எனது அன்பார்ந்த நபி

பகுதி ஒன்று
நமது தலைவர், நபியவர்கள் பிரபஞ்சத்தின் சுல்தான்

அஸ்ஸலாது வஸ்ஸலாமு அலைக்க, ரஸுலுல்லாஹ்வே!

அஸ்ஸலாது வஸ்ஸலாமு அலைக்க, ஹபீபல்லாஹ்வே!

அஸ்ஸலாது வஸ்ஸலாமு அலைக்க, ஸய்யிதல்-அவ்வலினா வல்-ஆகிரீனே.

"நீங்கள் இல்லாவிட்டால், நான் எதையும் படைத்திருக்க மாட்டேன்!"
ஹதீஸ் அல்குத்ஸி

முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வுடைய அடியார் ஆவார். அவர் மனிதர்களிலும், மற்ற உயிரினங்களிலும் மிக அழகானவர்; மிக உயர்ந்தவர. அவர் அல்லாஹுத் தஆலாவால் மேன்மைப்படுத்தப்பட்டவரும் அனைத்து மனிதர்களுக்கும் ஜின்களுக்கும் அல்லாஹுத் தஆலா அனுப்பிய கடைசி மற்றும் மிக உயர்ந்த நபியும் ஆவார்.

அவர் உலகங்களுக்கெல்லாம் கருணையாக அனுப்பப்பட்டார். அத்துடன் எல்லாமே அவர் பொருட்டுத்தான் படைக்கப்பட்டன. அவருடைய அருள்பெற்ற பெயர் முஹம்மத், அதாவது 'திரும்பத் திரும்பப் புகழப்படுபவர், அதிகம் புகழப்படுபவர்'. அஹ்மத், மஹ்மூத், முஸ்தபா போன்ற வேறு பாக்கியம் வாய்ந்த பெயர்களும் அவருக்கு உண்டு. அவரது தந்தையின் பெயர் அப்துல்லாஹ். ரஸூல் அல்-அக்ரம் (ஸல்-அல்லாஹு அலைஹி வஸல்லம்) ஹிஜ்ரத்துக்கு 53 (கி.பி. 571) ஆண்டுகளுக்கு முன்னர், ரபீஉல்-அவ்வல் மாதத்தின் பன்னிரண்டாவது நாளில், ஒரு திங்கள் அதிகாலைப் பொழுதில் மக்காவில் பிறந்தார். கி.பி 571 ஆம் ஆண்டு ஏப்ரல் இருபதாம் திகதியாக அந்த நாள் அமைந்துள்ளது என வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள்.

அவர் பிறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு, அவரது தந்தை அப்துல்லாஹ்வும் அவரது ஆறு வயதில், தாயார் ஆமினாவும் மரணமடைந்தனர். அதன் காரணமாக, எமது தலைவர், நபியவர்கள் "துர் அல்யதீம்" (பிரபஞ்சத்தின் மகத்தான, தனித்துவமான மற்றும் மிகவும் விலையுயர்ந்த முத்து - அனாதைகளின் முத்து) என்றும் அழைக்கப்பட்டார். எட்டு வயது வரை, அவர் தனது பாட்டன் அப்துல் முத்தலிப்புடன் இருந்தார். அவரது பாட்டனின் மரணத்திற்குப் பிறகு, அவர் தனது சிறிய தந்தையான அபுதாலிபுடன் தங்கினார். அவருக்கு இருபத்தைந்து வயதாக இருந்தபோது, அவர் எமது தாயார் காதிஜா-துல்-குப்ராவை மணந்தார். அவருடைய முதல் மகனின் பெயர் காஸிம். அரேபியர்களிடையே, முதல் மகனின் தந்தையாக அழைக்கப்படுவது வழக்கமாக இருந்தது. எனவே, அவர் 'அபுல்-காஸிம்' - காஸிமின் தந்தை என்று அழைக்கப்பட்டார்.

அவருக்கு நாற்பது வயதானபோது, அவர் அனைத்து மனிதர்களுக்கும் ஜின்களுக்கும் வழிகாட்டும் அல்லாஹ்வின் தூதர் என்று அல்லாஹுத் தஆலாவால் அறிவிக்கப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் அனைவரையும் ஈமானின் பக்கம் அழைத்தார். ஐம்பத்து இரண்டு வயதில், மிஃராஜ்1 நடந்தது. அவருக்கு ஐம்பத்து மூன்று வயதாக இருந்தபோது, கி.பி. 622 இல் மக்காவிலிருந்து மதீனாவுக்குக் குடிபெயர்ந்தார். அவர் இருபத்தேழு முறை போருக்குச் சென்றுள்ளார்; அவற்றில் ஒன்பது முறை அவர் ஒரு வீரராகப் போரிட்டார், மீதமுள்ளவற்றில் அவர் தளபதியாக இருந்தார். கி.பி 632 இல் அவரது 63ஆவது வயதில், ஹிஜ்ரி 11ஆம் வருடம், ரபீஉல்-அவ்வல் 12ஆம் திகதி, திங்கட்கிழமை, முற்பகல் பொழுதில் மதீனா அல்-முனவ்வராவில் (ஒளிமயமான நகரத்தில்) காலமானார்.

அல்லாஹு தஆலா அனைத்து நபிமார்களுக்கும் அவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டாலும், எமது நபியைப் புகழ்ந்து "எனது ஹபீப்" என்றுதான் அழைத்தான். ஒரு ஆயத் அல்-கரீமாவில் (குர்ஆன் வசனம்), மஆலில்2 அவன் கூறுகிறான்: "(நபியே) உம்மை உலக மக்கள் அனைவருக்கும் கருணையாகவும், அருளாகவும் நாம் அனுப்பியுள்ளோம்."3

மேலும் ஒரு ஹதீஸ் குத்ஸியில் அவன் கூறுகிறான்: “நீங்கள் இல்லாவிட்டால் நான் எதையும் படைத்திருக்க மாட்டேன்!”4

ஸெய்யித் அப்துல்ஹகீம் அர்வாஸீ அவர்களின் கூற்றுப்படி, "ஒவ்வொரு நபியும், அவரது காலத்திலும், இடத்திலும், அவரது மக்கள் அனைவரையும் விட எல்லா வகையிலும் மேலானவர். ஆனால், நமது நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்தான் உலகம் தோன்றிய நாள் முதல் இறுதி நாள் வரை உலகில் தோன்றிய, வரப்போகும் அனைத்து உயிரினங்களிலும் உயர்ந்தவர் ஆவார். அவரை விட யாரும் எந்த வகையிலும் உயர்ந்தவர்கள் இல்லை. ஜனாப் அல்-ஹக் அவரை அப்படித்தான் படைத்தான்.

அவனது அருள்நிறைந்த நூரின் படைப்பு

"ஒரு சஜ்தாவில் இருந்து இன்னொரு சஜ்தாவுக்கு மாறிவிட்ட பிறகு, உமது நூர் உமக்கு வந்துவிட்டது."
அஷ்-ஷுஅரா: 219

அல்லாஹுத்தஆலா, எல்லாவற்றிற்கும் முன், அதாவது எதையும் படைப்பதற்கு முன், நம் அன்பிற்குரிய நபி முஹம்மத் அலைஹிஸ்ஸலாமின் அருள்நிறைந்த நூரை (ஒளியை) படைத்தான். தஃப்ஸீர் (குர்ஆன் விளக்கம்) மற்றும் ஹதீஸ் (நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கூற்றுகள்) துறைசார்ந்த நமது அறிஞர்களில் பெரும்பாலோர், “ஜனாப் அல்-ஹக் தனது நூரிலிருந்து ஒரு அற்புதமான, மகத்தான பொருளைப் படைத்ததாகக் கூறியுள்ளனர். அந்தப் பொருளிலிருந்து, அவன் முழு பிரபஞ்சத்தையும் படைத்தான். அந்தப் பொருள் 'நூர் அல்-முஹம்மதி' என்று அழைக்கப்படுகிறது. அனைத்து ஆன்மாக்கள் மற்றும் பொருள்களின் தொடக்கமும் ஆதாரமும் அந்தப் பொருள்தான்.

ஒரு நாள், அஸ்ஹாப் அல்-கிராம்களில் ஒருவரான ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் நபியவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! எல்லாவற்றிற்கும் முன் அல்லாஹுத்தஆலா எதைப் படைத்தான்?" என வினவினார். "அவன் உங்கள் நபியைப் படைத்தான். அவன்தான் எல்லாப் பொருட்களுக்கும் முன்னால் தன்னுடைய ஒளியிலிருந்து எனக்கு ஒளியாக இருந்தான். லவ்ஹ் (விதியின் ஏடு), (விதியின்) எழுதுகோல், ஜன்னத், நரகம், மலக்குகள், ஸமாவத் (வானங்கள்), அர்ழ் (பூமி), சூரியன், சந்திரன், மனிதர்கள், ஜின்கள் என்று எதுவும் அப்போது இல்லை." என நபியவர்கள் பதிலளித்தார்கள்.

