மகிழ்ச்சியான செய்தி
“என் ரப்பே! என்னை முஹம்மது அலைஹிஸ்ஸலாமின் உம்மத்தாக ஆக்குவாயாக!”
மூஸா அலைஹிஸ்ஸலாம்
நம் அன்பார்ந்த நபி முஹம்மத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வருகை ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் காலத்திலிருந்தே ஒவ்வொரு நபிக்கும் அவர்களது சமுதாயத்திற்கும் அறிவிக்கப்பட்டு வந்தது. அவரது பிறப்பு நெருங்கும்போது நடக்கும் பல சம்பவங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன.
முஸா1 அலைஹிஸ்ஸலாமுக்கு அருளப்பட்ட, பின்னர் சிதைக்கப்பட்ட தௌராத் 2 மூல நூலில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது:
"அவர் மிகவும் பாக்கியவானாக இருக்கிறார்; அவருடைய அருள் மகத்தானது; அவருடைய உதவி மகத்தானது. அவர் ஏழைகளின் அன்புக்குரியவர்; பணக்காரர்களின் பரிகாரி. அவர் மிகவும் அழகானவர், மிகவும் தூய்மையானவர். அவர் பேசும்போது மென்மையாகவும், விநியோகிக்கும் போது நீதியாகவும் இருப்பார். அவர் ஒவ்வொரு விஷயத்திலும் சரியானதையே செய்பவர். அவர் காபிர்களுக்கு எதிராக கடுமையாக இருப்பார். அவர் வயதானவர்களிடம் மரியாதையும், பாசமும், இளையவர்களிடம் கருணையும் கொண்டவர். அவர் சிறிய விஷயங்களுக்காகவும் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவார். சிறைபிடிக்கப்பட்டவர்களிடம் அவர் பரிவு காட்டுவார். எப்போதும் புன்னகைத்த முகத்துடன் இருப்பார். அவரது சிரிப்பும் புன்னகையாகத்தான் இருக்கும். அவர் சத்தமாக சிரிக்க மாட்டார். அவர் (எழுதவும் படிக்கவும் அறியாத) உம்மியாக இருப்பார். எதையும் படிக்காமலும் எழுதாமலும், அனைத்தும் அவருக்கு அறிவிக்கப்படும். அவர் அல்லாஹு தஆலாவின் ரஸூல் (தூதர்) ஆவார். அவரிடம் கெட்ட குணங்களோ, வன்மமோ இருக்கவில்லை. சந்தைகளிலும் கடைத் தெருக்களிலும் அவர் கூச்சலிடுவதில்லை. அவரது உம்மத் (முஹம்மத் அலைஹிஸ்ஸலாமைப் பின்பற்றுபவர்கள், முஸ்லிம்கள்) நல்ல நெறிமுறைகளைக் கொண்டுள்ளனர். அவர்கள் உயர்ந்த இடங்களில் அல்லாஹு தஆலாவின் திருநாமத்தை ஓதுவார்கள். அவர்களது முஅத்தீன்கள் மினாராக்களில் இருந்து மக்களை தொழுகைக்கு அழைப்பார்கள். அவர்கள் தொழுகைக்கு முன் வுழூ எனப்படும் அங்க ஸ்நானம் செய்கிறார்கள். தொழுகையில் வணங்குபவர்களின் வரிசைகளை அவர்கள் நேராக அமைக்கிறார்கள். இரவில் அல்லாஹ்வின் பெயரை அவர்கள் ஓதினால் தேனீக்களின் இரைச்சல் போல் ஒலிக்கும். அவர் மக்காவில் பிறப்பார். மதீனா முதல் டமஸ்கஸ் வரையிலுள்ள அனைத்துப் பகுதிகளும் அவருடைய ஆட்சியின் கீழ் இருக்கும். அவரது பெயர் முஹம்மத். நான் அவருக்கு முதவக்கில் என்று பெயர் வைத்துள்ளேன். அவர் பொய்யான மதங்களை ஒழித்துவிட்டு, உண்மையான மதத்தை பரப்பி நிறுவும் வரை நான் அவருடைய உயிரை எடுக்க மாட்டேன். அவர் மக்களை ஹக்கின் (சத்தியத்தின்) பக்கம் அழைப்பார். அவருடைய அருளால் குருடர்களின் கண்கள் பார்க்கும், செவிடர்களின் காதுகள் கேட்கும். அலட்சியப் போக்கு இதயங்களை விட்டு வெளியேறும்…”3
