர்கள் கைதிகளைத் தூக்கிலிட இரண்டு தூக்கு மேடைகளை அமைத்திருந்தனர். அவர்கள் குபைபை எழுப்பி தூக்கு மேடையில் கட்ட விரும்பியபோது, அவர், "என்னை விட்டு விடுங்கள், நான் இரண்டு ரக்அத் தொழ வேண்டும்" என்று கூறினார். அவர்கள் அவரை விடுவித்து, "அதை அங்கேயே நிகழ்த்துங்கள்" என்று கூறினார்கள். குபைப் உடனடியாக தொழுகையைத் தொடங்கி அல்லாஹு தஆலாவை பயபக்தியுடன் வணங்கித் தொழுதார். கூடியிருந்த இணைவைப்பாளர்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் அவரை உற்சாகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர். அவர் தொழுகையை முடித்ததும், "வல்லாஹி, நான் மரண பயத்தால் தொழுகையை நீட்டிக்கிறேன் என்று நீங்கள் நினைக்கவில்லை என்றால், நான் அதை நீட்டித்து மேலும் தொழுதிருப்பேன்" என்று கூறினார். ஹஸ்ரத் குபைப் இப்னு அதிய் தூக்கிலிடப்படுவதற்கு முன் இரண்டு ரக்அத் தொழுகையை முதன்முதலில் நிறைவேற்றியவர் ஆவார். எம் தலைவர், நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அந்த ஸஹாபி தூக்கிலிடப்படுவதற்கு முன்னர் இரண்டு ரக்அத் தொழுகையை நிறைவேற்றியதைக் கேள்விப்பட்டபோது, இந்த செயல் பொருத்தமானது என்று அவர் கண்டார்.2 இவ்வாறு, இது ஒரு வழக்கமாகவும் சுன்னாவாகவும் மாறியது.
அவர் தொழுகை முடித்த பிறகு, ஹஸ்ரத் குபைபை தூக்கு மேடையில் தூக்கி வைத்து கட்டி வைத்தனர். அவர்கள் கிப்லாவிலிருந்து மதீனாவின் பக்கம் அவரது முகத்தைத் திருப்பினர். அப்போது அவர்கள், "உங்கள் மார்க்கத்தை விட்டு வெளியேறுங்கள்! அப்படிச் செய்தால் நாங்கள் உங்களை விடுதலை செய்வோம்!" என்றனர். அதற்கு அவர், "வல்லாஹி, நான் அவ்வாறு செய்ய மாட்டேன்! முழு உலகமும் எனக்கு வழங்கப்பட்டாலும், நான் இஸ்லாமை விட்டுக்கொடுக்க மாட்டேன்!" என்றார். இந்த பதிலைப் பெற்ற இணைவைப்பாளர்கள், "முஹம்மத் உமது இடத்தில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறீரா, இப்போது அவர் உமக்குப் பதிலாக கொல்லப்பட வேண்டும் என்று விரும்புகிறீரா? நீர் ஆம் என்று சொன்னால், நீர் உம்மை விடுவித்துக் கொள்வீர், நீர் உமது வீட்டில் சௌகரியமாக உட்கார்ந்து கொள்ளலாம்!" என்றனர். குபைப், "முஹம்மத் அலைஹிஸ்ஸலாமின் ஒரு முடிக்குக் கூட தீங்கு விளைவிப்பதை நான் அனுமதிக்க மாட்டேன்!" என்று கூறினார். இணைவைத்த முஷ்ரிக்குகள் அவரைக் கேலி செய்து சிரித்தார்கள்: "குபைபே! இஸ்லாத்தைக் கைவிடுங்கள்! இல்லாவிட்டால் உம்மைக் கொன்று விடுவோம்!" என்றனர். அதற்குக் குபைப், "நான் அல்லாஹு தஆலாவின் பாதையில் இருக்கும் வரை கொல்லப்படுவது எனக்கு முக்கியமல்ல" என்று பதிலளித்தார்.