ஆதம் அலைஹிஸ் ஸலாம் அவர்களின் இதயமும் உடலும் படைக்கப்பட்டபோது, அவர்களின் இரு விழிகளுக்கு இடையே நூர் அல் முஹம்மத் வைக்கப்பட்டது. அவருடைய ஆன்மா அவருக்குக் கொடுக்கப்பட்டபோது, ​​அவரது நெற்றியில் துருவ நட்சத்திரம் போன்ற பிரகாசம் இருந்ததை ஆதம் அலைஹிஸ்ஸலாம் கவனித்தார்.

ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) படைக்கப்பட்டபோது, ஜனாப் அல்-ஹக் அபூ முஹம்மத் என்று தன்னை அழைப்பதை அவர் உணர்ந்தார். "என் இறைவனே! அபூ முஹம்மத் என்ற பெயரை ஏன் எனக்குக் கொடுத்தாய்?" என அவர் வினவ, "ஆதமே! தலையை உயர்த்துவீராக!" என அல்லாஹுத் தஆலா கூறினான். ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) தமது தலையை உயர்த்தியபோது, அர்ஷுல் அஃலாவில்5 நமது அன்பார்ந்த நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் அஹ்மத் என்ற பெயர் நூரினால் எழுதப்பட்டிருப்பதைக் கண்டார். "என் இறைவனே! இது யார்?" என அவர் வினவ, "இவர் உங்கள் சந்ததியிலிருந்து வரும் ஒரு நபி ஆவார். அவரது பெயர் வானத்தில் அஹ்மத்; பூமியில் முஹம்மத். அவர் இல்லையெனின் நான் உங்களைப் படைத்திருக்க மாட்டேன். இந்த வானங்கள், பூமியையும் படைத்திருக்க மாட்டேன்"6 என அல்லாஹு தஆலா கூறினான்.

தூய நெற்றிகள் வழியாக தூய நெற்றிகளுக்கு அவரது நூரை மாற்றுதல்

ஆதம் அலைஹிஸ்ஸலாம் படைக்கப்பட்டபோது, ​​​​நம் அன்பார்ந்த நபி முஹம்மத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் அருள்நிறைந்த நூர் அவரது நெற்றியில் வைக்கப்பட்டது. அந்த நூர் அவரது நெற்றியில் பிரகாசிக்க ஆரம்பித்தது. "தப்ஸீர் அல்-மஸ்ஹரி"யில் எழுதப்பட்டுள்ளபடி, ஆதம் அலைஹிஸ்ஸலாம் முதல், இந்த நூர் கற்புடைய தந்தையிடமிருந்து கற்புடைய தாய்மார்களுக்குக் கடத்தப்பட்டு, எமது தலைவரான நபியை வந்தடைந்தது. அல்லாஹுத்தஆலா இதை ஒரு ஆயத்துல் கரீமாவில் அறிவித்துள்ளான்: 

"நீங்கள், அதாவது, உங்களது நூர் எப்போதும் ஒரு ஸஜ்தா செய்பவரிடமிருந்து மற்றொருவருக்கு மாற்றப்பட்ட பிறகு உங்களை அடைந்துவிட்டது."7

இது ஒரு ஹதீஸ் அஷ்ஷரீப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது: “அல்லாஹு தஆலா மனிதர்களைப் படைத்தான். மனிதர்களில் மிகச் சிறந்தவர்களிலிருந்து என்னைப் படைத்தான். பின்னர், (அல்லாஹ்) அவர்களில் சிறந்தவர்களை (அரேபியாவில்) தேர்ந்தெடுத்தான். அவன் என்னை அவர்களிடமிருந்து படைத்தான். அவ்வாறே, வீடுகளில் சிறந்ததை, குடும்பங்களில் சிறந்ததை தேர்வு செய்து, அவன் என்னை அவர்களிடமிருந்து படைத்தான். ஆகையால், என் ஆன்மாவும் உடலும் படைப்புகளில் மிகச் சிறந்தவை. என் பரம்பரை, மூதாதையர்கள் மனிதகுலத்தில் சிறந்தவர்கள்."

மற்றொரு ஹதீஸ் அஷ்-ஷரீப்பில் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது: “அல்லாஹு தஆலா அனைத்தையும் ஒன்றுமில்லாத நிலையிலிருந்து படைத்தான். எல்லாப் படைப்புகளிலும், மனிதர்களை அவன் விரும்பினான். எனவே, அவர்களை மதிப்புமிக்கவர்களாக ஆக்கினான். மனிதர்களில் தான் தேர்ந்தெடுத்தவர்களை அரேபியாவில் குடியேற்றினான். மேலும், அரேபியாவின் கண்ணியமானவர்களில், என்னைத் தேர்ந்தெடுத்துள்ளான். அவன் என்னை எல்லாக் காலத்திலும் சிறந்த, பிரபலமான மக்கள் மத்தியில் ஆக்கினான். எனவே, அரேபியாவில் எனக்குக் கீழ்ப்படிந்தவர்களை நேசிப்பவர்கள் என் பொருட்டு அவர்களை நேசிக்கிறார்கள். அவர்களுக்கு விரோதமாக இருப்பவர்கள் எனக்கு விரோதமானவர்கள்.”

ஹக் தஆலா ஆதாமைப் படைத்தான்;

அவர் மூலம் உலகத்தாரை அழகுபடுத்தினான்.

"ஆதமுக்கு ஸுஜூது செய்யுங்கள்" என்று மலக்குகளுக்கு அல்லாஹ் கட்டளையிட்டான்.

அவன் தாராளமாக அவருக்கு பல அருள்களை வழங்கினான்.

அவன் அவரது நெற்றியில் முஸ்தபாவின் நூரை வைத்து,

இது என் அன்பாளரின் நூர் என்பதை அறிந்து கொள்ளுங்கள் என்றான். 

அந்த நூர் அவருடைய நெற்றியில் நிலைத்திருந்தது,

பல காலமாக, அது அவருடன் தங்கியிருந்தது.

அதை அறிந்து கொள்ளுங்கள், அது ஹவ்வாவின் நெற்றியில் சென்றது,

அது அவருடன் பல மாதங்களாக ஆண்டுகளாக தங்கியிருந்தது.

ஷிஸ் பிறந்தார், அந்த நூர் அவருக்குச் சென்று

அவரது நெற்றியில் வெளிப்பட்டது.

இப்ராஹீம், இஸ்மாயீல் ஆகியோருக்கும் அது சென்றடைந்தது.

மற்றவற்றை நான் உங்களுக்குச் சொன்னால், அது மிக நீளமாக இருக்கும். 

இந்த வழியில், சங்கிலித் தொடராக இணைக்கப்பட்டு,

முஸ்தபா வரை, அது சென்றடைந்தது.

உலகங்களுக்கான கருணை வந்துவிட்டது,

அது அவரை அடைந்தது, அவருடன் தங்கியது.

“என் மகனே! உங்கள் நெற்றியில் ஜொலிக்கும் இந்த நூர் இறுதி நபியான ஹஸ்ரத் முஹம்மதின் நூராகும். அல்லாஹ்வை நம்பும் தூய்மையான மற்றும் கற்புள்ள பெண்களுக்கு இதை வழங்குங்கள், உங்கள் கடைசிக் கோரிக்கையில் உங்கள் மகனையும் அவ்வாறு செய்யச் சொல்லுங்கள்!"
ஆதம் அலைஹிஸ்ஸலாம்

நீங்கள் (நரக) நெருப்பிலிருந்து தப்பிக்க வேண்டுமென்றால்,

அன்புடனும் ஆர்வத்துடனும் ஸலாத் சொல்லுங்கள்.

முஹம்மத் அலைஹிஸ்ஸலாமின் துணுக்குகளை அவர் தாங்கியதால் படைக்கப்பட்ட முதல் மனிதரான ஆதம் அலைஹிஸ்ஸலாமின் நெற்றியில் ஒரு நூர் பிரகாசித்தது. இந்தத் துணுக்கு ஹஸ்ரத் ஹவ்வாவிற்கும், அவரிடமிருந்து ஹஸ்ரத் ஷீஸுக்கும் அனுப்பப்பட்டது. அவ்வாறு அது தூய்மையான ஆண்களிடமிருந்து தூய்மையான பெண்களுக்கும், தூய்மையான பெண்களிடமிருந்து தூய்மையான ஆண்களுக்கும் அனுப்பப்பட்டது.

முஹம்மத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் நூர் ஒரு தூய நெற்றியிலிருந்து அடுத்தடுத்த தூய நெற்றிகளுக்கு துணுக்குடன் கடத்தப்பட்டது.

ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களை மலக்குகள் பார்க்கும் போதெல்லாம், அவர்கள் முஹம்மத் அலைஹிஸ்ஸலாமின் நூரைப் பார்ப்பார்கள், மேலும் அவர்கள் ஆதம் அலைஹிஸ்ஸலாமுக்கு இஸ்திஃபாரை (பாவமன்னிப்புக் கேட்பதை) செய்வார்கள்.