தாவூத்4 அலைஹிஸ்ஸலாமுக்கு அருளப்பட்டு, பின்னர் சிதைக்கப்பட்ட மூல வேதமான ஸபூரில்5 இவ்வாறு எழுதப்பட்டுள்ளது:
"அவர் தாராள மனப்பான்மை கொண்டவர். அவர் ஒருபோதும் கோபப்படுவதில்லை. அவர் மிகவும் மென்மையானவர். அவர் அழகான, பிரகாசமான முகம் மற்றும் இனிமையான வார்த்தைகளுக்கு சொந்தக்காரர். அவர் மனிதர்களை குணப்படுத்துபவர். அவர் அதிகம் அழுவார், கொஞ்சம் சிரிப்பார். அவர் கொஞ்சம் தூங்குவார், அதிகம் சிந்திப்பார். அவருடைய சுபாவம் நன்றாகவும் அழகாகவும் இருக்கும். அவரது வார்த்தைகள் இதயங்களைக் கவர்ந்திழுக்கும், ஆன்மாக்களை ஈர்க்கும்... ஓ என் ஹபீபே! வைராக்கியத்தின் வாளை உருவி, உங்கள் முழு வலிமையுடன் துணிச்சலின் களத்தில் காபிர்களைப் பழிவாங்குங்கள். அழகிய மொழியில் என் புகழையும் மகிமையையும் எங்கும் பரப்புங்கள். மகிமையையும் எங்கும் பரப்புங்கள். அனைத்து நம்பிக்கையற்றவர்களின் தலைகளும் உங்கள் பாக்கியம் பெற்ற கைகளுக்கு முன் பணிந்து நிற்கும்..."
ஈஸா6 அலைஹிஸ்ஸலாமுக்கு அருளப்பட்டு, பின்னர் சிதைக்கப்பட்ட மூல வேதமான இன்ஜீலில்7 இவ்வாறு எழுதப்பட்டுள்ளது:
"அவர் அதிகம் சாப்பிட மாட்டார்; அவர் சோம்பேறியும் அல்ல. அவர் மோசடி செய்ய மாட்டார். அவர் யாரையும் பற்றி மோசமாகப் பேச மாட்டார். அவர் அவசரப்படவோ, தனக்காகப் பழிவாங்கவோ மாட்டார். அவர் சோம்பேறியும் அல்ல. அவர் யாரையும் பற்றி புறம் பேசமாட்டார்..."
வரப்போகும் இறுதி நபியின் பெயர் என்ன, அவரது வருகைக்கான அறிகுறிகள் என்ன என்று ஒரு குறிகாரர் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் கேட்டபோது, ஈஸா அலைஹிஸ்ஸலாம் பின்வருமாறு கூறினார்:
“ரஸூலின் பெயர் போற்றுதலுக்குரிய அழகைக் கொண்டுள்ளது. அல்லாஹுத்தஆலா அவரது ஆன்மாவைப் படைத்தபோது, அவருக்கு இந்தப் பெயரைக் கொடுத்து, அவரைத் தனது தெய்வீக மகத்துவத்தில் வைத்துக் கொண்டு, "அஹ்மத்! உங்களுக்காக நான் ஜன்னத்தையும், உலகத்தையும், இன்னும் பல உயிரினங்களையும் படைத்தேன். நான் அவற்றை உங்களுக்கு வழங்குகிறேன். உம்மை நேசிப்பவர்கள், என்னாலும் நேசிக்கப்படுவார்கள். எவர் உம்மைச் சபிக்கிறாரோ அவர் என்னுடைய சாபத்துக்கு உட்படுவார். பூமியில் என் இரட்சிப்பின் தூதராக, ரஸூலாக நான் உங்களை அனுப்புவேன். உங்கள் வார்த்தைகள் உண்மையானதாக இருக்கும். பூமியும் வானங்களும் அழிந்து போகலாம். ஆனால் உங்கள் பாதை நித்தியமாக இருக்கும். அவரது அருள்பாளிக்கப்பட்ட பெயர் 'அஹ்மத்' ஆகும்."