இதையடுத்து குபைப், "என் அல்லாஹ்வே! இங்கே எதிரிகளின் முகங்களைத் தவிர வேறு எந்த முகத்தையும் நான் காணவில்லை. யா அல்லாஹ்! உனது ரஸூலுக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவிப்பாயாக. எங்களுக்கு என்ன நடக்கிறது என்பதை உனது ரஸூலுக்குத் தெரிவிப்பாயாக!" என்று கூறிவிட்டு, "அஸ்ஸலாமு அலைக்க யா ரஸூலல்லாஹ்" என்று கூறினார். குபைப் இந்தப் பிரார்த்தனையைக் கேட்டுக் கொண்டிருந்த போது, நபியவர்கள் அஸ்ஹாப் அல்-கிராமுடன் அமர்ந்திருந்தார்கள். ஸைத் இப்னு ஹாரிதா அறிவிக்கிறார்: ஒரு நாள் ரஸூலுல்லாஹ் தமது அஸ்ஹாப் அல்-கிராமுடன் அமர்ந்திருந்தபோது 'வ அலைஹிஸ்ஸலாம்' என்று கூறினார். அதற்கு அஸ்ஹாப் அல் கிராம், 'ரஸூலல்லாஹ்வே! இது யாருடைய ஸலாமுக்கான பதில்?' என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள், “இது உங்கள் சகோதரர் குபைபின் ஸலாமுக்கு சொன்ன பதிலாகும். ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) எனக்கு குபைபின் ஸலாமை அறிவித்தார்.” என்றார்கள்."3
குபைபை சூழ்ந்து நின்ற குறைஷி இணைவைப்பாளர்கள், "இவன்தான் உங்கள் மூதாதையரைக் கொன்றவன்" என்று கூறி ஈட்டிகளால் தாக்கி அவரது அருள்வாய்ந்த உடலைக் காயப்படுத்தத் தொடங்கினர். அந்த நேரத்தில் குபைபின் முகம் கஅபாவை நோக்கித் திரும்பியது. இணைவைப்பாளர்கள் அவரை மதீனாவை நோக்கித் திருப்பினர். குபைப், "என் அல்லாஹ்வே! உனது பார்வையில் நான் ஒரு நல்ல அடியானாக இருந்தால், கிப்லாவை நோக்கி என் முகத்தைத் திருப்புவாயாக!" என்று கூறினார். அவரது முகம் மீண்டும் கிப்லாவை நோக்கித் திரும்பியது. இணைவைப்பாளர்களில் எவரும் கஅபாவைத் தவிர வேறு எந்தத் திசையையும் நோக்கி அவரது முகத்தைத் திருப்ப முடியாது போனது. இதற்கிடையில், குபைப் தூக்கு மேடையில் ஒரு கவிதையை வாசித்தார், அதில் அவர் தனது எதிரிகளால் சூழப்பட்டு ஷஹீதாக்கப்பட்டார் என்று கூறினார். இணைவைப்பாளர்கள் அவரது உடலில் ஈட்டிகளை நுழைத்து அவரை சித்திரவதை செய்யத் தொடங்கியபோது, அவர், "நான் ஒரு முஸ்லிமாக கொல்லப்படும் வரை, நான் எந்தப் பக்கங்களில் சாய்ந்து விழுந்தாலும் அது பற்றி எனக்குக் கவலையில்லை. இவை அனைத்தும் அல்லாஹ்வின் பாதையில் உள்ளன." என்றார்.