ஆதம் அலைஹிஸ்ஸலாம் இறக்கும் தருவாயில், அவர் தனது மகன் ஷீஸ் அலைஹிஸ்ஸலாமிடம் இவ்வாறு கூறினார்: "என் மகனே! உங்கள் நெற்றியில் பிரகாசிக்கும் இந்த நூர், இறுதி இறைத்தூதர் ஹஸ்ரத் முஹம்மதின் நூராகும். அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்ட தூய்மையான மற்றும் கற்புள்ள பெண்களுக்கு இதை வழங்குங்கள், உங்கள் கடைசிக் கோரிக்கையில் உங்கள் மகனையும் அவ்வாறு செய்யச் சொல்லுங்கள்!"

அது முஹம்மத் அலைஹிஸ்ஸலாமை அடையும் வரை, எல்லாத் தந்தைகளும் தங்கள் மகன்களிடம் அவ்வாறு செய்யச் சொன்னார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் உன்னதமான, மிகவும் கற்புள்ள பெண்ணை மணந்து இந்த விருப்பத்தை நிறைவேற்றினர். நூர், இந்தத் தூய ஆண்கள் மற்றும் பெண்களின் நெற்றியைக் கடந்து, அதன் உரிமையாளரை அடைந்தது. ரஸூலுல்லாஹ்வின் பாட்டன்களில் ஒருவருக்கு இரண்டு மகன்கள் இருந்தாலோ அல்லது ஒரு கோத்திரம் இரண்டு கிளைகளாகப் பிரிந்திருந்தாலோ, நமது நபிகள் நாயகம் முஹம்மத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் நூர் சிறந்த பக்கமாக இருக்கும். ஒவ்வொரு நூற்றாண்டிலும், அவருடைய பாட்டன் யார் என்பது அவரது நெற்றியில் உள்ள நூர் மூலம் தெளிவாகத் தெரிந்தது. ஒவ்வொரு நூற்றாண்டிலும், இந்த வம்சத்தைச் சேர்ந்தவர் மிகவும் அழகான மற்றும் பிரகாசமான முகத்தைக் கொண்டிருப்பார். இந்த நூரைக் கொண்டு, அவர் தனது சகோதரர்களிடையே தனித்துவமாகத் திகழ்ந்தார். மேலும் அவர் சார்ந்த கோத்திரம் மற்ற பழங்குடியினரை விட மிகவும் உயர்ந்ததாகவும், மரியாதைக்குரியதாகவும் இருந்தது.8

ஆதாம் அலைஹிஸ்ஸலாம் தொடக்கம் மகனிடமிருந்து மகனுக்கு மாற்றப்பட்ட இந்த நூர், தாரூஹ்வை அடைந்து, அவரிடமிருந்து அவரது மகன் இப்ராஹீம் (ஆப்ரகாம்) அலைஹிஸ்ஸலாம், பின்னர் அவரது மகன் இஸ்மாயில் (இஸ்மாயீல்) அலைஹிஸ்ஸலாம் ஆகியோருக்குச் சென்றது. இந்த நூர் சூரியனைப் போல அவரது நெற்றியில் பிரகாசித்தது. பின்னர் அவரது மகன்களில் ஒருவரான அத்னானுக்கும் அவரிடமிருந்து மஆத், அவரிடமிருந்து நிஸார் என தொடர்ந்து மாற்றப்பட்டது. நிஸார் பிறந்தபோது, அவரது தந்தை மஆத், தனது மகனின் நெற்றியில் நுரைக் கண்டு மகிழ்ச்சியடைந்தார். அவருக்காக ஒரு விருந்து கொடுத்து, "இந்த விருந்து இத்தகைய மகனுக்கு ஒரு சிறிய விஷயம் மட்டுமே" என்று கூறினார். இதன் காரணமாக, ஒரு சிறிய விஷயம் என்ற பொருள்படும் நிஸார் என்ற பெயரே நிலைத்து விட்டது. அவருக்குப் பிறகு, அதன் உண்மையான உரிமையாளரான நம் அன்பிற்குரிய நபி ஃகாதம் அல்-அன்பியா முஹம்மத் அலைஹிஸ்ஸலாமை அடையும் வரை நூர் கடத்தப்பட்டு வந்தது.

எம் தலைவர், நபிகள் நாயகம் ஒரு ஹதீஸ் அஷ்-ஷரீப்பில் இவ்வாறு கூறினார்: "நான் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மத்; அப்துல்முத்தலிப் (ஷைபா), ஹாஷிம் (அம்ர்), அப்துல் மனாஃப் (முகிரா), குஸய் (ஸைத்), கிலாப், முர்ரா, கஅப், லுவேய், காலிப், ஃபிஹ்ர், மாலிக், நத்ர், கினானா, குஸைமா, முத்ரிகா (ஆமிர்), இல்யாஸ், முதர், நிஸார், மஆத் மற்றும் அத்னான் ஆகியோரின் வம்சத்தில் வந்த அவர்களது மகனாவேன். எனது வம்சம் இரண்டாகப் பிரிந்த போதெல்லாம், நிச்சயமாக அல்லாஹு தஆலா என்னை சிறந்த பக்கத்தில் வைத்தான்..."9

மற்றொரு ஹதீஸ் அஷ்ஷரீப்பில், “இப்ராஹீமின் வழித்தோன்றல்களில் அல்லாஹு தஆலா இஸ்மாயீலைத் தேர்ந்தெடுத்தான். இஸ்மாயிலின் சந்ததியினரில், அவன் கினானா குடும்பத்தைத் தேர்ந்தெடுத்தான். மேலும் கினானாவின் வழித்தோன்றல்களில், அவன் குரைஷ் குடும்பத்தைத் தேர்ந்தெடுத்தான். அத்தோடு, குரைஷியின் வழித்தோன்றல்களில், அவன் ஹாஷிம் குடும்பத்தைத் தேர்ந்தெடுத்தான். ஹாஷிமின் வழித்தோன்றல்களில், அவன் அப்துல்முத்தலிப் குடும்பத்தைத் தேர்ந்தெடுத்தான். அவர்களில் அவன் என்னைத் தேர்ந்தெடுத்தான்."10

அத்னான் வரை எமது தலைவர் நபிகளாரின் கௌரவமான பரம்பரை:

முஹம்மத் அலைஹிஸ்ஸலாம்

அப்துல்லாஹ்

அப்துல்முத்தலிப் (ஷைபா)
ஹாஷிம் (அம்ர்)
அப்துல் மனாஃப் (முகிரா)
குஸய் (ஸைத்)
கிலாப்
முர்ரா
காஅப்
லுவைய்
காலிப்
ஃபிஹ்ர்
மாலிக்
நத்ர்
கினானா

குஸைமா

முத்ரிகா (ஆமீர்)
இல்யாஸ்
முதர்
நிஸார்
மஆத்
அத்னான்

ஹஸ்ரத் அப்துல்முத்தலிப், நபிகளாரின் பாட்டனார்

எம் தலைவர், நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் குரைஷ் கோத்திரத்தைச் சேர்ந்த ஹாஷிம் (ஹாஷிம் குடும்பம்) அவர்களின் மகன்களில் இருந்து வந்தவர்கள். அவரது தந்தை அப்துல்லாஹ். அப்துல்லாஹ்வின் தந்தை ஷைபா. நபியவர்களின் பட்டனார் ஷைபா மதீனாவில் பிறந்தார். ஷைபா தனது தந்தை ஹாஷிம் இறந்தபோது சிறுவனாக இருந்தார். ஒரு நாள், அவர் தனது நண்பர்களுடன் தனது தாயின் மாமாவின் வீட்டிற்கு முன்னால் வில்வித்தை பயிற்சி செய்து கொண்டிருந்தார். அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த பெரியவர்கள், ஷைபாவின் நெற்றியில் உள்ள நூரைக் கண்டு, அவர் ஒரு கெளரவமான நபரின் மகன் என்று யூகித்து அவரைப் பாராட்டினர். அம்பு வீச ஷைபாவின் முறை வந்தபோது, அவர் தனது வில்லை நீட்டி அம்பை வீசினார். அம்பு இலக்கைத் தாக்கியபோது, அவர் உற்சாகத்துடன், "நான் ஹாஷிமின் மகன். நிச்சயமாக, என் அம்பு அதன் இலக்கை தாக்கும்." என்றார். இதன்மூலம் (அவர்) மக்காவைச் சேர்ந்த ஹாஷிமின் மகன் என்று அவர்கள் அறிந்து கொண்டனர். ஹாஷிம் இதற்கு முன்னரே இறந்துவிட்டார். 