இதைப் பார்த்து, ஈஸா அலைஹிஸ்ஸலாமைச் சுற்றியிருந்த மக்கள் தங்கள் குரலை உயர்த்தி, “ஓ அஹ்மதே! பூமியைக் காப்பாற்ற விரைவாக வாருங்கள்." என்று கெஞ்சி அழுதனர்.
முஹம்மத் அலைஹிஸ்ஸலாமின் உம்மத்தாக தான் இருக்க வேண்டுமென ஈஸா அலைஹிஸ்ஸலாம் அதிகமதிகம் பிரார்த்தனை செய்தார். இன்றுள்ள பைபிள்களிலும் கூட அவர் முன்னறிவிக்கப்பட்டுள்ளார். கிறிஸ்தவர்கள் அவரை "பரக்லீட்" என்று அழைக்கிறார்கள். அல்லாஹு தஆலா ஈஸா அலைஹிஸ்ஸலாமை மீண்டும் கியாமத்திற்கு (யுகமுடிவு நாள்) நெருங்கும் போது பூமியில் இறக்கிவிடுவான். அப்போது ஈஸா அலைஹிஸ்ஸலாம் முஹம்மத் அலைஹிஸ்ஸலாமின் மார்க்கத்தைப் பின்பற்றுவார். முஹம்மத் அலைஹிஸ்ஸலாம் ஹலால் (அனுமதிக்கப்பட்டது) என்று கூறியதை ஹலால் என்றும் ஹராம் (தடுக்கப்பட்டது) என்று கூறியதை ஹராம் என்றும் அவர் கூறுவார். பரக்லீட் என்பதன் பொருள் அஹ்மத் ஆகும். அஹ்மத் என்பது முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெயர்களில் ஒன்றாகும்."
இன்ஜிலில் மீண்டும் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது:
"இறைவன் அனுப்பவிருக்கும் அந்த முன்ஹமன்னா, ரப்பிடமிருந்து வரப்போகும் அந்த ரூஹுல்-குத்ஸ், அவர் வந்திருந்தால், அவர் எனக்கு சாட்சியாக இருந்திருப்பார். நீங்களும் சாட்சியாக இருங்கள். ஏனெனில் நீங்கள் நீண்ட காலமாக என்னுடன் இருந்திருக்கிறீர்கள். நீங்கள் சந்தேகப்பட்டு தவறு செய்யக்கூடாது என்பதற்காகவே இதைச் சொன்னேன்” என்றார். முன்ஹமன்னா என்ற சொல்லுக்கு சிரியா மொழியில் முஹம்மத் என்று பொருளாகும்.8
அறியாமை யுகம்
நமது தலைவர் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பிறப்பதற்கு முன், உலகம் முழுவதும் பெரும் ஆன்மிக இருளில் மூழ்கியிருந்தது. மக்கள் எல்லையற்ற சீரழிவில் இருந்தனர். அல்லாஹு தஆலா வெளிப்படுத்திய மார்க்கங்கள் மறக்கப்பட்டன. தெய்வீக விதிகளுக்குப் பதிலாக மனிதர்களின் கருத்துக்களும் எண்ணங்களும் இடம்பிடித்தன. மனிதர்களின் கொடூரத்தாலும், கொடுமையாலும், அனைத்து உயிரினங்களும் வேதனை அடைந்தன.
உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் அல்லாஹு தஆலா மறக்கப்பட்டு விட்டான்; அமைதி, இன்பம் மற்றும் மகிழ்ச்சியின் ஆதாரமான தவ்ஹீத் (அல்லாஹ்வின் ஏகத்துவம்) பற்றிய நம்பிக்கை மறைந்துவிட்டது. குப்ரின் (நிராகரிப்பின்) புயல் ஈமானை (இறைநம்பிக்கையை) இருதயங்களிலிருந்து வெளியேற்றிவிட்டது. அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்வதற்குப் பதிலாக, அவர்கள் உள்ளங்களில் சிலைகளை வணங்குதல் வேரூன்றியிருந்தது.