இதையடுத்து இணைவைப்பாளர்களை குபைப் சபித்தார், "என் அல்லாஹ்வே! குறைஷிகள் அனைவரையும் அழித்து விடுவாயாக! அவர்களின் சமூகத்தை சிதறடிப்பாயாக! அவர்களின் உயிரை ஒவ்வொன்றாக எடுத்துக் கொள்வாயாக, அவர்களை வாழ விடாதிருப்பாயாக!" என்றார். இந்த சாபத்தைக் கேட்ட முஷ்ரிக்குவாதிகள் மிகவும் பயந்து, அவர்களில் சிலர் அங்கிருந்து ஓடிவிட்டனர். எஞ்சியிருந்தவர்களில் சிலர் ஒருவர் பின் ஒருவராகத் தங்கள் ஈட்டிகளைச் சுழற்றத் தொடங்கினர். அவர்களில் ஒருவன் ஈட்டியை அவரது மார்பில் குத்த, ஈட்டி அவரது முதுகால் வெளியே வந்தது. தூக்கு மேடையில் தொங்கிக் கொண்டிருந்த அவரது உடலிலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்த போது, தனது இறுதி மூச்சுடன், "அஷ்ஹது அன் லா இலாஹ இல்லல்லாஹ் வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹூ வ ரஸூலுஹ்" என்று கூறி குபைப் ஷஹீத் ஆனார்.4
குபைப் இப்னு அதிய் ரழியல்லாஹு அன்ஹுவின் சடலம் நாற்பது நாட்கள் தூக்குமேடையில் தொங்கிக் கொண்டிருந்தது. அவரது உடல் அழுகவில்லை, துர்நாற்றம் வீசவில்லை. அவரது இரத்தம் தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தது. நபிகள் நாயகம் அஸ்ஹாப் அல் கிராமிலிருந்து ஸுபைர் இப்னு அவ்வாமையும், மிக்தாத் இப்னு அஸ்வதையும் அனுப்பி வைத்தார். இருவரும் இரவில் ரகசியமாக மக்காவுக்குள் நுழைந்தனர். பிறகு குபைபை தூக்கு மேடையிலிருந்து இறக்கி, ஒட்டகத்தின் மீது ஏற்றி, மதீனாவுக்குப் புறப்பட்டார்கள். நிலைமையை அறிந்த இணைவைப்பாளர்கள் பெருங்கூட்டமாக அவர்களுக்கு எதிராக அணிவகுத்துச் சென்றனர். இரண்டு ஸஹாபிகளும் தங்களைக் காத்துக்கொள்ள சடலத்தைத் தரையில் கிடத்தினார்கள். சிறிது நேரம் கழித்து, அவர்கள் சடலத்தை வைத்த நிலம் பிளந்து, சடலத்தை எடுத்து மூடிக் கொண்டிருப்பதைக் கண்டனர். பின்னர் அவர்கள் மதீனாவுக்குச் செல்லும் வழியில் பயணத்தைத் தொடர்ந்தனர்.
ஸைத் இப்னு தாஸின்னாவை அவர்கள் தயார் செய்த தூக்கு மேடையில் கட்டிப் போட்டார்கள். அவர்கள் அவரை தனது மார்க்கத்தை கைவிட கட்டாயப்படுத்தினர். எனினும் அவர்கள் ஸைதின் ஈமானை வலுப்படுத்துவதைத் தவிர வேறெதையும் செய்யவில்லை. இதையடுத்து அவர் மீது அம்புகளை எய்தனர். இறுதியில், ஸஃப்வான் இப்னு உமையாவின் விடுவிக்கப்பட்ட அடிமை நிஸ்தாஸால் ஸைத் ஷஹீதாக்கப்பட்டார்.
"அவர்கள் (பிஃர் மஊனாவின் தியாகிகள்)
அல்லாஹு தஆலாவை அடைந்து விட்டனர். அல்லாஹு தஆலா அவர்களைப் பற்றி மகிழ்ச்சி அடைகிறான், அத்துடன் அவர்கள் அல்லாஹு தஆலாவைப் பற்றி மகிழ்ச்சி அடைகிறார்கள்."
ஹதீஸ் அஷ்-ஷரீஃப்