அப்துல்-மனாஃப் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் மக்காவுக்குத் திரும்பியபோது, அவர் ஹாஷிமின் சகோதரர் முத்தலிபிடம், "உங்கள் மருமகன் ஷைபா, மதீனாவில் இருக்கிறார். அவர் மிகவும் புத்திசாலித்தனமான குழந்தை. அத்தோடு அவரது நெற்றியில் ஒரு நூரும் உள்ளது. அதை அனைவரும் பாராட்டுகிறார்கள். இவ்வளவு விலைமதிப்பற்ற குழந்தையை உங்களிடமிருந்து பிரிப்பது சரியா?" எனக் கேட்டார். எனவே, முத்தலிப் உடனடியாக மதீனாவுக்குச் சென்று தனது மருமகன் ஷைபாவை மக்காவுக்கு அழைத்து வந்தார். இந்தக் குழந்தை யார் என்று மக்கள் கேட்டால், "அவன் என் அடிமை" என்று அவர் கூறினார். அதன்பிறகு, ஷைபாவின் பெயர் அப்துல் முத்தலிப், அதாவது 'முத்தலிப்பின் அடிமை' என்று அழைக்கப்பட்டது.11

அப்துல் முத்தலிப் தனது மாமா முத்தலிப் இறக்கும் வரை அவருடன் தங்கியிருந்தார். அவரது பாக்கியம் வாய்ந்த உடல் கஸ்தூரி வாசனையை அளித்தது. அவரது நெற்றியில் அல்லாஹு தஆலாவின் ஹபீப் முஹம்மத் அலைஹிஸ்ஸலாமின் நூர் பிரகாசித்தது; அது நன்மைகளையும் அருள்களையும் வெளிப்படுத்தியது. பஞ்சமும் மழையும் இல்லாத சமயங்களில், மக்காவாசிகள் அவரை தபீர் மலைக்கு அழைத்துச் சென்று, அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுமாறு அவரை வேண்டிக் கொண்டனர். அவர் யாருக்கும் மறுப்பு தெரிவிக்கவில்லை. மழைக்காக அல்லாஹு தஆலாவிடம் பிரார்த்தனை செய்தார். அல்லாஹு தஆலா நமது அன்பார்ந்த நபியின் நூரின் பொருட்டால் அவரது பிரார்த்தனையை ஏற்று, போதுமான மழையை அனுப்பினான். இதனால் அப்துல் முத்தலிப்பின் மதிப்பும் நம்பகத்தன்மையும் நாளுக்கு நாள் அதிகரித்தன. மக்காவாசிகள் அவரைத் தமது தலைவராகத் தேர்ந்தெடுத்தனர். அவருக்குக் கீழ்ப்படியாதவர்கள் எவரும் இருக்கவில்லை. அவருக்குக் கீழ்ப்படிந்தவர்கள் எளிதாக வாழ்ந்தனர். அப்துல் முத்தலிப்பின் நல்லொழுக்கத்தையும் மகத்துவத்தையும் அக்கால ஆட்சியாளர்களும் பாராட்டினர். ஈரானிய ஷா மட்டுமே அவர் மீது பொறாமைப்பட்டு வெளிப்படையாகவும் மறைவாகவும் அவருக்கு எதிரான விரோதத்தை வளர்த்துக் கொண்டான்.

அப்துல் முத்தலிப் 'ஹனீப்' ஆக; அதாவது, ஒரு முஸ்லிமாக இருந்தார். தம் மூதாதையர்களில் ஒருவரான இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் மார்க்கத்தைப் பின்பற்றுபவராக இருந்தார்.12 அவர் தவ்ஹீத் - ஓரிறைக் கொள்கையைப் பின்பற்றினார். அதாவது அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு, அவனது இருப்பையும், அவன் ஏக ஒருவன் என்பதையும் நம்பினார். அவனைத் தவிர வேறு எதையும் நினைக்காத 'ஹனீப்'ஆக, நேர்மையானவராக அவர் இருந்தார். இதனால் அவர் சிலைகளை வணங்கியதில்லை, அவற்றின் அருகில் கூட செல்லவில்லை. கஃபாவைச் சுற்றி வந்து, அவர் அல்லாஹு தஆலாவிடம் பிரார்த்தனை செய்து அவனை வணங்கினார்.

ஸம்ஸம்

ஸம்ஸம் கிணறு

ஒரு நாள், அவரது கனவில், ஒரு நபர் வந்து, "அப்துல் முத்தலிபே! எழுந்து சென்று தையிபாவைத் தோண்டிக்கொள்!" எனக் கூறினார். அடுத்த நாள், அதே நபர், "எழுந்திரு, பர்ராவைத் தோண்டு!" எனக் கூறினார். மூன்றாம் நாள், மீண்டும், அதே நபர், "எழுந்து சென்று, மத்னூனாவைத் தோண்டு!" என்று உத்தரவிட்டார். கனவுகள் நின்றுவிடவில்லை. நான்காம் நாளும் அதே நபர், "அப்துல் முத்தலிபே! எழுந்து சென்று, ஸம்ஸம் கிணற்றை தோண்டிக் கொள்!" எனக் கூறினார். அப்போது அப்துல் முத்தலிப் அந்ந நபரிடம், "ஸம்ஸம் என்றால் என்ன? கிணறு எங்கே?" எனக் கேட்டார். "ஸம்ஸம் என்பது ஒருபோதும் வற்றாத நீரூற்றாகும்; அதன் அடித்தளத்தை எவரும் அடைய முடியாது" என்று அந்த மனிதர் கூறினார். உலகம் முழுவதிலுமிருந்து வரும் யாத்ரீகர்களுக்கு இது போதுமானது. ஜிப்ரஈல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறக்கையை அடித்த இடத்திலிருந்து அது வெளிப்படுகிறது. அது இஸ்மாயீலுக்காக அல்லாஹ் உருவாக்கிய நீரூற்றாகும். அது தாகத்தைத் தணிக்கிறது. அது பசியுள்ளவர்களைத் திருப்திப்படுத்துகிறது; நோயாளிகளை குணப்படுத்துகிறது. நான் அதன் இடத்தைச் சொல்கிறேன். மக்கள் நேர்ச்சைக்காக மிருகங்களைப் பலியிட்டு விட்டு எஞ்சியுள்ளவற்றை எறியும் இடமொன்றுள்ளது. நீங்கள் அங்கு சென்றால், சிவப்புநிற சொண்டுள்ள ஒரு காகம் வரும். அது தன் சொண்டால் பூமியைச் சுரண்டும். காகம் சுரண்டும் இடத்தில் ஒரு எறும்புக் கூடு இருப்பதையும் பார்ப்பீர்கள். அங்குதான் ஸம்ஸம் கிணறு உள்ளது.”13

"ஸம்ஸம் பசியுள்ளவர்களைத் திருப்திப்படுத்துகிறது; நோயாளிகளை குணப்படுத்துகிறது."
ஹதீஸ் அஷ்-ஷரீஃப்

ஸம்ஸம் கிணறு மஸ்ஜிதுல் ஹரம் பகுதியில் ஹஜர் அல் அஸ்வத்தின் மூலையில் இருந்தது. அதில் ஒரு கல் வளையம் இருந்தது. அதன் தரை பளிங்காகவும் சுவர்கள் நோக்கி சாய்ந்திருந்ததாகவும் இருந்தது. முதலாம் அப்துல் ஹமீத் ஹான் தண்ணீர் கசிவு ஏற்படாதவாறு கிணற்றை கட்டியிருந்தார். வரலாற்றின் விலைமதிப்பற்ற நினைவுச்சின்னமாக இருந்த இந்த அழகான கலைப்பொருள் 1963 இல் இடிக்கப்பட்டது. கிணற்றின் வாய் மற்றும் அதைச் சுற்றியுள்ள சில மீட்டர்கள் தரையில் இருந்து பல மீட்டர்கள் தாழ்த்தப்பட்டன. பின்னர், அது முழுமையாக மூடப்பட்டு, பளிங்குக் கற்கள் பதிக்கப்பட்டன. இப்போது இந்த கிணறு பார்வைக்குத் தென்படுவதில்லை.

காலையில், அப்துல் முத்தலிப், தனது மகன் ஹாரித்துடன் சேர்ந்து, கஃபாவுக்குச் சென்று எதிர்பார்த்து காத்திருக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில், கனவில் கூறப்பட்டபடி, சிவப்பு நிற சொண்டுள்ள ஒரு காகம் வந்து, ஒரு குழியின் மீது அமர்ந்து அதன் சொண்டால் பூமியை சுரண்டத் தொடங்கியது. அப்போது தரையிலிருந்து ஒரு எறும்புக் கூடு தோன்றியது. உடனடியாக அப்துல் முத்தலிபும் அவரது மகனும் அந்த இடத்தைத் தோண்டத் தொடங்கினர். சிறிது நேரத்தில் கிணற்றின் வாய்ப்பகுதி தெரிந்தது. அதைப் பார்த்த அப்துல்முத்தலிப், “அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்!” என்று தக்பீர் சொல்ல ஆரம்பித்தார்.