ஹஸ்ரத் மூஸா கொண்டு வந்த மார்க்கம் மறக்கப்பட்டு விட்டது. தவ்ராத் சிதைக்கப்பட்டது. இஸ்ராயீலின் சந்ததிகள் சண்டையிட்டனர். நஸ்ரானிய்யத் எனும், ஈஸா அலைஹிஸ்ஸலாம் கொண்டு வந்த அசல் வேதமும் முற்றிலும் சீர்குலைந்து விட்டது; அதற்கு இனி மார்க்கத்துடன் எந்தத் தொடர்பும் இல்லை. திரித்துவம், அதாவது மூன்று கடவுள்கள் என்ற கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டது. உண்மையான இன்ஜீல் தொலைந்துபோனது; பாதிரியார்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப அதை மாற்றியமைத்தனர். இந்த இரண்டு வேதங்களும் இனி அல்லாஹு தஆலாவின் கலாம் (வார்த்தை) அல்ல.
எகிப்தில், சீர்குலைந்த தவ்ராத் நிலைத்து நின்றது; கிழக்கு ரோமானியப் பேரரசில் பொய்யான நஸ்ரானியத் நிலவியது. அது கிறிஸ்தவமாகும். ஈரானில், நெருப்பு வழிபடப்பட்டது. ஆயிரம் ஆண்டுகளாக வழிபாட்டாளர்களின் நெருப்பு அணைக்கப்படவில்லை. சீனாவில் கன்ஃபூசியனிசம், இந்தியாவில் புத்தமதம் போன்ற புனையப்பட்ட மதங்கள் ஆட்சி செய்தன.
“எனக்குப் பின் வரப்போகும் அஹ்மத் என்ற ரஸூலின் அறிவிப்பாளர் நான்."
ஈஸா அலைஹிஸ்ஸலாம்
அரேபியர்கள் மிகவும் கெட்டவர்களாகவும், ஊழல் மிக்கவர்களாகவும் இருந்தனர். அல்லாஹுத்தஆலா கண்ணியப்படுத்தியுள்ள கஃபா அல்-முஅஸ்ஸமாவில் அவர்கள் முந்நூற்று அறுபது சிலைகளை வைத்துக் கொண்டிருந்தனர். கஃபா அல்-முஅஸ்ஸமா என்பது பைத் அல்-மஃமூரின் அதே பரிமாணங்களில் கட்டப்பட்ட பிரதியாகும், அது அர்ஷில் உள்ள வானவர்களால் தரிசிக்கப்படுகிறது. எவர் கப்பாவை அவமதித்தாரோ, அவர்களை அல்லாஹ் அழித்துவிட்டான். கஃபாவை யார் அவமரியாதை செய்தனரோ, அவர்களை அல்லாஹு தஆலா உடனடியாக அழித்து விட்டான்.