கிணறு தோண்டுவதை ஆரம்பத்திலிருந்தே உன்னிப்பாகக் கவனித்து வந்த குறைஷிகள் அவரிடம், “அப்துல்முத்தலிபே! இது எங்கள் தந்தையான இஸ்மாயீலின் கிணறு. அதற்கான உரிமையும் நமக்கு உண்டு. நீங்கள் எங்களை இந்த வேலையில் பங்குதாரர்களாக ஆக்க வேண்டும்." எனக் கேட்டனர். அப்துல் முத்தலிப் உடனடியாக அதனை நிராகரித்து, "இல்லை! இந்த வேலை எனக்கு மட்டுமே வழங்கப்பட்ட கடமை." என்றார். இதனைக் கேட்ட குறைஷிகள், “நீங்கள் தனியாக இருக்கிறீர்கள். உமக்கு மகனைத் தவிர வேறு யாரும் இல்லை. நீங்கள் எங்களை வெல்ல முடியாது." எனக் கூறினார்கள்.

யாரும் இல்லாத நிலையை வைத்து அவர்கள் அவரை அவமானப்படுத்தியதால் அவர் மிகவும் வருத்தப்பட்டார். அவர் தனது கைகளை வானத்தை நோக்கி உயர்த்தி அல்லாஹுத்தஆலாவிடம் மன்றாடினார். "எனது ரப்பே! எனக்குப் பத்து மகன்களை வழங்குவாயாக. நீ என் பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டால், அவர்களில் ஒருவரை நான் கஃபாவில் பலியிடுவேன்." எனப் பிரார்த்தித்தார்.14

தோண்டுவது ஆபத்தானதாகிவிட்டதாகவும், அதன் விளைவாக வன்முறை மோதல்கள் ஏற்படக்கூடும் என்றும் அப்துல்முத்தலிப் நினைத்தார். அதனால், தோண்டுவதை நிறுத்திவிட்டு, ஓர் உடன்படிக்கையொன்றை செய்து கொள்ள முயன்றார். இந்த விஷயத்தை ஒரு நடுவர் கையாள வேண்டும் என்று கேட்டார். இறுதியில், டமஸ்கஸில் உள்ள ஒரு தீர்க்கதரிசி இதற்கான தீர்வைக் கண்டுபிடிப்பார் என்று அவர்கள் முடிவு செய்தனர். எனவே அவர்கள் குரைஷிகளின் முக்கியஸ்தர்கள் குழுவுடன் அங்கு புறப்பட்டனர். தண்ணீர் பற்றாக்குறை மற்றும் அதிக வெப்பம் காரணமாக அந்தப் பயணக் கூட்டத்தால் தொடர்ந்து பயணிக்க முடியாமல் போனது. அவர்களின் ஒரே ஆசை தண்ணீரைக் கண்டுபிடிப்பதாக இருந்தபோதிலும், அது பாலைவனத்தின் நடுவில் சாத்தியப்படவில்லை.

எல்லோரும் நம்பிக்கையை இழந்தபோது, அப்துல் முத்தலிப், "வாருங்கள்! வாருங்கள்! கூடி வாருங்கள்! நான் உங்களுக்கும் உங்கள் விலங்குகளுக்கும் போதுமான தண்ணீரைக் கண்டுபிடித்துள்ளேன்." என அவர்களை சப்தமிட்டு அழைத்தார். முஹம்மத் அலைஹிஸ்ஸலாமின் அருள்பாளிக்கப்பட்ட நூரை சுமந்த அப்துல்முத்தலிப் தண்ணீரைத் தேடிக்கொண்டிருந்தபோது, ​​அவருடைய ஒட்டகத்தின் கால் ஒரு கல்லை நகர்த்தியது. அப்போது அங்கே தண்ணீர் தோன்றியது. அங்கிருந்த அனைவரும் ஓடி வந்து அந்தத் தண்ணீரைத் திருப்தியடையும் வரை குடித்து உயிர்பிழைத்தனர்.

அப்துல்முத்தலிபின் இந்தப் பெருந்தன்மையால் வெட்கமடைந்த குறைஷிகள், “அப்துல்முத்தலிபே! இப்போது, ​​உங்களுக்கு எதிராக நாங்கள் எதுவும் பேசமாட்டோம். ஸம்ஸம் கிணற்றைத் தோண்டியெடுக்க நீங்கள்தான் மிகவும் தகுதியான நபர். நாங்கள் இந்த விஷயத்தில் மீண்டும் உங்களுடன் சண்டையிட மாட்டோம். இனி எமக்கு நடுவரிடம் செல்ல எந்தத் தேவையுமில்லை. நாம் வீடு திரும்புகிறோம்” என்று அவர்கள் கூறிவிட்டு, மக்காவை நோக்கிப் பயணத்தைத் தொடங்கினார்கள். அப்துல்முத்தலிப், தனது நெற்றியில் பிரகாசித்த நூரின் பொருட்டால், ஸம்ஸம் கிணற்றைத் தோண்டி எடுத்த பெருமையைப் பெற்றார்.15

உயிர்ப்பலிக்குரிய மகன்

ஸம்ஸம் கிணற்றைக் கண்டுபிடித்த பிறகு, அப்துல் முத்தலிப்பின் கீர்த்தியும் புகழும் மேலும் அதிகரித்தன. வருடங்கள் கடந்தன. அவரது உண்மையான பிரார்த்தனையை ஏற்றுக்கொண்ட ஜனாப் அல்-ஹக் அவருக்கு ஹாரித் மற்றும் ஆறு மகள்களைத் தவிர பத்து மகன்களை வழங்கினான். அந்த மகன்களின் பெயர்கள்: குஸாம், அபூலஹப், அப்துல்கஃபா, ஹஜ்ல், ஸுபைர், அபூ தாலிப், அப்துல்லாஹ், கெய்தக், திரார் மற்றும் முகவ்விம் (ஹம்ஸா மற்றும் அப்பாஸ் இன்னும் பிறக்கவில்லை). அவரது மகள்கள்: ஸஃபியா, ஆதிகா, உம்முல்-ஹகீம் பைதா, பர்ரா, உமைமா மற்றும் அர்வா. அப்துல் முத்தலிப் அவரது பிள்ளைகளில் அப்துல்லாஹ்வை மிகவும் நேசித்தார். ஏனென்றால், அவரது நெற்றியில் இருந்த நூர் அப்துல்லாஹ்வின் மீது பிரகாசிக்கத் தொடங்கியது.

ஒரு நாள், அவரது கனவில், “அப்துல்முத்தலிபே! உன் வாக்கை நிறைவேற்று!” என்று கூறப்பட்டது. காலையில், அப்துல்முத்தலிப் ஒரு ஆட்டுக்கடாவைப் பலியிட்டார். அன்றிரவு அவரது கனவில், “அதைவிடப் பெரிய பலியை நிறைவேற்று!” என்று கட்டளையிடப்பட்டது. காலையில் அவர் ஒரு பசுவைப் பலி கொடுத்தாலும், கனவில் வந்த அதே கட்டளை, “அதை விடப் பெரிய பலியைக் கொடு!” என்றிருந்தது. அதைவிடப் பெரியது எது என்று அவர் கேட்டார். அப்போது, ​​“உனக்கு பத்து மகன்கள் கிடைத்தால், உன் மகன்களில் ஒருவனை பலி கொடுப்பதாக சபதம் செய்திருக்கிறாய். உன் வாக்கை நிறைவேற்று!” என்று கூறப்பட்டது.

அடுத்த நாள், அப்துல்முத்தலிப் தனது பிள்ளைகளை ஒன்றுதிரட்டி, பல ஆண்டுகளுக்கு முன்பு செய்த சபதத்தைப் பற்றி அவர்களிடம் கூறினார். பின்னர் அவர் தனது மகன்களிடம் அவர்களில் ஒருவரைப் பலியிட வேண்டும் என்று கூறினார். அவருடைய மகன்கள் யாரும் அவரை எதிர்க்கவில்லை. அத்துடன் அவர்கள், “எங்கள் தந்தையே! உங்களது வாக்கை நிறைவேற்றுங்கள்! நீங்கள் விரும்பியதைச் செய்ய உங்களுக்கு சுதந்திரம் உள்ளது." எனக் கூறினார்கள். அப்துல்முத்தலிப் தனது உயிர்பலிக்குரிய மகனைக் கண்டுபிடிக்க சீட்டுக் குலுக்கினார். அப்துல் முத்தலிபின் மிகவும் பிரியமான மகனும் அல்லாஹு தஆலாவின் ஹபீப் முஹம்மத் அலைஹிஸ்ஸலாமின் நூரை சுமந்தவருமான அப்துல்லாஹ்வுக்குத்தான் சீட்டு விழுந்தது. அப்துல் முத்தலிப் ஒரு கணம் நிலை தடுமாறிப் போனார். அவரது கண்கள் கலங்கின. அல்லாஹ்வுக்கு அவர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். அவர் தம் கத்தியையும், தம் பிரியமான மகனாகிய அப்துல்லாஹ்வையும் எடுத்துக் கொண்டு, தம் இறைவனுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக கஃபாவை அடைந்தார். கண்ணீர் சிந்திய நிலையில் தந்தை அப்துல் முத்தலிப் அப்துல்லாஹ்வைப் பலியிடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார். இதற்கிடையில், குறைஷிகளின் தலைவர்கள் இந்த நிகழ்வைப் பார்க்க ஆச்சரியத்துடன் பின்தொடர்ந்து வந்தனர். அவர்களில், அப்துல்லாஹ்வின் தாய் மாமா, “அப்துல் முத்தலிபே! நிறுத்துங்கள்! உங்கள் மகனைக் கொல்வதற்கு நாங்கள் ஒருபோதும் சம்மதிக்க மாட்டோம். அப்படிச் செய்தால் குறைஷிகள் மத்தியில் அது ஒரு வழக்கமாகி விடும். ஒவ்வொருவரும் தன் மகனைப் பலியிட சபதம் செய்து அவனை வெட்டுவார்கள். அதற்கு முன்னுதாரணம் காட்டாதீர்கள். எனவே, நீர் உம்முடைய இறைவனின் திருப்பொருத்தத்தை வேறு விதமாகத் தேடுவீராக." எனக் கூறினார். பின்னர் அவர், "நீர் ஒரு தீர்க்கதரிசியிடம் கேளுங்கள், அவர் உங்களுக்கு ஒரு தீர்வைக் கண்டறிவார்" என்று பரிந்துரைத்தார்.

இந்த வார்த்தைகளின் காரணமாக, அப்துல் முத்தலிப், கைபரில் இருந்த குத்பா (அல்லது சத்ஜாக்) என்ற தீர்க்கதரிசியிடம் சென்று நிலைமையை விபரித்தார். "உங்களில் ஒருவரின் உயிரின் விலை என்ன?” என்று அந்தத் தீர்க்கதரிசி கேட்டார். "பத்து ஒட்டகங்கள்" என்ற பதிலைப் பெற்றபோது, ​​"ஒட்டகங்களுக்கும் உங்கள் மகனுக்கும் இடையில் சீட்டுப் போட்டுப் பாருங்கள். சீட்டு உங்கள் மகனுக்கு வந்தால், பத்து ஒட்டகங்களைக் கணக்கிடுங்கள். இவ்வாறு, பத்துப் பத்தாகக் கூட்டி, ஒட்டகங்களுக்கு சீட்டு வரும் வரை தொடர்ந்து சீட்டு எடுக்க வேண்டும்." என்று தீர்க்கதரிசி உபதேசித்தார்.

“நான் இரண்டு உயிர்பலிக்கு உட்பட்டோரின் மகனாவேன்."
ஹதீஸ் அஷ்-ஷரீஃப்

அப்துல் முத்தலிப் உடனடியாக மக்காவுக்குத் திரும்பி, தீர்க்கதரிசி சொன்னபடி செய்தார். ஒவ்வொரு முறையும் அப்துல்லாஹ்வுக்கு சீட்டு விழுந்தது. ஆனால் ஒட்டகங்களின் எண்ணிக்கை நூறாக வந்தபோது, சீட்டு ஒட்டகங்களுக்கு விழுந்தது. அப்துல் முத்தலிப் முன்னெச்சரிக்கையாக இன்னும் இரண்டு முறை சீட்டுக் குலுக்கினார். அவை இரண்டும் ஒட்டகங்களுக்கே விழுந்தன. அப்துல் முத்தலிப், "அல்லாஹு அக்பர்! அல்லாஹு அக்பர்!" என்று கூறி ஒட்டகங்களைப் பலியிட்டார். அவரும் அவருடைய மகன்களும் இறைச்சியிலிருந்து எதனையும் எடுக்கவில்லை. அனைத்து இறைச்சியையும் ஏழைகளுக்குப் பகிர்ந்தளித்தார்.16

ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் காலத்திலிருந்து பார்த்தால், வரலாற்றில் இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் உயிர்பலிக்குத் துணிந்த சம்பவமும் நிகழ்ந்துள்ளது. எம் தலைவர் நபியவர்களின் வம்சாவளியானது இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் வரை சென்றடைவதன் காரணமாக, நபியவர்கள், "நான் இரண்டு உயிர்பலிக்கு உட்பட்டவர்களின் மகனாவேன்" என்று கூறினார்கள்.17

அவரது தந்தை, ஹஸ்ரத் அப்துல்லாஹ்

இரு உலகங்களின் நாயகரான நமது நபிகள் நாயகம் முஹம்மத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் நூரை சுமந்த அப்துல்லாஹ் பிறந்தபோது, ​​​​வேதம் வழங்கப்பட்டவர்கள் (வேதம் வழங்கப்பட்ட, இறை நிராகரிப்பில் இருந்த யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள்), “கடைசி யுகத்தின் நபியின் தந்தை மக்காவில் பிறந்து விட்டார்” என்று பரஸ்பரம் அறிவித்துக் கொண்டனர். இஸ்ராயீலின் சந்ததிகள் (பனூ இஸ்ராயீல்) நபி யஹ்யா (ஜான்) அலைஹிஸ்ஸலாமின் நெய்யப்பட்ட கம்பளி ஜுப்பாவை வைத்திருந்தனர். அவர் கொலை செய்யப்பட்டு ஷஹீதானபோது அவர் அதை அணிந்திருந்தார். அவருடைய அருள்பாளிக்கப்பட்ட இரத்தம் அதில் இருந்தது. அவர்களின் வேதங்களில், "இந்த இரத்தம் புதுப்பிக்கப்பட்டு, சொட்ட ஆரம்பிக்கும் போது, கடைசி யுகத்தின் நபியின் தந்தை பிறந்து விட்டார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே, வேதமுடையவர்கள், இந்த அத்தாட்சியைக் கண்டபின், அப்துல்லாஹ் பிறந்ததை அறிந்து கொண்டனர். அவர்கள் பொறாமைப்பட்டு அவரை பல முறை கொல்ல முயன்றாலும், அல்லாஹு தஆலா அப்துல்லாஹ்வை அவரது நெற்றியில் இருந்த நூரின் பொருட்டால் பாதுகாத்தான்.

அப்துல்லாஹ் பருவ வயதை அடைந்த போது, தனது நல்ல நெறிமுறைகளாலும், அழகான தோற்றத்தாலும் புகழ்பெற்ற நபராக மாறினார். குறிப்பாக அவர் பதினெட்டு வயதை எட்டியபோது, ​​​​அவரது அழகு புராணமாக மாறியது. அவரது நெற்றியில் இருந்த நூர் சூரியனைப் போல் பிரகாசித்தது; அதனைப் பார்த்த பெண்களால் அவரைக் காதலிப்பதைத் தவிர்க்க முடியவில்லை. அவரது அழகு மற்றும் புகழ் எகிப்து வரை சென்றது. அருகிலிருந்தும், தூரத்திலிருந்தும், மக்கள் தங்கள் மகள்களை அவருக்கு திருமணம் செய்து வைக்க ஒருவருக்கொருவர் போட்டியிடத் தொடங்கினர். அப்துல் முத்தலிபிடம் பல ஆட்சியாளர்கள் வந்து, தங்கள் மகள்களை அவரது மகனுக்காக வழங்க முற்பட்டனர். இதற்காக அவர்கள் எந்தத் தியாகத்தையும் செய்வார்கள் என்று அவரிடம் சொன்னார்கள். இவ்வாறு, சுமார் இருநூறு பெண்கள் மக்காவுக்கு வந்து அப்துல்லாஹ்வை திருமணம் செய்ய முன்வந்தனர். ஆனால் அப்துல் முத்தலிப் அவர்கள் ஒவ்வொருவரையும் தகுந்த முறையில் நிராகரித்தார்.

ஏனெனில் அப்துல்முத்தலிப், இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் காலத்திலிருந்து பின்பற்றி வந்த தமது முன்னோர்களின் மார்க்கத்தின் மீது பற்றுக் கொண்ட 'ஹனீஃப்' ஆக உள்ள, மிகவும் கண்ணியமான, உன்னதமான மற்றும் அழகான பெண்ணைத் தேடிக்கொண்டிருந்தார்.