ஜுர்ஹும் கோத்திரம் விபச்சாரத்தில் மிகத் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். அவர்களின் இழிவான மற்றும் கீழ்த்தரமான நடத்தையைக் கண்ட அவர்களின் ஆட்சியாளர் அவர்களைப் பின்வருமாறு எச்சரித்தார்: “ஓ ஜுர்ஹுமியே! அல்லாஹுத்தஆலாவின் ஹராம் அஷ்ஷரீஃப் மற்றும் அதன் பாதுகாப்பைக் கவனிப்பதன் மூலம், நீங்கள் விழிப்படையுங்கள்! ஹூத், ஸாலிஹ் மற்றும் ஷுஐப் (அலைஹிமுஸ்ஸலாம்) ஆகிய நபிமார்களின் உம்மத்களுக்கு என்ன நடந்தது என்பதையும், அந்த உம்மத்கள் எவ்வாறு அழிக்கப்பட்டனர் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். நன்மை செய்வதற்கு ஒருவரை ஒருவர் தூண்டிக் கொள்ளுங்கள் ; தீமை செய்வதிலிருந்து ஒருவரை ஒருவர் விலக்கிக் கொள்ளுங்கள். உங்களது தற்காலிக பலத்தால் ஏமாந்து விடாதீர்கள். ஹக்கிலிருந்து விலகி மக்காவில் கொடுமை செய்வதிலிருந்தும் விலகிக் கொள்ளுங்கள். ஏனெனில் கொடுமை மனித அழிவுக்கு காரணமாகிறது. அல்லாஹு தஆலா மீது ஆணையாக,
இங்கு தங்கியிருந்து, ஹக்கை விட்டு விலகி, அல்லாஹு தஆலாவினால் அழிக்கப்பட்டு, அதற்குப் பதிலாக வேறு ஒரு மக்களால் மாற்றப்படாத எந்த மக்களும் இல்லை. மக்காவாசிகள் என்றென்றும் இங்கு தங்கியிருக்க முடியாது. அவர்கள் தங்கள் ஒழுக்கக்கேடுகளைத் தொடர்கிறார்கள். சத்தியத்திலிருந்து விலகிச் செல்கிறார்கள். உங்களுக்கு முன்னர் இந்தப் பிராந்தியத்தில் குடியேறியவர்களுக்கு என்ன நடந்தது என்பது உங்களுக்குத் தெரியும். தஸ்ம், ஜாதிஸ், அமாலிகா கோத்திர மக்கள் உங்களை விட நீண்ட காலம் வாழ்ந்தனர். அவர்கள் உங்களை விட வலிமையானவர்கள், அதிக மக்கள் தொகை கொண்டவர்கள். உங்களை விட செல்வத்தில் சிறந்தவர்கள். ஹராம் அஷ்-ஷரீஃப் மீதான அவர்களின் வெறுப்பு, ஹக்கிலிருந்து விலகியமை, மக்களை ஒடுக்கியமை காரணமாக அவர்கள் இந்தப் பாக்கியமுள்ள இடத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். அவர்களில் சிலரை அல்லாஹு தஆலா சிறு எறும்புகளை அனுப்பியும், சிலரை பஞ்சத்தாலும், சிலரை வாளாலும் அகற்றிவிட்டதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதனைக் கேள்விப்பட்டிருப்பீர்கள்!”
ஆனால் அவர்கள் கேட்கவில்லை. இறுதியில், அல்லாஹு தஆலா அவர்களை அவர்களின் தீய செயல்களுக்காக துரதிருஷ்டவசமானவர்களாக ஆக்கினான்...
இவ்வாறான காலப்பகுதியில், உலகத்தின் மையமாகக் கருதப்படும் புனித மக்காவில் குஃப்ர் (நிராகரிப்பு) பெருகியது; லாத், உஸ்ஸா, மனாத் போன்ற நூற்றுக்கணக்கான சிலைகளால் பைத்துல்லா (அல்லாஹ்வின் வீடு, கஃபா) நிரப்பப்பட்டது. கொடூரம் உச்சத்தில் இருந்தது. ஒழுக்கக்கேடு பெருமையின் ஆதாரமாகக் கருதப்பட்டது. அரேபியா மத, ஆன்மீக, சமூக மற்றும் அரசியல் இருளில், குருட்டு அறியாமை, அத்துமீறல் மற்றும் சீர்குலைவில் மூழ்கியிருந்தது. அறியாமை யுகம் என்று அழைக்கப்படும் இந்தக் காலப்பகுதியில், மக்கள் பெரும்பாலும் நாடோடிகளாக வாழ்ந்தனர். அவர்கள் கோத்திரங்களாகப் பிரிந்திருந்தனர்.