"எமது தலைவரான நபிகளாரின் தந்தை அப்துல்லாஹ் தம் மகன் பிறப்பதற்கு முன்பே மரணித்த போது மலக்குகள், ‘எமது ரப்பே! உனது றஸூல் அனாதையாகிவிட்டார்.'' என்று கூறினர். "
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹுமா)

இஸ்ராயீலின் சந்ததியினர் தங்கள் வேதத்தில் எழுதப்பட்ட இறுதி யுகத்தின் நபி தங்கள் இனத்தைச் சேர்ந்தவர் அல்ல என்பதை உணர்ந்தபோது, பொறாமையினால், அப்துல்லாஹ்வைக் கொல்ல அவர்கள் சபதம் செய்தனர். இதற்காக அவர்கள் எழுபது ஆயுதமேந்திய மனிதர்களை மக்காவுக்கு அனுப்பினார்கள். இந்த மனிதர்கள் ஒரு வாய்ப்பிற்காகக் காத்திருக்கத் தொடங்கினர். இறுதியாக அப்துல்லாஹ் நகரிலிருந்து வெளியேறியபோது, யாரும் அவர்களைப் பார்க்க மாட்டார்கள் என்று அவர்கள் நினைத்தபோது, அவர்கள் தமது வாள்களை ஏந்திக் கொண்டு அப்துல்லாஹ்வைத் தாக்கினர். அந்த நாளில், ஹிக்மத் அல்-இலாஹியின்18 பொருட்டால், அப்துல்லாஹ்வின் உறவினர்களில் ஒருவரான வஹ்ப் இப்னு அப்துல்-மனாஃப் தனது நண்பர்களுடன் வேட்டையாடச் சென்றிருந்தார். அப்போது அவர்கள் இஸ்ராயீலின் சந்ததியினர் அப்துல்லாஹ்வைத் தாக்குவதைக் கண்டார்கள். அப்துல்லாஹ் அவர்களின் உறவினர் என்பதால் அவருக்கு உதவ முடிவு செய்தனர். ஆனால் எதிரிகள் அதிகமாக இருந்தனர். எனவே அவர்கள் தோற்கடிக்கப்படுவார்கள் என்பது தெளிவாகத் தெரிந்தது. இறுதியாக, அவர்கள் அவர்களுக்கு உபதேசம் செய்ய முடிவு செய்தனர். அவர்கள் அருகில் வந்தபோது, வாள்களையும், கருப்புக் குதிரைகளையும் கொண்ட பல குதிரைவீரர்களைக் கண்டார்கள்; அவர்கள் பூமியில் வேறு எவரையும் போல் இருக்கவில்லை; அவர்கள் மின்னல் போல் எங்கிருந்தோ தோன்றினர்; அவர்கள் தக்பீர் சொல்லிக் கொண்டு, இஸ்ராயீலின் சந்ததியினரைத் தாக்கி, அனைவரையும் கொன்று குவித்தனர். பிறகு அங்கிருந்து மறைந்துவிட்டனர். அப்துல்லாஹ்வை அல்லாஹு தஆலா முழுமையாகப் பாதுகாக்கிறான் என்பதையும் அவனிடத்தில் அவரது மதிப்பையும் வஹ்ப் வியப்புடன் புரிந்துகொண்டார்.

அவர் வீட்டிற்கு வந்தபோது, அவர் தனது மனைவியிடம் நிலைமையைக் கூறினார். இருவரும் தமது மகளுக்குப் பொருத்தமானவர் அப்துல்லாஹ்தான் என்று முடிவு செய்து, தமது மகள் ஆமினாவை அவருக்கு திருமணம் செய்து கொடுக்க முடிவெடுத்தனர்.

அப்துல் முத்தலிப், பனீ ஸுஹ்ரா கோத்திரத்தின் மூத்தவரான வஹ்பின் மகளான ஆமினாவின் அழகு, தூய்மை மற்றும் பக்தி ஆகியவற்றைப் பற்றி கேள்விப்பட்டிருந்தார். அவர்கள் உறவினர்களாகவும் இருந்தனர், அவர்களின் பரம்பரை பல தலைமுறைகளுக்கு முன்பு இணைந்திருந்தது. அப்துல் முத்தலிப் தனது மகன் அப்துல்லாஹ்வுக்கு இந்தப் பெண்ணை திருமணம் செய்து வைக்கக் கோரி வஹ்பின் வீட்டிற்குச் சென்றார். அவர் தனது மகன் அப்துல்லாஹ்விற்கு வஹ்பின் மகளைக் கேட்டபோது, வஹ்ப், "என் மாமாவின் மகனே! நாங்கள் உங்களுக்கு முன்பே இந்த விடயத்தை முடிவெடுத்து விட்டோம்." என்று கூறி, அவர் பார்த்த சம்பவத்தையும் அவரிடம் கூறினார். அத்தோடு, "அமீனாவின் தாயார் ஒரு கனவு கண்டார். அதில், ஒரு நூர் எங்கள் வீட்டிற்குள் நுழைந்தது; அது பூமியையும் வானத்தையும் ஒளிரச் செய்தது." என்று அவர் சொன்னார். அதே போன்று, நேற்றிரவு என் கனவில் நான் எமது பாட்டன் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களைக் கண்டேன். அதில் அவர்கள், "நான் அப்துல்முத்தலிபின் மகன் அப்துல்லாஹ்வையும் உனது மகள் ஆமினாவையும் திருமணம் செய்து வைத்துள்ளேன். நீயும் அதை ஏற்றுக் கொள்." என்று என்னிடம் கூறினார்கள். நான் இன்று காலையிலிருந்து இந்தக் கனவின் தாக்கத்தில் இருந்தேன். இந்நிலையில் இன்று நீங்கள் வருவதைக் கண்டு ஆச்சரியப்பட்டேன்." என்று வஹ்ப் கூறினார். இந்த வார்த்தைகளைக் கேட்ட அப்துல் முத்தலிப், "அல்லாஹு அக்பர்! அல்லாஹு அக்பர்!" என்று கூறி ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார்.

இறுதியில், பதினெட்டு வயதான அவரது மகன் அப்துல்லாஹ்வுக்கும், பதினான்கு வயது வஹ்பின் மகள் ஆமினாவுக்கும் திருமணம் நடந்தது. ஆமினா மற்றும் அப்துல்லாஹ்வின் திருமணம் பற்றி வேறு கதைகளும் உள்ளன.19

அவரது அருள்வாய்ந்த நூர் அவரது தாயிடம் மாற்றப்படுகிறது

நமது தலைவர் சர்வார் அல்-ஆலம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் அருள்பாளிக்கப்பட்ட நூர் அவரது தாயாரிடம் சென்றபோது, ​​​​வன விலங்குகள் பரஸ்பரம் நற்செய்தி கூறின: "உலகத்தின் அதிபதி பூமியை மகிமைப்படுத்தும் காலம் நெருங்கிவிட்டது; அவர் பூமியின் அமீன்20, காலத்தின் சூரியன்." அன்றிரவு கஃபாவில் இருந்த சிலைகள் அனைத்தும் தரையில் விழுந்தன. ஷைத்தான்கள் (சாத்தான்கள்) சக்தியற்றவர்களாகவும், தங்கள் செயல்களைச் செய்ய முடியாதவர்களாகவும் விடப்பட்டனர். மலக்குகள் இப்லீஸின் (ஷைத்தான்களின் தலைவர்) சிம்மாசனத்தை அழித்து, கடலில் எறிந்தனர். அத்துடன் அவர்கள் இப்லீஸை நாற்பது நாட்கள் தண்டித்தார்கள். பின்னர் அவன் தப்பிச் சென்று, அபூ குபைஸ் ஜபல் (மலை) மீது ஏறி கடுமையாக அழுதான். அவனது அழுகையைக் கேட்ட இப்லீஸின் படைகள் அனைத்தும் அவனைச் சுற்றித் திரண்டன. அவன் அவர்களிடம், “ஐயோ, நீங்கள் கேவலமானவர்கள். முஹம்மத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிறப்பு நெருங்கிவிட்டது. இனி, லாத்தும் உஸ்ஸாவும் வணங்கப்பட மாட்டார்கள். தவ்ஹீதின் நூர் பிரபஞ்சம் முழுவதும் பரவும்." என்று கூறினான். அன்றிரவு அனைத்து சூனியக்காரர்களும் மந்திரவாதிகளும் தங்கள் வேலையைச் செய்ய முடியாமல் போனார்கள். சாத்திரம் பலனற்றுப் போனது; சூனியம் செயலற்றுப் போனது. அந்த இரவில், பூமியில் உள்ளவர்கள் வானத்திலிருந்து ஒரு குரலைக் கேட்டார்கள், "இறுதி யுகத்தின் நபி ஆயிரக்கணக்கான அருள்களுடனும் நன்மைகளுடனும் வருவதற்கான நேரம் இது." என்று அந்தக் குரல் ஒலித்தது.

அப்போதைய சூழலில், மக்கா அல்-முகர்ரமா (புனித மக்கா) நகரில் பஞ்சம் ஏற்பட்டிருந்தது. பல ஆண்டுகளாக மழை பெய்யவில்லை. மரங்களில் பச்சை இலைகள் இல்லை. அறுவடைக்கான எந்த அறிகுறியும் இருக்கவில்லை. மக்கள் என்ன செய்வது என்று தெரியாத கடினமான காலத்தில் விழுந்திருந்தனர். ஹஸ்ரத் அப்துல்லாஹ்விடமிருந்து ஹஸ்ரத் ஆமினாவுக்கு நபியவர்களின் நூர் வழங்கப்பட்ட பின்னர், அதிக மழை பெய்ததுடன், ஏராளமான பயிர்களும் விளைந்தன. அந்த ஆண்டு தாராளமான ஆண்டு என்று அழைக்கப்பட்டது. ஹஸ்ரத் ஆமினா அவர்கள் நம் நபியை சுமந்து, கர்ப்பமாக இருந்த போது ஒன்பது மாதங்கள் எந்தப் பிரச்சினையையும் சந்திக்கவில்லை.