அறியாமைக் காலம், ழுல்மத் (இருள்) நிறைந்த காலம். தொடர்ந்து சண்டை பிடித்துக் கொண்டிருந்த அரேபியக் கோத்திரங்கள், படையெடுப்புகளையும் கொள்ளைகளையும் தங்கள் வாழ்வாதாரமாகக் கருதினர். அரேபியாவில் எந்த அரசியல் அல்லது சமூக ஒழுங்குமுறையும் நிலவவில்லை. அதனால் கோத்திரங்களின் அடக்குமுறையும் கொள்ளையடிப்பதும் பரவலாகக் காணப்பட்டன. அங்கே மது, சூதாட்டம், விபச்சாரம், திருட்டு, கொடுமை, பொய், மற்றும் எல்லா வகையான ஒழுக்கக்கேடுகளும் மிக அதிகமாகப் பரவின. பலவீனமானவர்களுக்கு எதிராக வலிமையானவர்கள் பயன்படுத்திய கருவிகளில் மிகவும் இரக்கமற்ற, பயங்கரமான கருவியாக கொடுமை செய்வது காணப்பட்டது. பெண்கள் சாதாரண பொருட்களைப் போன்று விற்கப்பட்டனர். அவர்களில் சிலர் பெண் குழந்தை பிறப்பதை ஒரு பேரழிவாகவும் அவமானமாகவும் கருதினர். இந்தக் கொடூரமான எண்ணம் எந்தளவிற்கு சென்றது எனில், அவர்கள் தங்கள் பெண் குழந்தைகளை குழிகளில் இறக்கி விடுவார்கள், அங்கு அவர்கள் அவர்களை உயிருடன் வைத்து மண்ணால் மூடுவார்கள். அத்தருணத்தில் அக்குழந்தைகள் அவர்களை அணைத்துக்கொண்டு, தந்தையே! தந்தையே என்று அழுவார்கள். இந்தச் செயல்களால் அவர்கள் தங்கள் மனசாட்சியில் எவ்வித வேதனையையும் உணரவில்லை. அதை அவர்கள் வீரமாகக் கூடக் கருதினர். அக்கால மக்களிடம் இரக்கம், கருணை, தயவு, நீதி போன்ற உணர்வுகள் சிறிதளவு கூட இருக்கவில்லை.
ஆனால் அந்தக் காலத்தில், அரேபியர்களிடையே குறிப்பிடத்தக்க சில விடயங்கள் இருந்தன. இலக்கியம், பேச்சுத்திறன் மற்றும் சொற்பொழிவாற்றும் திறன் என்பன கணிசமானளவு மேம்பட்டிருந்தன. அவை அவற்றின் உச்சத்தில் இருந்தன. அவர்கள் கவிதைகளுக்கும் கவிஞர்களுக்கும் அதிக முக்கியத்துவம் வழங்கியதுடன், அதைப் பெருமைக்குரியதாகக் கருதினர். ஒரு திறமையான கவிஞன் தனக்கும் தனது கோத்திரத்திற்கும் புகழ் சேர்ப்பவனாக இருந்தான். சில தினங்களில், அவர்கள் கண்காட்சிகளையும், கவிதை மற்றும் பேச்சுப் போட்டிகளையும் நடத்தினார்கள். அவற்றில் மிகச் சிறந்தவை கஃபாவின் சுவர்களில் தொங்கவிடப்படும்.
அறியாமைக் காலத்தில் கஃபாவின் சுவர்களில் தொங்கவிடப்பட்ட மிகவும் பிரபலமான ஏழு கவிதைகளுக்கு "முஅல்லகதுஸ் ஸபஃ" அதாவது "ஏழு தொங்கக்கூடியவை" என்று பெயரிடப்பட்டிருந்தது.
அந்தக் காலத்தில், அரேபியாவில் மக்கள் மத விஷயங்களிலும் வெவ்வேறு குழுக்களாக இருந்தனர். சிலர் முற்றிலும் இறை நம்பிக்கையற்றவர்களாகவும், உலக வாழ்க்கையைத் தவிர வேறு எதையும் ஏற்றுக்கொள்ளாதவர்களாகவும் இருந்தனர். இன்னும் சிலர் அல்லாஹு தஆலா மற்றும் ஆகிரத் நாள் (யுக முடிவு நாள்) மீது நம்பிக்கை கொண்டிருந்தனர். ஆனால் மனிதர்களிடமிருந்து ஓர் இறைதூதர் வர முடியும் என்பதை ஏற்கவில்லை. சிலர் அல்லாஹு தஆலாவை நம்பினார்கள். ஆனால் அவர்கள் ஆகிரத்தை (மறுமைநாளை) நம்பவில்லை. அவர்களில் பெரும்பாலோர் சிலைகளை அல்லாஹு தஆலாவின் இணைகள் என்று நம்பி, அவற்றை வணங்கினர். ஒவ்வொரு பலதெய்வவாதியும் அவரவர் வீட்டில் ஒரு சிலையை வைத்திருந்தார்கள்.
"கியாமத் நாளில், நான் முந்தைய மற்றும் பிந்தைய அனைவருக்கும் சய்யித் - தலைவன் ஆவேன். நான் உண்மையைத்தான் சொல்கிறேன்; நான் பெருமை பாராட்டவில்லை.”
ஹதீஸ் அஷ்-ஷரீஃப்
உலகமே மிகவும் இருளில் மூழ்கியிருந்தது. சகலதையும் படைத்த அல்லாஹு தஆலாவை நம்புவதையும், வணங்குவதையும் மக்கள் கைவிட்டிருந்தனர். அவர்கள் அறியாமை காரணமாக இயற்கை நிகழ்வுகளையும், அல்லாஹு தஆலாவின் படைப்புகளையும், குறிப்பாக அவர்கள் கல்லிலும் மரத்திலும் செதுக்கிய சிலைகளையும் தெய்வங்களாக வணங்கினர். அவர்களைத் தவிர, ஹஸ்ரத் இப்ராஹீம் அவர்களின் மார்க்கத்தில் இருந்த முஃமின்களும் இருந்தனர். சரியான ஈமானைக் கொண்டிருந்த அவர்கள் 'ஹனீப்' என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் அல்லாஹு தஆலாவை நம்பிக்கை கொண்டு, சிலைகளை விட்டும் விலகி இருந்தார்கள். எமது நபிகள் நாயகத்தின் தந்தையான அப்துல்லாஹ், அவரது பாட்டனான அப்துல்முத்தலிப், அவரது தாயார் மற்றும் சிலர் ஹஸ்ரத் இப்ராஹீமின் மார்க்கத்தில் இருந்தனர்.
ஹனீப் முஃமின்களைத் தவிர, மற்ற அனைத்துக் குழுக்களும் வழி கேட்டிலும் பெரும் இருளிலும் இருந்தனர்.
ழுலுமாத் மற்றும் ஆப் அல்-ஹயாத்
"ஆப் அல்-ஹயாத் ழுலுமாத்தில் காணப்படுகிறது" என அபூ முகாஹித் இப்னு என்வர் இப்னு நாஸிப் ரஹ்மதுல்லாஹி அலைஹ் கூறியுள்ளார். அல்-ஹயாத் என்பது ஜீவ நீராகும். அதைக் குடிப்பவர் மரணமடைய மாட்டார். ழுலுமாத் என்பது இருளாக இருக்கும். இந்தத் திரவம் பசுமையான காடுகளில், காட்டு விலங்குகளுக்கு மத்தியில், இருளில், மரங்களின் ஆழத்தில் இருப்பதாகக் கருதப்படுகிறது. இந்த திரவத்துக்குச் செல்வது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. யாராவது அந்தத் தடைகளைக் கடந்து, அந்த நீரை அடைந்தால், அந்த நபர் இறக்க மாட்டார் என்ற வதந்தியொன்றுள்ளது. அஹ்ல் அஸ்-ஸுன்னத் நம்பிக்கை என்பது காஃப் மலைக்கு பின்னாலுள்ள பசுமையான காடுகளின் இருண்ட மூலையில் உள்ள ஜீவ நீரைப் போன்றது. நித்தியம் பாயும் இந்த நீரிலிருந்து ஒரு துளி அருந்துபவர்களுக்கு நித்திய பாக்கியங்கள் கிடைக்கும்.
ஹஸ்ரத் ஹுஸைன் ஹில்மி இப்னு ஸஈத் குத்திஸ ஸிர்ருஹ் (அவரது இரகசியங்கள் புனிதமானதாக இருக்கட்டும்) பின்வருமாறு கூறியுள்ளார்: “அதிலிருந்து ஒரு துளியை அருந்தியவருக்கு மரணம் இல்லை. அவருக்கு ஜன்னாவில் நித்திய ஜீவன் உண்டு. ஆப் அல்-ஹயாத் என்பது கெட்ட, தீய மனிதர்கள் மற்றும் பித்அத்கள்9 மற்றும் இறை நம்பிக்கையின்மைக்கு மத்தியில் உள்ளது."