எங்கள் தாயார் ஆமினா கர்ப்பமாக இருந்தபோது, அவரது கணவர் அப்துல்லாஹ் வியாபாரத்திற்காக டமஸ்கஸுக்குச் சென்றிருந்தார். திரும்பி வரும் வழியில், அவர் நோய்வாய்ப்பட்டார். மதீனாவுக்கு அருகிலுள்ள தார் அந்-நாபிகாவில் நஜ்ஜாரின் மகன்களான தனது தாய்வழி மாமாக்களுடன் அவர் இருந்த போது அங்கு தனது பதினெட்டு அல்லது இருபத்தி ஐந்து வயதில் காலமானார்.21 இந்த செய்தி மக்காவை அடைந்தபோது, முழு நகரமும் சோகத்தில் மூழ்கியது.22

அஸ்ஹாப் அல்-கிராம்களில் ஒருவரான அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹூமா) அறிவிக்கின்றார்: “எமது தலைவரான நபிகள் நாயகத்தின் தந்தை அப்துல்லாஹ் தனது மகன் பிறப்பதற்கு முன்பே இறந்தபோது, மலக்குகள், "எங்கள் ரப்பே! உனது ரஸூல் அநாதை ஆகிவிட்டார்." என்று கூறினார்கள். "நான் அவரது பாதுகாவலனும், உதவியாளனும் ஆவேன்" என்று அல்லாஹ் அப்போது பிரகடனம் செய்தான்.

ஆமினா தனது கணவர் இறந்ததால் மனமுடைந்து போனார். அவர் ஒரு கவிதையில் அவரது மரணத்தை விவரித்தார்:

"இந்த ஒட்டகங்களின் உரிமையாளர் நான்தான். கஃபாவுக்கும் ஓர் உரிமையாளன் இருக்கிறான். அவன் அதைப் பாதுகாப்பான்.”
ஷைபா-துல் ஹம்த்

மிகவும் எதிர்பாராத நேரத்தில், அவரது மரணம் அவரை அழைத்துச் சென்றது;
அவர் மிகவும் தாராள குணமுடையவராக, கனிவானவராக இருந்தபோதிலும்.

யானை சம்பவம்

ரஸூல் அல்-அக்ரமின் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) பிறப்புக்கு இரண்டு மாதங்கள் இருந்தன. அப்போதுதான் யானை சம்பவம் நடந்தது. அபீசீனியா இராச்சியத்தின் யெமன் ஆளுநரான ஆப்ரகா, தொலைதூரத்திலிருந்தும் அருகிலிருந்தும் ஏராளமான மக்கள் கஃபாவைத் தரிசிப்பதைத் தடுக்க விரும்பினான். அதற்காக கிழக்கு ரோமானிய பேரரசரின் உதவியுடன் சனஆவில் 'குலைஸ்' என்ற பெயரில் ஒரு பெரிய தேவாலயத்தைக் கட்டினான். இந்த தேவாலயத்திற்கு மக்கள் வருகைதர வேண்டுமென்று அவன் விரும்பினான். ஆனால் அரேபியர்கள் இந்த தேவாலயத்திற்கு மரியாதை செலுத்தவில்லை. ஏனெனில் அவர்கள் பண்டைய காலம் முதல் கஃபாவைத் தரிசித்து வருபவர்களாக இருந்தனர். அந்த தேவாலயத்தை அவர்கள் இழிவாகக் கருதினர். அவர்களில் ஒருவர் ஒருநாள் அந்த தேவாலயத்தை மாசுபடுத்தினார்.

இச்சம்பவம் ஆப்ரஹாவை கோபமடையச் செய்தது. அத்துடன் அவன் கஅபாவை இடிக்க முடிவு செய்தான். இந்த நோக்கத்திற்காக அவன் ஒரு பெரிய இராணுவத்தை தயார் செய்து மக்காவுக்குச் சென்றான். ஆப்ரஹாவின் படை மக்காவை நெருங்கியதும் குறைஷிகளின் சொத்துக்களை சூறையாடத் தொடங்கினர். அப்துல்முத்தலிபின் இருநூறு ஒட்டகங்களைக் கைப்பற்றினார்கள். அப்துல்முத்தலிப் ஆப்ரஹாவிடம் சென்று தனது ஒட்டகங்களைத் திரும்பக் கேட்டார். அதற்கு ஆப்ரஹா, “உங்கள் புனிதமான கஃபாவை இடிப்பதற்காகவே நான் இங்கு வந்தேன். ஆனால் நீங்கள் அதைப் பாதுகாக்க விரும்பவில்லை. உங்களது ஒட்டகங்கள் மட்டுமா உங்களுக்குத் தேவை? என்று கேட்டான்.

அப்போது அப்துல்முத்தலிப், “நான் இந்த ஒட்டகங்களின் சொந்தக்காரன். நிச்சயமாக அந்த கஃபாவுக்கும் ஒரு சொந்தக்காரன் இருக்கிறான். அவன் அதைப் பாதுகாப்பான்." என்று கூறினார். அதற்கு ஆப்ரஹா, "என்னிடமிருந்து அதைப் பாதுகாக்க யாரும் இல்லை!" என்று கூறிவிட்டு, அப்துல் முத்தலிபின் ஒட்டகங்களைத் திருப்பிக் கொடுத்தான். பின்னர் அவன் தனது இராணுவத்தை மக்கா நோக்கி அணிவகுத்துச் செல்லுமாறு கட்டளையிட்டான். ஆப்ரஹாவின் படையில் ஒரு யானை இருந்தது. அதன் பெயர் மஹ்மூதா. அது இராணுவத்தின் முன்னால் நடந்தால், அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்று நம்பப்பட்டது.

ஆப்ரஹாவின் வழிகாட்டிகளில் ஒருவரான நுகைல் இப்னு லபீப், பெரிய யானையின் காதில் சாய்ந்து, “ஓ மஹ்மூதா, நீ அழிக்கப் போகும் வீடு அல்லாஹு தஆலாவின் வீடு. இப்போது மண்டியிடு! முன்னே செல்ல வேண்டாம்! சென்றால் நீ அழிந்து போவாய்!" என்று கூறினார். அப்ரஹா கஃபாவை நோக்கி அணிவகுத்துச் சென்றபோது, ​​இந்த யானை மண்டியிட்டு நின்றது; முன்னோக்கி நடக்கவில்லை. எனினும், யெமன் திசையை நோக்கித் திருப்பும் போது, அது ஓடியது.

இதனால், ஆப்ரஹாவின் படையால் மக்காவை நெருங்கித் தாக்க முடியவில்லை. அல்லாஹு தஆலா அவர்கள் மீது அபாபில் என்று அழைக்கப்படும் பறவைகள் கூட்டத்தை அனுப்பி வைத்தான். அந்தப் பறவைகள் ஒவ்வொன்றும் ஒரு கொண்டைக்கடலை அல்லது பருப்பு போன்ற பெரிய மூன்று கற்களைச் சுமந்து கொண்டிருந்தன. ஒன்று அவற்றின் சொண்டுகளிலும் இரண்டு கால்களிலும் இருந்தன. அப்பறவைகள் ஆப்ரஹாவின் படையின் மீது அவற்றை விடுவித்தன. கற்கள் கிடைமட்டமாக படை வீரர்களின் தலை முதல் கால் வரை குத்திக்கொண்டு அவர்களை ஊடுருவிச் சென்றன. கல்லால் தாக்கப்பட்ட ஒவ்வொரு வீரரும் உடனடியாக இறந்தனர். ஆயத் அல் கரீமாவில் கூறப்பட்டுள்ளதைப் போன்று, அந்தப்படை மென்றுவிட்டுத் துப்பிய வைக்கோலைப் போல் ஆனது. இந்த நிலையைக் கண்டதும் ஆப்ரஹா தப்பித்துப் போக நாடினான். ஆனால் அவனால் முடியவில்லை. கற்களின் உண்மையான இலக்கு அவன்தான். அவை இலக்கைத் தாக்கின. அவன் எவ்வளவு தூரம் ஓடுகிறானோ, அவ்வளவு அதிகமாக அவனுடைய சதை துண்டு துண்டாக விழுந்து அவன் இறந்தான்.

இந்த சம்பவம் குர்ஆன் அல்-கரீமின் ஸூரா அல்-ஃபீலில், மஆலில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:

"என் ரஸூலே! (நபியே!) யானையின் கூட்டத்தாரை உம் இறைவன் எவ்வாறு செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா? அவர்களுடைய சூழ்ச்சியை அவன் வீணாக ஆக்கவில்லையா? அவர்களுக்கு எதிராகப் பறவைகள் கூட்டம் கூட்டமாகப் பறந்து வந்தன. ஒவ்வொரு பறவையும் அவர்கள் மீது களிமண்ணால் செய்யப்பட்டு, தீயில் சுடப்பட்ட கற்களை எறிந்தன. இறுதியில், அல்லாஹு தஆலா அவர்களை புழுக்கள் தின்று விட்ட வைக்கோலைப் போன்று அழித்து விட்டான்.”23