பிரபஞ்சத்தின் தலைவர் வருகிறார்
பிரபஞ்சமும் இயற்கையும் இதயங்களும் சோகமாக இருந்தன, முகங்கள் புன்னகையை மறந்துவிட்டன. மற்ற உயிரினங்களை விட மேன்மையாகப் படைக்கப்பட்ட மனித குலத்திற்கு, அவர்களை நரகத்திலிருந்து காப்பாற்ற ஒரு வீரர் தேவைப்பட்டார். அவர் பிறப்பதற்கான காலம் மிகவும் நெருங்கிவிட்டது. ஆதம் அலைஹிஸ்ஸலாம் முதல் அதுநாள் வரை கற்புடைய தூய நெற்றியிலிருந்து மற்றொரு கற்புடைய தூய நெற்றிக்குக் கடத்தப்பட்ட நூருக்குச் சொந்தக்காரராக இருந்தவரை வாழ்த்துவதற்கு பிரபஞ்சம் தயாராகிக் கொண்டிருந்தது. மனிதர்களுக்கும் ஜின்களுக்கும் முடிவில்லாத ஆனந்தத்தை வெளிப்படுத்தும் தனித்துவமான மனிதர் வருகிறார்! இரக்கத்திற்கும் கருணைக்கும் ஊற்றுமூலமான, அவருடைய ரப்பின் நெறிமுறைகளால் மேம்படுத்தப்பட்ட உயர்ந்த மனிதர் வருகிறார்!
பரிந்து பேசுபவர்களின் மணிமகுடமான மகாம் அல் மஹ்மூத்தின் உரிமையாளர் வருகிறார்! பிரபஞ்சத்தின் போதகர், படைப்பின் சாராம்சம், மனிதகுலத்தின் தலைவர் வருகிறார்! நியாயத்தீர்ப்பு நாளின் காப்பாளர், தீர்க்கதரிசிகளின் சுல்தான் வருகிறார்! ஹபீபுல்லாஹ், அல்லாஹு தஆலாவின் அன்புக்குரியவர், நாம் யாருக்காகப் படைக்கப்பட்டோமோ, அந்த முழு பிரபஞ்சத்திற்கும் கருணையாக அனுப்பப்பட்ட எங்கள் அன்பார்ந்த நபி வருகிறார்! நமது தலைவர், நபி, ஹஸ்ரத் முஹம்மத் முஸ்தபா (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) வருகிறார்...
"நான் அல்லாஹு தஆலாவின் அன்புக்குரியவரான ஹபீப் ஆவேன்; நான் நபிமார்களின் தலைவராவேன். நான் இதைப் பெருமை பாராட்டுவதற்காகச் சொல்லவில்லை”
ஹதீஸ் அஷ்-ஷரீஃப்
அவர்கள் சொன்னார்கள், உங்கள் மகனைப் போல எந்தக் குழந்தையும்
இந்த உலகில் தோன்றவில்லை.
உங்கள் மகனைப் போல்
அல்லாஹ் யாருக்கும் அருளவில்லை.
ஓ ஆமினா, எவ்வளவு பெரிய அனந்தரச் சொத்து உம்மை அடைந்துள்ளது,
அழகான நெறிமுறைகள் கொண்டவரையல்லவா நீர் பெற்றெடுக்கிறீர்.
வருபவர் அறிவாற்றலின் சுல்தான்,
வருபவர் தவ்ஹீத் மற்றும் ஞானத்தின் ஆதாரம்.
அவரது பெயர்களில் ஒன்று மஹ்மூத், மற்றொன்று அஹ்மத்,
அவருடைய இருப்பு முழு உலகிற்கும் கருணையாகும்.
இந்த நபரின் அன்பிற்காகவே பிரபஞ்சம் சுழல்கிறது.
மனிதர்களும் வானவர்களும் அவருடைய முகத்தைப் பார்க்க ஏங்குகின்றார்கள்.
